Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கலைஞர் கருணாநிதி கொல்லப்படுவது இப்போதல்ல(பகுதி2): சபா நாவலன்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியின் மறைவும் அதன் பின்னான வாதப் பிரதிவாதங்களும் இன்றைய “தேசியவாதம்” தொடர்பான புதிய கேள்விகளை முன்வைக்கிறது. அவரின் இறப்பு “தமிழ்த் தேசியம் என்று அழைக்கப்படுகிற ஒரு கோட்பாட்டின் பின்னால் அணிதிரள்கின்ற ஒரு கூட்டத்தின் அரசியலை ஆழமான கேள்விக்கு உட்படுத்துகிறது. தேசியம் என்ற கோட்பாட்டின் சாத்தியம் தொடர்பாகப் அது பல வருடங்கள் பின்னால் சென்று வினவுகிறது.புத்தர் தோன்றிய காலம் என்பது மன்னர்களும் பேரரசுகளும் தோன்றிய காலம்.. நிலங்களை அதிகாரம் செய்பவர்களே சமூகத்தில் அதிகாரம்படைத்திருந்த அக்காலத்தில் இந்துத்துவம் ஆழ வேரூன்றியிருந்தது. புத்தரைக் கடவுளாக மாற்றி அவரைக் கொன்றொழிந்த பின்னர் கருணாநிதி போன்ற பலர் கருத்துரீதியாகக் கொலை செய்யப்பட்டிருந்தனர். கருணாநிதி உயிரோடு வாழ்ந்த காலம் முழுவதும் அவர் கருத்தியல்ரீதியில் கொலைசெய்யப்படாமலிருப்பதற்காக பல்வேறு சமரசங்களுக்கு உட்பட்டார். பலர் பண முதலைகளானதைக் தனது கண்முன்னே கண்டும் காணாமலிருந்ததிலிருந்து வன்னிப் படுகொலைகளின் போதான மவுனம் வரைக்கும் அந்த சமரசம் விரிவடைந்தது.

இந்த நிலையில் இந்திய மற்றும் ஆசிய சமூகத்தில் ‘தேசியம்’ என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது.

முதலில் தேசியம் என்பது மன்னர்களின் காலத்திற்கான ஒரு தத்துவம் அல்ல என்பதில் இடதுசாரி வலதுசாரி என்ற பேதங்களைக் கடந்து அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.( அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ராஜராஜ சோழனே தனது தேசிய முப்பாட்டன் என்று சீமானின் விசில்கள் சொன்னால் நான் அதற்குப் பொறுப்பல்ல). தேசியம் என்பது முதலாளித்துவக் காலத்திற்குரியது. முதலாளித்துவம் தோன்றும் போதே தேசங்களும், அவற்றின் கோட்பாட்டு வடிவமான தேசியமும் உருவாகும்.

அப்படித்தான் உலகம் முழுவதும் தேசங்களும் தேசியமும் தோன்றியிருக்கின்றன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் முதலாளித்துவம் தோன்றுவதற்குரிய சூழல் இருந்தாலும் அது முழுமையான வளர்ச்சி பெறுவதில்லை. முதலாளித்துவம் வளர்ச்சி பெறு இயலாத சூழலில் தேசியம் என்பது அதன் முழுமையான உள்ளர்த்ததில் இல்லாமல், வெறுமனே மதம், மொழி போன்றவற்றை முன்வைத்து உணர்ச்சி அரசியலுக்கான பயன்பாடாகவே முடிந்து போகிறது.

இந்தியாவில் தேசங்கள் அதாவது முதலாளித்துவம் தோன்ற இயலாத சூழல் காணப்படுவதாக 1873 ஆம் ஆண்டு இந்தியாவில் காலடிபதிக்காத கார்ல் மார்க்ஸ் கூறிய அதே காரணங்கள் இன்னும் அப்படியே காணப்படுகின்றன. ஆசிய உற்பத்தி முறை (AMP) என்று இந்திய பொருளுற்பத்தி முறையைக் குறிப்பிடும் கார்ல் மார்க்ஸ், அங்கு அரசியல் அமைப்பிலிருந்து தனித்துவமான, பொதுவான விதிவிலக்குப் பெற்ற சமூக உறுப்பினர்களிடையேயான ஒழுங்கமைப்பு “மாறாத” தன்மைக்குக் காராணமான உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

இந்த மாறா நிலைக்கு, அதாவது வளர்ச்சியற்ற நிலைக்கு காரணம் இந்திய சாதீய அமைப்பும் அதன் தத்துவார்த்த மேல் பகுதியாக அமைந்திருக்கும் இந்துமதமுமே என்பது வெளிப்படையானது. இந்தியாவில்,(அது வேவ்வேறு தேசங்களின் கூட்டாக இருந்தால் கூட) முதலாளித்துவம் தோன்ற வேண்டுமானால் சாதீய அமைப்பும் அதனை தாங்கிப் பிடித்திருக்கும் இந்துத்துவமும் அழிவிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது முன் நிபந்தனை.
அதனைக் கடந்து செல்லாமால், முதலாளித்துவமும் தேசியமும், தேசங்களின் உருவாக்கமும் சாத்தியமற்றது என்பது கார்ல் மார்க்ஸ் அவதானித்த காலத்தில் மட்டுமன்றி இன்று வரை வெளிப்படையானதாகவே காணப்படுகிறது.

ஆசிய உற்பத்தி முறை தொடர்பான முழுமையான புரிதலின்றி இந்தியா போன்ற நாடுகளில் சோசலிசப் புரட்சி மட்டுமன்றி முதலாளித்துவப் புரட்சி கூடச் சாத்தியமற்றது என்பது வெளிப்படை.

இந்த வகையில் முதலாளித்துவம் சார்ந்து சாதீய நிலப்பிரபுத்துவ அமைப்பை எதிர்த்தவர்கள் என்ற பட்டியலில் பெரியார், அம்பேத்கர் என்ற வரிசையில் கருணாநிதியைக் குறிப்பிடலாம். கருணாநிதியின் சுருக்கமான வரலாற்றுப் பாத்திரம் இதுதான்.

இரண்டாயிரம் வருடங்களாக நடத்தப்பட்ட போராட்டத்தின் நமது காலத்தின் குறியீடாகக் கூட கருணாநிதியைக் குறிப்பிடலாம்.

எம்மைப் பொறுத்தவரைக்கும் இதே போராட்டம் மார்க்சிய லெனினிய தளத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முரண்பட்டாலும் கலைஞர் கருணாநிதியின் வரலாற்றுப் பாத்திரம் கோடிட்டுக் காட்டப்பட வேண்டும்.

இந்தியாவில் முதலாளித்துவப் புரட்சிக்கான அடிப்படையை கலைஞர்,பெரியார்,அம்பேத்கர் போன்றவர்கள் உருவாக்க முயன்றனர். ஆக, தேசியம், தேசங்களின் தோற்றம் ஆகிய கருத்துருவாக்கத்திற்கு இவர்களின் பங்களிப்பைக் கடந்து செல்ல முடியாது. இந்த வகையில் தமிழ் நாடு என்ற இன்னும் முழுமை பெறாத தேசத்தின் உருவாக்கத்தில் கலைஞரின் பங்கு அவரின் மரணத்தின் பின்னர் தேசியத்திற்கு எதிரான நிலப்பிரபுத்துவப் பிற்போக்கு வாதிகளை இனம் காட்டியிருக்கிறது என்பது சிறப்பு.

கலைஞர் கருணாநிதி என்ற தனி மனிதனாகட்டும் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களாகட்டும் சாதீய ஒழிப்பு இந்துத்துவ எதிர்ப்பு என்ற வரையறைகளுக்கு அப்பால் எந்தக் குறித்த கோட்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. இந்த மூவருமே ஆளும் வர்க்கத்தையும் அதிகாரவர்க்கத்தையும் பயன்படுத்தி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முனைந்தார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

காமராஜரையும் கருணாநிதியையும் ஆட்சியில் அமர்த்துவதன் ஊடாக தமது சமூக நீதி நோக்கங்களைச் சாதிக்க முயன்று பெரியார் வெற்றிகண்டுள்ளார். இந்திய அரசியலமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் அம்பேத்கார் வெற்றிகண்டார். அதே போல கருணாநிதியும் பல்வேறு வெற்றிகளைச் சேர்த்துவைத்துவிட்டுச் சென்றுள்ளார். பிரித்தானிய காலனியாதிக்க அரசு ஒட்டவைத்த ஜனநாயகத்தை சீர்திருத்தி முழுமையான நிலப்பிரபுத்துவத் தளைகளற்றை இந்துத்துவா தலையீடற்ற முதலாளித்துவ ஜனநாயகமாக மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் சீர்திருத்தவாதக் கொள்கையாக அமைந்திருந்தது. இச் சீர்திருத்தவாதம் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தியிருக்கிறது என்பதைப் புரட்சிகர சக்திகளே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

சீர்திருத்தவாதம் புரட்சிக்கு எதிரானது தான். இந்திய உற்பத்தை முறையின் நிலையான தன்மைக்கு எதிரான சீர்திருத்தவாதம் என்பது வேறுபட்டது. அது புரட்சிக்கான புறச் சூழலை ஏற்படுத்தவல்லது. இந்த வெளிச்சத்தில் தான் கருணாநிதியின் இறுதிக்காலம் வரையிலான அரசியல் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்,
ஆனால் ஈழப் பிரச்சானை சார்ந்து அவரது அரசியலை மதிப்பீடு செய்பவர்கள் அத்தனை பேருமே, புலி எதிர்ப்பு அல்லது புலி ஆதரவு என்ற அதே பழமைவாத கருத்தியலின் அடிப்படையில் கருணாநிதியை அணி சேர்த்துக்கொள்கிறார்கள்.

புலி ஆதரவு பிற்போக்குவாதிகளதும் பழமை வாதிகளதும் கருணாநிதி எதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் புலி எதிர்ப்பு – அரச ஆதரவுக் கும்பல்கள் கருணாநிதியை எளிதாகத் தமது ஆளாகக் காட்ட முற்படுகிறார்கள். இந்த இரண்டு அணியுமே கருணாநிதியை மதிப்பீடு செய்யத் தவறியவர்கள் மட்டுமன்றி அவரது அரசியலுக்கு எதிரானவர்கள் என்பது தான் உண்மை.

(தொடரும்)

முன்னைய பகுதி:

கருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள்

Exit mobile version