Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் சிங்கள பௌத்தத்தின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த வரலாறு : சபா நாவலன்

இந்தியா நேபாள எல்லையில் தோன்றிய பௌத்தம் பல பிரிவுகளாகி, இலங்கை வரை சென்று இன்றும் அழிவிற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. பௌத்தத்தின் தோற்றமும் வரலாறும் சிங்கள மக்களிடமிருந்து மட்டுமன்றி தமிழ் மக்களிடமிருந்தும் இலங்கை அதிகாரவர்க்கங்களால் மறைக்கப்பட்டுவருகின்றது. வரலாற்று ஆசிரியர்கள் அதிகாரவர்க்கம் சார்ந்து தமது ஆய்வுகளை முன்வைக்கும் போது அது முழுமை பெறுவதில்லை. தென்னிந்தியாவிலிருந்து தமிழ்ப் பௌத்த துறவிகளால் இலங்கையை நோக்கிப் பரவிய பௌத்தம் பல்வேறு திரிபுகள் ஊடாக இன்று சிங்கள பௌத்தமாக மாற்றமடைந்து இலங்கை என்ற நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அச்சுறுத்தி வருகிறது சிங்கள பௌத்தம் என்பது இன்று வெறுமனே ஒரு மதம் சார்ந்த கோட்பாடு அல்ல. காலனியத்திற்குப் பிந்தய காலத்தில் அது பேரினவாதக் கோட்பாடாக மாற்றமடைந்து இன்று இலங்கையை இரத்தத் துளியாக உருவாக்கியுள்ளது. சிங்கள பௌத்தத்தை எதிர்கொள்ள முன்வைக்கப்படும் தமிழ் இனவாதம் அதனை மேலும் வளர்க்கும் ஆபத்தான அரசியல் சூழலில், சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டமே சிங்கள மக்களையும் விடுதலை செய்யும் என்ற உண்மை உணர்த்தப்பட வேண்டும். இந்தியாவில் ஆரம்பித்து இலங்கை வரை விரிவாகும் பௌத்தத்தின் கோட்பாடு மேலோட்டமாக இங்கு முன்வைக்கப்படுகிறது. மேலும் இது செழுமைப்படுத்தல்களுக்கு உட்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

உபநிடதக் காலகட்டம் என்பது இந்தியாவில் இரும்பு உபயோகத்துக்கு வந்த காலகட்டமாகும். அக்காலத்திலேயே அடிமைச் சமூக அமைப்பு முறைக்கெதிரான சித்தாந்தங்களும் போராட்டங்களும் தீவிரமடைந்தன. நிலத்தோடு மனிதன் பிணைக்கப்பட்டுக் கொண்டிருந்தான். பிராமணர்களின் சமூக ஆதிக்கத்தால் சித்தாந்தங்களிலும் பலம்பெற்றிருந்த அதிகார வர்க்கம் வேத அமைப்பின் உள்ளும் புறமும் போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது.

இருக்கு வேத காலத்தின் தொடக்கநிலையில் காணப்பட்ட வேள்வி முறையானது, பின் வந்த வேத காலங்களிலும் பிராமண ஆதிக்கம் எழுந்த சூழலிலும் மிகப்பெரிய வளர்ச்சியை எய்தியது.

பெரும் பொருட்செலவில் கால்நடைகளைப் பயன்படுத்தி வேள்விகள் நடத்தப்பட்டன. விவசாயத்திற்காக அதிக அளவில் விலங்குகள் பயன்படுத்தப்படாத இந்தக் காலகட்டத்தில் பேரரசுகள் அல்லது சாம்ராஜியங்கள் தோன்றியிருக்கவில்லை.

பேரசுகள் தோன்றும் காலம் நிலப்பிரபுத்துவக் காலம் என அழைக்கப்படுகின்றது. நிலங்களை அதிகமாக உரித்தாக வைத்திருக்கும் அரசர்களே ஆதிக்கம் மிக்கவர்களாகக் கருதப்பட்டன. குறு நில மன்னர்களால் ஆளப்பட்ட குழு நிலை சமூக அமைப்பு முறை தகர்க்கப்பட்ட வேளையில் குறு நில மன்னர்களுக்கு இடையே போர் மூண்டது. போரில் வெற்றிபெற்ற மன்னர்கள் தோற்றவர்களை அடிமைகளாக்க அடிமைச் சமூகம் என்ற அமைப்பு குறுகிய காலத்திற்கு நிலவியது.
சமூக அமைப்பு முறை மாற ஆரம்பித்தபோது விலங்குகளின் தேவை விவசாயத்திற்கு அதிகமானது. இரும்பின் உபயோகம் இதனோடு இணைந்துகொள்ள புதிய உற்பத்தி சக்திகள் உருவாகின.

இந்த வேதவேள்விக் கலாச்சாரத்திற்கு எதிராக வேதத்திற்கு உள்ளிருந்தே எழுந்த முதற் போராட்டத்தின் வெளிப்பாடே உபநிடதச் சிந்தனை என்று கருதப்படுகின்றது. உபநிடதச் சிந்தனை ஞானம், தியானம், முக்தி, ஒடுக்கம் போன்ற சமுதாய நெறிகளை முதன்மைப்படுத்தின.

ஆதிக்கத்திலிருந்த பிராமணர்களின் பிரதன உணவு மாமிசமாகவும், கால் நடைகளை யாகங்கள் நடத்தி எரித்து உண்பது அவர்களது வழமையாக இருந்தது. புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே உருவான எழுச்சியை புத்தர் வழி தலைமை தாங்கிய போதே மாமிசம் உண்பதையும், விலங்குகளை எரித்து நாசப்படுத்துவதையும் பிராமணர்கள் கைவிட்டனர்.

இரும்பு உபயோகத்திற்கு வந்ததிலிருந்து உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட ஆரம்ப மாற்றத்திலிருந்து உருவான சமூகப் பகைப்புலமே இந்த சித்தாந்த மாற்றத்தை முன்நிறுத்திற்று.

இந்தக் காலகட்டத்தின்போதே சமணம், பௌத்தம், போன்ற வேத நிலையிலிருந்து வேறுபட்ட தத்துவங்கள் உருவாகின. கி.மு.7ம் நூற்றாண்டிலிருந்து உருவாகத்தொடங்கிய இந்தச் சமூக அமைப்பிலான மாற்றம் பல ஆண்டுகள் வரையில் தொடர்ந்தன.

அடிமைச் சமூகத்திலிருந்து சமூகததைச் சிறிதளவேனும் முன்னோக்கி நகர்த்த பிராமணர்களுக்கு எதிரான பெரும் போராட்டம் அவசியமானதாகிற்று.

கி.மு. 5ம் நூற்றாண்டளவில் உற்பத்தி உறவுகளிடையே உள் முரண்பாடுகள் அதிகரித்தன.

அதிகார சக்திகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. மரணமும் பீதியும் வறுமையும் மேலோங்கியிருந்த இந்தக் காலகட்டம் எல்லாச் சமூக மாற்றங்களினதும் ஆரம்ப கட்டத்தினைப் போலவே துன்பியல் நிறைந்திருந்ததாகக் காணப்பட்டது.

இவற்றுக்கெதிரான போராட்டங்களினதும் நிலப்பிரபுத்துவக் காலகட்ட எழுச்சியின் ஆரம்பத்தினதும் நிறுவன மயமாக்கல்தான் உபநிடதத்தின் தோற்றமும், இதே போல புத்தமதத்தின் தோற்றமுமாகும்.

பௌத்தம் போர்களை ஏற்பதில்லை

போருக்கு எதிரான புத்தமதம் என்பது சமத்துவத்தையும் சமாதானத்தையும் போதித்தது. தம்மைச் சுற்றியிருந்த சமுதாயத்தில் போரையும் அதனால் ஏற்பட்ட மரணங்களையும் பேரழிவுகளையும் சீரழிவுகளையும் எதிர்த்தவர் புத்தர். ரோகிணி என்ற நதியின் நீருக்காக புத்தரின் உறவு சார்ந்த இனத்தவர் ஆயுதம் தாங்கிப் போராடியதைக் கண்டவர் கௌதம புத்தர்.

கி.மு.7ம் நூற்றாண்டிலிருந்து 5ம் நூற்றாண்டு வரையில் இந்தியா முழுவதும் தீவிரமான நிலப்பிரபுத்துவ மறுமலர்ச்சி ஏற்பட்டது. இக்காலப் பகுதியில்தான் இந்தியா முழுவதும் இருந்த சிறிய இனக்குழுக்களும் அதன் அரசுகளும் மோதிக்கொண்டன. நிலப்போட்டி அதிகரித்துப் பலர் அழிந்துபோயினர். சாம்ராஜ்யங்கள் உருவாகத் தொடங்கின. இதே காலப்பகுதியில் கிரேக்கத்திலும் சிறிய குழுநிலை அரசுகள் அழிந்து சாம்ராஜ்யங்கள் உருவாகின. இந்தியாவைப்போலவே இதனுடன் இணைந்து பல தத்துவங்கள் உருவாகின. அரிஸ்டோட்டில் போன்ற தத்துவாசிரியர்களை இந்தப் போர்கள்தான் உருவாக்கின.

கௌதம புத்தர் இந்தச் சமூக மாற்றம் உருவாக்கிய மிகப்பெரும் தத்துவாசிரியராவார். பல நூற்றாண்டுகள் முன்னோக்கிச் சிந்தித்தவர் இவர். இந்தியர் சிந்தனை மரபின் முற்போக்குப் பகுதியின் கதாநாயகன். புத்தர் தோற்றம் பெற்ற காலத்தில் மல்வம், மகதம், கோசலம், விரலி முதலிய இனக்குழுப் பிரதேசங்களில் சிறிய இனக்குழுக்கள் அழிக்கப்பட்டு போர்களின் முடிவில் இராசதானிகளும் சாம்ராஜ்யங்களும் உருவாகின. இவரின் காலத்தில் அஜத்சாரு என்ற மன்னன் சாம்ராஜ்யங்களை விரிவுபடுத்துவதில் முன்நின்றதாக வரலாறு கூறும்.

இதனைத் தொடர்ந்து வட இந்தியா முழுவதிலும் இருந்த சாம்ராஜ்யங்கள் தெற்குவரை பரந்து விரிந்தன. இந்த சாம்ராஜ்யங்களின் விரிவாக்கம் இனக்குழுக்களின் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று.

இனக்குழுக்கள் சுய அதிகார நிலையை இழந்து பேரரசுகளின் அங்கங்களாக மாற நேர்ந்தது. அதிகார நிலையில் நிகழ்ந்த இந்த மாற்றம் சமுதாயப் பண்பாட்டு நிலையில் மாற்றங்கள் நிகழவும் வழிகோலியது.

சமூகத்தின் மேற்கட்டுமானமாகிய இந்தச் சமூக, பண்பாட்டு நிலை என்பது மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளானது. பேரரசுகளால் வென்றெடுக்கப்பட்ட இனக்குழுப் பிரதேசங்களில் சமய நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் போன்றவை மையப் பேரரசின் பொதுவான நிலைக்கு ஏற்ற இயைபுபெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனூடாக பல புதிய சிந்தனைகளும் தத்துவார்த்த மோதல்களும் உருவாகின.

இந்த நிலையில் பௌத்தம், சமணம், வேதமரபு, ஆரீவகம் போன்ற சிந்தனைகளையும் தத்துவங்களையும் பேணி நின்றோருக்கு அதனைப் பெருந்திரளான மக்களுக்கு ஏற்றதாக ஜனரஞ்சகப்படுத்த வேண்டிய தேவை முன்னெழுந்தது.
அந்தந்த இனக்குழுக்களின் தொழில்முறைகள், பண்பாடு என்பன வர்ணப் பாகுபாட்டுடன் பொருத்தப்பட்டன. சிறிய தெய்வங்கள் வேத மரபின் தெய்வங்களுடனும் வழிபாட்டு முறையுடனும் பிராமண அறிஞர்களால் பொருத்தப்பட்டன. இந்துக் கடவுளான சிவன் சாம்ராஜ்ய ஒருமைப்பாட்டின் குறியீடாக்கப்பட்டார்.

லிங்க வழிபாட்டுடன் சிவ வழிபாடும் இணைக்கப்பட்டது. இந்திய இலங்கையின் பூர்வீக வழிபாடான நாக வழிபாட்டின் குறியீடாக கழுத்தில் நாகம் சுற்றப்பட்டது. புராதன மண்டை ஓட்டு வழிபாடு என்பது குறிக்கப்படுகின்றது.

வேத மரபுக் கதைகள் சிறிய தெய்வங்களை ஒருங்கிணைத்தன. சிவன்- வடக்கு, பார்வதி – வங்காளம், முருகன்- தமிழகம், என்பன பொதுவாக எல்லாத் தெய்வங்களுக்கும் ஒருங்கிணைக்கப்பட்டன.

குறுநிலக் கடவுள் வழிபாட்டு முறையும் அமைப்பு மயப்படுத்தப்பட்டது. பாலைக் கடவுளான கொற்றவை பார்வதியாகவும், குறிஞ்சிக் கடவுளான முருகன் கார்த்திகேயனாகவும் முல்லைக் கடவுளான மாயோன் விஷ்ணுவாகவும் , மருதக் கடவுளான வேந்தன் இந்திரனாகவும், நெய்தல் கடவுளான கடலோன் வருணனாகவும் சித்திரிக்கப்பட்டனர்.

நிலப்பிரபுத்துவ எழுச்சிச் சூழலுக்கேற்ப வேத மரபின் அடிப்படையாகக் கொண்டெழுந்த சமுதாய மாற்றம், பெருந்திரளான மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. உபநிடதக் காலத்தில் கூறப்பட்ட பிரமம் தியானம் என்பனவும் ஆத்மா ஒழுக்கநெறிகள் போன்றவையும் இதிகாச கால தெய்வ நம்பிக்கைக்கேற்ப தெளிவுபடுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. சாம்ராஜ்யங்களின் விரிவாக்கத்தால் சீரழிந்துபோன உள்நாட்டு சமூகக் கட்டமைப்பை சீர்செய்யவும் மக்கள் மத்தியில் எழுந்த சமூக மாற்றத்தினால் எற்பட்ட சீரழிவையும் குழப்பத்தையும் சீர்செய்யவும் ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையை வலியுறுத்தவும் ஏற்கெனவே உருவாகி வளர்ந்த வர்ணாச்சிரம ஒழுங்கு முறையை கட்டிக்காக்கவும் தெய்வ நம்பிக்கையுடன் கூடியதொரு தத்துவ விளக்கம் தேவைப்பட்டது. இந்தத் தேவையின் பொருட்டே கீதை என்ற பின் தங்கிய கோட்பாட்டு நூல் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டது.

வட இந்திய நிலப்பிரபுத்துவம் மேற்கு நாடுகளுடன் ஒப்பிடும் போது வளர்ச்சி குன்றிய மாறா நிலையில் காணப்பட்டதன் அடிப்படைக் காரணம் இந்துதுவம் என்பதாகியது.

இந்துத்துவத்தின் இருப்பு என்பது இந்தியா முழுவதையும் பின் தங்கிய நிலையின் இன்று வரை பேண உதவுகிறது. காலனியம் இறுக்கமாகக் காலூன்ற இதுவே பயன்பட்டது. இன்றும் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையை நோக்கி வளர்ச்சியடையத் தடையாக மாறா நிலைத் தன்மையைப் பேணவும் இந்துத்துவா பிரதான காரணமாயிற்று.

சாம்ராஜ்யங்களின் விரிவாக்கத்தின் தொடர்ச்சியாக கலிங்கப்போர் உருவானது. ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் பலிகொள்ளப்பட்டன. அசோகனது சாம்ராஜ்யத்தில் ஒழுங்கு சீர்குலைந்து மக்கள் விரக்திக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. சமாதானத்தைத் தொடர்ந்து சமரசத்தையும் பிரச்சாரம் செய்த புத்தமதக் கொள்கைகளை அசோகனது சாம்ராஜ்யம் முன்நிறுத்தியது.

வட இந்தியாவின் சமூக அமைப்பு முறையும் தென் இந்தியா, இலங்கை போன்றவற்றின் சமூக அமைப்பு முறையும் அதன் மேற்கட்டுமானத்தின் வித்தியாசங்களைக் கொண்டிருந்தன.

திருக்குறள் என்ற திருவள்ளுவர் என்பவரால் எழுதப்பட்ட இருவரிக் கவிதைகளைக் கொண்ட தத்துவநூல், கீதையின் சமகால நூலாகக் கருதப்படுவதுண்டு. தமிழர் வரரலாற்றின் ஆரம்பகாலச் சின்னமாகக் கருதப்;படும் இந்நூல் உருவான காலம் என்பதும் தென் இந்தியாவில் நிலப்பிரபுத்துவ எழுச்சிக் காலமேயாகும்.

அந்நியப் படையெடுப்புக்களாலும் பெருந்தொகையான அடிமைக் காலாச்சார அமைப்பு முறைகளாலும் தொடர்ச்சியான போர்களாலும் வன்முறை ஆதிக்கம் வட இந்தியப் பகுதிகளில் அதிகரிக்க, தென் இந்தியாவில் இந்த நிலை சற்று மாறுபட்டதாக இருந்தது. அன்பிணைந்திணை என்ற தூய அறவொழுக்கம் அந்தச் சமூகத்தில் போற்றப்பட்டது. இலக்கியத் துறையில் ‘செவியறிவூறு’ என்ற ஒரு துறை ஆளும் வர்க்கத்தைத் தொடர்ச்சியாகக் கண்டித்து நெறிப்படுத்துவதைக் கடமையாகக் கொண்டிருந்ததைச் சுட்டிக்காட்டும் சமூகவியலாளர்கள் பலர் தென் இந்தியாவிலிருந்த ஜனநாயக அமைப்பினைத் தமது ஆய்வுகளின் கருத்தில் கொள்கின்றனர்.

இனக்குழு அமைப்பு முறையும் தோல்வியடைந்த இனக் குழுக்களை அடிமைகளாகப் பாவித்த அமைப்புமுறையும் தகர்ந்து நிலவுடமைச் சமூகம் உருவாகிக் கொண்டிருந்த இந்தக் காலகட்டத்தில் மதம் தொடர்பான உணர்வுகள் நிலவின என்றாலும் வடக்கின் பண்பாட்டுக் கூறுகள் தென்னிந்தியாவில் ஊடுருவியிருந்தாலும் அவை பொதுவான சமூகத்தில் முதன்மைப்பட்டிருக்கவில்லை. கீதை உருவான அதே காலகட்டத்திலேயே எந்த மதக் குழுவையும் சாராத திருக்குறள் உருவானது என்ற வரலாற்றாதாரம் தென் இந்தியாவில் இந்து மத வேதக் கலாச்சார மரபின் ஊடுருவல், சமுதாயத்தின் சகல மட்டங்களிலும் ஊடுருவி இருக்கவில்லை என்பதைக்காட்டி நிற்கின்றது. இறுக்கமான கட்டுக்கோப்புகளற்ற இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த திறந்த சமூக அமைப்பு முறையே நிலவிற்று. தமிழ்ச் சங்கங்களின் நெறிப்படுத்தலால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஜனநாயகம் ஆளுமை செய்தது.

இந்த மரபின் தொடர்ச்சியானது நிலப்பிரபுத்துவ எழுச்சிக்காலப் போர்களின் கொடுமையைத் தணிப்பதிலும் கணிசமான பங்கினை வகித்திருந்தது.
நிலப்பிரபுத்துவ எழுச்சிக் காலத்தில், கி.பி.2ம் நூற்றாண்டுக்குப் பின்னர் இனக் குழுக்களிடையே மோதல்கள் அதிகரித்தன. சாம்ராஜ்யங்களினதும் பேரரசுகளினதும் உருவாக்கத்தால் அழிவுகள் உச்ச நிலையை அடைந்தன. மருத நிலப்பகுதியை மையமாகக் கொண்ட வேந்தர்குலம் தமிழகத்தில் எழுச்சிபெற்றது. போரில் ஆண்களின் இழப்பினால் பாலியல் ரீதியில் சமூகம் சீரழிந்தது. குடும்ப அமைப்புமுறை உடைந்து சமூகச் சீரழிவு உருவாகிக்கொண்டிருந்தது.

இதனை ஒழுங்குபடுத்தவேண்டிய தேவை அதிகார வர்க்கத்திற்கு அவசியமானது.

இந்தியாவின் மற்றைய பகுதிகளைப் போல்லாது தமிழகத்தினைப் பொறுத்த வரையில் மதம் என்பது சமூகத்தை ஒழுங்குபடுத்தும் கருவியாக முன்னெப்போதுமே இருந்ததில்லை. நிலப்பிரபுத்துவ எழுச்சியின்போது ஏற்பட்ட மத அமைப்பிற்கான சமூகத்தேவையை நிறைவுசெய்யவேண்டிய நிலையில் இந்து மதமும் பௌத்த மதமும் வேர்விடத் தொடங்கின.
ஏற்கெனவே இருந்த சமூகச் சீரழிவுகள் ஒரு புறத்தில் துன்பியல் நிறைந்ததாகவும் மறுபுறத்தில் இறுக்கமான சமூகக் கட்டமைப்பைக் கோரி நிற்பதாகவும் இதில் பௌத்தமதம் என்பது வாழ்க்கையைத் துன்பியல் நிறைந்ததாகவும், அதிலிருந்து விடுதலையைத் தேடுவதற்கான தத்துவமாகவும் அமைந்ததால் ஏற்கெனவே இருந்த சமூகச் சீரழிவுகளின் தாக்கத்தாலும், மற்றைய மதங்களின் ஆதிக்கமின்மையாலும், அதனூடாக ஏற்பட்ட மதத்தின் தேவையினாலும் தென்னிந்தியாவிலும் அதன் தொடர்ச்சியாக இலங்கையிலும் பௌத்த மதமும் சமணமும் பரவத்தொடங்கின.

புத்த மதம் கி.பி.3ம் நூற்றாண்டிலேயே தமிழகத்திற்குள் அறிமுகமாகி இருந்தமையை பிராமிக் கல்வெட்டுக்களின் ஆதாரமும், அகநானூறின் பாடல்களும் கூறுகின்றன. அசோகனால் தர்மவிஜயத் தூதுக்குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டபோதே தென்னிந்தியாவிற்கும் அனுப்பப்பட்டிருந்தது.
இதே நேரத்தில், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் சமூகத்தை ஒழுங்குபடுத்தும் பிரதான அமைப்புகளாக கோவில்கள் மட்டுமல்லாது ஏனைய சடங்குகளான திருமணம், கர்ப்பம், மகப்பேறு, ஈமைச்சடங்குகள், புதுமனை புகுதல், போன்ற பல்வேறு வைபவங்களும் அமைந்திருந்தன.

பௌத்தமதம் இந்தச் சடங்குகளையும் ஏனைய ஸ்தாபன முறைகளான கோவில்கள் போன்றவற்றையும் புறக்கணித்தமையால் பௌத்தமோ சமணமோ மக்களின் வாழ்க்கைமுறையின் அடிநிலைவரை சென்று நிலைத்திருக்கவில்லை. எனினும், திருக்குறள், அகநானூறு போன்ற தத்துவங்கள் பௌத்த சமயக் கொள்கைகளை வலியுறுத்தின.

மணிமேகலை, குண்டலகேசி போன்ற தமிழ்ப் பெரும் காப்பியங்கள் பௌத்த தத்துவத்தை வலியுறுத்துபவையாக அமைந்தது.

இந்திய வரலாற்றை அதன் சமூக மாற்றங்களுடன் பொருத்தி ஆராயும் இந்திய சிந்தனை மரபு என்ற நூலில் கலாநிதி நா.சுப்பிரமணியன், புறநானூற்றின் ஒரு பாடலை பௌத்த அறநூலான தம்மபதத்துடன் ஒப்பிடுகின்றார்.

‘காமே வாயாதி நின்னேவா’ என்ற பாளி மொழி வரிகள், புறநானூறின் ‘நாடா கொன்றோ காடா கொன்றோ’ என்ற பாடலின் மொழிபெயர்ப்பாகவே இருப்பதாகச் சுட்டிக் காட்டுகின்றார்.

இதே சமூகப் பகைப்பலத்தின் அடிப்படையிலிருந்துதான் இலங்கையிலிருந்த தமிழர்கள் மத்தியிலும் பௌத்தமதம் பரவத் தொடங்கியது. இது தவிர, புவியியல் சூழ்நிலை காரணமாக தென்னிந்தியாவின் அரசியல் சமூக மாற்றங்கள் இலங்கையையும் பாதித்தன.

சாம்ராஜ்யங்களை விரிவுபடுத்தலுக்கான யுத்தம் என்பது தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வரை விரிந்துசென்றபோது. இலங்கை மன்னர்கள் அதற்கெதிராகப் போராடவேண்டியவர்களாகவும், மக்கள் தொடர்ச்சியான அழிவுகளைச் சந்திக்க வேண்டியவர்களாகவும் ஆயினர். மறுபுறத்தில் இலங்கையை வெற்றிகொண்ட தென்னிந்திய மன்னர்கள் புவியியல் சூழ்நிலை காரணமாகத் தமது சமராஜ்யங்களைத் தொடர்ச்சியாக நிலைப்படுத்திக்கொள்ள முடியாதிருந்தது. இதனால் இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட மன்னர்களுக்கும் தென்னிந்திய மன்னர்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான போராட்டம் மன்னராட்சிக் காலம் முழுவதும் காணப்பட்டது. இந்தப் போர்களினால் ஏற்பட்ட அநர்த்தங்களினால், மத்தியத்துவப்படுத்தப்பட்ட சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் நிலப்பிரபுத்துவ மறுமலர்ச்சியும் தாமதம் அடைந்ததுடன் சமூகம் துன்பியல் நிறைந்ததாகக் காணப்பட்டது.

இலங்கையைப் போத்துகீசர் ஆக்கிரமிக்கும் வரை நிலப்பிரபுத்துவச் சமூகம் முழுமைபெற்ற ஒன்றாக உருவாகவில்லை.

இந்தியப் படையெடுப்புகளும் இந்திய மன்னர்களின் நிலையற்ற ஆட்சிகளும் இந்திய மன்னர்களுக்கு எதிரான உணர்வினை இலங்கை மக்கள் மத்தியில் தோற்றுவித்தது.

மகாவம்சக் கதைகளில் கூறப்படும் எல்லாளன்-துட்டகைமுனு போரும், இதே அடிப்படையைக் கொண்டதாகவே அமைகின்றது. இந்திய ஆதிக்கத்திற்கெதிரான உணர்வு இலங்கையில் தேரவாத பௌத்தத்தின் பரவலுக்குப் பின்னர் வலுவேற்றியது.
பௌத்தத்தின் செல்வாக்கும் வேதமரபின் தொடர்ச்சியான இந்து மதத்தின் வளர்ச்சியும் காணப்பட்ட இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், நிலவுடமைச் சமூகக் கட்டமைப்பைப் பேணுவதற்கான கலாச்சாரப் பண்பாட்டுக் கட்டமைப்பையும் கருத்தாக்கங்களையும் பௌத்த மதம் தொடர்ச்சியாக நிராகரித்தமையால், பௌத்தத்தின் வளர்ச்சி புராண, இதிகாசங்களின் பரவலுடன் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

கி.பி.3ம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட இந்தப் பிளவு மகாயான பௌத்தம் என்ற பௌத்தமதத்தின் புதிய பிரிவை உருவாக்க, இதன் பழமைவாதிகளான பௌத்தர்கள், தம்மை தேரவாத பௌத்தர்கள் என வரையறுத்துக் கொண்டனர்.

இந்த மகாயான பௌத்தம் என்பது புராண இதிகாசங்களின் தாக்கத்திற்கு உட்பட்டு இறுதியில் கௌதம புத்தர் என்ற மகா மனிதனை, தத்துவாசிரியரை, புரட்சியாளனை இதிகாச-புராண மாயக் கதைகளின் கதாபாத்திரமாக்கியது.

வேத மரபு என்பது முன்னரே குறிப்பிட்டது போன்று, நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை ஒழுங்குபடுத்தப் பயன்பட்டபோது, இனக்குழுக்களை இணைப்பதற்காக, அந்த மக்களின் சடங்குகளையும், தொழில்களையும் கடவுள்களையும்கூட உள்வாங்கிக்கொண்டு இந்து மதத்தின் அங்கங்களாக இணைத்துக்கொண்டது.

பௌத்த தத்துவம் பரவத் தொடங்கியபோது அதன் புரட்சிகரமான தத்துவார்த்தப் பகுதிகளைக் கண்டு பயந்த ஆளும் வர்க்கத்தினரும் அதன் தத்துவகர்த்தாக்களாகவும், நெறியாளர்களாகவும் திகழ்ந்த பிராமணர்களும், கௌதம புத்தரையும் ஒரு புராணக் கதாநாயகனாக உள்வாங்கிக்கொண்டு, நவீன சமூக விஞ்ஞானத்திற்கு ஈடான உபநிடதக் காலத்து பௌத்த தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டனர்.

இந்த மகாயான பௌத்தத்தின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்தது.

கி.பி. 3ம் நூற்றாண்டளவில், நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் தொடக்க காலங்களில் தமிழ்நாட்டில் உருவாகிய மகாயான பௌத்தம் என்ற பிரிவு, கி.பி. 6ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இந்து சமயப் பாதிப்பு மேலோங்கிய சமூகப் பின்னணியில், மச்ச புராணம், பாகவத புராணம் என்பவற்றின் அடிப்படையில் புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என மகாயானம் உள்வாங்கிக்கொண்டது. கி.பி. 7ம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஒன்று இதை உறுதிப்படுத்துகின்றது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்த பௌத்த கோவில்கள் அனைத்தும் விஷ்ணு ஆலயங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

இலங்கையில், கி.பி. 5ம் நூற்றாண்டில், ஐந்து தென்னிந்திய அரசர்களின் தொடர்ச்சியான 27 ஆண்டுக்கால ஆட்சி நிலவியது. இவர்களின் ஆட்சிமுறை நேரடியான மன்னர் ஆட்சி அமைப்பாக இல்லாதிருந்தமையாலும், வரலாற்று, புவியியல் காரணங்களால், தமிழகத்துடன் வேறுபட்டு நின்றதாலும், நிலையற்றிருந்ததாலும், ஏனைய இடங்களின் சாம்ராஜ்ய விரிவாக்கங்களின்போது மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களின்போது வழங்கப்பட்ட தத்துவார்த்த ஒருமைப்படுத்தலை வழங்குவதற்கான சாத்தியப்பாடு இருந்ததில்லை. எதேச்சையான இந்த அதிகாரப் போக்கென்பது நிலப் பிரபுத்துவத்தின் சீரான வளர்ச்சிப் போக்கிற்கும், குழநிலை சமூக அமைப்பிற்கும் இடையில் ஒரு குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. நிர்வாகம் சீர்குலைந்திருந்தது. நிலப்பிரபுத்துவ காலம் முழுவதும் இந்தியாவெங்கும் இருந்த பிராமண ஆதிக்கம் இலங்கையில் இன்றுவரை இல்லாதிருந்ததும் இதன் தொடர்ச்சியேயாகும். இந்த நிலையில் பௌத்த தத்துவம் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்ற ஆரம்பித்தது.

கி.பி. 6ம் நூற்றாண்டில் உருவான இந்தச் சமூகப் பகைப்பலத்தின் பின்னணியில், இதே காலப்பகுதியில் 5ஆவது தென்னிந்திய மன்னனைத் தோற்கடித்த தாதுசேனனின் மாமாவான மகாநாம தேரவால் மகாவம்சம் எழுதப்பட்டது.

இந்து தத்துவத்தின் அமைப்புமயப்படுத்தப்பட்ட ஆதிக்கம் இல்லாத நிலையில், மக்கள் மத்தியில் பௌத்தம் பரவியிருந்த நிலையில், தென்னிந்தியப் படையெடுப்பின் ஒரு பகுதியாக, அடையாளமாக தென்னிந்தியாவில் உருவான மகாயான பௌத்தம் முன்னிறுத்தப்பட்டது.

இந்த முரண்பாட்டின் அடிப்படையிலிருந்துதான் இந்திய சாம்ராஜ்ய விரிவாக்கலில் இருந்து இலங்கை தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முற்பட்டது.

இந்நிலையில் உருவான தேரவாத, மகாயான பௌத்த பிரிவுகள் என்பன சிங்கள மொழியின் உருவாக்கத்திற்கும் காரணமாக அமைந்திருந்ததுடன், தமிழ் மொழி என்பது மகாயான பௌத்தத்தின் ஊடகமாகக் கருதப்பட வழிவகுத்ததுடன் இந்த முரண்பாட்டை பிற்காலத்தில் பிரித்தானியர்கள் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தி இலங்கை என்ற அழகிய நாட்டை இரத்தத்தால் குளிப்பாட்டவும் வழிவகுத்தது.

இவ்வாறு 6ம் நூற்றாண்டில் உருவான இரு பௌத்தப் பிரிவுகளுக்குப் பின்னர், இலங்கையில் நிலப்பிரபுத்துவ வளர்ச்சியின் காலகட்டம் பெரும்பகுதியும் இந்து மதத்தால் உள்வாங்கப்பட்ட பௌத்தத்திற்கும், பௌத்த மதத்திற்கும் எதிரான போராட்டமாகவே அமைந்தது.
6ம் நூற்றாண்டில் உருவான புராண இதிகாசங்களின் பாணியிலான மகாவம்சம், 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட அதிகாரப் போராட்டங்களை, இதிகாசங்களையும் புராணங்களையும் போலவே மக்கள்மயப்படுத்த முற்பட்டது. இதன் ஒரு வடிவமே எல்லாளச் சோழனுக்கும் துட்டகாமினிக்கும் இடையில் நடந்த போராட்டம் தொடர்பான மகாவம்சத்தின் விவரணையாகும்.

உலகத்தில் எந்த நாட்டிலும், நிலப்பிரபுத்துவ காலகட்ட முரண்பாடு என்பது மொழிகளுக்கு இடையேயான முரண்பாடாக இருந்ததில்லை. மன்னர்களுக்கும் இராசதானிகளுக்கும் இடையிலான முரண்பாடாகவே அமைந்திருந்தது. மன்னர்களும் இராசதானிகளும் சாம்ராஜ்யங்களும் மாறும்போது நாட்டின் எல்லை சுருங்கியும் விரிந்தும் வேறுபட்ட மொழிகளையும் பண்பாடு, கலாச்சாரங்களையும் கொண்ட மக்களையும் இராசதானி என்ற சங்கிலிக்குள் இணைத்தது. நிலப்பிரபுத்துவம் வலுப்பெற அதனை மேலும் நிலைநிறுத்தும் கருவியாக மதங்கள் உருவாகின. இந்த மதங்கள் மட்டுமே மக்களிடையே வேறுபாடுகளை உருவாக்கின. மன்னராட்சியின் கீழ்மட்ட அமைப்பு வடிவங்களாக மதங்கள் மாறுதலடைந்தபோது சாம்ராஜ்யங்களிடையேயான முரண்பாடு மதங்களிடையேயான முரண்பாடாகவும் உருவகப்படுத்தப்பட்டது. இதன் ஒரு வடிவமாகவே கிறிஸ்தவத்திற்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையேயான முரண்பாடு இரு வேறுபட்ட சாம்ராஜ்யங்களுக்கு இடையேயான முரண்பாடாகச் சித்திரிக்கப்பட்டது.

இருப்பினும், ஒரு மன்னன் இன்னொரு மன்னனை வெற்றிகொண்டு, தனது ராஜ்யத்தை நிலைநிறுத்திக்கொள்ளும்போது, மக்களும் அந்த ராசதானிக்குள் தம்மை இணைத்துக்கொண்டனர்.
இதே காரணங்களால், தமிழ்-சிங்கள முரண்பாடு என்பது 19ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட வரலாற்றுக்காலப் பகுதியில் எப்போதுமே பிரதான முரண்பாடாகவோ அடிப்படை முரண்பாடாகவோ இருந்ததில்லை. மாறாக மக்களிடையேயான முரண்பாடென்பது ராசதானிகளுக்கும் மன்னர்களுக்கும் இடையிலான முரண்பாடாகவும் இதன் தொடர்ச்சியாக மதங்களிடையேயான முரண்பாடாகவுமே அமைந்திருந்தது.

மூன்றாம் உலக நாடுகள் பற்றியதும் குறிப்பாக இலங்கை பற்றியதுமான நவீன வரலாறு என்பது 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே எழுதப்பட்டது.

பெரும்பாலான வரலாற்றாசிரியர்களும், சமூகவியலாளர்களும் பிரித்தானிய அல்லது ஆதிக்க நாடுகளின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாகவே இருந்தனர். பிரித்தானியர்களின் ஒரே நோக்கம் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதாகவே இருந்தது. இதனால் சமூகவியலாளர்களும் வரலாற்றாசிரியர்களும் நாடுகளின் வரலாற்றுப்போக்குத் தொடர்பான சரியான பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமல்லாது, பிரித்தானிய ஏகாதிபத்திய ஆதரவு அறிவுஜீவிகளினாலும் அதன் கல்வி மற்றும் ஆய்வுமுறையாலும் காலனி ஆதிக்க நலன்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளையும், தத்துவங்களையுமே தமது ஆய்வகளின் ஆதாரமாகக் கொண்டிருந்தனர்.

இதன் அடிப்படையிலிருந்தே 6ம் நூற்றாண்டின் சமூகப் பகைப்புலத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட மகாவம்சம், பிரித்தானிய ஆட்சியாளர்களால் பாளி மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு இந்த இரு இனங்களுக்கும் இடையேயான முரண்பாடு கூர்மைப்படுத்தப்பட்டபோது இதற்கெதிரான கருத்தாக்கங்கள் எழுந்திருக்கவில்லை.

ஆனால் இந்த மகாவம்சம் என்பது சிங்கள மக்கள் மத்தியில் அடிப்படைவாதக் கருத்தை உருவாக்குவதற்கும் பௌத்த அடிப்படைவாதப் பாணியிலான விகாரைகளை ஆதாரமாகக் கொண்டு இனவாத அரசியலை வளர்த்து நாட்டைக் குட்டிச்சுவராக்குவதற்கும் அடிப்படைக் காரணமாக அமைந்தது.

இலங்கை கறுவா விளையும் நாடாகையால், கறுவாவின் சமஸ்கிருதப் பெயரான சிங்கலெ என்பதே சிங்களமாக மருவியிருப்பதாகப் பொதுவாகப் பல நவீன வரலாற்றாசிரியர்கள் ஒத்துக்கொள்ளும்போது, சிறீ லங்கா பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்து அரச ஆய்வாளர்கள்வரை மகாவம்சத்தின் மாயாவிக் கதைகளை ஆதாரம்காட்டி, சிங்கத்தின் வம்சாவளியினரே சிங்களவர் எனக் குறிப்பிடும் அளவிற்கு இந்த அடிப்படைவாதம் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பௌத்த அடிப்படைவாதமும், அதனால் எழுந்த தமிழ்த் தேசிய வெறியும் மொத்த நாட்டையும் சீரழித்துக்கொண்டிருக்கும் இன்றைய நிலைக்கும், ஆரம்பகால பௌத்த மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.

இலங்கையில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில், தென்னிந்தியாவின் காஞ்சிபுரம் என்ற நகரமே பௌத்த பள்ளிகளின் மத்தியபீடமாக அமைந்திருந்தது. தென்னிந்தியத் தமிழ் மதகுருக்களான தர்மபால தேரர், தர்மதேவர், திக்குநாகர் போன்றோர் வட இந்தியாவில் நாலந்த பல்கலைக்கழகத்திற் கற்பித்தனர்.

இலங்கை முழுவதும் பரவியிருந்த பௌத்தம் வட இலங்கையிலும் பரவி வலுப்பெற்றிருந்ததற்;கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. கி.மு.3ம் நூற்றாண்டிற்கான வடபகுதியிலுள்ள கந்தரோடை என்னுமிடத்தில் கிடைக்கப்பெற்றுள்ள பிரமி எழுத்துச் சாசனங்களும், பௌத்த சின்னங்களும், இப்பகுதிகளில் பௌத்தமதம் நிலைகொண்டிருந்ததற்கான ஆதாரங்களாகக் காணப்படுகின்றன.

இதே காலப்பகுதியில் இலங்கையின் வடபகுதியில் உள்ள வல்லிபுரத்தில் கிடைக்கப்பெற்றிருக்கும் தொல்லியல் ஆய்வுகளும் பௌத்தத்தின் இருப்பை நிர்ணயிக்கின்றன.

இதே காலப்பகுதியில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் பரந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்களாகப் பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று அனுராதபுரத்தில் உள்ள Tamil House Holders terrace inscription ஆகும்.

இதுபோன்று வேறுபட்ட ஆதாரங்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பௌத்த மதம் பரவியிருந்ததையும் அதே நேரத்தில் தமிழ் மொழி பேசப்பட்டதையும் நிரூபிக்கின்றன. தவிர, 6ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் சிங்கள மொழி பேசப்பட்டதற்;கான எந்த நம்பகரமான வரலாற்றாதாரங்களும் காணப்படவில்லை.

மேலும் இலங்கையில் இயக்கர்கள், நாகர்கள், என்ற இரு குழுக்கள் இருந்ததாகவும், இயக்கர்கள் எலு மொழியையும் நாகர்கள் தமிழையும் பேசியதாகவும் எலு மொழி பாளியுடன் கலந்து சிங்கள மொழியாக மாறியதாகவும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் எலு, பாளியுடன் கலந்ததற்கும் அது சிங்களமாகப் பரிணாமம் அடைந்ததற்;கும் எந்தவொரு தர்க்கரீதியான வரலாற்று ஆதாரங்களும் காணப்படவில்லை.

முன்னரே குறிப்பிட்டது போல, தென்னிந்தியாவில் 6ம் நூற்றாண்டில் எழுந்த புராண காலத்து பௌத்த இந்து முரண்பாடுகளுடாக உள்வாங்கப்பட்ட மகாயான பௌத்தம் கி.பி. 3ம் நூற்றாண்டளவிலேயே இலங்கையிலும் பிரிவினைகளை ஏற்படுத்தியிருந்த போதிலும் அதன் முரண்பாடு 6ம் நூற்றாண்டிலேயே உச்சநிலையை அடைந்திருந்ததாக மகாவம்சம் காட்டிநிற்கின்றது.

முதன்முதலில் கி.பி. 3ம் நூற்றாண்டளவில் மகாயான பௌத்தம் அரச அளவில் இலங்கையில் பரப்பப்பட்டது. தென்னிந்தியாவைச் சேர்ந்த சங்கமித்தர் என்ற தமிழ் பௌத்த துறவியொருவர் இலங்கை அரசனான மகாசேனனை 3ம் நூற்றாண்டின் இறுதியில் வட இலங்கைத் துறைமுகத்தில் சந்தித்து மகாயான பௌத்தத்திற்கு அவனை மாற்றினார்.

பௌத்த கொள்கைகள் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டபோது, (கி.மு.221-கி.மு.207) புத்த சமயத்தைப் போதிக்கும் பீடங்களாக இருந்தவை, அனுராதபுரத்தில் இருந்த மகா விகாரையும், அபயகிரி விகாரையுமாகும். மகாவிகாரையில் பாளி மொழியிலும், அபயகிரி விகாரையில் தமிழ் மொழியிலும் பௌத்த மதம் போதிக்கப்பட்டது. சிங்கள மொழியில் பௌத்தமதம் போதிக்கப்பட்டதற்கான ஆதாரமோ, சிங்கள மொழியின் மறுபாகமாகக் கருதப்படும் எலு மொழியில் பௌத்த கொள்கைகள் பரப்பப்பட்டதற்கான ஆதாரங்களோ இல்லை.

தமிழ் நாட்டில் பௌத்தமதம் தமிழிலேயே போதிக்கப்பட்டதால், அபயகிரி விகாரை மகாயான பௌத்தத்தின் தாக்கத்துக்குட்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த மகாயான பௌத்தம் என்பது தமிழில் போதிக்கப்படும் பௌத்தம் என்ற கருத்தும் வளரத் தொடங்க, தேரவாத பௌத்தம் பாளி மொழியினூடாக விரிவடையத் தொடங்கியது.
,தென்னிந்தியாவின் தொடர்ச்சியான நிலையற்ற படையெடுப்புகளுக்கு எதிரான தத்துவார்த்த வடிவமாக தேரவாத பௌத்தம் மாறத் தொடங்கியது.

பௌத்த பிரிவுகளுக்கிடையிலான முரண்பாடுகள் விரிவடையத் தொடங்க, தேரவாத பௌத்தத்தைப் பாதுகாத்துக்கொள்ள அது இலங்கையில் உருவாகிய நிலப்பிரபுத்துவ அதிகார சக்திகளின் ஆதரவுடன் பாளி மொழியூடாக கிராமங்கள் தோறும் பரவியது. பிற்காலத்தில் பாளி மொழிக் கலப்பினூடாக தமிழ்மொழி சிங்கள மொழியாக மாறியது என்ற வாதம் இதனால்தான் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

தமிழ் மொழியில், வேத தத்துவ பரவலூடான சமஸ்கிருத கலப்பிலிருந்து, கன்னடம், துளு முதலிய மொழிகள் உருவானது போன்று பாளி மொழியின் நேரடிக் கலப்பால் உருவானதுதான் சிங்கள மொழி என்பதற்கு சிங்கள மொழியின் இலக்கண அமைப்புமுறை திராவிட மொழிகளை ஒத்திருப்பது இன்னொரு காரணம் என மொழியியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மறுபுறத்தில் தொடர்ச்சியான தென்னிந்தியப் படையெடுப்பினூடாக வடபகுதியில் தமிழும் இந்து மதமும் நிலைபெற்றுக்கொண்டது. ஒரு புறத்தில் பலம்மிக்க தென்னிந்தியப் படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கை இராசதானிகள் அனுராதபுரம், பொலந்நறுவை, தம்பதெனியா எனத் தெற்குநோக்கி நகர்ந்து தம்மை வலுப்படுத்திக்கொள்ள முடிந்தது.

கி.பி. 6ம் நூற்றாண்டுவரை சிங்களம் என்ற மொழி பேசப்பட்டதற்கான ஆதாரம் எங்கும் காணப்படவில்லை.

பிற்காலப் பகுதியில், தென்னிந்தியப் பகுதியில் இருந்தும் பொதுவாக தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்தும், மலாய் குடியேற்றங்களும், சிங்கள இனத்துடன் இணைந்தன. தவிர ஒல்லாந்தர் போர்த்துக்கேயரின் கலப்பினூடாகவும் சிங்கள தேசிய இனம் உருவானதாக வரலாறு குறிப்பிடுகின்றது.

12ம் நூற்றாண்டுக் காலப் பகுதிவரை தமிழ்-சிங்களம் என்ற மொழி ரீதியான முரண்பாடு இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்களை யாரும் குறிப்பிட்டதில்லை.

17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்ட Robert Knox என்ற ஆங்கிலேயர், அங்கிருந்து தப்பி வடக்கு நோக்கிச்சென்றபோது அனுராதபுரத்தை அடைந்தார். பின்னர் 1681இல Historical Relation of the Island of Ceylon என்ற நூலை அவர் வெளியிட்டார். இந்த நூலில், அனுராதபுரத்தை அடைந்த Robert Knox அந்த மக்களுக்குச் சிங்களம் விளங்

Robert Knox

கவில்லை என்றும், அவர்கள் தலைவனிடம் தான் கூட்டிச்செல்லப்பட்டபோது, அவனுடன் உரையாடுவதற்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவி தேவைப்பட்டது என்றும் அங்கிருந்தவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் எழுதியிருந்தார்.

இலங்கையில் பௌத்த மதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் அனுராதபுரத்திலேயே சிங்களமொழி பரந்தளவில் பேசப்படாது இருந்திருக்குமானால், இந்த மொழியின் பரந்துபட்ட வளர்ச்சி என்பது மிகவும் அண்மைக் காலத்துக்குரியது என்று புலனாகின்றது.

எது எவ்வாறாயினும், இன்று சிங்கள தேசிய இனம் பரந்து வாழும் நிலப்பரப்பு தேசிய இனத்தின் பாரம்பரிய நிலப்பரப்பேயாகும். அவ்வாறே தமிழ்த் தேசிய இனத்தின் நிலப்பரப்பு அவர்கள் பரந்து வாழும் பிரதேசங்களேயாகும். இந்தக் கட்டுரையின் நோக்கம் நிலப் பிரிப்பு அல்ல. வரலாற்று ரீதியாக தமிழ்-சிங்களம் என்ற மொழிப்பிரச்சினையோ, தமிழ் பௌத்தர்கள்-சிங்கள பௌத்தர்கள் என்ற பகையோ இருந்திருக்கவில்லை என்பதை நிறுவுவதே. நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கே உரித்தான மதங்களிடையேயான முரண்பாடு என்பது பிற்காலத்தில், பிரித்தானிய காலனி ஆதிக்கவாதிகளின் சொந்த நலனுக்காக தந்திரமான முறையில் தூண்டிவிடப்பட்ட து. இன்று பெருந்தேசிய இனத்தின் அதிகாரவர்க்கம் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் அழிவின் ஊடாகவே தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் அரசியலைக் கொண்டுள்ளது. பிரித்தானியக் காலனியாதிக்க அரசால் கற்பிக்கப்பட்ட இந்த அரசியலுக்கு எதிரான போராட்டம் எனபது தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டமாகவே அமைய முடியும். வரலாறு முழுவதும் சிங்கள் அதிகாரவர்க்கத்தால் ஏமாற்றப்பட்டுவரும் சிங்கள அப்பாவி மக்களின் ஒரு பகுதியினரின் ஆதரவுடனேயே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை வெற்றிகொள்ள முடியும்.

Exit mobile version