Malcolm Gladwell என்பவர் எழுதிய The Tipping Point: How Little Things Can Make a Big Difference என்ற நூல் கடந்த பத்தாண்டுகளில் அதிகம் விற்பனையாகும் நூல்களில் ஒன்றாக இடம்பிடித்தது. மாறுதலை ஏற்படுத்துவதற்கான புள்ளிகளை தரவுகளுடன் ஆராய்கிறது இந்த நூல். எதையெல்லாம் இந்த நூலில் தேடிக்கொள்ளலாம் என்பதற்கு அப்பால் மாற்றங்கள் எவ்வாறு அவதானிக்கப்படுகின்றன என்றும், பண முதலைகளும் ஒடுக்கும் அரசுகளும் அவற்றை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றன என்றும் நூல் நெடுக அவதானிக்கலாம்.
ஒரு பொருளாதார அடியாளின் மனச்சாட்சி என்ற நூலை எழுதிய ஜோன் பேர்கின்ஸ் இதைக் கூறுகிறார். பெரும் யுத்தங்களையும் மனித அழிவுகளையும் படுகொலைகளையும் மேற்கொள்வதற்கு முன்பதாக மிக நுண்ணிய மாற்றங்களைக் கூட அமரிக்க ஏகாதிபத்தியம் உன்னிப்பாக அவதனிக்கிறது என்கிறார்.
சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால் 1970 ஆம் ஆண்டுகளில் உருவான ஜே.வி.பி இன் எழுச்சியை இளைஞர்களில் எழுச்சியாகவே ஏகாதிபத்திய அரசுகள் கருதின. இந்த எழுச்சி தெற்காசியாவில் பல்வேறு எழுச்சிகள் உருவாக உளவியல் உற்சாகத்தை வழங்காலாம் என அமரிக்கா போன்ற நாடுகள் கருதின. இது உழைக்கும் மக்களின் எழுச்சி அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தாலும் இந்த மாற்றம் தெற்காசியாவின் ஏனைய பிரதேசங்களில் புதிய மாற்றங்களையும் எழுச்சிகளையும் உருவாக்கலாம் என்றே அவர்கள் கருதினார்கள்.
1971 ஆண்டு மார்ச் மாதம் அளவில் பதினைந்தாயிரம் உயிர்களைப் பலிகொண்டு தோற்கடிக்கப்பட்ட இந்த எழுச்சியின் பின்னர் இரண்டு பிரதான நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டலாம்.
முதலில் அமரிக்க அரசின் நேரடி உதவியுடன் (US AID)ஆரம்பிக்கப்பட்ட மார்கா (Marga Institute) என்ற ஆய்வு நிறுவனமும் இந்த நிறுவனத்தின் பண முதலீட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சர்வோதயா என்ற தன்னார்வ நிறுவனமும் கவனத்தை ஈர்க்கின்றன. மார்கா நிறுவனம் பல ஆய்வு நூல்களை வெளியிட்டது. பல இடது சாரி அமைப்பிலிருந்த புத்திசீவிகளை உள்வாங்கியது. கோட்பிரீ குணதிலக (Dr. Godfrey Gunatilleke ) என்ற இடதுசாரிக் கருத்துக்களையும் அவ்வபோது ஏகாதிபத்திய எதிர்ப்பு முழங்களையும் முன்வைக்கும் குறிப்பிடத்தக்க புதிசீவி ஒருவரே இந்த நிறுவனத்தைத் தலைமை தாங்கினார்.
90களின் பின்னர் தேசிய இனப்பிரச்சனை குறித்த பல ஆங்கில நூல்களை மார்கா வெளியிட்டது. உ.சேரன் உட்பட பலரின் ஆய்வு நூல்கள் வெளிவந்தன. படித்த இளைஞர்கள் மத்தியில் அரச எதிர்ப்பு உணர்வை மட்டுப்படுத்துவதில் இந்த நிறுவனம் பங்கு வகித்தாலும், தள ஆய்வுகளை அமரிக்க உளவு நிறுவனங்களுக்கு வழங்குவதிலும் மார்காவின் பங்கை மறுக்க முடியாது.
இரண்டாவது முக்கியமான நிகழ்வு 1970களின் ஆரம்பப்பகுதிகளில் பாணதுறை ஆரியதம்ம தேரோ என்ற பௌத்த துறவியினால் உருவாக்கப்பட்ட போதி பூஜாவும், பௌத்த சுலோகங்களும், அவை சார்ந்த தியானங்களுமாகும்.
ஆரம்பத்தில் சிறிய அளவில் முளைவிட்ட போதி பூஜாவும் தியானங்களும் பின்னதாக பெரும் பணச்செலவில் இலங்கை முழுவதும் வியாபிக்கின்றன. பாடல்கள், இசைத் தட்டுக்கள், துறவியின் புதிய தியான முறைகள் என்று மத்தியதரவர்க்க இளைஞர்கள் மத்தியில் புதிய அலையை ஏற்படுத்திகிறது. தியானம் செய்யும் குழுக்களும், அவற்றிற்கு இடையேயான தொடர்புகளும், நாடு முழுவதும் பரவுகின்றன.
இளைஞர்களின் சமூகக் கோபத்தைத் தணித்து அவர்களை ‘நல்வழிப்படுத்தியமைக்காக’ இலங்கை அரசு பாணந்துற தேரோவைப் பாராட்டுகின்றது. அவர் மர்மமாக மரணித்துப் போகும் வரைக்கும் சிங்கள பௌத்த இளைஞர்கள் மத்தியில் கதாநாயகனாகக் கருதப்படுகின்றார்.
இவ்வாறான அனைத்து முயற்சிகளையும் மீறி. ஜே.வி.பி மீண்டெழுந்த போதும் பௌத்த துறவிகளை உள்வாங்காமால் அவர்களால் ஒரு அங்குலம் கூட நகரமுடியாமைக்கு பாணதுற தேரோவும் ஒரு காரணம் எனக் கருதப்படுகின்றது.
இன்றுவரைக்கும் பௌத்த இளைஞர்கள் மத்தியில் செல்வாகுச் செலுத்தும் இவரின் தியான முறைகளும் போதி பூஜாவும் சிங்கள பௌத்த பாசிசத்திற்கு உறுதுணையாகத் திகழ்கிறது.
2
இந்தச் சலசலப்புக்களுக்கு மத்தியில் சந்தடியின்றி இன்னொன்றும் நிறைவேறுகிறது. கனடாவிலிருந்து இலங்கைக்குச் சென்று தியானம் கற்பிப்பதற்காக மீராபாரதி என்பவர் முகாமிட்டுள்ளார். இவர் இளைஞர்களுக்கும் குறிப்பாக முன்னை நாள் போராளிகளுக்கும் தியானம் கற்பிக்கிறார்.
மீராபாரதி பாணதுற ஆரியதம்ம தேரோவின் தமிழ்ப் பதிப்பாக நினைவிற்கு வருகிறார். தேரோவின் காவிக்குப் பதிலாக தாடியும் பேஸ்புக்கும் இணைந்த புதிய கலவையாக மீராபாரதி உலகத்தைச் சுற்றி இலங்கையில் முகாமிட்டுள்ளார். ரஜனீஷ் என்ற பாலியல் சாமியாரின் நீண்டகால சீடரான இவர் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று தியானம் கற்பிக்கிறார். முன்னை நாள் போராளிகளை அவர்களது உறவினர்களே சந்திப்பதற்கு அஞ்சும் ஒரு சூழலில் மீரா பாரதி நடுவிலே குதித்து இளைஞர்களை ‘நல் வழிப்படுத்துகிறார்’.
பாணதுற தேரோவைப் போன்று இளைஞர்களின் போர்க்குணத்தைத் தணித்து அவர்களை ‘அமைதிப்படுத்தி’ கோழைகளாக்கும் பணியில் மீராபாரதி வெற்றிபெறூவாரோ என்பதெல்லாம் பல புறக் காரணிகளில் தங்கியுள்ளது எனினும் மீரா பாரதி கவனிக்கப்பட வேண்டியவர்.
இவரது தியான யாத்திரை குறித்துக்கொள்ளப்பட வேண்டும்.
Tipping point என்பதை அமரிக்கா மட்டுமல்ல அதனை அறிந்து வைத்திருக்கும் அனுபவம் மிக்க, அறிவியல் சமூகம் ஒன்றும் அவதானிக்கும் திறனைப் பெற்றிருக்கிறது என்பதை மீராபாரதி போன்றவர்கள் உணர்ந்துகொள்ள நீண்டகாலம் செல்லாது.