Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டம் இனிமேல் சாத்தியமானதா? : சபா நாவலன்

“கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக நாங்கள் போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தோம், இறுதித் தசாப்தத்தில் முப்படைகளையும் கொண்டிருந்தோம், வங்கிகள், நிர்வாக அலகுகள், என்ற அனைத்தும் எம்மிடமிருந்தது. உலகம் முழுவதும் ஆதரவுத் தளம் வேறு எம்மிடமிருந்தது. இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு சரியான திசையில் தான் விடுதலைப் போராட்டத்தை நடத்தினோம். ஆனால் அனைத்து நாடுகளும் சேர்ந்து எம்மை அழித்துவிட்டன. ஆக, இனிமேல் போராட்டமெல்லாம் சரிப்பட்டுவராது. எம்மை அழித்த நாடுகளோடு ஒத்துப்போய் அவர்களது காலடியில் சாணக்கியமாக விழுந்து கிடந்து கிடைப்பதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.”

இது புலம்பெயர் நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்களதும், அவர்களின் உள்ளூர் முகவர்களதும் தாரக மந்திரம். இதுவே புலிகளின் உறுப்பினர்களாகவிருந்து இலங்கை அரசை ஆதரிப்பவர்களதும் அடிப்படை முழக்கம்.
இதன் பின்னணியிலேயே புலிகளின் அழிவின் பின்னர் போராட்டம் முற்றாகச் சிதைக்கபட்டது. இனப்படுகொலைக்கு எதிரான உணர்வலைகள் முற்றாகச் சிதைக்கப்பட்டன. உரிமைக்கான போராட்டம் மீண்டும் முளைவிடாதவகையில் திட்டமிடப்பட்டது.

இக் கருத்தை முன்னை நாள் போராளிகள் மீதும், சமூகத்தின் மீதும் நடத்தப்பட்ட உளவியல் யுத்தத்தின் பெரும் பகுதியாகக் கருதலாம். இதனை வகைப்படுத்தும் போது,

1. எமது முன்னைய போராட்டம் பலம் பொருந்திய அழிக்க முடியாத ஒன்றாகவிருந்தது.
2. போராட்டம் சரியாக வழி நடத்தப்பட்டு சரியான திசையிலேயே நகர்த்தப்பட்டது.
3. இதனால் உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட்டத்தை அழித்துவிட்டன.
4. ஆக, இனிமேல் போராட்டம் என்பது சாத்தியமற்றது

நான்கு தசாப்தங்களாக, சரி, தவறு என்ற வாதங்களுக்கு அப்பால், வீரம்செறிந்த போராட்டத்தை நடத்திய ஒரு சமூகத்தை இனிமேல் போராடினால் அழிந்து போவீர்கள் என மிரட்டும் இந்த உளவியல் யுத்தம் புலம்பெயர் நாடுகளின் புலி ஆதரவாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட தேசிய வியாபாரிகளாலேயே ஆரம்பிக்கப்பட்டது.

இப் புலம்பெயர் வியாபாரிகளில் பலர் தாம் வாழும் ஏகாதிபத்திய நாடுகளின் உளவு நிறுவனங்களோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் கூட்டிவந்து நியாயம் பெற்றுத்தருவதாக நம்பக் கோரியவர்கள். இவர்களின் நேரடி மற்றும் மறைமுக முகவர்கள் இலங்கையில் இக் கருத்தின் காவிகளாகச் செயற்படுகின்றனர். நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசின் பின்னணியில் செயற்படும் மேற்கு ஏகபோக நாடுகளின் நோக்கங்களைச் செயற்படுத்தும் இவர்களின் பணி இனிமேல் போராட்டம் ஒன்று முளைவிடாது கருத்துக்களை ஏற்படுத்துவதே.

இவர்கள் நேரடியாக இலங்கை அரசின் எதிரிகளாகத் தம்மை வெளிக்காட்டிக்கொண்டாலும், மறைமுகமாக இலங்கை அரசின் அரசியல் நோக்கையே கொண்டவர்கள். பெரும்பாலான செய்தி மற்றும் அரசியல் இணையங்கள் இவர்களின் கருத்துக் காவிகளாகவே செயற்படுகின்றன.

போராட்டமும் புரட்சிகர அரசியலும் சாத்தியமற்றது என்ற நிலைக்கு வந்தவுடன், இனிமேல் தேர்தல் அரசியல் வழியைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லை என்ற முடிவிற்கு மக்களை நகர்த்திவந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிடிக்குள் மக்களை இறுகச் செய்துவிட்டனர்.

மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்ட இந்த அரசியல் செயற்பாட்டின் முன்முகமே இன்றைய வட கிழக்கு அரசியல். இதுவே முழுமையான பிழைப்புவாதிகளிடம் போராட்ட அரசியலை ஒப்படைத்திருக்கிறது.
ஈழத்தின் எல்லைக்குள் மட்டுமே போராட்டங்கள் அழிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகளதும் மக்கள் கூட்டங்களதும் போராட்டங்கள் அழிவின் விழிம்பிற்குள் தள்ளப்பட்டிருக்கின்றன.

குர்திஸ்தான் மக்களின் போராட்டம் நமது காலத்தில் அழிக்கப்பட்டிருக்கிறது. பிலிபைன்ஸ் போராட்டம் அழிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளில் போராட்டங்கள் துடைத்தெறியப்பட்டிருக்கின்றன.

அங்கெல்லாம் இழந்தவைகளிலிருந்த் கற்றுக்கொண்டு போராட்டம் புத்துயிர் பெற்றிருக்கின்றது.

எமது போராட்டம் இருட்டறைக்குள் முடக்கப்பட்டுள்ளது. இது வரை அரசியல் தவறுகள் எதுவுமின்றி நடத்தப்பட்ட நமது போராட்டம் விமர்சனம் சுய விமர்சனங்களுக்கு அப்பால்பட்டது. அதனை விமர்சிப்பது என்பது தவறு என்ற குற்றவுணர்வு முன்னர் போராட்டத்தில் பங்காற்றியவர்கள் மத்தியில் பொதுப் புத்தியாக்கப்பட்டுள்ளது. இதனால் உருவாக்கப்பட்ட நேர்மை பிறழ்ந்த சமுதாயம் புலம்பெயர் வியாபாரிகளதும், பாராளுமன்ற அரசியல்வாதிகளதும் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுகின்றது. இப் பிற்போக்குவாத பின் தங்கிய சமூகத்தின் பிரதிநிதிகளாக இன்றைய அத்தனை அரசியல் வாதிகள், புலி ஆதரவு மற்றும் புலி எதிர்ப்பு அணிகள் இலகுவாகத் தம்மை நியமித்துக்கொண்டன.

மாற்று வழிகளுக்கான உடனடி வழிகள் தெரியாத சமூகம் விரக்தியின் விழிம்பில் தன்னை நிறுத்திக்கொண்டுள்ளது. புதிய இளைய சமூகம் தமது முன்னயவர்களின் நேர்மையின்மையை கடந்து வர முடியாத அளவிற்கு தம்மை நிலை நிறுத்திக்கொண்ட அரசியல் தலைமைகள் செயற்படுகின்றன.

பழைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய போராட்டத் தலைமைகள் தோன்றிவிடாதவாறு புலி ஆதரவுக் குழுக்கள் புனிதத்தின் பெயரால் கவனித்துக்கொள்கின்றன, இதன் மறுபக்கத்தில் புலி எதிர்புக் குழுக்கள் வெற்றிடத்தை பேரினவாதத்தால் நிரப்பும் பணியை கவனித்துக்கொள்கின்றன.

ஆக, இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று செயற்பாட்டுத் தளத்தில் முரண்படவில்லை. அவை ஒரே நேர்கோட்டிலேயே பயணிக்கின்றன.

இவை அனைத்தையும் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஏகபோக நாடுகள், முழு இலங்கையையும் சூறையாடிக்கொண்டிருக்கின்றன.

தமிழ் மாபியக் குழுக்கள் இவற்றை எதிர்கொள்வதற்கு தம்மை ஏற்கனவே தயார்செய்துகொண்டுள்ளன. தாம் கொள்ளையிட்ட/கொள்ளையிடும் பணத்தில் புறக்கணிக்கத்தக்க ஒரு பகுதிய உதவி என்ற தலையங்கத்தில் வட கிழக்கில் தமது முகவர்கள் ஊடாக வினியோகம் செய்கின்றனர். தற்காலிகமாகவேனும் தங்கியிருக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கும் இவர்களின் நோக்கம் எல்லா மாபியாக் குழுக்களையும் போலத் தெளிவானது. தம்மைப் புனிதப்படுத்த ஒரு கூட்டத்தை ஏற்கனவே இவர்கள் தோற்றுவித்துள்ள்னர். இக் குழுக்களுக்கு எதிரான புதிய அரசியல் தோன்றும் போது முளையிலேயே துடைத்தெறிவதற்கு தமது முகவர்களையும், தங்கியிருக்கும் ஒரு வட்டத்தையும் இக் குழுக்கள் தோற்றுவித்துள்ளன.

இவற்றை மீறி தன்னார்வ நிறுவனங்கள், அரச இயந்திரத்தின் கூறுகள், சாதிய அமைப்புகள், பிரதேசவாதக் குழுக்கள், இனவாதக் கட்டமைப்பு, பாராளுமன்ற அரசியல் வாதிகள் என்ற அனைத்து அமைப்புக்களும் தமக்குரிய இடங்களில் அமர்த்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆக, இன்றைய சூழலில் புதிய அரசியல் என்பது வாக்குப் பொறுக்கும் உக்திகளைக் கடந்து, புலம்பெயர் வியாபாரக் குழுக்கள்யுக்கு அப்பால் கடந்த காலம் தொடர்பான விமர்சனப் பார்வையை முன்வைத்து தவறுகளைக் கற்றுக்கொள்வதன் ஊடாகவே முன்னெழ இயலும்.

அது பல்வேறு இழப்புக்களையும் கடந்து செல்லவேண்டிய கடினமான அரசியல் பணி.

நடந்தவை அனைத்தும் சரியானவையே, இனிமேல் போராடினால் அழிந்து போய்விடுவீர்கள் என போராடியவர்கள் மீதும், முழுச் சமூகத்தின் மீதும் உளவியல் யுத்தம் நடத்தும் தமிழ் அதிகாரவர்க்கத்தயும் அதன் பின்புலத்தில் செயற்படும் ஏகபோக நாடுகளின் உளவு நிறுவனங்களையும் இலங்கைப் பேரினவாத அரசையும் கடந்து செல்வது என்பது தவிர்க்கமுடியாக அரசியல் பணி. தமிழ் மாபியாக்களின் வர்த்தகச் சுரண்டலைக் கேள்வி கேட்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய இப் பணியானது ஒரு தவிக்கவியலாத முன் நிபந்தனை.

Exit mobile version