Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மேதினம் – ரமியாவும் ஜோனும் உழைக்கும் மக்களும் : வியாசன்

uniteஉலகத் தொழிலளர்களே ஒன்றுபடுங்கள் -Proletarians of all countries, unite-என்ற முழக்கம் 19ம் நூற்றாண்டிற்கானது. இரண்டு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. தொழிலாளர்கள் தமது வாழ்க்கையை அழித்து உலகைக் கட்டுப்படுத்தும் சில தனி நபர்களுக்காக மட்டுமே உழைக்கிறார்கள் என்ற உண்மைய உணர ஆரம்பித்துள்ளார்கள். உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் சில தனி நபர்கள் உலகத் தொழிலாளர்களை ஒன்றுபட விடாமல் தடுப்பதற்கு தம்மாலன அனைத்தையும் செய்து களைத்துப் போய்விட்டார்கள். இனவாதத்தைத் திணித்து மக்களைக் கூறு போட்டார்கள். நிறவாதிகளை வளர்த்துத் தீனி போட்டார்கள். மத அடிப்படை வாதிகளை அதிகாரத்தில் அமர்த்தினார்கள், ஆதிக்க சாதியினரை அதிகாரத்தில் அமர்த்தி தொழிலாளர்களைச் சாதி அடிப்படையிலும் கூறு போட்டார்கள்.

இன்று உழைக்கும் மக்கள் மீண்டும் உணர ஆரம்பித்துவிட்டார்கள். முதலாளித்துவ நெருக்கடி உழைக்கும் மக்களை ஒட்டச்சுரண்டுவதில் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இந்த நெருக்கடி மேலும் ஆழமாகிக்கொண்டே செல்கிறது.

எட்டு மணி நேர வேலையை என்பதை உழைக்கும் மக்கள் போராடி வென்றெடுத்தார்கள். இன்று கூலித் தொழிலாளியோ அன்றி மத்தியதர வர்க்க உழைப்பாளியோ எட்டுமணி நேர வேலையோடு வாழ்க்கை நடத்த முடியாத நிலை தோன்றியுள்ளது. உழைக்கும் மக்கள் வாழ்வது உழைப்பதற்காக மட்டுமே என்ற நிலை தோன்றி நீண்ட நாளாகிவிட்டது.

முதலாளித்துவம் ஒவ்வொரு நாடுகளிலும் பாசிசமாக வளர்ச்சியடைந்துள்ளது. உழைக்கும் மக்களை ஒன்றிணைய விடாமல் பல்வேறு திட்டங்களை வகுத்திருந்தாலும் இன்று அவர்கள் உணர ஆரம்பித்துவிட்டனர்.

பெங்களூரில் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்யும் எனது நண்பருக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் மட்டுமே ஆகின்றன. வீஎம் வயர் என்ற அமெரிக்க நிறுவனம் இன்று தகவல் தொழில் நுட்ப உலகை ஆளும் நிறுவனங்களில் முக்கியமானது. ஐரோப்பிய நேரப்படி வீஎம் வயர் நிறுவனத்திற்கு அவர் வேலை செய்தாக வேண்டும். இந்தியப் பணத்திற்கு 45 ஆயிரம் ரூபா ஊதியமாகக் கிடைக்கிறது. ரமியாவை விடக் குறைந்த தகமையும் திறமையுமுள்ள ஐரோப்பியர் ஒருவருக்கு 2500 ஸ்ரேலிங் பவுண்ஸ் வரைக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் தொலை பேசி அழைக்கும் போது பெங்களூரிலிருந்து தொழில் நுட்ப உதவி வழங்குவது தான் ரமியாவின் தொழில்.

ரமியா எப்போதும் எட்டு மணி நேர வேலை செய்தது கிடையாது. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 10 தொடக்கம் 12 மணி நேரங்கள் வரை வேலை செய்தாக வேண்டும்.

அவருக்கு வழங்கப்பட குறித்த வேலையை முடிக்காவிட்டால் எந்த நேரத்திலும் வேலையை இழக்கலாம் என்ற அச்சத்தை ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள நிறுவனம் அவருக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிறது. தவிர, சேவையைப் பெற்றுக்கொள்கிறவர்களிடமிருந்து

வாடிக்கையளர்களிடமிருந்து வாராந்தம் பெற்றுக்கொள்ளப்படும் கருத்துக்கணிப்புக்கள் அவருக்குச் சார்பானதாகக் கிடைக்காவிட்டால் மேலதிகாரியால் அழைக்கப்பட்டு மிரட்டப்படுவார்.

அவரது கணவர் மற்றொரு பல்தேசிய நிறுவனத்தில் வேலை செய்கிறார். அமெரிக்க வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்க வேண்டும்.

இருவரும் சந்தித்துக்கொள்வதே அபூர்வம். இரண்டு பேருக்குமாக ஒருலட்சம் இந்திய ரூபா ஊதியமாகக் கிடைக்கிறது. தமது வேலையை நம்பி சொந்த வீடு ஒன்றை வங்கிக்கடனில் வாங்கி விட்டார்கள். தவிர, சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்பட வேண்டுமானால் உடை, உணவு உட்படப் பலவற்றிற்கு அனாவசியமாகச் செலவு செய்யவேண்டியுள்ளது.

வாழ்க்கைகு அத்தியாவசியத் தேவையற்றது எனக் கருதப்படும் பொருட்களை வாங்கிக் குவிப்பதே நாகரீகம் என ஊடகங்களிலிருந்து தெரு விளம்பரங்கள் வரை பிரச்சாரம் செய்து ரம்மியாவையும் கணவரையும் வேறு உலகத்தில் வாழ வைத்திருக்கிறது. இதற்காக அவர்கள் வாழ்க்கை முழுவதும் அடிமையாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைப் பொறுத்தவரை மே தினம் என்பது கேலிக்கூத்துத் தான்.

இப்போது 2500 ஸ்ரேளிங் பவுண்ஸ் பணத்தை ஊதியமாகப் பெற்றுக்கொள்ளும் ஜோன் இன் நிலை ஏதோ மேம்பட்டதல்ல. தனது ஊதியத்தில் 1800 ஸ்ரேளிங் பவுண்சை வீட்டு வாடைகைக்குக் கொடுத்தால் தான் வேலைக்க்ப் பயணம் செய்யும் தொலைவில் ஜோன் வாழ முடிகிறது. அனாவசியமாக வாடகைக்குப் பணம் கொடுத்துத் தொலைக்கிறோமே என்று கடந்த வருடம் ஜோன் தனது குடும்பத்திற்காக வீடு ஒன்றை வாங்கிக் கொண்டார். வங்கிக்கு 1700 பவுண்ஸ் பணத்தை மாதாந்தம் கொடுத்தாக வேண்டும். எஞ்சிய 800 பவுண்ஸ் பணத்தில் 300 தனது காரிற்கான பணத்தை வங்கிக்குக் படியளக்கிறார். 300 பவுண்ஸ் உணவுத் தேவைக்குப் போக மின்சாரம். நீர் போன்ற செலவிற்கு மீதமுள்ள பணம் போதாமையால் கடனட்டையை மாத இறுதியில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். இது மேலும் கடனை அதிகரித்துக்கொண்டு செல்கிறது என்பது அவருக்குத் தெரியும்.

இதனால் வேலையில் தனது முதலாளிக்கு விசுவாசமாக வேலை செய்வதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. குறைந்தது 10 மணி நேரங்கள் வரை வேலை செய்யும் ஜோன், பயணத்தில் 4 மணி நேரத்தைத் தொலைத்து விடுகிறார். எஞ்சியிருக்கும் நேரத்தில் உறங்கியெழுவதைத் தவிர ஜோனிற்கு உலக நடப்புக்கள் கூடத் தெரியாது.

ரமியாவையும் ஜோனையும் இந்த நிலைக்கு உள்ளாக்கிய பல்தேசிய நிறுவனங்கள் அவர்களிலும் கீழே கூலிக்கு வேலை செய்யும் உழைப்பாளிகளை அடிமைகள் போன்றே நடத்தி வருகின்றன. ஒரு கூலித் தொழிலாளி குறைந்தது இரண்டு வேலைகளில் ஈடுபடாமல் வாழ்க்கையை ஓட்டமுடியாது என்ற நிலை தோன்றிவிட்டது. உழைக்கும் மக்களின் சராசரி வாழ்வுக்காலம் குறைவடைந்துகொண்டே செல்கிறது.

ஆக, மேதினம் என்ற சடங்கு அர்த்தமிழந்து விட்டது. தொழிலாளர்கள் பெற்றுக்கொண்ட எட்டுமணி நேர வேலை என்ற உரிமை பறிக்கப்பட்டு நாளாகி விட்டது. சரிந்து விழுந்துகொண்டிருக்கும் முதளாளித்துவப் பொருளாதார அமைப்பைத் தூக்கி நிறுத்த தொழிலாளர்களே பலியாக்கப்படுகின்றனர்.

இனவாதத்தயும், தேசிய வெறியையும் தூண்டி உழைக்கும் மக்களைப் பிரிக்க அதிகார வர்க்கம் முயல்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி ரமியாவின் குடும்பத்தையும் ஜோனையும் உலகம் இணைத்தது போன்றே உலகத் தொழிலாளர்களை தவிர்க்க முடியாமல் இணைத்துவருகிறது. இவர்கள் வேலைக்குப் போவதும் எஞ்சிய சொற்ப நேரத்தில் அழுந்தங்களுக்கு முகம் கொடுப்பதுமாக என்றாவது ஒரு நாள் மகிழ்ச்சியற்ற மனிதர்களாக மடிந்து போய்விடுவார்கள்.

 ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்பது தவிர்க்க முடியாத நிபந்தனை ஆகிவிட்டது.  ரமியாவும் ஜோனும் மரணிப்பதற்கு முன்னர் வீட்டுக்கடனைக் கட்டிமுடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை ஓட்டடிக்கொள்வார்கள். சாமனியத் தொழிலாளர்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழி கிடையாது. ரமியாவிற்காகவும் ஜோனின்ற்காகவும் அவர்களே போராடுவார்கள்.

இதனைக் கண்டு அச்சமடைந்த பல்தேசிய நிறுவனங்களும் அவற்றின் முகவர்களான ஏகாதிபத்திய அரசுகளும் உழைக்கும் மக்கள் மீது உளவியல் யுத்தம் ஒன்றையே கட்டவிழ்த்து விட்டுள்ளது. அமெரிக்காவையும் , கைத்தடிகளையும் மீறி எதனையும் சாதிக்க முடியாது என்று உலகில் புதிய மாயையை ஏற்படுத்தி வருகின்றனர். சரிந்து விழும் ஏகாதிபத்தியங்கள் தமது தோல்வியை மறைக்க இந்த யுத்தம் அவர்களின் தேவையாகிவிட்டது. இதனை வீரம் மிக்க தொழிளார்கள் கண்டுகொள்வதில்லை. 2013 இல் ஆரம்பித்து 300 தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இஸ்பானிய உழைப்பாளிகளால் கையகப்படுத்தப்பட்டு அவர்களாலேயே நடத்தப்படுகின்றன. அரச படைகள் நெருங்க முடியாமல் தொழிலாளர்கள் அங்கு ஒன்றிணைந்துள்ளார்கள். இத்தாலி பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலை தோன்ற ஆரம்பித்துள்ளது. ஆக, உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கம் மீண்டும் உயிர்பெற ஆரம்பித்திருக்கிறது. அர்த்தமிழந்து போன மே தினம் அர்த்தப்படுத்தப்படும் நாள் தொலைவிலில்லை.

Exit mobile version