பொதுவாகவே பால் சமத்துவத்திற்கும் மதச்சம்பிரதாயங்களிற்கும் வெகுதூரம். இந்து மதத்தினைப் பொறுத்தவரையில் உடன்கட்டையேறல், பின்னரான காலப்பகுதியில் விதவைகள் என்று கூறி மொட்டையடித்தல், பலதார மணம் (முன்னுதாரணமான கடவுள்களிற்கே பல மனைவிகள்) போன்ற பல பெண்ணடிமைத்தனங்களை கொண்டிருந்தன. கிறிஸ்தவ மதத்தில் பெண்ணடிமைத்தனமானது ஏவாள் இடுப்பு எலும்பிலிருந்து படைக்கப்பட்டாள் என்பதிலிருந்து ஆரம்பித்து பழைய ஏற்பாட்டில் பலவாறாக தொடர்கிறது. இஸ்லாத்தில் தலாக் விவகாரத்துமுறை, பர்கா முகத்திரை, குரானிலேயே மனைவிக்கு அடிப்பதனை நியாயப்படுத்தியமை என பலவாறாக காணப்படுகிறது. பொதுவாகவே மதங்களில் ஆணாதிக்கம் காணப்படுகிறது என்பதனைக்காட்டிலும் ஆணாதிக்கத்தினை நியாயப்படுத்தும் ஒரு ஊடகமாக மதங்கள் காணப்படுகின்றன என்பதே சாலப்பொருத்தமாகவிருக்கும். எது எவ்வாறாயினும் காலப்போக்கில் அறிவியல், நாகரீக வளர்ச்சியால் பல பிற்போக்குத்தனங்கள் கைவிடப்பட்டுவிட்டன. ஆனாலும் இன்றும் தொடரும் ஒரு அடக்குமுறையாகவே ஐயப்பன் ஆலயத்தடை காணப்படுகிறது.
இந்திய அரசியலமைச்சட்டப்படி பால்நிலைகருதி வழிபடத்தடைவிதிப்பது சட்டவிரோதமானது, ஆனால் கோயில் நிர்வாகமும் (திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் -TDB)ஆட்சியிலுள்ள போலி கம்யூனிஸ்ட்கட்சியும் இத்தடையினை தொடர்ந்துவருகின்றன. இத்தடைக்கு ஆலயநிர்வாகம் கூறும் காரணங்கள் காலத்திற்கு காலம் முரண்படுவதுடன் விநோதமாகவுமுள்ளன. முதலாவக கூறினார்கள் சபரிமலையிற்கான காட்டுப்பாதையில் நடந்துவரும்போது இளம்பெண்களிற்கு காட்டுவிலங்களினால் ஆபத்துவரும் என்று ஆனால் இன்று எல்லோரும் வாகனங்களில் காட்டுப்பாதையினை கடப்பதனால் அந்த காரணம் அடிபட்டுப்போனது. அடுத்ததாக பிரம்மச்சாரியான ஐயப்பனிற்கு இளம்பெண்களினை கண்டால் கோபம்வரும் கூறினார்கள். பக்தைகளை கண்டால் சாமிக்கு கருணையல்லவா வரவேண்டும்? ஏன் கோபம் வரவேண்டும்? இதற்கு வெளிப்படையாகப் பதில் கூறமாட்டார்கள். ஆனால் உட்கிடையான ஒரு காரணம் இவர்களிற்கு உண்டு. அதற்கு ஐயப்பனின் பிறப்புபற்றி அறிந்திருக்கவேண்டும். பத்மாசுரனை தந்திரமாக அழிப்பதற்காக விஸ்ணு மோகினி வடிவமெடுத்தபோது அந்த மோகினியின் அழகில் மயங்கி சிவன் மோகினியுடன் உறவுகொண்டதால் பிறந்தவரே ஐயப்பன். பொதுவாகவாகவே தந்தையின் குணம் மகனிற்கும் இருக்கும் என்பது பாரம்பரிய நம்பிக்கை(மூடநம்பிக்கை). எனவே ஐயப்பனும் தந்தையைப்போல இளம்பெண்ணின் அழகில் மயங்கினால் என்பதே இப் பேசாப்பொருள். 1990 களின் நடுப்பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளர் பல மாணவிகளுடன் பாலியல்துன்புறுத்தல்களில் ஈடுபட்டு புலிகளின் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார். அப்போது மாணவர்கள் கேலியாக அவ் விரிவுரையாளர் பற்றி பின்வருமாறு கூறுவார்கள். அவ்விரிவுரையாளரிற்கு முன் மரத்திற்கு சேலையினைப்போர்த்தி நிறுத்தினாலும் அவர் அதனை கட்டிப்பிடிப்பார் என்று. அந்த விரிவுரையாளரின் தரத்திலேயே நிர்வாகத்தினர் (TDB) ஐயப்பனையும் கருதுகிறார்களோ தெரியாது. எனவே இக்காரணமும் ஏற்புடையது மட்டுமல்லாமல் சாமியினை இழிவுபடுத்துவதும் ஆகும்.
நிர்வாகத்தின் இந்த கோமாளித்தன காரணங்கள் யாவும் தோற்கடிக்கப்பட்டபின் இறுதியான துருப்புச்சீட்டாக பலவருட பழக்கவழக்கத்தினை மாற்றமுடியாது என்றார்கள். அவ்வாறாயின் உடன்கட்டையேறலும் பலவருட பழக்கம் தானே இன்று மாறவில்லையா.? இந்த நிர்வாகம் இந்த விடயத்தில் மட்டுமல்ல முன்னர் மகரயோதி விடயத்திலும் மூக்குடைபட்டது. அதாவது தாங்களாகவே களவாக பொன்னம்பல மேட்டில் தீபத்தினை ஏற்றிவிட்டு அதனை தேவர்கள் வானிலிருந்து ஏற்றிய தீபம் என பக்தர்களை ஏமாற்றி கூட்ட நெருசல்களில் பக்தர்களின் இறப்பிற்கு காரணமாயினர். பின்னர் ஊடகங்கள் இந்த மோசடியினை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய பின்னரே நீதிமன்றத்தில் தாமே தீபம் ஏற்றுவதாக ஒப்புக்கொண்டார்கள். இவ்வாறான பல மோசடிகள் மூலமே நிர்வாகத்தினர் பல கோடி ரூபாக்களை காணிக்கையாகத் திரட்டுவருகின்றனர்.
முடிவாகக்கூறுமிடத்து நிர்வாகத்தின் பெண்கள் மீதான தடை என்பது எந்தவிதத்திலும் நியாயமற்றது என்பதுடன் சட்டவிரோதமானதுமாகும். எனவே இதனை எதிரத்து குரல் கொடுக்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமையுமாகும். குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலிருந்து செல்லும் பக்கர்கள் தங்களது தாய், சகோதரி, மனைவி, மற்றும் மகள் மீதான இந்த சபரிமலை தீண்டாமைக்கு எதிராக குரல்கொடுக்கவேண்டும். நிர்வாகம் தொடர்ந்து கேட்க மறுத்தால் சபரிமலை பயணத்தினை புறக்கணிக்கவேண்டும்.