இத்தேர்தலானது பணபலம்,தொண்டர்பலம், சாதிரீதியான ஓட்டுக்கள் என்பவற்றினடிப்படையிலேயே தீர்மானிக்கப்படப்போவதால் இதன் முடிவு சாதரண மக்களின் வாழ்க்கையில் எதுவித குறிப்பிடத்தக்களவு மாற்றங்களையும் ஏற்படுத்தப்போவதில்லை. எனினும் இதன் வெற்றியாளரே பெருமுதலாளிகளுடன் சேர்ந்து அடுத்த ஐந்து வருடங்களிற்கு தமிழக மக்கள் சார்பான முடிவுகளை எடுக்கப்போவதால் இத்தேர்தலின் தாக்கத்தினை முற்றாகப் புறக்கணிக்கவும் முடியாது. இத்தாக்கமானது ஈழத்தமிழர்களின் வாழ்விலும் சிறிதளவான தாக்கத்தினைச் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஈழத்திலும்,புலத்திலும் கூடக்காணப்படுகிறது.
தமிழக மற்றும் இந்தியத்தேசிய ஊடகங்களின் கருத்துத்துப்படி அதிமுக-திமுக கட்சிகளிற்கிடையேயான போட்டி பிரதான கவனத்தினையும், அதற்கு மாற்று வேண்டும் என்போரின் கவனத்தினை தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியும் பெற்றுள்ளவேளையில், ஈழத்தமிழர்களின் பெருமளவு கவனத்தினைப் பெற்றுள்ள ஒரு கட்சியாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி காணப்படுகிறது. குறிப்பாக புலம்பெயர் அமைப்புக்களாலும், புலம்பெயர் ஊடகங்களாலும் முன்னிலைப்படுத்தப்படும் ஒரு நபராக சீமான் காணப்படுகிறார். இதனாலேயே இங்கு சீமானின் அரசியல் குறிப்பாக ஆராயப்படுகிறது.
சீமானின் அரசியல் பிரவேசம்-
இதன்பின்னர் இயக்குனர் சங்கத்தின் ஈழ ஆதரவுக்கூட்டங்களில் ஒரு முக்கிய பேச்சாளராகவும்,செயற்பாட்டாளராகவும் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார். இவ்வாறான நிலையில் திரைத்துறை சம்பந்தமான கலந்துரையாடல்களிற்காக சீமானும் பாரதிராஜா, மகேந்திரன் போன்ற இயக்குனர் வரிசையில் வன்னிக்குச்சென்று புலிகளினுடனான சந்திப்பின் பின் தமிழகம் திரும்புகிறார். 2009 இற்கு பின்னரான காலப்பகுதியில் தீவிர அரசியலில் களமிறங்கும் சீமான் 2014 நாடாளுமன்றத்தேர்தல்வரை ஜெயலலிதா ஆதரவாளராகச் செயற்படுகிறார். இதன் உச்சமாகவே சீமானின் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்ற முழக்கம் நோக்கப்படவேண்டியது.
இலை மலர்ந்தது,ஈழத்தாயுடன் சேர்ந்து சீமானும் மகிழ்ந்தார்கள், ஆனால் ஈழம்?
சரி ஈழத்தினை விடுங்கள், தமிழக அகதிமுகாம்களில் பல இன்னல்களிற்கு மத்தியில் வாழும் ஈழ அகதிகள் தொடர்பான ஒரு ஆக்கபூர்வமான செயலினைக்கூட சீமானால் செய்விக்கக்கூடமுடியவில்லை. அதற்காக சீமானால் தமிழக மக்களைத்திரட்டி ஒரு உருப்படியான போராட்டத்தையும் செய்யமுடியவில்லை. ராஜிவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வற்காகப் போடப்பட்ட நாடகத் தீர்மானங்களை தலைக்குமேல் வரவேற்ற சீமான் , அவர்களை பரோலில் விடுவற்கான முழு அதிகாரங்களைக்கொண்ட அம்மா அரசு ஏன் அவ்வாறு பரோலில் விடவில்லை என கேள்வி கேட்கக்கூடவில்லை. சிறப்பு அகதி முகாம்களில் சிறை வைக்கப்பட்டவர்களையாவது விடுதலை செ்யுமாறு தான் ஆதரவு வழங்கிய அம்மாவிடம் அழுத்தமான கோரிக்கைவிடக்கூட முடியவி்ல்லை.
இவ்வாறு சீமானின் அம்மாவிற்கான ஈழஆதரவு கேள்விக்குள்ளான நிலையில் 2016 சட்டசபைத்தேர்தலும் வந்துசேருகிறது. இத்தேர்தலிலிலேயே சீமான் தனித்துப்போட்டியிடுகிறார். எல்லா அரசியல்கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகக்காணப்படும்போது சீமான் கடந்தகாலத்தில் மட்டையினை மாறிமாறி பிடிப்பதோ , அல்லது அவரே ஒரு புது மட்டையாக அதே குட்டையில் ஊறுவதோ இங்கு பிரச்சனையல்ல. ஆனாலும் அதற்காக அவர் முன்வைக்கும் அரசியலே இங்கு ஆய்விற்கு உட்படுத்தப்படவேண்டியது.
நாம் தமிழர் அரசியல் (இனப்பற்று- இனவெறி)
இந்த சந்தர்ப்பவாதத்ம் தொடர்பான ஒரு ஊடகத்தின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது சீமான் தான் பூஜா ஒரு மலையாளி என்று நினைத்தே வாய்ப்பு வழங்கியதாகக் கூறினார். யாத்திரிகளை ஒருநாளில் சிங்களவர் என அடையாளம் கண்டுகொண்ட சீமானால் பல மாதங்களாக ஒன்றாக வேலை (திரைத்துறை சார்வேலை) செய்த பூஜாவினை அடையாளம் காணமுடியவில்லை என்பதனை நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பினாலும் அண்ணனின் திராவிடத்திற்கு எதிரான போர் (பூஜா மலையாளி என்ற சீமானின் எண்ணப்படி) என்னவாயிற்று என்ற கேள்வி எழுகின்றது.
அடுத்த முரண்பாடாக தீவிர கடவுள் மறுப்பாளராகவிருந்த சீமான் தேர்தல் அரசியலில் இறங்கியவுடன் வாக்குவேட்டைக்காக முருகன் முப்பாட்டன் என வேலாட்டம் ஆடுகிறார். அதாவது கடவுள் கூட தமிழ்க்கடவுளாயின் பரவாயில்லை என்ற நிலையிலேயே உள்ளார். அடுத்ததாக கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து செண்டுமேளம் இசைத்து நாளாந்த உழைப்பாளிகளை துரத்தியடிக்கும் சுதேசியவாதிகளான நாம் தமிழர், தமிழகத்தின் விவசாயத்தினையே அழித்து தமிழகத்தினைப் பாலைவனமாக்கும் பெப்சி, கெயில் போன்ற பெரிய கம்பனிகளிற்கு எதிராக சுண்டுவிரலினைக் கூட மறந்தும் நீட்டுவதில்லை. அண்மையில் நடைபெற்ற நடிகர் சங்கத்தேர்தலில் கூட ஏற்கனவேயிருந்த நிர்வாகத்தினரின் ஊழல்கள் வெளிவந்தபின்னும் அவர்களையே தமிழர் என்று காரணம் கூறி ஆதரித்து மண்கவ்வியிருந்தார். சாதிகள் இல்லை என மேடையில் கூறிவிட்டு தேவர்சிலைக்கு மாலையணிவித்து குட்டு அம்பலமானபோது தேவர் ஒரு தமிழன் எனக்கூறுவதாகட்டும், தமிழனின் ஒற்றுமை போய்விடும் எனக்கூறி தமிழகத்தில் நடைபெறும் ஆணவக்கொலைகளிற்கு பொறுப்பானவர்களை வெளிப்படையாகக் கண்டிக்காமல் கருணாநிதி போன்று அறிக்கையுடன் நின்றுகொள்வதாகட்டும், இவையெல்லாம் சீமானின் சந்தர்ப்பவாத சுயநல அரசியலினையே எடுத்துக்காட்டுகிறது. இவற்றினைத் தொகுத்துப்பார்க்கும்போது சீமானிடம் காணப்படுவது பொதுநலன் சார் இனப்பற்று என்ற கோட்டினைத்தாண்டிய சுயநலன்சார் இனவெறி என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
சீமானின் பெரியார் எதிர்ப்பும் ,பார்ப்பனபாசமும்–
ஆனால் வாக்குவேட்டை என்றுவரும்போது சீமானிற்கு ஒரு சங்கடம் ஏற்படுகிறது. அதுயாதெனில் ஏற்கனவே பலர் பெரியார் பெயரினைப்பயன்படுத்தி வாக்குப்பொறுக்கும் விடயத்தில் பழம் தின்று கொட்டையே போட்டுவிட்டதால் அவர்களுடன் தன்னால் போட்டியிடமுடியாது என்பதனை சீமான் உணர்ந்துகொண்டிருந்தார். அதனால் பிரபாகரன் என்ற பெயரில் தனது அரசியல் வியாபாரத்தினைத் தொடங்கினார். இதில்கூடப் பெரிதாக பிரச்சனைகள் எழவில்லை. ஆனால் சீமான் தனது சக போட்டியாளர்களைத் தோற்கடிப்பதற்காக தனது முன்னைநாள் தலைவர் பெரியாரினையே தாக்கத்தொடங்கினார். இதனை தமிழக மக்கள் மட்டுமல்லால் சீமானின் தம்பிகளே பெரிதாக விரும்பவில்லை. அதாவது பதவிநாற்காலி அவரின் வருகைக்காக காத்திருந்தபோதும் “தேர்தல் பாதை திருடர் பாதை”எனக்கூறி பதவியினை நிராகரித்து தனது இறுதிக்காலம் வரை சமூகநீதிக்காக போராடிய பெரியாரினை, கட்சி தொடங்கும்போதே நாற்காலி கனவுடன் காணப்படும் சீமான் தாக்குவதனை தமிழக மக்கள் இரசிக்கவில்லை. இதன்பின் சீமான் பெரியார் எதிர்ப்பினை அடக்கிவாசித்தாலும் சீமானின் பையிலிருந்து பூனை அவ்வப்போது வெளியில் வந்துவிடுகிறது. உதாரணமாக தந்தி தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் சீமான் சாதிக்கட்சி தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையில் “தமிழன் கட்சி நடாத்தினால் அது சாதிக்கட்சி ,மற்றையோர் கட்சி நடாத்தினால் அது நீதிக்கட்சியா என பதிற்கேள்வி எழுப்பியிருந்தார்.”. இதன்மூலம் பெரியார் மீதான வெறுப்பினையும், இராமதாஸ் போன்ற சாதிக்கட்சிகளிற்கான வக்காலத்தினையும் அவதானிக்கலாம். இந்தப் பெரியார் எதிர்ப்புக்குப்பின்னால் பார்பன மறைகரமும் , சீமானின் பதவிவெறியுமே காரணமாகவுள்ளன.
அண்மையில் சீமான் வெளியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் பட்டியலில் பார்ப்பனர்களிற்கும் இடமளித்திருப்பதனையும் காணலாம். மேலும் சாதிச்சார்பற்ற முறையில் பொதுத்தொகுதி வேட்பாளர்களாக சீமான் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாயினும், அவ்விதியிலிருந்து பார்ப்பன வேட்பாளரிற்கு மட்டும் விலக்களித்து பார்ப்பனர் செல்வாக்கு அதிகமுள்ள தொகுதியிலேயே போட்டியிடவைத்திருக்கிறார். இவற்றின் மூலம் சீமானின் பார்ப்பன பாசம் தெளிவாகிறது
பார்ப்பானமானது தமிழினை அழிப்பதற்கே தமிழ்ப்பற்று வேசம்போடுமளவிற்கு தந்திரமுள்ள சாணக்கியர்களைத் தன்னகத்தே கொண்டது. இதற்கு வரலாற்றிலிருந்து இரு நிகழ்வுகளைப் படிப்பனையாக நோக்கலாம். முதலாவது சம்பவம் பக்தி இலக்கியகாலத்தில் இடம்பெற்றது. அக்காலப்பகுதியில் சாதிப்பாகுபாடு, பெண்ணடிமைத்தனம் போன்ற பிற்போக்குத்தனங்கள் ஒப்பீட்டுரீதியில் குறைந்த சமணம், பௌத்தம் போன்ற மதங்களே தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. அவற்றினை அழிப்பதற்காக திடீர் தமிழ்ப்பாச வேசம் போட்டு நாயன்மார்கள் மூலம் தமிழில் பதிகங்கள் பாடி அம் மதங்களினை அப்புறப்படுத்திய பார்ப்பனம் பின்னர் தனது நோக்கம் நிறைவேறிய பின்பு மீண்டும் தமிழினை நீசமொழி என இகழ்ந்தது.
இன்றும் கூட தில்லை நடராசர் கோயிலினுள் தமிழில் தேவாரம் பாட பார்ப்பன தீட்சிதர் அனுமதிப்பதில்லை. இரண்டாவது சம்பவம் இராச இராச சோழன் காலத்தில் இடம்பெற்றது. அச் சந்தர்ப்பத்தில் சோழர் காலம் தமிழரின் பொற்காலம் என்ற மாயையினை ஏற்படுத்தி தமிழரின் வளமிக்க கும்பகோணம் போன்ற பல பகுதிகளை ஆக்கிரமித்த பார்ப்பனம் தன்னை அன்றுமுதல் அரசியலில் நீக்கமற நிலைநிறுத்திக்கொண்டது. பின்னரான காலப்பகுதியில் சமஸ்கிரதத்திணிப்பு, இந்தித்திணிப்பு என தமிழினை அழிப்பதில் பார்ப்பனியம் மும்மரமாகவிருந்தது. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் பார்ப்பனம் எவ்வாறு தமிழ்ப்பற்று வேசம் போட்டு தமிழினை அழித்தது என்பதனை தெளிவாகப்பார்க்கலாம். இவ்வாறான படிப்பனைகளை க் கவனத்திற்கொள்ளாமல் சீமான் மீண்டும் பார்ப்பனத்துடன் கைகோர்ப்பது ஆபத்தானது.
சர்வாதிகாரப்போக்கும், தனிநபர் வழிபாடும்-
தமிழ்நாட்டின் கட்சிகளில் கடவுள் மறுப்பினைக் கொள்கையாகக் கொண்ட கட்சிகளிற்கூட தனிநபர் வழிபாட்டிற்கு பஞ்சமிருப்பதில்லை. இந்த வகையில் நாம் தமிழர் கட்சியிலும் தனிநபர் வழிபாடும், சர்வாதிகாரப்போக்கும் காணப்படுகிறது. சீமானிற்கு முன்னரே பலர் (பெ.மணியரசன், தோழர் தியாகு போன்ற தேர்தல் அரசியலில் நம்பிக்கையற்றவர்களும், பழ.நெடுமாறன் , தமிழருவி மணியன் போன்ற வாக்கு அனுபவ அரசியல்வாதிகளும்) தமிழ்த்தேசிய அரசியலில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களைக்கூட சீமானால் அணிதிரட்டமுடியவில்லை அல்லது இவர்களைச் சேர்த்துக்கொள்ள சீமான் விரும்பவில்லை. மேலும் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்களில் பலர் முன்னைநாள் ஊடகத்தொடர்பாளர் ஜயநாதன் உட்பட) தொடர்ந்தும் சீமானுடன் பயணிக்கமுடியவில்லை. இவற்றிற்கு சீமானின் சர்வாதிகரப்போக்கும், மற்றையோரின் கருத்துக்களிற்கு மதிப்பாளிக்காத குணநலனுமே காரணமாகும். இவளவு ஏன் சீமான் தானே தன்னை ஒரு “அன்பான சர்வாதிகாரி” என பிரகடனம் செய்வதுடன், கட்சியின் விளக்கக்கூட்டங்களில் கிட்லரின் படத்தினை வைத்துக் கௌரவிக்கவும் தவறவில்லை. கட்சியில் குழுத்தீர்மானம் என்பதெற்கெல்லாம் மருந்திற்கும் இடமில்லை.
திராவிடத்திற்கு எதிரான போர் முழக்கம்
கருணாநிதி, ஜெயலலிதா போன்ற சுயநல அரசியல்வாதிகள் அகற்றப்படவேண்டியவர்களே, ஆனால் அதற்கான மாற்று ஒரு நாளைய கருணாநிதியாகவோ (சீமான் போன்ற) அல்லது இன்னொரு நாளைய ஜெயலலிதாவோ (பிரேமலதா) இருக்கமுடியாது. மேலும் முக்கியமாக இந்தத் தேர்தல்முறையில் அந்த மாற்றுச் சாத்தியமானதா? என்பதும் தீவிரமாக ஆராயப்படவேண்டியதே.