எமது ஈழ விடுதலை போராட்டம் தீவிரவாதமாக்கப்பட்டு, எவ்வாறு முதலாளித்துவமும், சிங்கள இனவாதத்திற்கு பின்னால் ஒளிந்திருந்து செயற்படும், குறு முதலாளித்துவமும், இணைந்து, வளக்கொள்ளையில் ஈடுபடுகிறதோ, அவ்வாறே பாலஸ்தீனத்திலும், மற்றைய ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளிலும், முதலாளித்துவம், விடுதலைப்போராட்டங்களை, தீவிரவாதம் என பெயர்சூட்டி, விடுதலை வேட்கையை அழிப்பதுடன், வளக்கொள்ளையிலும் ஈடுபடுகிறது. இதனை, சிறந்த முறையில் எடுத்து இயம்பும், ஒரு ஆங்கில மொழியில் அமைந்த, சொல்லிசை பாடலின் தமிழாக்கமே இக்கட்டுரையாகும். எமது தமிழ் சமூகத்திலும், “இவ்வாறான சொல்லிசை கலைஞர்கள் உருவாகவேண்டும்” என்று எதிர்பார்த்து நிற்கின்றோம். மக்களை போகங்களில் இருந்து விடுவிப்பதற்கும், மண்ணையும், மக்களையும் செழுமைப்படுத்துவதற்கும், நல்வழிப்படுத்துவதற்கும், சமூக அவலங்களில் இருந்து மீட்பதற்கும், நாம் வாழும் சமகாலங்களில், சமூகத்தில், மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிய பார்வையுடன் கூடிய படைப்புக்களை, தொடர்ந்தும் இடைவிடாது கொடுக்கவேண்டியது, கலைஞர்களின் கடமை ஆகும்.
பாடலை செவிமடுப்பதற்கு இணைக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்குங்கள். – இணைப்பு.
அந்த சொல்லிசை கலைஞனின் டுவிட்டர் முகவரி – Logic Army
பாடலின் கருத்துடன் கூடிய தமிழாக்கம் –
” மக்கள், எப்போதும், மற்றைய மனிதர்கள் வாழ்ந்து, துன்பப்பட்டு, மீண்டுவந்த, தாம் இருந்திராத, மிகவும் துன்பகரமான சூழ் நிலைகளை விளங்கி கொள்ளாது, இலகுவில், அவர்களை எடை போடுகிறார்கள். ஒரு பார்வையாளனாக, துன்பங்களை அனுபவித்தவனாக, எமது சமூகம் எவ்வாறு இருக்கிறது, எவ்வாறு புரிந்து நடந்து கொள்வதால், சமூகத்தை சிறப்பாக கட்டியெழுப்ப முடியும் என்பதனை கூற முனைகிறேன்.
காஸாவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருகின்ற மக்கள், தமது மொழி, கலாச்சாரம், விழுமியங்கள் மற்றும் தமது இனத்தினை காப்பதற்காகவும், தமது நிலத்தினை, இஸ்ரேலியர்கள் அபகரிக்காது தடுப்பதற்காகவும், போராடிவருகின்றனர். காஸா மக்களுக்கு அந்நாடு, அவர்களின், எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கும், தாம் வாழ்வதற்கும் அவசியமானது. ஹிட்லரினால் படுகொலை செய்யப்பட்ட, இஸ்ரேலியர்களுக்கும், “ஒரு நாடு அவசியம்” என்பதனை விளங்கிகொள்கிறேன். ஆனால் அதற்காக, அப்பாவி பலஸ்தீன மக்களின் “மூன்றில் இரண்டு பங்கு நிலத்தினை அபகரித்தது” அபத்தமானது என்பதுடன் ஏற்றுகொள்ளப்படமுடியாததும் ஆகும். பலஸ்தீனியர், தற்போது அகதிகளாக்கப்பட்டு, தாம் எப்போதும் சென்றிறாத, லெபனான் போன்ற ஏனைய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். எதிர்த்து, “வெளியேறாமாட்டோம்” என்று போராடும் ஆயிரக்கான பலஸ்தீனியர்கள் கொல்லப்படுகிறார்கள். இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்தை, நான் எதிர்கொள்ளுமிடத்து, அதனையே நானும் செய்வேன். இதனை எதிர்த்து, தற்கொலை செய்யும், போராளியின் மனநிலையினை ஏற்று கொள்கிறேன். ஆனால் தற்கொலை செய்து, தாமும் இறந்து, மற்றைய அப்பாவி உயிர்களை பறிக்கும், தவறான போராட்டத்தை, என்னால் ஏற்றுகொள்ள முடியாது. தற்கொலை செய்ததன் பின் என்ன நடக்கப்போகிறது? காஸாவில் இடம்பெறும் நில அபகரிப்போ, படுகொலைகளோ நிறுத்தப்படப்போகிறதா? ஒரு போதும் இல்லை என்கிறேன். இஸ்ரேலிய நண்பன் ஒருவனுடன் அமர்ந்து, இது குறித்து வினவிய போது, அவன், அங்கு சென்றால், ” நீ உயிருடன் மீண்டும் திரும்பமாட்டாய்” என எனக்கு சொன்னான். நான் அவனிடம், நீ சொன்னது உண்மையென்றால், நீ சென்று உனக்கு மதத்தை போதிக்கும் தோராக்களை அடி என்றேன். ஏனெனில் இஸ்ரேலியர்கள், அப்படி கொலைகளை செய்வார்கள் எனில், அவர்களின் மத போதகர்கள், மதக்கருத்துக்களை, தவறாக தமது மக்களுக்கு போதித்து, அவர்களை தவறான வழியில் நடத்துகிறார்கள் என்று அர்த்தமாகும். “யூதப்படுகொலையில் இருந்து மீண்டு வந்த ஒரு தேசம், அதேபோன்ற படுகொலையினை, இன்னொரு இனத்தவர் மீது எப்படி கட்டவிழ்த்து முடிகிறது?” இந்த கேள்வியினை, இஸ்ரேலியர்கள், ஆறுதலாக இருந்து, தம்மிடம் தாமே கேட்டு கொள்ளவேண்டும். இல்லையா?
நான், ஒரு பார்வையாளனாக இருந்து பார்த்து புரிந்ததில், “ஏன் இந்த உலகம் இப்படியான இழி நிலையில் இருக்கிறது” என்பதற்கான சில காரணங்களை சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள். எனக்கு தெரியாததை, எனக்கு தெரியும் என்று, நான் ஒருபோதும் கூறமாட்டேன். நாம் ஏன் பிறந்தோம், எதனை நாடி செல்லவேண்டும் என்பது பற்றி எனக்கு தெரியாது? ஆனால், எனக்கும், ஒரு பொதுவான மக்கள் குறிக்கோளிற்காக, யுத்தத்தில் என்னை ஆகுதியாக்குவது பற்றி தெரியும். ஆபிரிக்காவிற்கு சென்ற போது, நன்கு வளர்ந்த, ஒரு இளவயதுடையவர், என்னால் தாங்க முடியாத, பார்க்க முடியாத அளவிற்கு, உடல் நலிந்து போய், நிலத்தில் இருந்து, யாசகம் செய்து, வறுமையில் வாழ்ந்து வர கண்டேன். ஆனால், இருந்தும் அவர், கடவுளை ஒவ்வொரு நாளும் வணங்குகிறார். அத்துடன் அவர் மனோபலத்துடன், சகல வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த வாழ்க்கையை, வாழ்ந்திருக்கவேண்டியவர் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் ஒன்று , இவ் இழிய நிலையை தோற்றிய, மேற்கத்திய நாடுகளில் வசிக்கும், தவறான,வளக்கொள்ளையர்களின் கைக்கு, ஒரு போதும் ஆபிரிக்கா செல்லமாட்டாது. இன்றும், இழிய இப்பிறப்புக்கள், ஆபிரிக்க நாடுகளில் உள்ள நிலங்களை கொள்வனவு செய்து, அங்குள்ள வளங்களை கொள்ளையடிப்பது மட்டும் அல்லாது, இலாபம் சம்பாதிப்பதற்காக, ஆயுதக்கலாச்சாரத்ததை, ஆபிரிக்க கண்டம் முழுவதும் பரப்பி, ஆயுத வியாபாரத்தை மேற்கொள்கின்றனர்.
“ஆபிரிக்கா, ஏன், இன்று இவ்வாறான வறுமை நிலையினை எதிர்கொள்கின்றது” என்று யாராவது எனக்கு சொல்லுங்கள்? ஆபிரிக்க மண் எங்கும், வளங்கள் காணப்படுகிறது. அத்துடன், அங்கு, அதி விலை கூடிய வைர வளமும் இருக்கின்றது. மண்ணை இரு கைகளாலும் கோதியள்ளும் போது, வைரம் கிடைக்ககூடியதான வளம் இருக்கும் போது, அச்செந்தழிப்பான கண்டம், ஏன் வறுமையின் கோரத்தில் சிக்கி தவிக்கவேண்டும்? வெள்ளையினத்தவர்கள் தான் இந்நிலைக்கு காரணம் என்று கூறுவது தவறு. ஆபிரிக்க தாயின் அழகினை அறியாத, பதவி ஆசை கொண்டவர்கள்தான், ஆபிரிக்க மண்ணின் இவ்இழியநிலைக்கு காரணம். மிருகங்களிலும் கேவலமான இழிய இப்பிறப்புக்கள், ஆபிரிக்க மண்ணை பணம் சம்பாதிப்பதிக்கும் மண்ணாகவே கண்ணுற்றனர். அத்துடன், இவ்இழிய பிணந்தின்னி கூட்டம், ஆபிரிக்க மண்ணினை, தம் வயிற்றை வளர்த்துக்கொள்வதற்கு கிடைத்த சந்தர்ப்பமாகவே, பயன்படுத்தி இலாபமடைந்தனர். இதனையே, நீங்களோ, நாமோ செய்தால், அதற்கு தீவிரவாதமென பெயர் சூட்டுவர். இச்சொற்களை, நான் சொன்ன சிறப்பான வாக்கியமாக குறித்து கொள்ளுங்கள். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்; நாம் எதனை கொண்டு வந்தோமோ, அதனை மட்டுமே, இறக்கும் போது கொண்டு செல்வோம். “இன்ஷா அல்லாஹ்” எனும் புனித வாக்கியத்தினால், வணங்கப்படும் கடவுளும், உங்களிடமும், எங்களிடமும், நிறைந்து இருக்கும், அன்பு மிக்க இதயத்தினையே குறித்து நிற்கின்றார். எந்த சமயத்திற்கும் உரிமையாளர்கள் கிடையாது. குர்ரானோ, பைபிளோ, யூதர்களின் தோரா போன்ற இறைவழியினை அடைவதற்கு என்று எழுதப்பட்ட சகல புனித புத்தகங்களும், பேனா மையினால் தான் எழுதப்பட்டது. அவற்றில் போதிக்கப்பட்ட கருத்துக்களை, திரிபுபடுத்தியே போதிக்கிறார்கள், என்று நான் நினைக்கிறேன். அனேகமான அரசியல்வாதிகள், பிறக்கும் போது, இனவாதியாக பிறந்தவர்கள் போன்றே, நடந்துகொள்கிறார்கள். அத்துடன், அவர்கள், ஒருவருக்கு ஒருவர், தொடர்புகளை கொண்டவர்களாகவும், உறவினர்களாகவும் இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளின் முன்பாக நாம் பல்வேறுபட்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டோம். “சகோதரன் ஒருவன், பலமற்றவன் என்று அறிந்தபின்பும், அவனை எப்படி உங்களால் தாக்கி கொல்லமுடிகிறது” என ஒரு கூட்டத்தில் “ரொனி பென்” எனும் சிறந்த அரசியல் போராளி ஒரு முறை பேசியதை அறிந்தேன். அப்படிகொலை செய்யும் கொலைகாரர்களின், மூதாதையர் எப்படி இருந்திருப்பார்கள், என்பதை நான் அறியேன். சகோதரர்களே, நீங்கள் என்னுடன் வாதம் புரியும் முன், உங்களிடம் இருந்து வேறுபடாத, அதிசயப்பிறவி அல்லாத, சதாரணமான பார்வையாளனாக இருந்து, நான் சொன்னவற்றை, நான் சொன்ன பார்வையில் இருந்து ஒரு முறை யோசித்து பாருங்கள். அன்புள்ள சகோதரர்களே, எனக்கு வலி தரும், எங்கள் மக்களின் இச்சோகங்களை கேளுங்கள். என் நடைமுறை வாழ்க்கையில் இருந்து கற்ற பாடங்களில் இருந்து, என்னை திருத்தி கொள்ளும் சக்தியை பெறுகின்றேன். அச்சக்தியினை சொற்களாக்கி, உங்களுக்கு தருகின்றேன். என் சொற்கள் உங்களிற்கு தருகின்ற, வடிவத்தினை உற்று நோக்குங்கள். உங்களின் பழைய பாரம்பரியங்களான, எகிப்திய தியான வழிபாட்டு முறைகளை ஆராயுங்கள். பகிரங்கமாக விவாதியுங்கள். முன்னைய காலத்தில், வியாபாரிகளாக நமது நாடுகளிற்கு வந்து, எமது தாற்பரிய வழிபாட்டு முறையை, தவறான முறையில் திரிபுபடுத்தி, அழித்த இழிய பிறப்புக்கள், எம் நாடுகளில், தமது கலாச்சாரங்களின் ஊடாக, எம்மை கடவுள் சொர்க்கத்தில் இருக்கிறார்; மரணம் மக்களிற்கு பொதுவானது என கூறி, வலி மற்றும் வேதனை மிகுந்த மரணத்தினை, மக்களுக்கு இயல்பானதொன்றக்கி, மக்களினை மந்தைகளாக்கி, மக்களிடம், போலியான மத மார்க்கங்களை திணித்து, தாமே மக்களை காக்க வந்த தூதர்கள் என்று, சொல்வதன் ஊடாக, மக்களை ஏமாற்றுபவர்களை இனங்காணுங்கள். சொர்க்கத்திற்கு செல்ல ஆசைப்படும் தேவதூதர்களாகிய எமக்கு, எம் நிலங்களை சொர்க்கபுரியாக மாற்றுவதாக கூறி, எம்மண்ணில் காலடி வைத்த, இந்த பண்டைய வியாபாரிகளின், உண்மை முகத்தினை, அறியுங்கள். இவ்வியாபாரிகள், தம் குறுகிய கால இலாப நலன்களுக்காக, சகல நாடுகளையும் அழித்துவிட்டார்கள். நான் உண்மையை தேடி அறிய விரும்பும் கருணையுள்ளம் கொண்ட மனிதன். இவ்வுலகில் வாழும் மற்றைய மனிதர்களும், என்னை போன்று அன்பு கொண்ட, உண்மையை தேடும் மனிதர்களே. இதுவே எனது பார்வை. என்னால், நான் கற்றவற்றை, உங்கள் கண்ணுக்கு புலப்படும் வகையில் சொல்லிசையினூடாக தர மட்டுமே முடிகிறது. “
தமிழாக்கம் – செங்கோடன்
“சகல மனிதர்களிடத்தும், உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள்; இறைவன் தான் உயிராக சகல உயிர்களிடத்தும் நிறைந்துள்ளார். உயிர்களை கொல்லாதீர்கள். “