Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெயமோகன் போன்ற ஆயிரம் விச வேர்கள்… : சபா நாவலன்

jeyamoham‘தடம்’ இதழில் ஜெயமோகன் வழங்கிய நேர்காணலில் இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் யுத்தம் இனப்படுகொலை அல்ல என்று கூறியிருந்தார். பின்னதாக அவர் தனது இணையப் பக்கத்தில் தனது நேர்காணலை நியாயப்படுத்துவதற்கு ஒரு நீண்ட பதிலை வழங்கியிருந்தார். ஜெயமோகனின் இந்த இரண்டு ஆக்கங்களும் முக நூலில் ஆங்காங்கு பதியப்பட்ட கண்டனங்களோடு நின்று போய்விட்டது. ஜெயமோகன் போன்ற பெறுமானங்களற்ற வணிகர்களுக்கெல்லாம் பதில் தர வேண்டுமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் அவர் போன்ற எதிர்காலத்தில் முளைவிடத் துணியும் அப்பட்டமான பிழைப்புவாதிகளை எதிர்கொள்வதற்காகவேனும் கருத்துக்கள் பதியப்படவேண்டும்.

ஜெயமோகன் என்ற எழுத்தாளரையும் அவரது அருவருக்கத்தக்க இலக்கிய முகத்தையும் பொதுவாகவே ஜனநாயக முற்போக்கு சக்திகள் அறிந்துவைத்திருக்கிறார்கள். ஆக, அவரது முன்னைய தொடர்ச்சியை மீண்டும் இங்கு விலாவாரியாக விளக்கவேண்டிய தேவையில்லை. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல என்ற தலையங்கத்தில் ஜெயமோகன் வழங்கும் விளக்கங்கள் உலகம் முழுவதும் வாழுகின்ற ஒடுக்கப்பட மக்கள் மீதான வெளிப்படையான தாக்குதல். அவரது ஆதாரங்கள் எந்த அடிப்படையுமற்ற பொய்கள்.

இந்தியாவின் உட்புறத்திலேயே நடைபெறும் எதிர்ப்புப் போராடங்கள் அனைத்தையும் தான் சார்ந்த அதிகாரவர்க்கத்தின் பக்கத்திலிருந்து கொச்சைப் படுத்துவதில் ஆரம்பித்தே ஜெயமோகன் தனது கருத்தை முன்வைக்கிறார். அவரது நேர்காணலும், பின்னைய பதிவும், ஈழத்தில் சுய நிர்ணைய உரிமை கோரி பல பரிமாணங்கள் ஊடாக நகர்ந்துசெல்லும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவை மட்டுமல்ல மாறாக, உலகின் அதிராகவர்க்கத்தின் ஓலம் போன்றே அது ஒலிக்கிறது.

இது போன்ற பதிவுகள் ஜெயமோகனிடமிருந்து மட்டுமன்றி, ‘இடதுசாரி; எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட டயான் ஜெயதிலக, ‘முன்னை நாள்’ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் போன்றவர்களிடமிருந்தும் இணைய வெளிகளுக்குள் உள் நுளைந்திருக்கின்றன.

இன்று சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அரசியலை பிழைப்பு வாதிகள் கையகப்படுத்தியிருக்கிறார்கள். அதே போன்று இந்திய பார்ப்பனீய அதிகாரவர்க்கத்திற்கு எதிரான இஸ்லாமியர்களின் எதிர்ப்புப் போராட்டம் என்பது அடிப்படைவாதிகள் பிடியில் சிக்குண்டுள்ளது.

ஜெயமோகனைப் பொறுத்தவரை போராட்டங்களின் தவறுகளைப் பயன்படுத்தி அதன் நியாயத்தையே நிராகரிக்கும் உக்தியைத் தான் சார்ந்த அதிகாரவர்க்கத்தின் சார்பிலிருந்து கையாள்கிறார்.

“இந்தியாவில் நடந்த அனைத்து மதக்கலவரங்களிலும் இஸ்லாமியரும் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதயோ, கணிசமான மதக்கலவரங்கள் இஸ்லாமியர் தங்கள் மத உணர்வுகள் புண்பட்டதாகச் சொல்லி ஆரம்பித்தவை என்பதையோ இவர்கள் கணக்கில் கொள்ள மாட்டார்கள். மணிப்பூரில் ஆயுதந்தாங்கிய ராணுவங்களை அரசு எதிர்ப்பாளர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதையோ ,அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பெருந்தாக்குதல்களை இந்திய ராணுவத்தின்மேல் தொடுத்திருக்கிறார்கள் என்பதையோ பேசமாட்டார்கள்.” – என்பது ஜெயமோகனின் வாதம்.

மேலோட்டமாகப் பார்த்தால் இவை சாரியானது போன்ற தோற்றப்பாட்டைத் தந்துவிடும்.

இஸ்லாமியர்களின் மீதான உளவியல் தாக்குதலை இந்தியப் பார்ப்பனீய அதிகாரவர்க்கம் தொடர்ச்சியாக நடத்திவருகிறது. இதன் மறுபக்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் பயனடையும் அதிகாரவர்க்கம் வன்முறைகளைச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தூண்டிவிடுகிறது. அதனைச் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொளும் இந்திய ஆளும்வர்க்கம் அப்பாவி இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களைத் தொடுக்கிறது.

இதற்குச் சமாந்தரமான பொறிமுறையே ஈழத்தில் தேசிய இன ஒடுக்குமுறையிலும் கையாளப்படுகிறது. அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாதம், பிரித்தானிய காலனி ஆதிக்கவாதிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட அனகாரிக தர்மபால காலத்தில் உச்சமடைந்தது எனலாம்.

அதனைப் பயன்படுத்திக்கொண்ட தொடர்ச்சியான சிங்கள பௌத்த ஆளும் வர்க்கம் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான உளவியல் தாக்குதலை ஆரம்பித்தது. இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு, அங்கு சிறுபான்மைத் தேசிய இனங்கள் சிங்கள பௌத்தர்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒரு ஓரமாக வாழ்ந்துவிட்டுப் போகலாம்’ என்ற முழக்கத்துடன் முன்னிலைக்கு வந்த அனகாரிக தர்மபால இன்று சிங்களை பௌத்தத்தின் தந்தையாக இலங்கை அரசால் போற்றப்படுகிறார்.

1983 ஆம் ஆண்டு, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன சிங்கள பௌத்தர் ஒருவர் மீதான தாக்குதலுக்குப் பதிலடியே அந்த ஆண்டு தமிழர்கள் சாரிசாரியாகக் கொல்லப்பட்டதற்குக் காரணம் என நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். இவற்றின் தொடர்ச்சிக்கு ஆயிரம் உதாரணங்களை இன்றுவரைக்கும் காணலாம்.

ஜெயவர்தனவின் நோக்கம், சிங்கள பௌத்தர்களின் சிந்தனையைத் திசைமாற்றி அவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக்கொள்வதே. இதற்கு எதிரான அரசியல் ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவில்லை. அனைத்துச் சிங்கள மக்களையும் அழிக்கவேண்டும் என்ற உணர்சிகர முழக்கங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட, ஜெ.ஆர் சொல்வது சரி என்ற போலியான விம்பம் சிங்கள மக்கள் மத்தியில் தோறம்பெற ஜெயவர்தனவின் பலம் அதிகரித்தது.

இராணுவ ஒடுக்குமுறை பெரும்பான்மைச் சிங்கள பௌத்தர்களின் துணையுடன் தொடர்ந்தது. இத் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள ஆயுதம் தாங்கிய தற்காப்பு யுத்தம் ஒன்றைத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதுவே சுய நிர்ணைய உரிமைக்கான நியாயமான போராட்டம்.

இப் போராட்டத்தின் அரசியல் தவறுகள் சிங்கள பௌத்தத்திற்கு வலுச் சேர்ப்பதாக மாறியதை அப் போராட்டத்தின் நியாயமே தவறு என்கிற கோணத்தில் ஜெயமோகன் கூறுவதற்கு அவர் சார்ந்த அதிகாரவர்கமே காரணம்.

இவ்வாறு போராட்டங்களையும் அதற்கான நியாயங்களையும் அவற்றின் அரசியல் தவறுகளை முன்வைத்து நிராகரிக்கும் ஜெயமோகன், வன்னியில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான ஆதாரத்தை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் இனப்படுகொலைக்கான வரையறையிலிருந்து ஆரம்பிக்கிறார்.

வரைமுறை பின்வருமாறு கூறுகிறது: மனோரீதியான அல்லது உடல்ரீதியான தீங்கு விளைவித்தல், …..(Genocide is defined in Article 2 of the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide
(1948) as “any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical,racial or religious group, as such: killing members of the group; causing serious bodily or mental harm tomembers of the group; deliberately inflicting on the group conditions of life calculated to bring about itsphysical destruction in whole or in part1; imposing measures intended to prevent births within the groupforcibly transferring children of the group to another group.”

ஜெயமோகன் முட்டாள் தனமாக இவற்றைக் கூறவில்லை. உள் நோக்கம் பொதிந்த அப்பட்டமான பொய்களையும் புனைவுகளையும் முன்வைத்து இந்த நூற்றாண்டின் அவலம் மிக்க இனப்படுகொலை ஒன்றையே மூடிமறைக்கும் முயற்சியை மிகவும் திட்டமிட்ட வகையில் தந்திரமாகச் செய்து முடிக்கிறார்.
ஐ.நாவின் வரையறையின் அடிப்படையில் கணிப்பிட்டால் கூட கடந்த அறுபது வருடங்களாக இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்படுகின்றது.

வன்னிப் படுகொலைகளின் போது கூட சிங்கள பௌத்த விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான யுத்தம் என்ற சுலோகம் இராணுவத்தினருக்காக வெளியிடப்பட்ட பிரச்சாரப் பாடல்களில் கூட முன்வைக்கப்பட்டது. 90 வீத சிங்களவர்களைக் கொண்ட இனவெறியூட்டப்பட்ட இராணுவத்தின் கொலைவெறிக்கு விடுதலைப் புலிகள் மட்டுமல்ல அப்பாவித் தமிழர்களும் சாரிசாரியாகக் கொல்லபட்டார்கள். இலங்கையின் அதிகாரவர்க்கம் அந்த நாட்டைச் சிங்கள பௌத்த நாடு என்கிறது. தமிழர்கள் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இவை இயல்பானவை அல்ல. திட்டமிட்ட இனவழிப்பிற்கான ஆதாரங்கள். கல்லோயாவில் ஆரம்பித்த இக் குடியேற்றங்கள் இன்றுவரை தொடர்கின்றன.

மைத்திரி – ரனில் அரசு தோன்றிய பிறகு தமிழர் நிலங்களில் பௌத்த கோவில்கள் திடீரென முளைவிடுகின்றன. தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாகவுள்ள ஒரு நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்கள் முழுமையாக வாழும் பகுதிகளில் இப் பௌத்த விகாரைகளின் தோற்றத்தோடு குடியேறும் பௌத்த துறவிகளுக்கு அரச படைகளின் ஆதரவு தாராளமாகக் கிடைக்கிறது. பௌத்ததிற்குத் தமிழர்கள் எதிரானவர்கள் அல்ல. சிங்கள பௌத்த நாடு என வரையறுக்கப்பட்டு அறுபது வருடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் இனப்படுகொலைகளின் இடையே புதிய அச்சுறுத்தல்களாகவே இவை கருதப்படும்.

1956 இல் ஆட்சிக்குவந்த பண்டாரநாயக்க அரசிலிருந்து இன்றுவரை தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான முழக்கங்கள் பௌதீக அழிப்பை நோக்கமாகக் கொண்டே முன்வைக்கபடுகின்றன. 1958 ஆம் ஆண்டு அரச ஆதரவு சிங்களக் காடையர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1977. 1983 ஆம் ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த அரசுகளின் ஆதரவுடன் சிங்கள குண்டர்கள் தமிழர்கள் மீது இனப்படுகொலையக் கட்டவிழ்த்துவிட்டனர். 1981 ஆம் ஆண்டில் இலங்கை அமைச்சர் காமினி திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.

சிங்கள பௌத்த அதிராகவர்க்கத்தின் திட்டமிட்ட இத் தாக்குதல்கள் இனப்படுகொலைகளே என்பது ஐ.நாவின் வரைமுறைகளுக்கு உட்பட்டதே.

ஜெயமோகன் தனது கருத்தை நிறுவுவதற்குத் துணைக்கழைக்கும் இந்தியாவும், மேற்கு ஏகபோக நாடுகளும் ஒரு புறத்தில் இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்டன. மறுபுறத்தில் தமது நலன்களை நோக்கமாகக் கொண்டு இலங்கை அரசிற்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டங்களையும், விடுதலை இயக்கங்களையும் கையாண்டன. பொதுவாக ஆயுதபலம் மிக்க அனைத்து இயக்கங்களுக்கும் ஆயுதங்களை வழங்கி அவற்றைக் கையாள ஆரம்பித்தன. தேசிய இன விடுதலைக்கான போராட்டம் இனவாதம் கலந்த ஒன்றாக மாற்றமடைய அதனைச் சுற்றிப் பிழைப்புவாதிகள் குடிகொள்ள ஆரம்பித்தனர்.

ஜெயமோகன் இப் பிழைப்புவாதிகளை முன்னிறுத்தி இனப்படுகொலையையும், ஆறாக வடிந்த இரத்ததையும் புனிதப்படுத்தப் முனைகிறார்.

ஈழப் போராட்டத்தின் அரசியல் தவறுகளும், அதனைச் சுற்றி தோற்றம் பெற்ற வியாபாரிகளும், இன்னும் ஆயிரம் ஜெயமோகன் போன்ற விச வேர்களை எமது சமூகத்தில் ஆழத்தில் பரவ அனுமதிக்கும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. இன்று சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தை உலக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்கு ஜெயமோகன் போன்றவர்களை மட்டுமல்ல, ஈழப்போராட்டத்தைப் பயன்படுத்திப் பிழைப்பு நடத்தும் கூட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டிய தேவை எம் முன்னே உள்ளது

Exit mobile version