Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பன்னீர்ச்செல்வத்தை அறுவடை செய்துகொண்டார்கள்…

தமிழ் நாடு அரசியல் சமூக வலைத் தளங்களை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. ரஜனி சினிமா விசிறிகளிலிருந்து இடதுசாரி பஞ் டயலாக் மனிதர்கள் வரை தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இடையில் ஜெயலலிதா மரணித்துவிட்டார் என்று துப்பறியும் சோதிடம் சொன்ன தலித் எழுத்தாளர் தமிழச்சி கூட சசிகலா நேற்று கைதாகிவிடுவார் எனக் கூறி தனது பக்கம் கவனத்தைத் திருப்பிக்கொண்டார்.

தமிழ் நாட்டில் ஏதோ வரலாறு காணாத அரசியல் மாற்றம் ஒன்று நடந்துவிட்டது போன்ற பரபப்பான சூழல் பேய்ப் படம் பார்ப்பது போன்ற உணர்வை பலருக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் வசிப்பவர்களுக்கு இது பரபப்பையும் மீறி தங்கள் வாழ்வாதாரப் பிரச்சனை தொடர்பான அரசியலாகக் கருதுகிறார்கள். விருப்பமின்றியே, வேறு வழியிலாமல் இரண்டு மானிலக் கட்சிகளில் ஒன்றை ஆள்வதற்குத் தெரிவு செய்யும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்படும் தமிழ் நாட்டின் உழைக்கும் மக்களுக்கு இது முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான்.

புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கும் இது முக்கிய பிரச்சனை ஆகிப்போனதற்கு மொழி ஒரு தொடர்பு ஊடகமாகிப் போனதும் காரணமாக இருக்கலாம். இருப்பினும் பன்னீர்ச்செல்வமும், சசிகலாவும் இணைந்து புலம்பெயர் தமிழர்களைத் தொப்புள் கொடி உறவுகளாக்கிவிட்டார்களா என்ற மகிழ்ச்சி தோன்றுகிறது.

சுன்னாகம் நீரை நஞ்சாக்கிய ஊழலில் வட மாகாண சபையின் பங்கு, கேப்பாபுலவும் மக்களின் போராட்டம் போன்ற சம்பவங்கள் அண்மித்த காலங்களுக்குரியவையாக பரபப்பான ஈழத் தமிழ் நிகழ்வுகள். இதைவிட புலம்பெயர் நாடுகளில் ரம்ப் போன்ற நிறவெறி பாசிசக் காட்டுமிராண்டிகளின் எழுச்சி, பொருளாதார நெருக்கடி என்ற அனைத்தையுமே தமிழ் நாட்டு முதலமைச்சருக்கான பதவி சண்டை தூக்கிச் சாப்ப்ட்டுவிட்டது.

இதுவரைக்கும் தமிழ் நாட்டில் நடந்த போராட்டங்களையெல்லாம் ஜல்லிக்கட்டை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டம் விஞ்சியிருந்தது. ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டின் பின்புலத்திலிருந்த சாதீய உள்ளர்த்தங்களே சாதீய ஒடுக்குமுறையைத் தகர்க்கின்ற முழக்கங்களாக முன்வைக்கப்பட்டன. ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கமாக போராட்டம் வளர்ச்சியடைந்தது. தமது குழுவாத நலன்களுக்கு அப்பால், முற்போக்கு இயக்கங்கள் கொள்கை அடிப்படையிலான தலைமை வழங்கத் தாமதித்த சூழல் போராட்டம் மாபெரும் இயக்கமாக விரிவடையவில்லை.

அப் போராட்டத்தின் தற்காலிக வெற்றியை அறுவடை செய்துகொண்டவர்கள் கேப்பாப் புலவில் போராடுகின்ற மக்களோ, புலம்பெயர் பரபரப்பு விடுப்புகளோ அல்ல. மாறாக, அதனை அறுவடை செய்துகொண்டவர் ஓ.பன்னீர்ச் செல்வம் தான்.

‘சின்னம்மாவின்’ பென்னாம் பெரிய காலடியிலிருந்தே கடைக்கண்ணால் மாணவர்களதும் மக்களதும் எழுச்சியைப் பார்த்த பன்னீர்ச்செல்வம், தவறுகள் அனைத்தையும் ‘சின்னம்மாவின்’ தலையில் தூக்கி வைத்துவிட்டு தமிழகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொண்டார்,.

தமிழகத்தின் எழுச்சியைக் கண்டு அச்சமடைந்த்திருந்த இந்திய அதிகாரவர்க்கம், அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது. ஆக, இன்னும் கொந்தளித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் தற்காலிக நம்பிகையைக் கொடுத்து, போராட்ட உணர்வைத் தணிப்பதற்குப் பன்னீரைத் தவிர சரியான ஆள் கிடைப்பது அரிது.

பன்னீர் என்ற தனிமனிதனின் அரசியல் எதிர்காலத்திற்கும், அதிகாரவர்க்கத்திற்கும் ஏற்பட்ட சமரசம் இந்த அடிப்படையில் தான் தோன்றியது. இப்போது பன்னீர் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என ஒரு கூட்டம் நம்ப ஆரம்பித்துவிட்டது.

மக்கள் எழுச்சியை பன்னீர் அறுவடை செய்துகொள்ள பன்னீரை அதிகாரவர்கம் அறுவடை செய்துகொண்டது.
இரண்டாவதாக தமிழ் நாட்டில் காலடி எடுத்துவைக்க முடியாத பாரதீய ஜனதா என்ற மதவாதக் கட்சிக்கு உடைந்து போகும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வழிகளைத் திறந்துவிடும். குறைந்தபட்சம், சட்டரீதியான ஆதரவிற்காகவேனும், பன்னீர் குழு பாரதீய ஜனதாவுடன் சமரசத்திற்கு வந்தாகவேண்டியிருக்கிறது.

ஆக, போராட்ட உணர்வைத் தணிப்பதற்கும், பாரதீய ஜனதாவை உள் நுளைப்பதற்கும் பன்னீர் பயன்படுத்தப்படுகிறார்.

பன்னீர் ஊடாக மக்களின் எழுச்சியை தற்காலிகமாகப் பின்போடலாம் என்பதை அனுபவம் மிக்க அதிகாரவர்க்கம் நன்கு அறிந்துவைத்திருக்கிறது. அமெரிக்காவில் மக்கள் கொந்தளித்த போது அதன் அதிகாரவர்க்கம் ஒபாமா என்ற அரைக் கறுப்பரை ஆட்சியில் அமர்த்தி மக்களின் போராட்ட மனோ நிலையை பின்போட்டது. இலங்கையில் மைத்திரி – ரனில் ஆட்சியை நம்பிவர்கள் இன்று அதனை உணர்ந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். பிரச்சனைகளத் தற்காலிகமாகப் பின்போடுவது என்பது அதிகாரவர்க்கத்தின் அரசியல் உக்தி. பன்னீர் அதற்குப் பயன்படுத்தப்படுகிறார்.

இங்கு தமிழக அரசியல் மாபியா சசிகலாவா, பன்னீரா முதலமைச்சர் என்பது பிரதனமான கேள்வியல்ல. இன்றைய திகதிக்கு அதிகாரவர்க்கத்தின் அதி நம்பிக்கைக்குரிய பிரதிநிதி பன்னீர் செல்வம் என்கிற அடியாள் என்ற பதிலே கருத்தில்கொள்ளப்பட வேண்டும்.

Exit mobile version