Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேசியத்தைக் கூறுபோட்டுக் குதறும் தமிழ் அரசியல் கழுகுகள் : கோசலன்

nice-catchதேசிய இன ஒடுக்குமுறை எந்த வகையான கோட்பாட்டு மாற்றமும் இன்றி இலங்கை அரசினால் இன்னும் நல்லாட்சி என்ற பெயரில் திணிக்கப்படும் இக் காலத்தில் நண்பர்கள் மற்றும் எதிரிகள் யார் என அறிந்து கொள்வதே புதிய ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலைத் தோற்றுவிப்பதன் அடிப்படையாக அமையும். தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நேரடி எதிரிகளாக இலங்கை அரசையும் அதன் ஊதுகுழலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இனம் கண்டுகொள்ளலாம். நேரடியான எதிரிகளின் இருப்பை உறுதிசெய்துகொள்ளும் வெளித்தெரியாத மறைமுக எதிரிகளே இன்று மிகவும் ஆபத்தான பாத்திரத்தை வகிக்கின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் ஒன்று தோன்றுவதற்கான குறைந்தபட்ச இடைவெளியைகூட இவர்கள் நிரப்பிக்கொண்டிருக்கின்றனர்.

இவர்களே பாராளுமன்ற வாக்கு பொறுக்கிகளான தமித் தேசியக் கூட்டமைப்பின் இருப்பை உறுதி செய்கின்றனர். வெளிப்படையாக கூட்டமைப்பை எதிர்ப்பது போன்ற தோற்றப்பாட்டை இவர்கள் வழங்கினாலும் அதன் ஏக பிரதிநிதித்துவத்தை இவர்களே பேணி வருகிறார்கள்.

(i)

இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை அதிக அளவிலான இளைஞர்கள் ஆயுதமேந்தியதற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக பல்கலைக்கழக நுளைவில் தரப்படுத்தல் புகுத்தப்பட்டது அமைந்தது. அப்போது யாழ்ப்பாண மாவட்டம் இலங்கையில் முதலாவது அல்லது இராண்டாவது மாவட்டமாக கல்வித் தரத்தில் கருதப்பட்டது.

இன்று வட மாகண சபையின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணம் கல்வியில் முழு இலங்கையிலும் இறுதி மாநிலமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விஞ்ஞான பீடத்திற்கு போதிய தமிழ் மாணவர்கள் இல்லாமையினால் சிங்கள மாணவர்களால் அத் தொகை நிரப்பப்படுகிறது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தையும் வட மாகாணத்தையும் அபிவிருத்தி செய்ய அந்த மாகாணத்தின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதி கோரியிருந்தமை கவனத்திற்குரியது.

நிலைமை இவ்வாறிருக்க வட மாகாண சபைக்கு கல்விக்காக ஒதுக்கப்பட்ட ஆறாயிரம் மில்லியன் ரூபாய்கள் பயன்படுத்தப்படாமல் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.

கடந்த சில வருடங்களின் முன் வரைக்கும் ‘யாழ்ப்பாணத்தின் மூலதனமாகக்’ கருதப்பட்ட கல்விக்காக ஒதுக்கப்பட்ட பெருந்தொகைப் பணம் திருப்பியனுப்பப்பட்டது தொடர்பாக வட மாகாண ஆளுனர் வெளிப்படையாகக் கூறிய போது வட மாகாண சபையின் ‘திடீர் தேசியவாதி’ விக்னேஸ்வரன் உட்பட அவரின் விசில்கள் ஓகஸ்ட் வெயிலுக்குள்ளும் போர்த்தி மூடிக்கொண்டு உறக்கத்திற்குச் சென்றுவிட்டனர்.

கேட்டால் விக்னேஸ்வரன் தன்னைத் தேசியத்தின் புதிய காலவர் என்கிறார். விடுதலைப் புலிகளின் காலத்தில் ஜனநாயகம் இன்மையாலேயே தான் அரசியலில் ஈடுபடவில்லை எனக் கூறிக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விக்னேஸ்வரன் இன்று புலம்பெயர் தேசியக் கனவான்களின் பொருத்தமான நடிகர். தீர்மானங்கள் நிறைவேற்றுவதிலும், அறிக்கைவிடுப்பதிலும் தன்னாலான நேரத்தைச் செலவுசெய்யும் விக்னேஸ்வரனுக்கும் அவரது ஆணையின் கீழ் செயற்படும் கல்வி அமைச்சருக்கும் ஆறாயிரம் மில்லியன் பணத்தின் பெறுமதி தெரியாத அளவிற்கு முட்டாள்களோ என்னவோ?

தேசியத்திலும் தேச நலனிலும் ‘பற்றுக்கொண்டவர்களுக்கு’ நாள் முழுவதும் புலம்பெயர் தேசியக் கனவான்களுக்காக அறிக்கை தயார் செய்ய முடிகிறது ஆயினும் அழிந்துகொண்டிருக்கும் கல்வியை கிடைத்த பணத்தில் மீட்பதற்கு எந்த வழியும் தெரியாது?

கல்வி அறிவற்ற ஒரு சமூகத்தை உருவாக்கி இளைய சமூகத்தைப் போராட அழைத்து தமிழீழம் பெறுவதே ‘மாண்புமிக்க’ விக்னேஸ்வரனின் நோக்கம் என விசிறிகள் கருத்துரைத்தாலும் வியப்படைவதற்கில்லை.
இதற்குள் வேறு தமிழ் மக்கள் பேரவை என்ற கூட்டு. மண்டயன் குழு பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் ஆகிய கூலிகளை வைத்து புலம்பெயர் தேசியக் கனவான்களால்ஜேர்மனியில் தயாரித்து வழங்கப்பட்ட சாம்பாரான தமிழ் மக்கள் பேரவை.

தமிழ் மக்களின் கல்வி அழிக்கப்படுவது குறித்து தமிழ் மக்கள் பேரவைக்கு எந்த சலனமும் ஏற்படப்போவதில்லை. அது அவர்களின் தேசிய எல்லைக்குள் வராது. அப் பேரவையின் பிரதான கூலியாள் விக்னேஸ்வரனா தமிழ் மக்களா முக்கியம் என ரூம் போடாமலே சிந்தித்துப் பார்த்து இவர்களுக்கு பிறந்த ஞானத்தில், மக்கள் அழிந்தால் என்ன, ஐயா விக்னேஸ்வரனே பொன் முட்டை போடும் பன்றி என இவர்கள் முடிவெடுத்திருப்பார்கள் போல.

சரி, தீவிர தமிழ்த் தேசியம் பேசும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரின் மூன்று தலைமுறைச் சொத்தான ‘அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசையும் பாதுகாக்கும்’ சேவகர்களும் எங்கே போனார்கள். கல்வி தேசியத்திற்குப் பொருந்தாத கழிசடை விடையம் என முடிவெடுத்திருப்பார்களோ?

கல்விக்கும் தேசியத்திற்கும் தொடர்பில்லை என இவர்கள் ஒதுக்கி வைத்திருக்கலாம், ஆனால் மண்ணுக்கும் தேசியத்திற்கும் தொடர்பில்லை என இவர்கள் கூறும் அளவிற்கு முட்டாள்கள் இல்லை.

சில வேளை கஜேந்திரகுமாரின் சொந்த மண்ணில் இப்படி ஒரு அழிப்பு நடந்திருந்தால் போராடியிருப்பார்களோ?

இலங்கை அரசின் நவ-தாராளவாதக் கொள்கையின் ஒரு பகுதியாக கல்வி இலங்கை முழுவதும் சிதைக்கப்படுகிறது. மருத்துவக் கல்லூர்கள் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக நமது தேசியவாதிகள் ஒரு அறிக்கை கூடத் தயார் செய்ததில்லை.

நவதாராளவாதம் என்ற அடிப்படையில் இக் கட்சிகள் எதுவுமே இலங்கை அரசின் எதிரிகள் இல்லை. அவர்கள் இலங்கை அரசின் நண்பர்கள். அரசின் பேரினவாதக் கருத்துக்களில் முரண்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் இவர்கள் அரசின் அடிப்படை அரசியலைப் பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைகளுக்கும் முன்வருவதில்லை.

(ii)

முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் நடத்தப்பட்ட அழிப்பு நடவடிக்கைகளில் பிரதானமானது சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்தே நடத்தப்பட்டது. அங்கு பயன்படுத்தப்பட்ட அதிபார டீசல் கழிவுகள் சுன்னாகத்தைச் சூழவர மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை நிலக்கீழ் நீரை நச்சாக்கியுள்ளது. பல விவசாய நிலங்களை வரண்ட பிரதேசமாக மாற்றியுள்ளது. இலங்கை அரசின் நீர்பாசன அமைச்சரே இந்த அழிவை ஒப்புக்கொண்ட போது, பேரினவாதிகளையும் விஞ்சும் வகையில் ஊழல் பெருச்சாளி ஐங்கரநேசனும், சீ.வீ.விக்னேஸ்வரன் ‘ஐயாவும்’ இணைந்து போலி நிபுணர் குழு ஒன்றை நியமித்து அங்கு நிலம் நச்சாகவில்லை என வாதிட்டனர்.

மல்லாகம் நீதிமன்றம் இதற்கான விளக்கத்தைக் கேட்டபோது தமக்கும் அதற்கும் தொடர்பில்லை எனத் தப்பித்துக்கொண்டனர்.

இன்று நச்சுக் கழிவுகள் தொடர்ந்து நீரையும் நிலத்தையும் நாசப்படுத்திக்கொண்டிருக்கிறது. நீர் சுத்திகரிக்கப்படாவிட்டால் மீட்க முடியாத அழிவுகள் ஏற்படும் என்று பல நிபுணர்கள் எச்சரித்த போதும், மண் அழிவைதைப் பற்றி எந்த அரசியல் வாதியும் கண்டுகொள்ளவில்லை. யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் அண்ணளவாக மூன்றில் ஒரு வீதமான மக்களின் அன்றாட வாழ்கையையும் எதிர்காலத்தையும் பாதித்த இந்த அழிவை நடத்திய விக்னேஸ்வரன் இன்றைய தமிழ்த் தேசியக் காவலன்.

தனது வரலாறு முழுவதும் தேசியத்திற்கு எதிராகவும், மக்கள் விரோதியாகவும் செயற்பட்ட விக்னேஸ்வரன் இன்று தமிழ் மக்கள் பேரவையின் காவலன்! தமிழ்த் தேசியத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம்!

மூன்று தலைமுறைக் குடும்பச் சொத்தைப் பாதுகாக்கும் கஜேந்திரகுமாரும் தொண்டர்களும் சுன்னாகம் அழிவைக் கைவிட்டு நாளாகிவிட்டது. விக்னேஸ்வரனும் ஐங்கரநேசனும் உருவாக்கிய அழிவிற்கு எதிராகத் துண்டறிக்கை கூட வெளியிடாத இவர்களின் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அப்பால் மக்கள் தன்னிச்சையாகப் போராடுகிறார்கள்.

(iii)

கடந்த இரண்டு வாரங்களின் முன்னர் இலங்கையில் நங்கூரமிட்டு அவசரகாலப் பயிற்சியை நடத்திய அமெரிக்கக் கடற்படை, மற்றும் இலங்கைக் கடற்படை உறுப்பினர்களுக்கு மத்தியில் உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் ‘இலங்கை அரசு சர்வதேசத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றியிருக்கிறது’ என்றார். யாப்பு மாற்றம் இலங்கை நடைபெறும் அது அனைத்து மக்களுக்கும் உரிமை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும் என்றார்.

அமெரிக்கா எங்கேயாவது போர்க்குற்றம் என்ற சொல்லைப் பயன்படுத்தினாலே போதும் ‘அமெரிக்கா ராஜபக்சவைத் தூக்கில் போடப்போகிறது’ என அறிகைவிடும் இப் போலித் தேசியவாதிகளுக்கு அமெரிக்கத் தூதரின் பேரினவாத ஆதரவுப் பேச்சு காதுகளுக்கு எட்டவில்லை. அமெரிக்கா சட்டலைட்டில் பார்த்துக்கொண்டு இலங்கை அரசை இனப்படுகொலை நடத்த ஊக்குவித்த போது இந்தப் போலித் தேசியவாதிகள் மௌனமாக இருந்தார்கள் என்பதை அப்பாவித்தனம் என எடுத்துக்கொள்வோம்! ஐ.நாவில் போர்க்குற்ற விசாரணை செய்கிறோம் என எழு வருடங்களைக் கடத்திவிட்டு அமெரிக்க முதுகில் குத்தியதை வலி தாங்க முடியாமல் சகித்துக்கொண்டார்கள் என வைத்துக்கொள்வோம்!!

ஆசிய-பசிபிக் கடல் பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்துடன் இணைந்து வேலை செய்யப் போகிறோம் என அமெரிக்கக் கட்ற்படைத் தளபதி கூறியதை கூட அதன் அடிமைகளான இக் கட்சிகள் கண்டுகொண்டதில்லை.

திருகோணமலையில் அமெரிக்க முகாம் அமைக்கப்படப் போகிறது என்று கூறப்படுவதையும் இவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இவர்கள் தேசியவாதிகளா விதேசிகளா?

இவை அனைத்தையும் மீறி, அமெரிக்க அரசு இலங்கையில் தமது இராணுவப் பிரசன்னம் அமைதிக்கும் சமாதானத்திற்கும் தேவையானது எனக் கூறிய போதும். திஸ்ச விதாரண அமெரிக்கா திருகோணமலையில் கடற்படைத்தளம் அமைக்கப் போகிறது என வெளிப்படையாகக் கூறிய போதும் இத் தேசியவாதிகள் மூச்சுக்கூட விடவில்லை. தமது மண் பறிபோகிறது என்ற எந்தக் கவலையுமில்லாத, அமெரிக்காவிற்குக் கூட்டிக்கொடுக்கும் இவர்கள் தேசியவாதிகளா விதேசிகளா?

இவை போன்று இன்று நடைபெறும் நில ஆக்கிரமிப்பு, காலாச்சரச் சிதைப்பு, வடமாகண சபையின் சூறையாடல் போன்ற நூற்றுகணக்கான மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்காகப் போராடாமல் அழிவிற்கும் துணை சென்ற இவர்கள் வடக்கில் முளைவிடும் புத்தர் சிலைகளுக்கு எதிராகப் போராடப் போகிறார்களாம்.

யார் காதில் பூச்சுற்றுகிறார்கள்?

புத்தர் சிலையில் எத்தனை வாக்குகள் தேறும் எனக் கணக்குப் போட்டிருப்பார்கள். அதற்காகப் போராட்டம் நடத்த இன்று தூங்கிய கண்களுடன் உட்காந்திருக்கிறார்கள். நேர்மையற்ற இவர்களின் அரசியலை மக்களும், ஜனநாயகசக்திகளும் புரிந்துவைத்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுத் தேவை என்பதை மக்களும், ஜனநாயக வாதிகளும், மக்கள் பற்றுள்ளவர்களும் உணர்கிறார்கள்.

அதே போல தெற்கில் மகிந்தவிற்கு மாற்று மைத்திரி-ரனில் அல்லது ஜே.வி.பி அல்ல என்பதையும் மக்கள் உணர்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான மாற்றை ஏனைய சமூகவிரோத வாக்குவங்கி அரசியலை நடத்தும் போலித் தேசியவாதிகள் கையகப்படுத்தி அந்த இடைவெளியை நிரப்பி அழித்துகொண்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பானதாகிறது. மகிந்தவிற்கு எதிரான மாற்றை மைத்திரி-ரனில் நிரப்பிக்கொண்டிருப்பது மகிந்தவை இன்னும் வாழ வைத்திருக்கிறது.

தமிழ் அரசியல் கட்சிகளின் குறுகியகால அளவுகோல்களாக சில நிபந்தனைகளை முன்வைத்து நண்பர்களா எதிரிகளா என எடைபோடலாம்:

1. தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கைகள் – வடமாகண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவனங்கள்- எதுவாக இருந்தாலும் அதற்கு எதிரான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தத் தயாரா?

2. தேசியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரான அரசின் நவ-தாராளவாதக் கொள்கைகளை எதிர்த்து அரசைப் பலவீனப்படுத்தத் தயாரா?

3. சுன்னாகத்தில் அழிவை ஏற்படுத்திய பல்தேசிய நிறுவனத்திற்கும் அதனை ஆதரிக்கும் இலங்கை அரசிற்கும், வட மாகாண சபைக்கும் எதிரான போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தத் தயாரா?

4. சுய நிர்ணைய உரிமைக்கும், இலங்கை மக்களின் வாழ்விற்கும் எதிராக இலங்கை அரசை இயக்கும் அமெரிக்காவிற்கு எதிராக மக்கள் மத்தியில் வெளிப்படையாகப் பேசத் தயாரா?

5. அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடத் தயாரா?

6. நிலப்பறிப்பு, கலாச்சாரச்சிதைப்பு போன்ற அனைத்தையும் நடத்தும், அதற்கான இடைவெளியை ஏற்படுத்தும், அதன் பின்புலத்தில் இயங்கும் அனைத்து சக்திகளுக்கு எதிராகவும் போராடத் தயாரா?

இவை  உடனடி அழிவை ஏற்படுத்தும், ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அவசரமான பிரச்சனைகள். இவற்றைத் தவிர்த்து, வாக்குகளை இலகுவாகப் பொறுக்கிக்கொள்வது எப்படி என பிச்சை கேட்கும் அரசிலை முன்னெடுப்பது. தேசியம் அல்ல. விதேசியம். இலங்கை அரசினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் இருப்பை உறுதிப்படுத்தும் அரசியல். இன்று நடப்பது இரண்டு தமிழ் ஏகாதிபத்திய கைகூலி முகாம்களுக்கு இடையே நடைபெறும் நாய்ச் சண்டை. இதற்கு தேசியம், தமிழுணர்வு என்று தலையங்கம் வைத்துக்கொள்கிறார்கள். இவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டால் மட்டுமே புதிய அரசியலுக்கான இடைவெளி தோன்றும். அதனை மக்கள்பற்றுள்ள அரசியல் தலைமைகள் நிரப்பிக்கொள்ளும் இல்லையெனில் மிக நீண்டகாலத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை அரசும் இணைந்து தம்மாலான அழிப்பு அனைத்தையும் நல்லாட்சி என்ற தலையங்கத்தில் செய்து முடிக்கும்.

Exit mobile version