Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்பட்டதன் மறுபக்கம்: கோசலன்

self_determinationதேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து லெனின் முன்வைத்த கோட்பாட்டு வகையிலான முடிவுகள், உலகத்தில் முதல் தடவையாக தேசிய இனங்கள் குறித்துப் பேசியது. சோவியத் ரஷ்யாவில் தேசிய இனங்களுக்கு பிரிந்துசெல்லும் உரிமையை அங்கீகரிப்பது மட்டுமே சோசலிசப் புரட்சி வெற்றி பெறுவதற்கான முன் நிபந்தட்னை என்றார். கார்ல்மார்க்ஸ் முயன்றதை லெனின் தேசியப் பிரச்சனையிலும் முன்னெடுத்தார். ரஷ்யாவில் சமூக ஜனநாயகப் புரட்சியை வெற்றி கொள்வதற்கான முன்நிபந்தனையாக ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார். அத் தேசிய இனங்களை பாட்டாளிவர்க்கக் கட்சியில் கீழ் ஒடுக்குமுறைக்கு எதிராக அணிதிரட்டுவதற்கான தத்துவத்தை முன்வைத்தார்.

சுய நிர்ணய உரிமை குறித்த தீர்க்கமான கோட்பாட்டுரீதியான முடிவை முதலில் முன்வைத்தது மார்க்சியமே. இன்று நடைபெறும் விவாதங்களைப் போன்றே ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் தேசம், தேசியம் குறித்த விவாதங்களில் மார்க்சிஸ்டுகள் தமது உறுதியான அறிவியல் நிலைப்பாட்டை முன்வைத்தனர். ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான போராட்டங்களை கோட்ப்பாடுரீதியிலும், நடைமுறை அரசியலிலும் மார்க்சிஸ்டுக்களே முதலில் ஆதரித்தனர்.

துறைசார் நிறுவனங்கள் கூட 70களின் பின்னரே மார்க்சியத்தின் தேசிய இனங்கள் குறித்த அறிவியல்பூர்வமான நிலைப்பாட்டை தவிர்க்கமுடியாமல் உள்வாங்கிக்கொண்டனர்.

‘நாங்கள் தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பதன் உள்ளர்த்தம் குறித்துப் புரிந்துகொள்ள தேசிய இயக்கங்களின் வரலாற்றுப் பொருளியல் (historico-economic) நிலைமைகளை ஆராய்வதனூடாகவே முடிவுக்கு வரமுடியும். மாறாக ஊசலாடும் வரைமுறைகளை வைத்துக்கொண்டோ, சுருக்கப்பட்ட கண்டுபிடித்த வரை முறைகளை வைத்துக்கொண்டோ அல்ல. தேசங்களின் சுய நிர்ணய உரிமை என்பது தேசியத்திற்கு அன்னியமான கூறுகளிலிருந்து தேசங்கள் அரசியல்ரீதியாகப் பிரிந்து செல்லல். அதுமட்டுமல்ல சுதந்திரமான தனி அரசை உருவாக்குதல் என்பதுமாகும்.’ என்று விவாதத்திற்கு இடமின்றி லெனின் தீர்க்கமாகத் தனது நிலைப்பாட்டை முன்வைக்கிறார்.

ஆக, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் அடிப்படைத் தத்துவார்த்தக் கோட்பாடு மார்க்சியமாகவே அமைய முடியும். மார்க்சியம் மட்டுமே மிகத் தெளிவான உறுதியான தத்துவார்த்தக் கோட்பாட்டைத் தேசிய இனங்கள் குறித்தும் பிரிந்து செல்லும் உரிமை குறித்தும் முன்வைக்கிறது.

இன்று தேசிய இனப்பிரச்சனை என்பது இலங்கையில் மட்டுமல்ல, மத்திய கிழக்கிலும், ஆபிரிக்காவிலும், சீனாவிலும், இந்தியத் துணைக்கண்டத்திலும் பல திரிபுகளுக்கு உட்பட்டுத்தப்படுகின்றது.

ஏகாதிபத்தியமும் அதன் உப நிதி நிறுவனங்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களைச் சீர்குலைக்கின்றன.

மறுபுறத்தில் பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்திற்கான கோட்பாட்டை முன்வைக்கும் மார்க்சியம், வெற்றிய நோக்கிய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்ட வழிமுறைகளையும் முன்வைக்கிறது. ஆக, எமது காலத்தின் தேசியப் போராட்டங்களுக்கு மார்க்சியம் வழிகாட்டுகிறது.

தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையை மறுப்பது என்பது மார்க்சிய விரோதச் செயற்பாடாகும்.

தங்களைத் தாங்களே மார்க்சிஸ்டுக்கள் என்றும் இடதுசாரிகள் என்றும் அழைத்துக்கொள்ளும் நிலப்பிரபுத்துவ மற்றும் மத்தியதர வர்க்க சிந்தனைக்குள் வயப்பட்ட குழுக்கள் சுயநிர்ணய உரிமையை மார்க்சியத்தின் பெயராலேயே மறுக்கின்றன. இவற்றை எல்லாம் அவர்கள் தங்களது தனிப்பட்ட அரசியல் என்று முன்வைத்தால் கூட அதில் ஒரு நேர்மையைக் காணலாம். மாறாக இலங்கையில் இடதுசாரிகள் நிலைப்பாடு என்பதுமார்க்சியத்திற்கு எதிரான ஒன்றை மார்க்சியத்தின் பெயராலேயே முன்வைப்பது.

இலங்கையில் மக்கள் மத்தியிலான பிரதான முரண்பாடு தேசிய முரண்பாடே. பேரினவாத ஒடுக்குமுறை இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மைத் தேசிய இனங்களை திட்டமிட்ட இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்பிற்கும் உட்படுத்துகின்ற அளவிற்கு உச்சமாக வளர்ந்துள்ளது.

போலி இடதுசரிகளாலும் கம்யூனிஸ்டுக்களாலும் தமிழர்கள் தமக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என அறிந்து கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கிறார்கள். கடந்த 40 ஆண்டு காலமாக இலங்கையின் வரலாறு தேசிய இயக்கங்களின் வரலாறு.

இந்த சூழலில் மார்க்சிஸ்டுக்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் அதன் எதிரிகள் சுயநிர்ணய உரிமையைத் தாங்கள் ஏற்றுகொள்ளவில்லை என்று கூறியது மட்டுமன்றி மார்க்சமும் அதைத்தான் கூறுகிறது என்ற அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிட்டார்கள். தற்செயலாக சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்ட சிலர் பிரிந்துபோவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்கள்.

சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மத்தியில் இவர்களின் திரிபு வாதங்கள் மார்க்சியத்தின் மீதும் இடதுசாரியத்தின் மீதும் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. இடதுசாரி இயக்கங்களுக்கும், இடது சாரிகளுக்கும் எதிரான வெறுப்பு பெரும் அலைபோல எழுந்தது. இதற்கு மாற்றாக, வேறு வழியின்றி, வலதுசாரிய தலைமையையும், சிறு முதலாளித்துவ அல்லது மத்தியதரவர்க்கத்தின் ஊசலாடும் தலைமையையும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவானது. இவ்வாறான தலைமைகள் அறிவியல் பூர்வமான மனித நேயத்தின் அடிப்படையில் அன்றி இனவாதத்தையும் குறுகிய தேசிய வாதத்தையும் முன்நிறுத்தி எழுந்தன.

இத் தலைமைகள் மார்க்சிஸ்டுக்கள் மீது அருவருக்கத்தக்க அவதூறுகளைக் கட்டவிழ்த்துவிட்டு அதன் பின்புலத்தில் கொலைகார அரசுகளோடு இணைந்து ‘தேசிய’ப் பிழைப்பு நடத்தின.

தமிழ்ப் பேசும் மக்கள் சார்ந்த தலைமைகள் தாம் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக இனவாதிகளாகவும், குறும் தேசிய வாதிகளாகவும் மாறிய சீர்குலைவுகளுக்குக் காரணமான சுருக்கமான வரலாறு இடதுசாரிகளின் வரலாற்றுத் தவறோடு இணைந்தே நோக்கப்பட வேண்டும்.

ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை வலதுசாரிகளதும், இனவாதிகளதும், குறுந்தேசிய வாதிகளதும் கைகளில் ஒப்படைத்த வரலாற்றுத் தவறை இலங்கையில் இடதுசாரியம் பேசியவர்கள் இழைத்துள்ளனர்.

சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லும் உரிமையையும் உள்ளடக்கியதே எனினும் அது பிரிவினைவாதம் அல்ல. மார்க்சியத்தின் எதிரிகளே அவ்வாறான திரிபுகளை முன்வைத்து பெருந்தேசியவாத்த்தில் கட்டுண்டு கிடக்கும் சிங்கள மக்களைப் பயமுறுத்துகிறார்கள். பெருந்தேசிய ஒடுக்குமுறைக்குத் துணைபோகிறார்கள். மனித நேயமும் சமூகப்பற்றும் மிக்க புதிய தலைமுறையை இனவாதத்தையும் குறுந்தேசிய வாதத்தையும் நோக்கி நகர்த்துகிறார்கள்.

இலங்கை போன்ற நாடுகளின் அரசியல் சூழலில் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்படும்போது மட்டுமே ஒடுக்கப்படும் சிங்கள உழைக்கும் வர்க்கம் கூட தன்மீதான ஒடுக்கு முறையை உணர்ந்துகொள்ளும். உறுதியான மார்க்சிய அரசியலின் அடிப்படையில் பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வெற்றியை நோக்கி நகரும் வேளையில் பலவீனமடையும் அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் அணிதிரள்வார்கள். ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் போராட்ட இயக்கம் உழைக்கும் வர்கத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படும் போது சிங்கள மக்கள் தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்பார்கள்.

இன்று வரை இனவாதிகளதும் குறும் தேசிய வாதிகளதும் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்த போராட்டம் சிங்கள மக்களையும், ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களான முஸ்லீம் தமிழர்களையும் மலையகத் தமிழர்களையும் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களையும் அன்னியப்படுத்தியிருந்தது. கம்யூனிச இயக்கங்கள் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் தலைமை தாங்கினால் மட்டுமே இந்தப் போராட்டம் பெரும்பான்மை மக்களின் போராட்டமாக மாற்றமடையும்.

இன்று தேசிய விடுதலைக்கு எதிரான ஏகாதிபத்திய சார்பு மாபியாக் கும்பல்களும், மக்களின் அவலங்களைத் தமது வயிற்றுப் பிழைப்புக்காகப் பயன்படுத்துக்க்கொள்ளும் திருடர்களும் மார்க்சிஸ்டுக்கள் மீது நடத்தும் அவதூறு யுத்தம் புலம்பெயர் நாடுகள் வரை விரிவடைந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை அழித்து வர்த்தகப் பேரரசுகளை நிறுவுவதற்காக நடத்தப்படும் உலகின் எல்லா யுத்தங்களின் பின்புலத்தில் அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டுமல்ல, ஐ.நா மற்றும் தன்னார்வ நிறுவனங்களும் செயற்படுகின்றன.

ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்களிலிருந்து தேசிய இன ஒடுக்குமுறையை வெறும் மனித உரிமைப் பிரச்சனையாகக் குறுக்கும் உரிமை அமைப்புக்கள் வரை இந்த அவதூறு யுத்தத்தின் பின்புலத்தில் செயற்படுகின்றனர்.

இவர்கள் பிரிந்துசெல்லும் உரிமைக்காக உறுதியாகப் போராடவும் குரல்கொடுக்கவும் திரணியற்ற கோழைகள். இன்று சுய நிர்ணைய உரிமை என்பது ராஜபக்சவைத் தண்டிப்பதோடு முடிந்து போய்விடும் என்ற நிலைக்கு நகர்த்திவந்திருக்கும் இந்த இனவாத மாபியாகளிடமிருந்து ஒடுக்கப்படும் மக்களின் அரசியல் விடுதலை செய்யப்பட வேண்டும்.

Exit mobile version