Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதிய பிரித்தானிய கொரோனா வைரஸ் வகையின் பின்புலமும் எதிர்காலமும்

புதிய வகையான கொரோனா வைரஸ் தொற்று பிரித்தானியாவில் லண்டன் உட்பட்ட பகுதிகளைத் தாக்கிவருவது உறுதியாகியதும், 20ம் திகதி நள்ளிரவிலிருந்து புதிய நாலாம் அடுக்கு தனிமைப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனா ஆரம்பித்து தனிமைப்படுத்தல் முதலில் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதமளவில் என்ற மூன்று வகையான மாற்றமடைந்த வகைகள் கண்டறியப்பட்டன . இதன் பின்னர் ஏப்ரல் மாத இறுதிப்பகுதியில் சுவீடன் நாட்டில் புதிய வகையான கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் சில மாற்றங்களுடன் கூடிய கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டன. MERS என்ற வைரஸ் ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்கு வந்தடைந்ததாக மத்திய கிழக்கில் கண்டறியப்பட்டது. பின்னதாக சீனாவில் SARS (severe acute respiratory syndrome) என்ற இன்றைய தொற்றின் ஆரம்ப வகை சீனாவில் ஆரம்பித்ததாக 2003 இல் அறிவிக்கப்பட்டது.

வைரஸ் எவ்வாறு மாற்றமடைகிறது?

கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ (RNA ribonucleic acid) என்ற உட்கருக் கலங்களால் ஆக்கப்பட்டவை. வைரஸ் மனித உடலில் புகுந்ததும் RNA குருதிக் கலங்களோடு இணைந்து அதனை உருமாற்றம் செய்கிறது. பின்னதாக அது பிரதி செய்யப்பட்டு உடம்பு முழுவதும் பரவ ஆரம்பிக்கிறது. பிரதியெடுக்கப்படும் போது ஏற்படும் சிக்கல்களால் பழைய வைரஸ் புதிய வகையாக மாற்றமடைந்து அது மற்றவர்களுக்குக் கடத்தப்படுகிறது. இந்த மாற்றமடைந்த வகையே பழைய வைரசின் புதிய வகையாக துறைசார்ந்த வல்லுனர்களால் வரைவிலகணப்படுத்தப்படுகிறது.

பிரதியெடுக்கும் போது ஏற்படும் பிழைகளாலேயே (Error) புதிய வகை தோன்றுகிறது என்பதால் அது முன் கூட்டியே தீர்மானிக்க முடியாததாக உள்ளதாக அறிவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆய்வுகள்
ஆர்.என்.ஏ தொடர்பாக தீவிர ஆய்வு முடிவுகளை சீனாவே வெளியிட்டதுடன் அவற்றைக் காப்புரிமை இல்லாமல் ஏனைய நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனத்திற்கும் வழங்கிற்று. 103 கொரோனா வைரஸ் மாதிரிகளை மனிதர்களிலிருந்தும், சிலவற்றை மிருகங்களிலிருந்தும் பெற்று ஆய்வு செய்த பின்னர் அவை அனைத்தும் ஒத்த வடிவங்களைக் கொண்டிருக்கவில்லை என்றும், பிரதான வடிவங்களாக எல் மற்றும் எஸ் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுகளை தடுப்பு மருந்தைக் கண்டறிவதற்கான ஆதாரமான அமைந்தது.

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை
ஏனைய பல்வேறு மாற்றங்களை விட இது அதிக முக்கியத்துவம் பெறுவதற்கான மூன்று காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
1. முன்னைய வகைகளை விட இது 70 வீதம் அதிகமாகத் தொற்றும் திறனைக் கொண்டது.

2. இது வைரசின் ஒரு பகுதி அமைப்பைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டுள்ளதால், இது தொடருமானால் புதிய ஆய்வுகள் தேவைப்படலாம்.

3. வைரசின் ஏனைய வகைகளைப் பிரதியிடுகிறது.

வைரஸ் தடுப்பு மருந்து

இப்போது மாற்றமடைந்துள்ள புதிய வகையை தடுப்பு மருந்து எதிர்க்கும் தன்மை கொண்டது என்றாலும் அது தொடர்பான ஆய்வுகள் இன்னும் நடைபெறுவதாகக் கூறுகின்றனர். தடுப்பு மருந்து மற்றும் ஆய்வுகள் அனைத்துமே பெரும் வணிக நிறுவனங்களில் இலாப நோக்கத்தோடு இணைந்ததே தவிர அதனால் இலாபம் இல்லையென்றால் எதுவும் நடைபெறாது என்ற உண்மையே பணத்தை மையமாகக்கொண்ட வியாபாரத்தின் அடிப்படை விதி.

தடுப்பு மருந்தும் கொள்ளையும்

பொதுவாக இவ்வாறான தடுப்பு மருந்துகள், வீரியம் குறைந்த வைரஸ் வகைகளை மனித உடலுக்குள் அல்லது உயிருள்ள ஏனைய விலங்குகளின் உடலுக்குள் செலுத்துவதன் ஊடாக உருவாக்கப்படும் எதிர்ப்புச் சக்தியை ஆதாரமாகக் கொண்டே உருவாக்கப்படும். கொரோனா தொற்று உலகம் முழுவதும் உயிர்கொல்லி நோயாக ப் பரவ ஆரம்பித்த காரணத்தால் புதிய வகையான பொறிமுறையைப் பயன்படுத்தியே நோயெதிர்ப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. வைரசின் சில கூறுகளை பிரித்தெடுத்து அவற்றிலிருந்து மருந்தை உருவாக்கும் பொறிமுறையே குறுகிய நாட்களுக்குள்ளாகவே மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு வழி செய்யப்பட்டது. உதாரணமாக வைரசின் mRNA என்ற கூறு பயன்படுத்தப்பட்டதன் ஊடாகவே பைசர் நிறுவனம் தனது மருந்தைக் கண்டுபிடித்தது.

கொரோனா வைரசின் ஆய்வுகளை அரசுகள் நேரடியாக மேற்கொள்ளவில்லை, மக்களின் வரிப்பணத்தில் பெரும் தொகை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. தவிர சீனா தனது ஆய்வுகளை இலவசமாக வெளியிட்டது. உலகின் அறிவியல் வளர்ச்சியடைந்த நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக உலகைக் கொன்று தின்றுகொண்டிருக்கும் ஒரு வைரசிற்கான மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்குப் பதிலாக ஒவ்வொரு நிறுவனமும் தனது ‘பிரண்ட்’ ஐ விளம்பரப்படுத்தின. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியாக அரசுகளும் தன்னார்வ நிறுவனங்களும் மக்களின் வரிப்பணத்தைக் கொட்டிக்கொடுத்தன. ஜேர்மன், ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பணம் வழங்குவதில் முன்னணியாகத் திகழந்தன. 6.5பில்லியன் பவுண்ஸ் பணம் இந்த நிறுவனங்களுக்கு அரச பணத்திலிருந்து வழங்கப்பட்டது. தவிர, 1.5 பில்லியன் பவுண்ஸ் தன்னார்வ நிறுவனங்கள் வழங்கின .

சீனா வழங்கிய தகவல்களைத் தவிர இலாப வெறியை மையமாகக் கொண்ட இந்த நிறுவனங்கள் எதுவுமே தமது ஆய்வு முடிவுகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பைசர் மற்றும் மொடேர்னா என்ற இரண்டு நிறுவனங்கள் மட்டும் 32 பில்லியன் டொலர்களை இலாபமாக ஈட்டும் எனக் கணக்கிட்டுள்ளன.

மக்களின் பணத்தில் முழுவதுமாக நிச்சயமற்ற தடுப்பூசியக் கண்டுபிடித்தவர்கள், அதனை மக்களுக்கு இலவசமாக வழங்கப் போவதில்லை. மக்களின் வரிப்பணத்தில் இலவச மருந்தை ஒரு புறத்திலும் ஏனைய நேரடி விற்பனை நிலையங்களிலும் கோரோனா தடுப்பூசி 55 முதல் 70 டொலர்கள் வரை விற்பனை செய்யப்படும்.

இந்த நிறுவனங்கள் மூன்றாமுலக நாடுகளை நேரடியாகச் சுரண்டும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசுகள் நேரடியாக கொள்வனவு செய்யும் மருந்தைத் தவிர பெரும் தொகைப் பணத்திற்கு இந்தியா இலங்கை ஆபிரிக்க நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனை செய்யப்படும்.

மாற்றமடைந்த புதிய கொரோனா வைரசும் தடுப்பு மருந்தும்
பிரித்தானிய வைரஸ் உலகின் மற்றுமொரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளமையின் பிரதான காரணம் அது முன்னைய வைரசின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதாகும். பைசர் நிறுவனத்தின் பிரதான ஆய்வாளர் தடுப்பு மருந்து புதிய வகைக்கு எதிராகப் பயன்படாது என்பதை கூற எந்தக் காரணமும் இல்லை என்கிறார். ஆக, இன்னமும் உறுதியான முடிவுகள் வந்தாகவில்லை.

அரசுகளின் அப்பட்டமான தோல்வி

வைரசைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக தனிமைப்படுத்தல் காலத்தில் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்குச் சேவை செய்வது எப்படி என்ற திட்டத்தையே அரசுகள் வகுக்க ஆரம்பித்தன. இந்தியாவில் சீ,ஏ,ஏ, விவசாய திருத்த சட்டம், இலங்கையில் 20 வது திருத்தச்சட்டம், பிரன்சில் பல்வேறு சர்வாதிகாரச் சட்டங்கள் பிரித்தானியாவில் சமூக நல அரசை நிர்மூலமாக்கும் சட்டங்கள் போன்றன உருவாக்கப்பட்டன. வறுமையிலுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இலவச உணவை பிரித்தானிய அரசு நிறுத்திக்கொண்டது. இதன் மறுபக்கத்தில் £16.5 பில்லியன் அதிகரிக்கப்பட்ட பணத்தை இராணுவச் செலவிற்கான நிதியாக ஒதுக்கிற்று; யுனிசெப் பிரித்தானிய வரலாற்றில் முதல் தடவையாக பசியால் வாடும் குழந்தைகளுக்கான நிதியை ஒதுக்கி தனது சேவையை ஆரம்பித்தது.

பிரித்தானியாவில் கொரோனா காலத்திலிருந்து வேலையற்றோரின் தொகை 4.9 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்தத் தொகை புதிதாகக் கண்டுப்டிக்கப்பட்டுள்ள வைரசின் தாக்கத்தால் இன்னும் அதிகரிக்கும் நிலையே காணப்படுகிறது.

கோவிட்- 19 ஆரம்பித்த பெப்ரவரி 2019 காலப்பகுதியில் சீனா மீதான அரசுகளின் தாக்குதல்கள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டாலும், சீனப் பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதிக்கும் விமானங்களுக்கும் தடைவிதிக்கப்படவில்ல. பிரித்தானியா புதிய வைரஸ் வகையை அறிவித்ததுமே 45 நாடுகள் பிராயணத் தடையை விதித்ததுடன் அனேகமாக அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தமது ஏற்றுமதித் இறக்குமதித் தடையையும் அறிவித்துள்ளன.

Exit mobile version