Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேசியம் இனி மெல்லச்சாகும் :வி.இ.குகநாதன்

இந்திய சாதியமைப்பு
இந்திய சாதியமைப்பு

விடுதலைப்போர்  என்பது வெறுமனே ஆக்கிரமிப்பாளர்களினை எமது எல்லைக்கப்பால் துரத்தியடிப்பதுடன் முடிவடைவதில்லை , மாறாக எமக்கிடையேயான பல்வேறுவிதமான  (சாதி, பால், வர்க்க) ஆக்கிரமிப்புக்களைத் துரத்தியடிப்பதனையும் சேர்த்தே குறிக்கும். இங்கு ஆக்கிரமிப்பாளரிற்கெதிரான ஆயுதப்போர் தோற்கடிக்கப்பட்டதில் சர்வதேசம் கணிசமான பங்கினை வகித்துள்ளது என்பது எவளவு உண்மையோ அந்தளவிற்கு எமது சமூக விடுதலைப்போர் பின்தங்கியிருப்பதற்கு பெருமளவிற்கு நாங்களே காரணமாகவுள்ளோம். இங்கு இந்த சர்வதேசத்தின் துரோகம் பற்றி உரக்கப்பேசும் நாங்கள் எமது பங்கினைப்பற்றி சிறிதளவாது ஆராய்வது அபூர்வமாகவேயுள்ளது. இந்தப்பின்புலத்தில் எமது சமூக விடுதலைப்போரில் ஒரு பெரும் பின்னடைவாகச்  சாதிப்பாகுபாடு காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த சாதிப்பாகுபாடானது எமது தமிழ்த் தேசியத்தினை மெல்ல மெல்லக் கொல்லும் ஒரு கொடிய புற்றுநோயாகவே மாறிவருகின்றது. இதனை ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்தவேண்டிய நாம் இன்னமும் அலட்சியமாகவே உள்ளோம். முதலில் இன்றும் எம்மிடையே சாதி என்ற நோய்க்கிருமி  உயிர்வாழ்கின்றதா எனப்பார்ப்போம்.

யார்தான் இப்போது சாதி பார்க்கிறார்கள்?

யார்தான் இப்போது சாதி பார்க்கிறார்கள் என்ற போர்வையில் இன்றும் எமது சமுதாயத்தில் ஆழமாகப் புதைந்துள்ள ஒரு சாபக்கேடே சாதி என்பதாகும். இன்னும் சிலர் தேசிய விடுதலைப் போரின் பின்பு ஈழத்தில் சாதியே இல்லை எனவும் கூறிவருகிறார்கள். சாதி இன்றும் தாயகத்தில் உயிர் வாழ்கிறதா என்பதனைப் பார்ப்பதற்கு அங்கு இடம்பெற்றுள்ள சில சம்பவங்களை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம். முதலாவதாக எதிர்காலச் சந்ததியினை உருவாக்கும் பொறுப்பினையுடைய ஆசிரியர் சமுதாயத்தினை நோக்குவோம்.

  1. யாழில் ஒரு பாடசாலையில் மாணவர்களால் ஒரு மாணவி பாடசாலைத் தலைமை மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது பெயர் பாடசாலை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆசிரியர்கள் அந்தத்தெரிவினை ஏற்கத்தயங்குகிறார்கள். அதற்குக் காரணம் அந்த மாணவி தாழத்தப்பட்ட சாதியினைச் சேர்ந்தவராக கருதப்பட்டமையே ஆகும்.
  2. இன்னொரு பாடசாலையில் தலைமை ஆசிரியரியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவரையே மற்றைய ஆசிரியர்கள் சாதியின் பெயரால் ஏற்க மறுக்கிறார்கள்.
  3. கிளிநொச்சிப் பிரதேசத்தில் ஒரு மாணவி மீது ஆசிரியரால்  மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வெளிக்கொண்டுவரப்பட்டபோது , சக ஆசிரியர்களில் சிலர் குறித்த மாணவியின் பிரதேசம் (மலையக),  சாதி என்பவற்றினைச் சொல்லி மாணவியினையே இழிவுபடுத்துகிறார்கள்.

      மேற்குறித்த சம்பவங்கள் சமூகத்தினை வழிநடாத்தவேண்டிய ஆசிரியர்களிடையே எவ்வாறு சாதிவெறி புரையோடியுள்ளது என்பதனைக் காட்டுகிறது.

                   சமூகத்தினை வழிநடாத்தவேண்டிய ஆசிரியர்களிடையேதான் இவ்வாறான நிலையெனில் சமுதாயத்தினை நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆலயங்களில் நிலமை இன்னமும் மோசம். கிராமப்புறங்களில் பரவலாகச்  சாதிரீதியாகப் புதிதுபுதிதாக ஆலயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரும்பாலான ஆலயங்களின் நிர்வாகப்பொறுப்புக்களில் ஆதிக்க சாதியினரே பதவியினை வகிக்கின்றனர். மேலும் சில மாதங்களிற்கு முன் வடமாராச்சியில் கோயில் தேரினைச்சுற்றி வேலியடைத்த சம்பவம் சாதிவெறியினைப் படம் பிடித்துக்காட்டுகிறது. இவற்றின் உச்சமாக பிரமாணர் தவிர்ந்த ஏனையோரிற்கு கருவறைத் தீண்டாமை இன்றும் தொடர்கின்றது.

    விடுதலைப் போரிற்காக தம்மை அர்ப்பணித்த முன்னாள் போராளிகளில் பெரும்பாலானோரும் சாதிவெறிக்கு விதிவிலக்கானவர்களாகவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக வேறு சாதிகளில் மணம் முடித்த பல முன்னைநாள் போராளிகள் இன்று சாதியினைக்காட்டி தமது மனைவியினை  குழந்தைகளுடன் கைவிடும் நிலையும் காணப்படுகிறது. வடமாகாணசபையினால் ஐப்பானின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட முன்னாள் போராளிகளிற்கான நன்னீர் மீன்பிடிப்பு முயற்சித் திட்டத்தினைக்கூட ஏற்றுக்கொள்ள பலர் சாதிரீதியான தொழில் எனக்கூறி பின்னடிக்கின்றனர். புலிகளின் செயற்பாட்டுக்காலத்தின்போதே போராளிகளிடையே சாதி எவ்வாறு ஒழித்திருந்தது என்பதனை தமிழ்கவி அக்கா எழுதிய ஊழிக்காலம் என்ற புத்தகம் விளக்கும்போது இன்று நடப்பவை ஒன்றும் ஆச்சரியமானவையல்ல என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது. சாதி தொடர்பாக இவ்வாறான பிற்போக்கான நிலை சமுதாயத்தினை வழிநடாத்தும் ஆசிரியர், ஆலயங்கள், விடுதலைப்போராளிகளிடையே காணப்படும்போது மற்றையோரின் நிலையினைச் சொல்லத் தேவையில்லை.

   தாயகத்தில் மட்டுமல்லாமல் புலத்தில் கூட எம்மவர்களிடையே சாதிப்பாகுபாடு காணப்படுவதனை மணமகன்/ மணமகள் தேவைக்கான விளம்பரங்களில் அவதானித்துக்கொள்ளலாம். நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணீர்தான் என்றால் எம்மவர்கள் நடுக்கடல் தாண்டியும் திருந்தவில்லை.

சாதி இனம் சார்ந்ததா?  மதம் சார்ந்ததா?

இதற்கான பதில் மிகத்தெளிவானது. ஆனாலும் மதத்திற்கு மேற்பூச்சு பூசி வெள்ளையடிக்க விரும்புவர்களின்  வாதம் சாதி இனம் சார்ந்தது  என்பதாகும். இதற்கு இவர்கள் முன்வைக்கும் வாதம் எமது சூழலில் கிறிஸ்தவ மதத்திலும் சாதி நடைமுறை உள்ளது என்பதாகும். இது ஓரளவிற்கு உண்மை என்றாலும் இதற்கு காரணம் இவ்வாறானவர்கள் மதம் மாறினாலும் தமது சில சமய பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடமுடியவில்லை என்பதேயாகும். (உதாரணமாக சில தமிழ் கிறிஸ்தவர்கள் இன்றும் வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் உண்ணமாட்டார்கள்).  சாதி இனம் சார்ந்தது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. மறுபுறத்தில் சாதி இந்து மதம் சார்ந்தது என்பதற்கு ரிக்வேதம், மனுதர்மம், பகவத்கீதை என்பவற்றில் பலமான சான்றுகள் உண்டு. கீதையின் 18 இயலின்44-47 வது பாடல்களில் நாலு வருணங்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அவற்றிற்கான தொழில்களும் குறிப்பிடப்படுகிறது. மேலும் வருணங்களை படைத்தது நானே என கிருஸ்ணர் சுயவாக்குமூலமே கீதையில் கொடுத்துள்ளார். கீதையின்படி ஒரு வர்ணத்தை சேர்ந்த ஒருவர் வேறு ஒரு தொழினைச் சிறப்பாக செய்வார் எனினும் தனது குலத்தொழிலினைவிட வேறு தொழில் செய்யக்கூடாது. இவ்வாறு வர்ண அமைப்பினை பேணுவதே கீதையின் அடிப்படை நோக்கம். இங்கு  சாதி மதம் சார்ந்து என்பது தெளிவானது. எனவே சாதி மறுப்பும் மதத்திலிருந்தே, குறிப்பாக ஆகமவிதிகள் அறிந்த அனைத்துச் சாதியினரும் பூசகரலாகலாம் என்பதிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசினால் சட்டமாவது இயற்றப்பட்டது( நடைமுறைப்படுத்த அவர்களாலும் இன்னமும் முடியவில்லை). ஆனால் இது பற்றிய எந்த முயற்சியும் எமது தாயகத்தில் இடம்பெறவில்லை.

எதிர்கொள்ளப்போகும் ஆபத்து:

சாதிப்பாகுபாடு பல காலமாகவிருந்து வருகின்றபோதும் இப்போது போரிற்கு பின்னரான காலத்தில் மீண்டும் கூர்மையடைந்துவருகின்றது. போராளிகளின் காலத்திலேயே மறைத்துவைக்கப்பட்டிருந்த சாதி இன்று மீண்டும் துளிர்விட்டு வேகமாக வளர்ந்துவருவதற்குப்  பல காரணங்களிருந்தபோதும், அண்மைக்காலமாகத்  தேர்தல் அரசியலும் ஒரு காரணமாக மாறிவருகின்றது. அதாவது தேர்தலில் காலூன்றி பதவியினைப்பிடிப்பதற்காக சில சாதிச்சங்கங்கள்(உதாரணமாக தலித் அமைப்புக்கள்) போன்ற அமைப்புக்கள் தாயகத்தில் தோன்றிவருகின்றன. பெரியார்தாசன் ஒரு முறை குறிப்பிட்டது போன்று தமிழகத்தில் தமிழரைத் தாக்கி யாராவது தமிழனிற்கு மானம் இல்லை எனக் கூறினால் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டார்கள், ஆனால் யாராவது குறித்த ஒரு சாதியின் பெயரினைச் சொல்லி இவ்வாறு திட்டினால் தமிழகமே எரியும் நிலையே காணப்படுகிறது. அது போன்ற ஒரு நிலமையே ஈழத்திலும் எதிர்காலத்தில் ஏற்படும். இனிச்  சாதி வேறுபாடுகள் அதிகரித்து தமிழரின் ஒற்றுமை குலையும்.  அதாவது சாதியமானது தேசியத்தினை மெல்லமெல்லக் கொல்லும்.

தமிழகம் தந்த பாடம் 

தமிழகத்தினை தமிழனால் ஆள முடியவில்லை என்பது பலரது ஆதங்கம். அதற்குரிய முக்கிய காரணம் சாதிப்பாகுபாடேயாகும். அதாவது தனித்தனியாக ஒரு சாதியினைச் சேரந்தவர்கள் ஆகக்கூடியளவு பத்து வீதத்திற்கும் குறைவானவர்களே காணப்படுகின்றனர். எனவே தமிழரில் குறித்த சாதிப்பின்புலத்துடன் வரும்போது அவரினை ஏனைய சாதியினைச்சேரந்த 90 வீதமானோரில் பெரும்பாலானோர் ஆதரிப்பதில்லை. மாறாக தமிழரல்லாத ஒருவர்  (எம் ஜி ஆர், கலைஞர், ஜெயலலிதா.. )வெளியிலிருந்துவரும்போது அவரினைச் சாரந்த பலர் தமிழகத்தில் இல்லாதபோது பெரும்பாலான தமிழர்கள் தமது தலைவராக அவரினை ஏற்றுக்கொள்கின்றனர். இந்தப் பாடத்தினை நாம் சரியாக படிக்காதவிடத்து தாயகத்திலும் தலைவராக ஒரு சிங்களவரினையே நாமாக விரும்பி ஏற்கவேண்டியநிலை நாளை ஏற்படும்.

சாதி மறுப்பிற்காக செய்யவேண்டியவை:

சாதி தொடர்பான பாரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். சாதியின் தோற்றுவாயான இந்து மதம் புனரமைக்கப்படவேண்டும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சராக்கப்படவேண்டும். சாதி என்பது ஒரு அந்தஸ்து அல்லவென்பதும் அவகரமானது என்பதும் மாணவர்களிற்கு கற்பிக்கப்படவேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமாக அகமணமுறை உடைக்கப்பட்டுக்  கலப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். குறிப்பாகத் தாயகத்தில் தேசியம், சமஸ்டி பேசும் அரசியல்வாதிகளும், புலம்பெயர் தேசியச் செயற்பாட்டாளர்களும்  இந்த கலப்புத்திருமண முறையிற்கு முன்னுதாரணமாகச் செயற்படவேண்டும். செய்வார்களா?

Exit mobile version