“செம்மரக் கடத்தல் பேர்வழிகள் அம்மரங்களை என்ன செய்கிறார்கள்? அவற்றைக் கொண்டு என்ன தொழில் செய்கிறார்கள்? அதைத் தடுப்பது எப்படி?” என்ற திசையில் அரசு நினைக்கவில்லை. அப்படிச் செய்தால் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டு விடும். ஆனால் நமது அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது தெரியுமா?
மரம் வெட்டும் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று, சட்ட விரோதமாக மரங்களை வெட்டுவதில் உள்ள அபாயங்களை விளக்கிப் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறது. இதைப் பற்றி 1.8.2015 அன்று சேலம் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் கூறும் போது, காவல் துறையினர் மக்களிடம் விழிப்புணவுப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டு இருக்கின்றனர் என்று கூறினார். இம்மாதிரியான நடவடிக்கைகளில் உள்ள அபாயங்களைப் பற்றி உருக்கமான முறையில் எடுத்து உரைத்தும், பலன் ஏதும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார். அதிகார பூர்வமாக இதற்கு மேல் அவரால் எதுவும் கூற முடியவில்லை.
ஆனால்அதிகார பூர்வமான வகையில் இல்லாமல், தனிப்பட்ட முறையில் பேசிய மற்ற அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு வேறு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்காத வரையில், இம்மாதிரியான வேலைகளுக்குச் செல்வதைத் தடுக்க, விழிப்புணர்வுப் பிரச்சாரங்களால் முடியாது என்று கூறினார்கள். மேலும் அந்தத் தொழிலாளர்கள் சட்ட பூர்வமான வேலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்களா, அல்லது சட்ட விரோதான வேலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்களா என்று அவர்களுக்கே தெரியாது என்றும் அவர்கள் கூறினார்கள்.
அதாவது வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற உந்து விசை, விழிப்புணர்வை விட மிக மிக வலுவானது என்பது அரசினருக்குப் புரிந்து தான் இருக்கிறது.
இதில் என்ன அரிய பெரிய இரகசியம் இருக்கிறது ? அனைவருக்கும் இது தெரிந்தது தானே என்று கேட்கிறீர்களா?
அப்படி என்றால் செம்மரக் கடத்தல் மற்றும் இது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் ஒழித்துக் கட்ட, தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை அளிக்கும் திட்டத்தை அல்லவா அரசு செயல்படுத்த வேண்டும்? அதை விட்டுவிட்டு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஏன் செய்து கொண்டு இருக்கிறது?
ஒருவேளை இது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை அரசு விரும்புகிறதா?
அப்படிக் கூறுவது பொருத்தமாக இல்லையே! அப்படிப்பட்ட நடவடிக்கைகளை அரசு விரும்பினால், அவற்றைச் சட்டபூர்வமாகவே ஆக்கி விடலாமே!
அது முடியாது. கள்ளக் கடததல் என்பது அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை ஏய்ப்பதற்குத் தான் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட தொழில்களைச் சட்டபூர்வமாக ஆக்குவது என்றால், அவற்றின் மீதான வரிகளை நீக்க வேண்டும். அப்படிச் செய்தால் அரசுக்கு வருமானமே இல்லாமல் போய்விடும். அதன் பின் அரசை நடத்தவே முடியாது.
அப்படியானால் கடத்தல் பேர்வழிகளை இரும்புக் கரம் கொண்டு ஒழித்து விடலாமே?
அப்படிச் செய்தால், கள்ளக் கடத்தல் தொழில்களில் புழங்கும் மூலதனம், சட்டபூர்வமான தொழில்களுக்குப் போட்டியாக, சந்தையில் புக வேண்டி இருக்கும். மூலதனம் ஏற்கனவே முதலீடு செய்யப்படுவதற்குக் களம் கிடைக்காமல் தவித்துக் கொண்டு இருக்கிறது. இந்த லட்சணத்தில் கள்ளக் கடத்தல் தொழில்களில் உள்ள மூலதனம் வேறு சேர்ந்து விட்டால் முதலாளித்துவப் பொருளாதார இயக்கம் வெகுவாகப் பாதிக்கப்படும் அல்லவா? இதை ஒரு முதலாளித்துவ அரசு செய்ய முடியுமா?
அப்படியானால் கள்ளக் கடத்தல் தொழில் ஒழிவது எப்போது? அவற்றில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படும் தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவது எப்படி?
முதலாளித்துவப் பொருளாதார முறை இருக்கும் வரையில் இந்நிலை மாற முடியாது. தொழிலாளர்கள் தங்கள் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்றால், முதலாளித்துவ அமைப்பை ஒழித்து விட்டு, சமதர்ம (சோஷலிச) அமைப்பை ஏற்படுத்த வேண்டும். கள்ளக் கடத்தல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் சமூகத்தில் இருக்கக் கூடாது என்றும், சமூகத்தில் நீதியும் நியாயமும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கும் அறிவு ஜீவிகள் முதலாளிகளை நத்திப் பிழைப்பதை விட்டுவிட்டு, தொழிலாளர்களுக்கு உற்ற துணையாய் இருக்க வேண்டும்.
இராமியா
(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.8..2015 இதழில் வெளி வந்துள்ளது)