Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குமரிக்கண்ட முடிச்சுக்களை அவிழ்க்கும் அண்மைக்கால அகழ்வாய்வுகள் : வி.இ.குகநாதன்

கீழடி

தமிழர் தோன்றியது எங்கே? என்று யாரிடமாவது கேட்டால், மிகப்பெரும்பாலானோரின் பதில் குமரிக்கண்டம் என்பதாகவே அமையும். குமரிக்கண்டத்திற்கான மறுப்பு அறிவியல் விளக்கங்கள் பல வெளிவந்துள்ளபோதிலும், பாமர மக்கள் மட்டுமன்றி அறிஞர்கள் பலர்கூடக் குமரிக்கண்டத்தை நம்பியேவருகின்றனர். அண்மையில் தமிழாற்றுப்படுகை எனும் தொடர்சொற்பொளிவு நிகழ்வில் மறைமலை அடிகளார் பற்றிய உரையில் கவிப்பேரரசு வைரமுத்துவே தமிழர் தோன்றியது லெமோரியக்கண்டத்தில் எனக்குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று ஒசூர் பாலு எனும் ஆழ்கடலாய்வு நிபுணரும் இன்றும் குமரிக்கண்டத்தை வலியுறுத்தியே வருகின்றார். இவர்கள் இருவரும் தமது துறைகளில் வல்லுனர்கள் என்பதுடன் தமிழிற்கும் மிகப்பெரிய பங்களிப்பினை நல்கியவர்கள் என்பதில் ஐயமில்லை, எனினும் இவர்களது குமரிக்கண்டம் பற்றிய கருத்துத் தவறானது. இவ்வாறு பாமரர் முதல் படித்தவர்களில் பலரிடம்வரைப் பரவலடைந்துள்ள விடயமான குமரிக்கண்டம் பற்றிய ஒரு சிறு ஆய்வாகவே இக்கட்டுரை அமைகின்றது.

குமரிக்கண்ட கருதுகோளின் தொடக்கம்:

குமரிக்கண்டம் பற்றிய கோட்பாடு தோன்றுவதற்கு முன்னரே, தமிழர்களின் தோற்றத்தினை மையப்படுத்தி அவ்வாறான ஒரு தேடல் தமிழர்களிடம் ஏற்கனவேயிருந்தே வந்தது. இவ்வாறான தேடலிற்கு அடிப்படையாகப் பின்வரும் காரணிகள் காணப்பட்டன.

சங்க இலக்கியங்களானது அக் காலத்தில் செழிப்புற்றிருந்த நகரங்கள் பற்றிப் பேசியபோதும், அத்தகைய நகரங்களின் எச்சங்கள் எதுவும் தமிழகத்தில் 20ம் நூற்றாண்டுவரை கண்டுபிடிக்கப்படாமை. (முன்னைய அகழ்வாய்வுகளில் ஈமத்தாழிகளே பெருமளவிற்கு கிடைத்திருந்தன)

சங்க காலத்திலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தபோதும், அண்மைக்காலத் தொல்பொருளாய்வுகள் வரை எந்தவித எழுத்து மூலமான சான்றுகளும் இல்லாமை. (முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் மிகப்பெரும்பாலானவை பொது ஆண்டு பத்தாம் நூற்றாண்டிற்குப் [Cஏ10த் cஎன்ட்] பிற்பட்வையாகவே காணப்பட்டன)

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் மதுரையின் அமைவிடமானது தற்போதைய மதுரையின் அமைவிடத்திலிருந்து வேறுபட்டுக் காணப்பட்டமையால் பழைய மதுரை பற்றிய தேடல். (பத்துப்பாட்டு ஆராய்ச்சி எனும் நூலில் இராசமாணிக்கர் மதுரையின் அமைவிடம் பற்றி விளக்கமாக்கூறியுள்ளார்)

சங்ககால இலக்கியங்கள் மணி மாலை போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும், அதனையொட்டிய துறைமுகங்கள் பலவற்றையும் குறிப்பிட்டுள்ளபோதும், அதற்கான தொல்பொருட் சான்றுகள் கிடைக்காமை.

இவ்வாறான காரணங்களால் தமிழரின் தோன்றிய இடம் பற்றிய தேடல்களில் ஈடுபட்டிருந்த தமிழர்களைத் தென்பகுதி நோக்கித் தள்ளுவதாக ஒரு காரணி அமைந்தது. அது தமிழ் மொழியானது தெற்கேயிருந்து வடக்கே செல்லச் செல்ல சிதைவடைந்து சென்றமையாகும். இதுவே தமிழர் தோன்றிய இடத்தினை தெற்கு நோக்கிக் காட்டிற்று.

இறையனார் அகப்பொருள் உரையில் பாண்டியப் பேரரசு கடற்கோளால் அழிந்தது பற்றிய விளக்கமான குறிப்புகள் காணப்படுகின்றமை. ஏற்கனவே தெற்கு நோக்கித் திரும்பியிருந்த பார்வை, இறையனாரின் இந்த பாண்டியநாடு கட ற்கோளால் மூழ்கியது என்ற கருத்தால் கடலை நோக்கித் திரும்பியது.

மேற்கூறிய காரணிகளே குமரிக்கண்டம் பற்றிய கருதுகோளிற்கு அடிப்படையாக அமைந்தன. முதன்முதலில் 1903 இல் பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூர்யநாராயண சாசுதிரி) தமிழ் மொழியின் வரலாறு என்ற தன்னுடைய நூலில் குமரி நாடு என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பின்பு குமரிக்கண்டம் என்ற சொல்லை ஈழத்தமிழறிஞரான ப.கனகசபையை “1800 ஆண்டுகளிற்கு முன்னர் தமிழர்கள்” என்ற நூலில் பயன்படுத்தியதுடன், மறைந்த நிலப்பகுதியே குமரிக்கண்டம் என்றும் கூறியிருந்தார். இவர்களைத் தொடர்ந்து பாவாணர்,அப்பாத்துரையார் போன்றோர் குமரிக்கண்டம் பற்றிய கருதுகோளினைப் பெரிதும் பரவலடையச் செய்திருந்தனர்.

இலெமூரியா :

இவ்வாறு தமிழர்களின் தேடல் கடலை நோக்கித் திரும்பியிருந்தவேளையில் மேற்கத்திய அறிஞர்களால் லெமோரியாக் கண்டம் பற்றிய கருதுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டது. 1864 இல் லெமூர் என்ற விலங்கானது மடகாசுடரிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் (லெமூர் ஆபிரிக்காவில் காணப்படாமல்) காணப்பட்டதனை அடிப்படையாகக் கொண்டு பிலிப் ஸ்க்லேட்டெர் (Pகிலிப் ஸ்cலடெர்-Zஓலொகிச்ட்) என்னும் ஆராய்ச்சியாளரால் “Tகெ Mஅம்மல்ச் ஒf Mஅடகச்cஅர்” என்று ஒரு ஆக்கம் முன்வைக்கப்பட்டது. இதுவே லெமோரியாக் கண்டம் பற்றிய கருதுகோள் தோன்றிய அடிப்படையாகும். இந்த லெமோரியக் கண்டம்தான் குமரிக்கண்டம் என 1906ம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளிவந்த சித்தாந்த தீபிகை என்ற இதழில் நல்லசிவம்பிள்ளை என்பவர் முதன்முதலில் எழுதினார். பின்னர் குமரிக்கண்டமானது லெமோரியக்கண்டம்,நாவலந்தீவு எனப் பல பெயர்களில் தமிழர்களால் அழைக்கப்பட்டது. லெமோரியக்கண்டம் பற்றிய கருதுகோளானது நீண்டகாலத்திற்குத் தாக்குப்பிடிக்கவில்லை. அதாவது லெமூர் என்ற விலங்கானது மடகாசிடரிற்கும் இந்தியாவிற்குமிடையே பரந்திருப்பதற்கு டார்வினின் பரிணாமக்கோட்பாட்டின்படி தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டவுடன், லெமோரியாக் கோட்பாட்டின் அடிப்படை தகர்ந்துபோயிற்று. லெமோரியாக் கண்டம் பொய்ப்பிக்கப்பட்டவுடன் சிலர் கன்யாகுமரிக்குத் தெற்கே இருந்ததுதான் குமரிக்கண்டம் என்று வேறு ஒரு புது விளக்கம் கொடுத்தனர்.

அறிவியல்ரீதியில் குமரிக்கண்டத்தின் பொருத்தப்பாடு:

கண்ட நகர்வுகள், புவித்தகடு அசைவுகள் பற்றிய தெளிவான விளக்கங்கள் குமரிக்கண்டக்கோட்பாட்டினை முற்றாகவே மறுத்துவிட்டன. இதனைச் சுருக்கமாகப்பார்த்தால், புவித்தகடுகளின் அசைவினால் ஒரே நிலத்தொகுதியாகவிருந்த பெருநிலப்பரப்பானது (Pஅஙஎஅ) பல்வேறு கண்டங்களாகப் பிரிந்தது பல மில்லியன் ஆண்டுகளிற்கு முன்னரே இடம்பெற்ற ஒரு நிகழ்வு, அப்போது மனிதர்களே தோன்றவில்லை, எனவே குமரிக்கண்டத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது வெறும் கற்பனையேயாகும். புவித்தகடு அசைவு, கண்ட நகர்வுகள் என்பன ஒரே நாளில் திடீரென இடம்பெற்று மக்களையும், நகரங்களையும் ஒரேயடியாக அழிப்பனவல்ல. மாறாக அவை ஒரு நீண்டகால தொடர்செயல்முறையாகும். இன்றும்கூட ஆபிரிக்கக்கண்டத்தை இரண்டாகப் பிளக்கும்வகையில் ஒரு நிலப்பிளவானது (நுபியன் தட்டு நகர்வு) கடந்த மார்ச் 19ல் கென்யாவில் வெளித்தெரியுமாறு இடம்பெற்றதாக புவியிலாளர் கருதுகிறார்கள். இந்த நகர்வானது 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கி, ஆண்டுக்கு 2.5செமீ என்ற அளவில் நகர்ந்து, இன்னமும் பத்து மில்லியன் ஆண்டுகளிற்குப்பின் ஆபிரிக்காவினை இரண்டாகப் பிளக்கும் என அறிஞர்கள் கருதுகிறார்கள். எனவே இத்தகைய படிப்படியான கண்டநகர்வுகளில் தமிழரின் நாகரிகம் அழிந்துபோனதாகக்கூறுவது வெறும் கற்பனையே.

இப்போது உங்களிற்கு “அண்மைக்காலத்தில் நிலப்பகுதியானது கடலிலிற்குள் போவதேயில்லையா?” என ஒரு கேள்வி எழலாம். கடல்அரிப்பு, தீவுகளின் அமிழ்தல் போன்ற மெதுவான செயற்பாடுகளால் நிலப்பகுதி படிப்படியாக கடலிற்குள் போகலாம். இந்த அடிப்படையிலேயே துவாரகை,பூம்புகார் போன்ற கடலடி ஆய்வுகளை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். திடீரென ஏற்படுத்தும் சுனாமி,புயல் போன்றவை வேண்டுமானால் பேரழிவினை ஏற்படுத்தக்கூடியவையென்றாலும், அவை முடிவடைந்த பின் நிலப்பகுதி அவ்வாறேயிருக்கும். எனவே மேற்கூறிய நிகழ்வுகள் எதுவும் குமரிக்கண்டத்தினை நியாயப்படுத்தாது. எனவேதான் குமரிக்கண்டக் கருதுகோளானது அறிவியல்ரீதியில் பொருத்தமற்றது என உறுதியாகக்கூறலாம்.

தெளிவுறுத்தும் அண்மைக்கால அகழ்வாய்வுகள்:

மேலே நாம் அறிவியல்ரீதியில் குமரிக்கண்டத்தினை மறுத்து நிறுவியபோதும், இலக்கியச்சான்றுகள் என்னாயிற்று? குமரிக்கண்டத் தேடலிற்கான காரணங்கள் (மேலே இலக்கமிடப்பட்டுப் பார்க்கப்பட்டவை) என்னாயிற்று என்பன போன்ற கேள்விகள் எழலாம். இவற்றுக்கான பதில்களையும் நாம் அண்மைக்கால அகழ்வாய்வுகளைக் கவனமாகப் பார்ப்பதன்மூலம் அறிந்துகொள்ளலாம். இங்கு அண்மைக்கால ஆய்வுகள் என நான் குறிப்பிடுவது இரண்டாயிரமாவது ( Cஏ2000) ஆண்டிற்குப்பின்னர் மேற்கொள்ளப்பட்ட கீழடி, ஆதிச்சநல்லூர்,அழகன்குளம் போன்ற அகழ்வாய்வுகளையே குறிக்கின்றது. இதனை நாம் முதலில் குமரிக்கண்டத் தேடலிற்கெனப் பார்த்த காரணங்களிற்கான அதே ஒழுங்கில் பார்ப்போம்.

சங்க இலக்கியங்கள் பெருமையாகப் பேசும் நகர நாகரிகங்களிற்கான எச்சங்கள் எதுவும் கீழடி ஆய்வுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனாலேயே முன்னர் சங்க இலக்கியங்களின் நம்பகத்தன்மையினைப் பிறர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனாலேயே சிலர் சங்க காலத்தை வெகுவாக பின்நோக்கி நகர்த்தியும் வந்தனர். இத்தகைய பின்புலத்திலேயே சான்றுகள் நிலத்தில் காணப்படாமையால் கடலை நோக்கிக் கவனம் முன்பு திரும்பியது. கீழடியில் முழுமையான ஒரு நகர நாகரிகம் கண்டுபிட்டதும், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கரிமச்சோதனையில் (றடிஒcஅர்பொன் டடிங்) சங்க காலத்துடன் ஒத்துப்போனமையும் இந்த காரணத்திற்கான தேடலிற்கான பதிலைத் தருகின்றது.

பழனிக்கருகிலுள்ள பொருந்துதல் என்ற இடத்தில் க.ராஜன் என்ற தொல்லியல் ஆய்வாளரால் 2011 இல் கண்டுபிடிக்கப்பட்ட மண்கலத்திலிருந்த “வைரமணி” (தமிழி வடிவில்) என்ற தமிழ் எழுத்துக்கள் பொதுஆண்டிற்கு முந்திய 490 ம் (BCஏ490 ) ஆண்டைச் சேர்ந்தது என அமெரிக்க ஆய்வில் (ஆccஎலெரடெட் மச்ச் ச்பெcட்ரொமெட்ர்ய் மெதொட்) உறுதிப்படுத்தப்பட்டது. அதே போன்று கொடுமணல் அகழ்வாய்வில் மட்டுமே 204 தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் கிடைத்தன. இவையும் பொ.ஆ. மு 400 (BCஏ 400) இனைச் சேர்ந்தது என்கிறார் கா.ராஜன் (தொல்லியல் நோக்கில் சங்ககாலம்). இவை அசோகரின் பிராமி எழுத்துக்களிற்கும் முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கவை. கீழடியிலும் எழுத்துக்கள் (BCஏ 200) பொறிக்கப்பட்ட சிகப்பு-கறுப்பு நிற மட்பாண்டங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன. எனவே சங்ககால எழத்துக்களிற்கான சான்றுகளும் நிலப்பரப்பிலேயே கிடைக்கப்பெற்றுவிட்டன.

மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் என்பன குறிப்பிடும் மதுரையானது தற்போதைய மதுரையின் அமைவிடத்துடன் பொருந்தாமையால், பழைய மதுரை கடல்கொள்ளப்பட்டிருக்கலாம் என முன்பு உய்த்துணரப்பட்டது. கீழடி ஆய்வானது பழைய மதுரை என்பது கீழடிதான் என உணர்த்தியுள்ளது. சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் மதுரையானது திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே காணப்பட, இன்றைய மதுரையானது வடகிழக்குத் திசையில் காணப்படுகிறது. கீழடியும் சரியாக திருப்பங்குன்றத்திற்கு நேர் கிழக்கேயே (இலக்கியங்கள் குறிப்பிடுவதுபோல) காணப்படுகிறது. அத்துடன் சிலப்பதிகாரத்தில் கோவலனும், கண்ணகியும் கவுந்தி அடிகளுடன் பூம்புகாரிலிருந்து மதுரை நோக்கிச்சென்ற பாதையும் சரியாகக் கீழடிக்குச் செல்லும் பாதையுடன் பொருந்திப்போகின்றது. மேலும் தற்போதைய மதுரையில் 10ம் நூற்றாண்டிலிருந்தே கல்வெட்டுச்சான்றுகள் கிடைக்க, பழைய மதுரையாக இப்போது கருதப்படுகின்ற கீழடியில் 10ம் நூற்றாண்டிற்கு முன்னரான சான்றுகள் சங்ககாலம் வரைக் காணப்படுகிறது. எனவே 10ம் நூற்றாண்டளவில் மதுரை கீழடியிலிருந்து தற்போதைய மதுரைக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என உய்த்துணரமுடிகிறது. (இங்கே கடம்பவனத்தை அழித்து பாண்டியன் மதுரையினை உருவாக்கிய கதையினையும் நினைவிற்கொள்ளலாம்)

சங்க காலத்தில் யவனர்களுடன் வாணிபம் செய்த குறிப்புக்களுடன் அழகன்குளம் துறைமுக ஆய்வுகள் ஒத்துப்போகின்றது. இங்கு கிரேக்கக் கப்பல் வடிவம் பொறிக்கப்பட்ட தொல்லியல் சான்றுகள் கிடைக்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்த அழகன்குளம் முன்னர் அருகன்குளம் (சமணக்கடவுள்-அருகன்) என அழைக்கப்பட, அதுவே தொலமியின் குறிப்புக்களில் அருகுறுகுளம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் தெற்கே செம்மையாகவும், வடக்கே செல்லச்செல்ல திரிந்தும் காணப்படுவதற்கு நாம் வேறு ஒரு கோணத்தில் வடக்கேயிருந்து வந்த வடமொழி ஆக்கிரமிப்பே காரணம் எனக்கொள்ளலாம்.

மேலே சங்ககாலத்தில் கூறப்பட்ட பல்வேறு விடயங்களுக்கும் தமிழக நிலப்பரப்பிலேயே சான்றுகள் காணப்படுவதையும், பழைய மதுரையானது கடலில் மூழ்கியது என்பது தவறு என்பதையும் பார்த்தோம். இப்போது எஞ்சியிருப்பது இறையனாரின் அகப்பொருளுரையில் பாண்டியநாடு கடற்கோளில் மூழ்கியதாகக் கூறியிருப்பதேயாகும். இதனைச் சற்று விரிவாகப்பார்ப்போம்.

இறையனார் அகப்பொருளுரையின் முரண்கள்:

களப்பிரர் ஆட்சிக்காலத்தின்போது (இதனை இலங்கையிலுள்ள மகாவம்சம்,சூலவம்சம் ஆகிய நூல்களினடிப்படையில் பொ.ஆ 5ம், 6ம் நூற்றாண்டளவில் எனக்கொள்ளலாம்) இறையனார் அகப்பொருளும், அதற்கான உரையும் எழுதப்பட்டது. (இந்த உரை எழுதிய நக்கீரர் வேறு, கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த சங்ககாலப்புலவர் நக்கீரர் வேறு). களப்பிரர் காலத்தில் சமணமும்,பவுத்தமும் மேன்மைபெற்றிருந்த பின்புலத்தில் சைவரும், வைணவரும் புதிய பக்தி இயக்கத்தை உருவாக்கி அகப்பொருளிற்குப் புதிய கருத்தாக தலைவன்-தலைவி உறவுமுறையினை கடவுள்-பக்தர்களிற்கிடையேயிருந்த உறவுமுறையாகக் கூறினர். ஏற்கனவே தொல்காப்பியம் கூறிய அகப்பொருளிற்கு (மனிதக் காதல்) முரணாக இப் புதிய விளக்கமிருந்தமையால், புதிய விளக்கத்திற்குத் தமிழ்ப்புலர்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புக்கள் தோன்றியது. இந்த எதிர்ப்புக்களை மழுங்கடிப்பதற்காகவே “இறையனார் அகப்பொருள்” எனும் நூலை உருவாக்கி அதற்குத் தெய்வத்தன்மை கற்பித்து இறைவனே இந்த நூலை இயற்றியதாகக்கூறினார்கள். இறைவனே எழுதியமையால் இது முதல்நூல் என்றும் கூறினர், ஆனால் உண்மையில் இது தொல்காப்பியத்தின் வழிநூலேயாகும். இதனை அடிப்படையாகக்கொண்டே முதல்சங்கத்தில் சிவனே வந்து உட்கார்ந்ததாகக் கதை தோன்றியது. இந்த நூலில் பேரின்பக் காதலைப்பற்றி நேரடியாகக்கூறவில்லை என்றும், உரையாசிரியர்களே சான்று காட்டினர் எனவும் விளக்குகிறார் மயிலை சீனி.வேங்கடசாமி (களப்பிரர் ஆட்சியில் தமிழகம்). அந்த உரையும் ஏட்டில் எழுதப்படாமல் பத்துத் தலைமுறைகள் வரையில் வேதங்கள் போலச் செவி வழியாகவே கடத்தப்பட்டுவந்து சம்மந்தர் காலத்திலேயே ஏட்டில் எழுதப்பட்டது. இவ்வாறு வாய்வழியாகவே பல நூற்றாண்டுகளாகக் காவி வரப்படும்போது உரைகள் எவ்வாறு திரிந்து செல்லும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதனாலேயே அகப்பொருளுரையில் கூறப்படும் பாண்டியநாடு கடலில் மூழ்கியதாகக் கூறப்படுவதனை நாம் பெரிதுபடுத்தவேண்டியதில்லை.

சங்கவிலக்கியப் பாடல்களில் நேரடியாகக் கூறப்படும் கடற்கோள்கள் பற்றிய தகவல்கள் வெறும் உயர்வுநவிற்சியாகவோ அல்லது தொகுப்பின்போது ஏற்பட்ட பிரச்சனைகளாகவோ இருக்கலாம். இது பற்றிய மேலும் பல தெளிவுகள் எதிர்கால ஆய்வுகளில் கிடைக்கக்கூடும். இறுதியாக தமிழரின் தொன்மையினை நாம் தேடவேண்டியது கடலில் குமரிக்கண்டத்திலல்ல, மாறாக கீழடி போன்ற வைகை நதிக் கரைகளை அடுத்துள்ள நிலப்பரப்புக்களிலேயே என உறுதியாகக்கூறலாம்.

Exit mobile version