Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொழும்பு மையவாதிகளின் மென்மையான பேரினவாதம் : சிவசக்தி

mahinda_rajapaksaகாலனியத்திற்குப் பிந்தய இலங்கையின் வரலாறு என்பது எதாவது ஒரு வகையில் தேசிய இன ஒடுக்குமுறையின் வரலாறு மட்டுமன்றி போராட்டங்களின் வரலாறுமாகும். நான்கு தசாப்த ஆயுதப் போராட்டத்தை மட்டுமன்றி ஜே.வி.பி இன் இரண்டு ஆயுதப் போராட்டங்களையும் கோரமாக வெற்றிகொண்ட அனுபவம் வாய்ந்த சிங்கள பௌத்த அதிகாரவர்க்கத்தின் புதிய அணுகுமுறையும் அரசியலும் தேசிய இன ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டது என்பதை பலர் உணர்ந்துகொள்வதில்லை. தனது கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட சிங்கள பௌத்த அதிகாரவர்க்கமும் அதன் தமிழ் நீட்சிகளும் புதிய தந்திரோபாய அரசியலை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளன. மேலோட்டமாக அடிப்படை ஜனநாயக விழுமியங்களைக் கொண்டதாகத் தென்படும் புதிய ‘நல்லாட்சி’ என்பது இலங்கையில் இனப்படுகொலையை வெற்றிகரமாக நடத்திமுடித்த அனுபவங்களிலிருந்தும், போராட்டங்களை அழித்த பெருமிதத்திலும் தோன்றிய புதிய அரசியலின் அடிப்படையிலானதாகும். உலகின் ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தினதும் ஈர்ப்பு மையமாக மாறியிருக்கும் இலங்கையில் அந்த நாடுகளின் ஆதரவுடனேயே புதிய அரசியல் தந்திரோபாயம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அரசியல் யாப்பு மாற்றத்தின் ஊடாகச் சில சட்டத்திருத்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டால் தேசிய இனங்களின் உரிமை உத்தரவாதப்படுத்தப்பலாம் என அனைத்து பாராளுமன்ற வாதக் கட்சிகளும் மக்களை நம்பக் கோருகின்றன. இலங்கை அரசின் புதிய அரசியல் தந்திரோபாயத்திற்கு பலம் சேர்க்கும் அனைத்துப் பாராளுமன்றவாதத் தமிழ்க் கட்சிகளும், புதிய அரசியல் யாப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறிவருகின்றன. ஒரே வளைகோட்டின் இரண்டு முனைகள் போன்று இக் கட்சிகள் அனைத்தும் பௌத்த சிங்கள மேலாதிக்கவாத அரசியலின் முன் மொழிவுகளில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் ஊடாக உரிமைகளை வென்றெடுக்கலாம் என்கின்றன.

இலங்கையின் அரசியல் யாப்பு மாற்றப்படுகிறதா, ஒற்றையாட்சியா இல்லையா என்பதெல்லாம் இங்கு இரண்டாம் பட்ச கேள்விகளே. முதலில் இலங்கை அதிகாரவர்க்கமும் அதன் ஆளும் வர்க்கமும் பேரினவாதத்தை நிராகரித்து நாட்டை ஆட்சி செய்வது சாத்தியமானதா என்பதே துருத்திக்கொண்டு முன்வரும் வினா.  பேரினவாதக் கருத்தாக்கத்தைப் பேணிக்கொள்வதற்காக தொடர்ச்சியாக ஆட்சிக்குவரும் இலங்கை அரச அதிகராகங்கள் தம்மாலான அனைத்தையும் செய்யத் துணிகின்றன. உலகின் மிகப்பெரும் அவலங்களின் ஒன்றான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் சிங்கள பௌத்த மனோநிலை ஒருவகையான வெற்றிப் பெருமிதத்துடன் தலையெடுத்துள்ளது. கொழும்பு சார்ந்த சிங்கள பௌத்த மையவாதம் ஒன்று தோற்றம் பெற்று அதுவே நல்லாட்சி என்ற பெயரில் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ளது.

ஆக, கொழும்பு சார் சிங்களை பௌத்த மையவாதம் என்ற புதிய மனோ நிலை வெற்றி பெற்றவர்கள் என்ற அடிப்படையில் தோற்றம்பெற்றுள்ளது. நாம், வெற்றிபெற்றுள்ளோம், இப்போது எதிர்ப்பு அரசியல் அற்ற நிலையில் நாம் மென்மைப் போக்கைக் கடைப்பிடிக்கிறோம், சூழல் மாற்றமடைந்தால் மற்றொரு அழிவின் ஊடாக மீண்டும் வெற்றிகொள்ளத் தயாராகிவிடுவோம் என்பதே நல்லாட்சியின் உளவியல்.
இந்த மையவாதத்தின் அடிப்படை கருத்தமைவு என்பது கொழும்பில் நிலவும் மென்மைப் போக்குடைய சிங்கள பௌத்த சிந்தனை என்பதை நல்லாட்சி என அடையாளப்படுத்தக் கோருகிறது.

இந்த மையவாதத்தின் அடிப்படைக் கருத்தியலை மையப்படுத்தி சிறுபான்மைத் தேசிய இனங்களின் இன்றைய அரசியல் தலைமைகளையும் அரசியல் தலைவர்களையும் இயங்கச்செய்வதில் இலங்கை அரசு வெற்றி கண்டுள்ளது. ஏதோ ஒருவகையில் யாப்பு, சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் ஒற்றையாட்சிப் பாராளுமன்றம் போன்றவற்றின் ஊடாக உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என அனைத்துத் தரப்பு மக்களும் நம்பவைக்கப்படுகின்றனர். இந்த நம்பிக்கையின் ஆதார சக்தியாக தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்கள் செயற்படுகின்றன.

மென்மைப் போக்குடையதாக வெளித்தெரியும் இந்த மையவாதம் ஏற்கனவே சிங்கள பௌத்தர்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள பேரினவாத நச்சைப் பேணிக்கொள்ளும் அதே வேளை சில சட்டச் சீர்திருத்தங்கள் ஊடாக சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியில் தற்காலிகமாக அமைதியைப் பேணுவது என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
சிங்கள பௌத்த மேலாதிக்க மனோ நிலையில் குறைந்தபட்ச மாற்றங்களைகூட ஏற்படுத்த முயலாத இலங்கையின் ஆட்சி அதிகாரம் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியில் குறுகிய கால அமைதிச் சூழலை ஏற்படுத்த முனைகிறது.

இக் குறுகிய கால இடைவெளிக்குள் சிறுபான்மைத் தேசிய இனங்களின் தேசியத் தன்மையை சிதைப்பதன் ஊடாக தேசிய இன முரண்பாட்டைத் தீர்க்க முற்படுகிறது. அதாவது, தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சிதைத்து இனக்குழு உதிரிகளாக்க முற்படுவதே இதன் அடிப்படை.

இச் செயற்பாட்டை இலங்கை அரசு என்ற தனித்த நிறுவனம் மட்டும் மேற்கொள்ளவில்லை. இலங்கையை வழி நடத்தும் ஏகபோக அரசுகளான அமெரிக்க நேச அணிகளும் இந்திய மேலாதிக்கமும் இணைந்தே செயற்படுகின்றன. ஒரு தேசிய இனத்தின் தேசியத் தன்மையை உறுதிப்படுத்துவதற்குரிய பிரதான அடிப்படைகள் மொழி, கலாச்சாரம், பிரதேசம் பொருளாதாரம் என்ற நான்கு கூறுகள் இங்கு தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றன.

உலக மயமாதலோடு இலங்கையில் உள் நுளைய முற்பட்ட பலம் பொருந்திய அன்னிய மூலதனப் பரம்பல் இன்று தனது கரங்களை வட கிழக்கில் நீள விரித்துள்ளது. அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் நடத்தப்படும் பொருளாதாரச் சிதைவில் உள்ளூர் அல்லது தேசியப் பொருளாதாரம் விருத்தியடையவில்லை. நாளாந்த உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளிலிருந்து தொழில் நுட்பம் வரைக்கும் அன்னியப் பொருளாதாரம் தேசியப் பொருளாதாரத்தை ஆகிரமித்துக்கொள்ள, அதனை மையமாகக் கொண்ட கலாசாரமும் தோன்ற ஆரம்பிக்கிறது.

அப் புதிய கலாச்சாரம் நமது சமூகத்தின் பிற்போக்கு விழுமியங்களான சாதியம், மத வெறி என்பவற்றை அப்படியே பேணிக்கொள்ள அதனோடு கூடவே அன்னிய உற்பத்திகள் மீதான நுகர்வு வெறி அதிகரித்துள்ளது. அதன் மறுபக்கத்தில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மத ஆக்கிரமிப்பாகவும் இணைந்து எமக்கு மத்தியில் கலாச்சாரச் சிதைவை வேகப்படுத்துகின்றது.
முப்பது வருட ஆயுதப் போராட்டம் சார்ந்த பொருளாதாரம் இன்று துறை சார் வல்லுனர்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது என்ற கூறும் இலங்கை அரசு அபிவிருத்தியின் மறு அங்கமாக குடியேற்றங்களையும் ஆரம்பித்துள்ளது.

ஆக, தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது தேசிய இனங்களே இல்லாமலிருப்பது என்பதையே புதிய கொழும்பு மையவாத அணுகுமுறை முன்வைக்கிறது.

இதற்கான மாற்றும் புதிய அரசியல் திட்டமும் தமிழ் அரசியல் தரப்புக்களிடம் இல்லை. பாராளுமன்றம் செல்வதற்கான வழிமுறைகளை மட்டுமே தேடிக்கொள்ள முனையும் தமிழ் அரசியல் கட்சிகளிடமிருந்து மாற்றை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

ஆக, தேசியத் தன்மை அழிக்கப்படுவதைக் கருத்தில் கொள்ளாத இக் கட்சிகள், இலங்கை அரசின் கொழும்பு மையவாத அரசியலைச் சுற்றி இயங்க ஆரம்பித்துவிட்டன.

சிறுபான்மைத் தேசிய இனங்கள் கோருவது தற்காலிக அமைதியையோ அன்றி அதன் பின்னால் மறைந்திருக்கும் பேரினவாத நிகச்சி நிரலையோ அல்ல. மாறாக சுதந்திரமாகத் தன்னாட்சியுடன் வாழ்வதற்குரிய உரிமையை. அதன் உச்சபட்ச உரிமையான பிரிந்து செல்லும் உரிமையை. பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட்டால், இலங்கையில் பிரிந்து செல்லும் கோரிக்கை குறித்த குரல்களே ஒலித்திருக்காது. அனைத்துத் தேசிய இனங்களும் சமாதானமாக வாழும் சூழல் ஏற்பட்டிருக்கும்.

ஆறு தசாப்தங்கள் மூச்சுவிடக்கூட இடைவெளியின்றித் தொடரும் பேரினவாத ஒடுக்குமுறை இலங்கை சிங்கள பௌத்த அதிகாரவர்க்கத்தின் அரசியல் தேவையாக இன்றைக்கும் தொடர்கிறது என்பதை இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்குப் பின்னான சம்பவங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. நல்லாட்சியின் மென்மைப் போக்கு இராணுவ ஒடுக்குமுறை வரைக்கும் நகர்த்திச் செல்லப்படும் பேரினவாத அரசியலாக இன்னும் தொடராலம் என்பதை அக் கொலையின் பின்னான சம்பவங்கள் படம்போட்டுக் காட்டுகின்றன.

எதிர்காலம் குறித்த அழகிய கனவுகளோடு வாழ்ந்த இரண்டு இளைஞர்களின் இன்னுயிர் நள்ளிரவிற்குச் சற்றுப் பிந்தய பொழுதில் தெருவோரத்தில் வலிந்து பறிக்கப்பட்டபோது மக்களின் மனதில் நெருப்பெரிந்தது.

இக் கொலைகளை தமது சுய இலாபத்திற்காகத் தமிழ் தலைவர்கள் பலர் பயன்படுத்திக்கொண்டனர் என்பது வேறுவிடையம். அதனால் மக்களின் தன்னிச்சையான எழுச்சிகளையும், உணர்வுகளையும் நிராகரிக்க முடியாது. முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர் முதலாவது பேரினவாத எழுச்சியாக திட்டமிட்ட வன்முறைகள் தவிர்ந்த மக்களின் போராட்டங்களைக் கருதமுடியும்.

இவை சிறுபான்மைத் தேசிய இனங்களின் கூட்டு மனோ நிலையைக் குறித்துக்காட்டுகிறது. சிறிய தீப்பொறி கூட பெரும் பின் விளைவுகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் நிலையிலேயே அக் கூட்டு மனோ நிலை காணப்படுகிறது என்பதற்கு நாடு முழுவதும் ஏற்பட்ட பதற்றம் குறியீடாகியுள்ளது.

ஆக, இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் அச்ச உணர்வின்றி வாழ்வதற்குரிய புறச் சூழல் தோன்ற வேண்டுமானால், தேசிய இனங்களின் தேசியத் தன்மையைச் சிதைப்பதிலிருந்து அதனை உருவாக்க முடியாது, மாறாக தேசிய இனங்களின் தன்னாட்சிக்கான கோரிக்கையின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதே ஜனநாயக வழிமுறை.

இன்றுள்ள அரசியல் சூழலில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள தவறான தலைமைகள் தமது சுய இலாபத்திற்காக இலங்கை அரசின் ஜனநாயக மறுப்பிற்கு எதிரான போராட்டத்தை திசை மாற்றுவது பேரினவாதச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவது மட்டுமல்ல பேரினவாத அரசைப் பலப்படுத்தும். ஆக, தேர்தல் கால நோக்கங்களுக்காகவும், தமது தொடர்ச்சியான இருப்பிற்காகவும் அவலங்களைப் பயன்படுத்தாது பேரினவாதத்தையும், கொழும்பு மையவாதக் கருத்தியலையும் பலவீனப்படுத்தும் மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவேண்டும்.

இலங்கையில் சமாதானம் நிலவ வேண்டுமானால் சிறுபான்மைத் தேசிய இனங்களின் கூட்டு மனோ நிலையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதன் முன் நிபந்தனையாக சிங்கள மக்களின் மனோ நிலை மாற்றமடைய வேண்டும். இவை இரண்டிற்கும் அடிப்படையான முன் நிபந்தனையாக சுய நிர்ணைய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

புதிய கொழும்பு மையவாதச் சிந்தனை, தமிழ்ப் பாராளுமன்ற அரசியல்வாதிகள், ஏகாதிபத்திய நாடுகள் ஆகியவற்றின் துணையுடன் தனது பேரினவாத நிகழ்ச்சி நிரலைச் செயற்பாட்டிற்கு உட்படுத்திவருகிறது. இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் இலங்கை அரசின் வர்க்கரீதியான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். முஸ்லீம்கள், மலையக்த் தமிழர்கள், வட-கிழக்குத் தமிழர்கள் போன்ற சிறுபான்மைத் தேசிய இனங்கள் இலன்கை அரசின் ஒடுக்குமுறையை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளனர். ஆக, மிகப் பெரும்பான்மையான இலங்கை மக்கள் அரசிற்கு எதிரானவர்களே. கொழும்பு மையவாத சிந்தனையின் அடிப்படை நோக்கம் இவர்கள் அனைவரையும் நல்லாட்சி என்ற மாயைக்குள் புதைத்து வைத்திருப்பதே. இந்த அரசியல் புறச் சூழலைக் கருத்தில் கொண்டே தமிழ்ப்பேசும் மக்களின் கூட்டு மனோ நிலையை எதிர்ப்பரசியலை நோக்கி வெற்றிகரமாக வழி நடத்த முடியும்.

Exit mobile version