ராஜராஜ சோழன் என்ற தென்னிந்திய அரசன் தமிழை வளர்த்தவனாகவும், மக்களாட்சியை நிறுவியனாகவும் தமிழ் இனவாதிகள் முன்வைக்கும் கருத்துக்கள் ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்கு எதிரானது. ராஜராஜ சோழனின் புலிக்கொடி ஈறான அடையாளங்களை தமிழர்களின் அடையாளங்களாக முன்னிறுத்துவது ஒடுக்கப்படும் மக்களின் வீரம்மிக்க போராட்டத்தைக் கேவலப்படுத்துகிறது. ராஜராஜ சோழன் காலத்திலேயே தமிழ் நாட்டில் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையும் சாதிய அமைப்பும் முன்னெப்போதும் இல்லாதவாறு பெரும் கொடுமையாக வளர்ச்சி பெற்றது.
அதுவரைக்கும் தமிழ் மொழி வளர்ச்சிபெற பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ராஜராஜ சோழன் தமிழ் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதத்தை மக்கள் மத்தியில் திணிப்பதில் ஈடுபட்ட வரலாறுகளே எம் முன்னால் காணக்கிடக்கின்றன.
வரலாற்றுப் பாத்திரங்களுக்கு அளவிற்கு மிஞ்சிய ஒளிவட்டம் கட்டும் வேலையை தமிழகத்தின் பிற்போக்கு வரலாற்றாசிரியர்களும் சினிமா வியாபாரிகளும் மேற்கொண்டு வந்தனர். இவர்களால் திரிக்கப்படும் வரலாறு நமக்குக் புதிய சமூகத்திற்கான பாதையைத் திறப்பதற்குப் பதிலாக பழமையின் பிற்போக்கான அம்சங்களை நமக்கு மேல் திணிக்கிறது.
ராஜராஜ சோழன் காலத்திலேயே பெண்கள் தாசித் தொழிலில் முதன் முறையாக ஈடுபடுத்தப்பட்டனர். 400 பெண்கள் ராஜராஜ சோழன் கட்டிய கோவிலுக்கு நேர்ந்துவிடப்படனர். அவர்கள் பதி இல்லார்(கணவன் இல்லாதவர்) என்றும் தளைச்சேரி பெண்டுகள் (கவர்ச்சி மிக்க பெண்கள்) என்றும் அழைக்கப்பட்டனர்.
நடன மாதுக்கள் என்றும் இவர்களை அழைப்பதுண்டு. கோவில் சார்ந்த பிராமணர்களின் பாலியல் இச்சையைத் தீர்ப்பதற்கு இப் பெண்கள் பயன்படுத்தப்பட்டனர். தாசித் தொழில் ராஜராஜ சோழனுக்கும் முற்பட்ட காலத்தில் தமிழ் நாட்டில் காணப்படவில்லை.
போர்களின் போது பிடித்துவரப்பட்ட பெண்களிலிருந்தும், அரசுக்கு வரிகட்ட முடியாத பெண்களிலிருந்தும் கவர்ச்சியானவர்களைத் தெரிவிசெய்து தாசித் தொழிலில் ஈடுபடுத்திய முதல் ‘தமிழ்’ அரசன் ராஜராஜ சோழன் தான்.
ராஜராஜ சோழன் காலத்தில் தான் முதன் முதலில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் பதியப்பட்டன. அழகு தமிழுக்கு எதிராக பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டும் முகமாக சமஸ்கிருதம் புகுத்தப்பட்டது.
சோழப் பேரரசின் ஆதிக்கம் இந்தியாவில் ஒரிசா வரைக்கும், தெற்கில் இலங்கை வரையும் படர்ந்திருந்தது.
தென்னிந்தியாவில் பார்ப்பன ஆதிக்கத்தை அதிகார அலகாக மாற்றியது சோழப் பேரரசு. மாவட்டங்களாக நிர்வாகத்தைப் பிரித்து மக்களிடம் வரி வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சோழ மண்டலம் எனக் கூறப்பட்ட 40 பிரதேசங்களிலிருந்து மையப் பேரரசிற்கு வரி வசூலிக்கப்பட்டது.
கிராம சபைகள் ஆரம்பிக்கப்பட்டன. வரி கட்ட இயலாத சிறு நில உடமையாளர்களிடம் நிலங்களைப் பறித்து அரசிடம் ஒப்படைப்பதே கிராமசபையின் வேலை. பறிக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி ஆலயத்திற்கும் பிராமணர்களுக்கும் சொந்தமாக்கப்பட்டது. வரிகட்ட இயலாதவர்களின் வீடுகளில் அழகான பெண்களைப் பறித்து அவர்களுக்கு பறிக்கப்பட்ட நிலத்தில் ஒரு பகுதியைச் சொந்தமாக வழங்கி அப் பெண்களைத் தாசிகளாக மாற்றியது சோழப் பேரரசு.
பார்ப்பனர்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் வழமன நிலங்கள் வழங்க்கப்பட்ட ஆதரங்களைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
மன்னர்கள் பொதுவாகவே மக்களை அடக்கியாளும் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தலைமையிலிருந்தவர்கள். மன்னர்களின் காலத்தில் மக்களை இணைக்கும் தத்துவங்களாக மதங்கள் காணப்பட்டன. முதலாளித்துவக் காலத்தில் தேசியம் என்பது மக்களை இணைக்கும் தத்துவமாகக் காணப்படுகிறது, ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள்வதென்பது எல்லாம் தேசியத்திற்கு எதிரான பழமைவாதம். ஆக, மன்னர்களின் பிற்போக்கு அடையாளங்களையும் அவற்றின் அரசியலையும் நிராகரிப்பதிலிருந்தே தேசிய இனங்களும் தேசங்களும் தோன்றுகின்றன.
முதல் முதலாக மக்கள் கூட்டங்கள் தேசிய இனங்களாக ஐரோப்பிய நாடுகளிலேயே தோன்றின. மன்னர்களின் ஒடுக்குமுறையை அழித்து நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்சங்களைத் துடைத்தெறிந்து தேசங்கள் தோன்றின. நாமோ நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்களை தூக்கிப்பிடித்துக்கொண்டு தேசிய விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறுகிறோம்.