Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தாளும் யுக்தியினூடாக வழி நடாத்தப்படும் பௌத்த சிங்கள மயமாக்கல் திட்டம்: எஸ்.என். கோகிலவாணி

52015 ஆம் ஆண்டு இலங்கையில் புதிய ஆளும் வர்க்கம் நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சியைக் கையகப்படுத்திக்கொண்டது. இங்கு மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்ற தோற்றப்பாடு உலகெங்குமுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலும் மனிதாபிமானிகள் மத்தியிலும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. அதன் மறுபக்கத்தில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்கள் முழுவதும் சிங்கள பௌத்த மயமாக்கலால் புற்று நோய் போல அரித்துச்செல்லப்படுகின்றன. நிலப்பறிப்பும் கலாச்சாரச் சிதைப்பும் நல்லாட்சி என்ற தலையங்கத்தின் கீழ் சத்தமின்றி நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தேசிய உற்பத்திகளும், தேசியப் பொருளாதாரமும் உலகப் வர்த்தகப் பெரு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன. தேசியம் என்ற கோட்பாடும், தேசம் என்ற எல்லைக்கோடுகளும் வெட்டிச் சிதைக்கப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச காலத்தில் உச்ச நிலையை அடைந்த இவை அனைத்தும், நன்கு திட்டமிட்ட அடிப்படையில் வெளித்தெரியாமல் நடத்தப்படுகின்றது. நல்லாட்சி என்ற சொல்லாடலுக்கும் அதன் உள்ளர்த்திற்கும் இவை முற்றிலும் முரணானவை என்பது சொல்லித் தெரிய வேண்டிய தேவையற்றவை.

நாட்டின் தற்போதைய நிலையினைக் கருத்தில் கொண்டால் ஒருவகையான அமைதிச் சூழல் வடக்கிலும் கிழக்கிலும் காணப்படுவது போன்ற தோற்றப்பாடு திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்டதை நாம் பரவலாகக் காணலாம். ஆனால் எமக்கு ஒவ்வாத பின்புலங்களினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்தத் தோற்றப்பாடு நிரந்தரமானதா என்பதே எமக்கு முன்னாலுள்ள வினா.

பௌத்தர்களே வாழாத பிரதேசங்களிலெல்லாம் காளான்கள் போன்று முளைக்கும் பௌத்த விகாரைகள், நிரந்தரமாகும் இராணுவக் குடியிருப்புக்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், சீரழிக்கப்படும் கலாச்சார விழுமியங்கள், சுரண்டல்களுக்குள்ளாக்கப்படும் தேச வளங்கள் போன்ற பல்வேறு செயற்பாடுகள் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சுமூகமான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையினைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

பிரித்தானியக் காலனித்துவத்திற்குப் பின்னான காலம் முதல் இன்று வரை கோரமான அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருந்த தமிழ் பேசும் மக்கள் மீண்டும் அத்தகைய கோரம் வாய்ந்த அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படமாட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் வழங்கப்படாத நிலையிலேயே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த அச்ச நிலையில் இருந்து அவர்களை விடுவித்து குறைந்த பட்சம் ஒரு பாதுகாப்பு சார்ந்த உறுதிப்பாட்டினையும் அது சார்ந்த நம்பிக்கையினையும் வழங்குவதற்கு ஆளும் அரசாங்கமும் அதன் பின்னணியில் இருக்கும் அதிகார வர்க்கமும் இன்று வரை முன்வரவில்லை.

தேசிய இனங்களை ஒடுக்குவதற்கும் அழிப்பதற்கும் ஆளும் அதிகாரவர்க்கம் அதன் அடிப்படைப் பண்புகள் மீது தாக்குதல் நடத்துவது வழமை. மொழி, கலாசாரம், பிரதேசம் பொருளாதாரம் என்ற தேசிய இனங்களின் உருவாக்கத்திற்கு அடிப்படையான பண்புகள் மீதான ஒடுக்குமுறை இலங்கையின் எல்லைக்குள் வாழும் தமிழ் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீது கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாகத் தொடரும் நிகழ்வு என்பதை பெருந்தேசிய ஒடுக்குமுறையாளர்களே மறுத்ததில்லை.

வடக்குக் கிழக்கில் எவ்வாறு பாரம்பரியத் தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அதற்கு எந்த வகையிலும் குறைவற்று முஸ்லீம் தமிழர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். வட கிழக்குத் தமிழர்களைப் போன்றே முஸ்லீம்களும் வரலாற்று வழிவந்த பேரினவாதத்தின் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

1915 ceylonese-riots

இலங்கைத் தீவில் முதன் முதலாக நடைபெற்ற பெருந்தேசியவாத வன்முறை முஸ்லீம் தமிழர்களுக்கு எதிரானதே. 1915 சிலோனிஸ் கலவரம் என அழைக்கப்படும் இந்த வன்முறையை பௌத்த சிங்களப் பேரினவாதிகள் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிட்டனர். கண்டியில் ஆரம்பித்து சிலாபம் வரைக்கும் தீயாகப் பரவிய இந்த வன்முறை 25 பேரைக் காவுகொண்டது, 189 பேர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள், 4 பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டனர். இதன் பின்னான நீண்ட காலத்தில் ஆங்காங்கே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வந்து போயின. மேலும் உச்சத்தையடைந்த வன்முறைகள் 2000 ஆம் ஆண்டின் பின்னர் மீண்டும் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளன. மாவனெல்ல, பேருவல என பொதுபலசேனாவின் அராஜகங்கள் என இன்றுவரை அவை தொடர்கின்றன.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைப் பேரினவாத அரசின் துணை அமைப்பான பொது பல சேனா, முஸ்லீம் தமிழர்கள் மீது நடத்திய தொடர் தாக்குதல்களின் இரத்தம் இன்னும் முழுமையாகக் காயவில்லை. இன்றும் அந்த அமைப்பின் தலைவர்கள் நகரத் தெருக்களில் சுந்திரமாக உலாவருகிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிரான பௌத்த சிங்களப் பேரினவாதிகளைத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்சவும் அவரின் வழித் தோன்றல்களும் இன்றும் இலங்கை அரசியலில் பலம்வாய்ந்த வகி பாகத்தைக் கொண்டுள்ளனர்.

இந்த இடைவெளிக்குள் வட – கிழக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையேயான முரண்பாடுகள், படுகொலைகளாகவும், அரசியல் தவறுகளாகவும் தோன்றி மறைந்த துயர் சூழந்த சம்பவங்களையும் காணலாம்.

ஒரே மொழியைப் பேசுகிறவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமல்ல, பெரும் தேசிய வாதத்தின் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறவர்கள் என்ற அடிப்படையில் இணைவு ஏற்படுவதற்குப் பதிலாக முரண்பாடுகள் கூர்மையாக்கப்பட்ட சம்பவங்கள் பேரினவாதிகளின் பலத்தை அதிகரித்திருக்கின்றது.

இலங்கையை அழித்துச் சிதைத்துக்கொண்டிருக்கும் பௌத்த சிங்களக் கோட்பாட்டின் பலிக்கடாக்களாக இங்கு வாழும் ஒவ்வொரு சிறுபான்மைத் தேசிய இனங்களும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

anagarika dharmapala

பௌத்த சிங்களக் கோட்பாடு, இந்திய பார்ப்பனீயக் கோட்பாடிற்கு இணையான இஸ்லாமிய எதிர்ப்பைக் கொண்டுள்ளது. அடிப்படையிலேயே அதன் தோற்றம் இஸ்லாமிய எதிர்ப்பிலிருந்தே ஆரம்பிக்கிறது. இன்று சிங்கள பௌத்ததின் தந்தை என அரச பாடப்புத்தகங்களில் போற்றப்படுபவர் அனகாரிக தர்மபால. இலங்கை அரசு முத்திரை வெளியிட்டுக் கௌரவிக்கும் அவர் இன்றும் நவீன இலங்கையை உருவாக்கியவராகக் கருதப்படுகிறார். வெறுமையிலிருந்து தோன்றிய அவரது பௌத்த சிஙகளக் கோட்பாடே இன்றைய ஆட்சியதிகாரத்தின் தத்துவமாகக் கருதப்படுகின்றது. முஸ்லீம் தமிழர்களை ஒடுக்கும் அரசியல் தலைமைகள் இந்த உண்மையை அவர்களுக்குக் கூறுவதில்லை.

“காட்டுமிராண்டி நாசகாரர்களால் சிதைக்கப்படுவதற்கு முன்னர் ஆரியர்களான சிங்களவர்களால் இந்த ஒளிரும் அழகான தீவு சொர்க்கமாக மாற்றப்பட்டிருந்தது.” என்று அனகாரிக தர்மபால முஸ்லீம்களை விளித்த வாசகம் இன்னும் பௌத்த அடையாளங்களில் ஆட்சி செலுத்துகிறது.

ஷார்மினி சிரங்க என்ற சிங்கள எழுத்தாளர் எமது தேசிய கதாநாயன் எனப் போற்றப்படும் அனகாரிக பிரித்தானிய காலனிய அரசிற்கு எதிராகப் போராடினார் என்றால் அவர் முழு இலங்கை மக்களையும் கருத்தில் கொள்ளவில்லை; சிங்கள பௌத்தர்கள் சார்பாகவே போராடுவதாகக் கருதினார் என்கிறார். மேலும், அனகாரிக தர்மபாலாவைப் பொறுத்தவரை இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கானது மட்டுமே, எனையவர்களுக்கானது இல்லை என்கிறார்.

பொதுவாக அனைத்துச் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிராகவும், குறிப்பாகத் தமிழ்ப் பேசும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் அனகாரிக்கவினால் கட்டமைக்கப்பட்ட இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கான பாதுகாப்பு எங்கிருந்து ஆரம்பிக்கிறது?

எப்போதுமே தூண்டிவிடப்படலாம் என்ற சிங்கள பௌத்தப் பேரினவாதத்திற்கு எதிரான ஒற்றுமையிலிருந்தே சிறுபான்மைத் தேசிய இனங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். இரண்டு சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் அடையாளங்களின் அடிப்படையில் காணப்படும் ஒற்றுமையை விட ஒடுக்கப்படுபவர்கள் என்ற அடிப்படையில் தோன்றும் ஒற்றுமையே வலுவானது. இலங்கை என்ற நாட்டில் தன்னுரிமையுடன் வாழ்வதாயினும், தேவையேற்படின் பிரிந்து செல்லும் உரிமையைப் பெற்றுக்கொள்வதாயினும் இணைவின் ஊடாகவே பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒடுக்குமுறைக்கு எதிரான இணைவு என்றால் அதற்கு எதிரான அரசியல் பொருளாதாரப் பொறிமுறை ஒன்றை நாம் உருவமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இலங்கை அரசின் பிரித்தாளும் தந்திரத்தை வட கிழக்குத் தமிழர்களும், முஸ்லீம் தமிழர்களும் புரிந்துகொள்ளாமல் தமக்கிடையே மோதிக்கொண்ட கசப்பான வரலாறு 1915 ஆம் ஆண்டு சேர்.பொன்.இராமனாதன் காலத்திலிருத்தே ஆரம்பமாகிவிட்டது.

இந்தக் கசப்பான முரண்பாடுகள் சிங்கள பௌத்த ஆளும் வர்க்கத்தை தொடர்ந்து பலப்படுத்திக்கொண்டிருக்கிறது என்ற உண்மை அனைவரும் அறியத்தக்கதாக வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு இடையேயான ஒற்றுமை ஒடுக்கும் முறைக்கு எதிரான அசுர பலத்தை ஏற்படுத்தும் வகையில் மீளமைக்கப்பட வேண்டும்.

இன்றைய புதிய அரசியல் வெளி ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயக முற்போக்கு வெளியை தோற்றுவிப்பதற்குப் பயன்படுத்தப்படவேண்டும்.

முஸ்லீம் தமிழர்கள் வட-கிழக்கின் பூர்வீகத் தமிழர்கள் இடையேன ஒடுக்குமுறைக்கு எதிரான இணைவு என்பது இன்று வட கிழக்கு மாகாணங்களின் இணைப்பாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

வட கிழக்கு இணைப்பிற்கான அரசியல் என்பது வெறுமனே நிர்வாக அலகைத் தோற்றுவிப்பதற்கான சட்டவாக்கமல்ல. ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலாக அது நோக்கப்பட வேண்டும். பெருந்தேசியவாதிகளைப் பலவீனப்படுத்துவதற்கான அரசியலாக அது கட்டமைக்கப்பட வேண்டும். ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்ட அரசியலாக அது வெளித்தெரிய வேண்டும்.

வடக்கும் கிழக்கும் இணைவதை முஸ்லீம் தலைவர்கள் நிராகரிப்பதான செய்திகள் கடந்தவாரம் ஊடகங்களை நிரப்பிக்கொண்டன.

முஸ்லீம்களின் எதிர்பால் வடக்கும் கிழக்கும் பிரியும் நிலை தோன்றுமானால், அது இரண்டு பகுதியினருக்குமே வரலாற்றுரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.

எவ்வாறு பேரினவாதிகளிடமிருந்து முஸ்லீம்கள் தனிமைப்படுத்தப்படுவார்களோ அவ்வாறே தமிழர்களும் தனிமைப் படுத்தப்படுவார்கள். எப்போதும் தூண்டிவிடப்படலாம் என்ற பேரினவாதம் இரண்டு ஒடுக்கப்படும் பிரிவினரையும் பிரித்தாள்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கும்.

இவ்வாறான சூழலில், முஸ்லீம்களுக்கு மத்தியிலிருந்து வடக்குக் கிழக்கு இணைவிற்கான புதிய திட்டங்கள் முன்வைக்கப்படவேண்டும்.

இலங்கை அரசின் பிரித்தாளும் தந்திரத்திற்குத் துணை போகாத வகையில், தமது தன்னுரிமையைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இணைவு என்பதன் அடிப்படை முன்வைக்கப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில், 39 வீதம் தமிழர்களும், 37 வீதம் முஸ்லிம்களும் வாழுகின்றின்ற்னர். இரண்டு மாகாணங்களையும் இணைத்தால், முஸ்லிம்களின் சனத்தொகை 17 வீதமாக குறைந்து விடும். இதனால் முஸ்லீம் தமிழர்களின் பேரம் பேசும் வலு குறைந்துவிடும் என்பது ஒரு சாராரின் வாதம். இது முற்றிலும் தவறான திரிபுபடுத்தப்பட்ட முஸ்லீம்களின் நிரந்தர அழிவிற்கு வித்திடும் என்பது நிராகரிக்கப்பட முடியாத உண்மை.

1946 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் சனத்தொகைக் கணிப்பீட்டின் அடிப்படையில் 39.06 வீதமாகவிருந்த முஸ்லீம்களின் தொகை 2012 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 36.72 வீதமாகக் குறைந்திருக்கிறது. அதேவேளை 48.75 வீதமாகவிருந்த தமிழர்களின் தொகை 2012 ஆம் ஆண்டு 37.79 வீதமாகக் குறைந்திருக்கிறது. யார் இந்த விகிதாசாரக் குறைவை நிரப்பினார்கள் என்றால் பெரும்பாலும் திட்டமிட்ட குடியேற்றங்களால் கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்துக்கொண்ட சிங்கள மக்களே. 1946 ஆம் ஆண்டில் 8.4 வீதமாகவிருந்த சிங்கள மக்களின் தொகை 2012 ஆம் ஆண்டு 23.15 வீதமாக அதிகரித்துள்ளது.

நில ஆக்கிரமிப்பு கிழக்கில் தமிழர்களையும் முஸ்லீம்களையும் சிறுபான்மையாக்கியுள்ளது. இன்று தற்காலிகமாக இவை தணிந்திருப்பது போன்ற விம்பத்தைச் சந்தர்ப்பவாத முஸ்லீம் தலைவர்கள் வழங்க முற்படலாம். சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அரசிற்கு எதிராக எழுச்சிகளும் நெருக்கடிகளும் தோன்றும் போதெல்லாம், சிறுபான்மையினரைக் காரணம் காட்டி அவை திசைதிருப்பப்படுகின்றன.

அதன் தொடர்ச்சியாக சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகின்றது. அவ்வாறான வன்முறையிலிருந்து சிறுபான்மைத் தேசிய இனங்கள் தற்காத்துக்கொள்ள முற்படும் போது, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், இரணுவத் தாக்குதல்கள், இனப்படுகொலைகள், பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் என்பன தோன்றுகின்றன.

இங்கு தமிழர்களால் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக மாற்றப்படவில்லை மாறாக இலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அதிகாரவர்க்கத்தின் திட்டமிட்ட ளாலும், புதிதாக நுழைக்கப்பட்ட நிர்வாகத் தொகுதிகளாலுமே அவர்கள் சிறுபான்மையாக்கப்பட்டார்கள். இன்று வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்திருக்குமானால், கிழக்கு மாகாணம் சில வருடங்களுக்கு உள்ளாகவே சிங்கள மயமாக்கப்பட்டுவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வட கிழக்கு இணைப்பு என்ற விடையத்தில் முஸ்லீம்கள் மத்தியிலுள்ள ஜனநாயக சக்திகள் அவசரமாகச் செயற்பட வேண்டிய நிலையிலுள்ளனர். தமது சொந்த நலன்களையே நோக்கமாகக் கொண்ட அரசியல்வாதிகள் பிரித்தாளும் தந்திரத்திற்குத் துணை செல்கின்றனர்.

தமிழர்கள் மத்தியிலுள்ள கிழக்கு அரசியல்வாதிகளில் பலர் முஸ்லீம்கள் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்தி தமது வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்ள முற்படுகின்றனர். சமூகப்பற்றில்லாத இவர்களின் நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட வேண்டும். கடந்தகால அரசியல் தவறுகளையும். முரண்பாடுகளையும் கூர்மைப்படுத்த முனையும் இவர்கள் நமது சமூகத்தின் மத்தியிலிருந்து தூக்கியெறியப்பட வேண்டும்.

மறுபுறத்தில் முஸ்லீம்கள் தமது தன்னாதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ளும் வகையில் அவர்களின் திட்டங்கள் தமிழர்கள் தரப்பில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான சிந்தனை மாற்றம் இரண்டு தரப்பிலிமிருக்கும் மக்கள் பற்றுள்ளவர்களால் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கோகிலவாணி

வட கிழக்கில் பேரினவாதிகளின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கு கடந்த காலத்தைப் போன்று முஸ்லீம்களும், தமிழர்களும் பலியாகமல் தொடர்வதற்கு ஒடுக்கப்படும் இரண்டு தேசிய இனங்களும் இணைந்துகொள்வது அவசியமானதும் அவசரமானதுமாகும். இன்று இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடே. பெரும்பான்மைத் தேசிய இனத்தின் அதிகார வர்க்கத்திற்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் இடையேயான முரண்பாடே இங்கு பிரதான முரண்பாடு. இந்த முரண்பாடுகளின் கீழ் எல்லையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்தும் இணைந்து கொள்வதே பெரும் தேசிய ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான காத்திரமான வழிமுறை. அதன் நுழைவாசல் வடக்குக் கிழக்கு இணைப்பிலிருந்தும் அதற்காக இணைந்து குரலெழுப்புவதிலிருந்துமே ஆரம்பிக்கும். வாக்குவங்கி அரசிலையையும் மதவாத மற்றும் இனவாத அரசியலையும் முன்னெடுக்கும் அரசியல்வாதிகள் பேரினவாதிகளைப் பலப்படுத்தும் வகையில் வடக்குக் கிழக்கு பிரிவதை முன்மொழிகிறார்கள். இந்த வரலாற்றுத் தவறுக்கு எதிராக இலங்கையில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இன மக்கள் கிளர்ந்தெள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி : தினக்குரல்

Exit mobile version