வன்னியில் ஒலித்த அவலக்குரல்களும் அழுகுரல்களும் உலகின் ஒடுக்கப்படும் மக்களின் ஓலங்கள். இந்த மரண ஓலத்தின் நேரடி முகவர் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பமும் என்றால் அதன் பின்புலத்தில் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் செயற்பட்டன. அதன் மற்றொரு புறத்தில் ராஜபக்சவைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணிய சீனா, ரசியா போன்ற நாடுகளின் வர்த்தக வெறி செயற்பட்டது.
இவை அனைத்தையும் கடந்து விடுதலைப் புலிகளின் புலம்பெயர் சொத்துக்களாகக் குவிக்கப்பட்டிருந்த பில்லியன்கள் செயற்பட்டன. புலிகள் பலவீனமடைய ஆரம்பித்ததுமே, சொத்துக்கள் அனைத்தும் சிறுகச்சிறுக முடக்கப்பட்டன. புலம்பெயர் நாடுகளில் சொத்துக்களின் பினாமிகள் அமெரிக்க அரசோடும், ஐரோப்பிய நாடுகளின் உளவு நிறுவனங்களோடும், இலங்கை இந்திய அரசுகளோடும் இணைந்து தமது காட்டிக்கொடுப்பை ஆரம்பித்துவிட்டனர்.
ஏகாதிபதியங்களும் ஒடுக்கும் அரசுகளும் மக்களின் அழிவின் மீது தமது பேரரசுகளை நிறுவிக்கொள்வது உலகின் வழமை.
சமுகத்தின் இறுகிய ஒரு பகுதி அப்பணியினை மௌனமாக நடத்தி முடித்துவிட்டு இன்றும் கூச்சமின்றி ‘தேசியத்தின் பெயரால்’ வாழ்வாங்கு வாழும் அருவருப்பு எமது சமூகத்திற்கு மட்டுமே உரித்தானது.
தாம் சூரியக் கடவுளாகவும், தன்னிகரில்லா சமூகத்தின் தலைவனாகவும் போற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கூட அஞ்சலி கூடச் செலுத்தாமல் நடுத்தெருவில் நிறுத்திய அவமானம் புலிகளைக் காட்டிக்கொடுத்து பணத்தைச் சுருட்டிக்கொண்ட புலம்பெயர் தலைமைகளையே சாரும்.
பணத்தைச் சொத்துக்களாகவும் கணக்கிலடப்படாத பணமாகவும் வைத்திருக்கும் இவர்களிடம் கணக்குக் கேட்டால், தலைவர் வந்தால் தருகிறோம் என்று கூறித் தப்பிக்கொள்கிறார்கள். தலைவர் மரணித்துவிட்டார் என்றால் ‘துரோகி’ என்கிறார்கள். ஆக, பிரபாகரனை அஞ்சலி கூட இல்லாமல் அனாதையாக்கிய இவர்கள் இன்று புலம்பெயர் நாடுகளில் நடக்கும் மாவீரர் நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பாளர்களும் அதன் பின்னணியில் செயற்படுபவர்களும்.
முப்பதுவருட காலம் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளிலிருந்து ஒரு தனிமனிதானாவது இக் கும்பல்களை நோக்கி குரலெழுப்பவும் கேள்வி கேட்கவும் இல்லாமல் போனது நான்கு தசாப்த ஆயுதப் போராட்டத்தின் மாபெரும் தோல்வி. பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த மறுப்பதைத் தட்டிக்கேட்கவும், பிழைப்புவாதப் பினாமிகளிடமிருந்து மக்களின் பில்லியன்களை விடுவிப்பதற்கும் ஒரு தனிமனிதன் எஞ்சியிருக்கவில்லை என்பது போராட்டம் அர்த்தமிழந்து போனதற்கு சமானம்.
இங்கு இதுவரைக்கும் தோற்றுப் போனது, தமது உயிரைத் தியாகம் செய்த போராளிகளும், மக்களும் மட்டுமல்ல உலகின் ஒடுக்கப்பட்ட மக்களும் தான். வெற்றி பெற்றது இலங்கை அரசு மட்டுமல்ல, உலகில் மக்களை ஒடுக்கும் அனைத்து அதிகாரவர்க்கமும், புலம்பெயர் தேசிய முகமூடிகளும், அவர்களின் உள்ளூர் அடியாட்களும், இலங்கைப் பேரினவாத அரசும், ஏகாதிபத்திய நாடுகளும் அதிகாரவர்க்கமுமே.
மாவீரர் தினம் என்ற வருடாந்த சடங்கு இன்று ‘பிரமாண்டமாகக்’ கொண்டாடப்படும் என தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் போட்டிக்குழுக்களும் அறிக்கை விடுத்துள்ளன.’பிரமாண்டம்’ என்பதற்கு , மாவீரர்கள் மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதே அவர்கள் வழங்கும் பொழிப்பு.
மாவீரர்கள் ஆகிப் போகாமல் வடக்கிலும் கிழக்கிலும் தெருத்தெருவாக ஒரு நேர உணவிற்காக ஏங்கும் ஆயிரக்கணக்கான முன்னை நாள் போராளிகளுக்கு பிரமாண்டம் கிடையாது. இலங்கை இராணுவத்தில் ஊனமுற்றவர்களுக்கும், போரில் பாதிப்படைந்தவர்களுக்கும் வழங்கப்பட்ட புனர்வாழ்வின் ஒரு பகுதியாக உளவியல் பயிற்சி, மருத்துவ வசதி, தொழில் சார் பயிற்சி என்பன எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. மாவீரர் ஆகாதவர்களை இலங்கை இராணுவம் அரசியல் நீக்கம் செய்து தெருக்களில் வீசியெறிந்துள்ளது. அதே போல, மாவீரர்களை வைத்து பிழைப்பு நடத்தும் புலம்பெயர் குழுக்களும் பிரமாண்டத்தைப் புலம்பெயர் நாடுகளை நோக்கிக் கடத்திவந்துவிட்டு எலும்புத்துண்டுகளை மட்டும் சிலவேளைகளில் தமது உள்ளூர் அடியாட்கள் ஊடாக வீசியெறிந்து அவர்களை தெருவில் விட்டுள்ளனர்.
புலம்பெயர் நாடுகளிலிருந்து பணத்திற்காக ஈவிரக்கமின்றி புலிகளின் போராளிகளை அழிக்கத் துணை சென்றவர்களுக்கு எதிராக சிறிய அசைவியக்கம் கூட ஏற்படாமல் பாதுகாக்கும் பொறுப்பை இந்த உள்ளூர் முகவர்கள் தமக்குக் கிடைக்கும் அற்ப சலுகைகளுக்காகப் ஏற்றுகொண்டுள்ளனர்.
இவர்கள் பிழைத்துக்கொள்வது ஒரு புறம், மறுபுறத்தில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தையே இனிமேல் தலையிடவிடாது அழித்துச் சிதைவிற்கு உட்படுத்துவதில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர்.
‘இதுவரை நடைபெற்ற போராட்டம் குறைந்த பட்ச தவறுகள் கூட இல்லாத மாபெரும் போராட்டம், அது பிரமாண்டமானது, ஆக, இனிமேல் போராட்டம் நடத்தி வெற்றிபெற முடியாது, இதனால், அழிப்பு நடத்திய அமெரிக்காவிடமே அதனை ஒப்படைத்துவிட்டு போராட்டத்தை உலக மயப்படுத்திவிட்டோம் எனக் கூறுவோம்’ என்கிறது அழிப்பிற்குத் துணை சென்ற கூட்டம். இக்கருத்தின் குறியீடாகவே மாவீரர் தினம் நடத்தப்படுகின்றது.
இக் கூட்டங்கள் நடத்திய பிழைப்பின் பயனாக அமெரிக்காவும் இந்தியா போன்ற நாடுகளும் நடு முற்றத்தில் வந்து குந்தியிருந்து மிரட்டுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளின் நேரடி உள்ளூர் முகவர்களும், புலம் பெயர் குழுக்களின் உள்ளூர் அடியாள் படைகளும் இலங்கைப் பாராளுமன்றத்திற்குச் சென்று எதையாவது சாதித்து விடுவோம் என வாக்கு வங்கி அரசியலை நடத்துகின்றன. நம்பிக்கை இழந்து போன மக்கள் பேரினவாதத்தோடு ஒத்துவாழப் பழகிக்கொள்கின்றனர்.
புலம்பெயர் நாடுகள் தாம் சுருட்டும் மக்கள் பணத்தோடு சுக போக வாழ்க்கை நடத்தப் பழகிக்கொண்ட கூட்டம். நாட்டிலுள்ள மக்களின் நாளந்த வாழ்க்கையையும் சிக்கலாக்குவதற்கான உள்ளூர் அடியாட்களை ஒவ்வொரு தளத்திலும் தேடிக்கொள்கின்றனர். தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையான அடிப்படை ஜனநாயக உரிமைக்காக மக்கள் நடத்தும் போராட்டத்தை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக தமிழீழம் என்பது தமது வெறி, கனவு, தாகம் என உதைபந்தாட்டக் கழகங்கள் போல மூலைக்கு மூலை அலுவலகங்களைத் திறந்து வியாபாரம் நடத்துகின்றனர்.
இவற்றிற்கெல்லாம் இக் கும்பல்களுக்குப் பயன்படுவது, கொடிகள், பூக்கள் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் குறியீட்டுச் சின்னங்கள், தமிழீழக் கனவு, வெறி போன்ற வெற்றுச் சொல்லாடல்கள் போன்றன. இக் கும்பல்களை நம்பும் நூற்றுக் கணக்கான அப்பாவிகளைக் காணலாம். இவர்கள் நடத்தும் இந்த மாபெரும் வியாபாரத்திற்கு எதிராக குரல்கொடுப்பதும், தவறுகளை மறு மதிப்பீடு செய்து, அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு எதனையும் புனிதமாக்காமல் எதிர்கால சந்ததியை போர்க்குணம் மிக்கதாகத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக பிழைப்புவாதத்தை நியாயம் எனக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
இவை அனைத்தையும் மீறி தாம் நேசிப்பதாகக் கூறும் தலைவனையே அனாதையாக்கிவதைக்கூட நியாயம் என்கிறார்கள். நேர்மையற்ற எதிர்கால சந்ததியை உருவாக்க முயலும் இக் கும்பல்களிலிருந்து விடுதலை பெறும் முதல் நிகழ்வாக, இதுவரை நடைபெற்ற அனைத்து இயக்கங்களின் போராட்டம் தொடர்பாகவும் மதிப்பீடு செய்வதற்கான தொடக்கப் புள்ளியாக பிரபாகரனின் மரணைத்தை ஏற்றுக்கொண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அமையட்டும்.
பிரபாகரனும் அவரைச் சார்ந்தவர்களும் சேறடிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்களின் தவறுகள் அரசியல் தவறுகளே தவிர தனிப்பட்ட நபர்கள் சார்ந்த இயல்புகள் அல்ல. ஆக, அரசியல் தவறுகளைக்கு அப்பால் தான் வரித்துக்கொண்ட அரசியல் வழிமுறைக்காக இறுதிவரை களத்தில் நின்று மரணித்த பிரபாகரன் அஞ்சலிக்குரியவரே.
புதிய புலம் பெயர் தலைமைகள் உருவாக்கிய அடிமைகள் கூட்டம் பணத்திற்காக ஒன்று சேர்ந்ததது. அடிமைகளை விடுதலை செய்வதும், கடந்துபோன தவறுகள் அனைத்திலிமிருந்து கற்றுக்கொள்ளும் புரட்சிகரமான விமர்சன சுய விமர்சன முறைமையை ஆரம்பிப்பதும் இன்று அவசியமானது. அனாதையாக்கப்பட்ட பிரபாகரன் மட்டுமன்றி இதுவரைக்கும் மக்களுக்காக மரணித்துப்போன அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் மக்களுக்காகவும் புதிய மாவீரர் தினம் பிழைப்புவாத நோக்கங்களுக்கு அப்பால் புதிய புரட்சிகர நோக்கங்களுக்காக நடத்தப்படுமானால் அதுவே புதிய அரசியல் மாற்றத்தின் ஆரம்பமாகவும் அமையலாம்.