Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறு பொறி மட்டுமே! பெரு நெருப்பு அல்ல!! : இராமியா

சட்டம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதை நடைமுறைப் படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால், மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடைக்காது. சட்டம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், அதை நடைமுறைப் படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால், மக்களுக்கு ஓரளவுக்குப் பயன் இருக்கும் என்று மேதை அம்பேத்கர் கூறினார்.

விவசாய, நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டங்கள் மிகவும் நல்லவை. ஆனால் அதன் செயலாக்கம் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அதிகாரிகளிடம், அரசியல்வாதிகளிடம் இருந்ததால் மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லாமல் போயவிட்டது.

வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருந்த பொழுது “அனைவருக்கும் கல்வி” எனும் திட்டத்தை மிகவும் ஆடம்பரமாக அறிவித்தார். ஆனால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காவிக் கும்பலினர் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில், கோவில்களில் பஜனப் பாடல்களைப் பாடுவதற்கும், சுண்டல் விநியோகிப்பதற்கும் செலவழித்தனர். ஆனால் காமராசர் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் கிராமப்புறங்களில் பள்ளிகளைத் திறந்தார்; கல்வியை அளித்தார். மோசமான முதலாளித்துவ, பார்ப்பன ஆதிக்கச் சட்டங்களின் கீழ், கடுமையான நிதிப் பற்றாக் குறையிலும் காமராசரால் கல்வியை அளிக்க முடிந்தது.

இன்றைய நிகழ்வுகள் சட்டங்கள் மோசமானவையாக இருந்தால் அவற்றை நடைமுறைப்படுத்தும் நல்லவர்கள் இடம் பெற முடியாமல் போய்விடும் என்று மெய்ப்பித்துக் கொண்டு இருக்கின்றன.

சுற்றுச் சூழல் கேடும், புவி வெப்ப உயர்வும் முதலாளித்துவ உற்பத்தி முறை தொடர்ந்தால், உலகம் அழிந்துவிடும் என்று அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றன. அதன் விளைவுகளால் உலக மக்களிடையே அமைதியின்மையும், தீவிரவாதமும் வளர்ந்து வருகின்றன. ஆகவே முதலாளித்துவ முறைக்குக் கடிவாளம் போட வேண்டும் என்று போப் ஆண்டவரும், அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட முயன்ற பெர்னி சாண்டெர்சும் (Bernie Sanders) உரக்கச் சொன்னார்கள், ஆனால் அமெரிக்க அரசியல்வாதிகள் போப் ஆண்டவர் மதம் தொடர்பான வேலைகளை மட்டும் செய்தால் போதும் என்று கூறி விட்டனர். பெர்னி சாண்டெர்சைப் பொறுத்த மட்டில் அவர் வேட்பாளாகக் கூடத் தேர்ந்தெடுக்கப் படவில்லை. அது மட்டும் அல்ல; புவி வெப்பம் உயரவில்லை என்று பச்சைப் பொய்யைக் கூச்ச நாச்சம் இல்லாமல் கூறும் டொனால்ட் டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்ட்டு இருக்கிறார். இப்பொழுது அமெரிக்க மக்கள் அவரை எதிர்த்து அமைதி வழியில் போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

உலக நிகழ்வுகள் ஒரு புறம் இருக்கட்டும். நம் தமிழ் நாட்டு நிகழ்வுகளைப் பார்ப்போம். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பல பரபரப்பான நிகழ்வுகள் நடந்து உள்ளன. சசிகலா முதல்வர் ஆவதற்கு முயன்றார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், எடப்பாடி பழனிச்சாமியை அப்பதவிக்கு நியமித்தார், அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்களைக் கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறை வைத்து, அவர்களை அப்படியே குண்டுக் கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார். தமிழக மக்கள் அனைவரும் இதற்கு எதிராகக் கொந்தளித்து நின்ற போதிலும், மக்களின் விருப்பத்திற்கு எதிராக இச்செயல் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டது.

இந்நிகழ்வுக்கு முன் மாணவர்களும், இளைஞர்களும் மெரினா கடற்கரையில் குழுமி ஏறு தழுவல் விளைாயட்டை அனுமதிக்க வேண்டும் என்று போராடி, உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு என அனைத்து அரசுப் பொறியமைவுகளையும் வென்றதைச் சுட்டிக் காட்டி, இதே போல் மக்களின் முழுமையான எதிர்ப்பை மீறி அமைந்த அரசையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று மிகப் பெரும்பான்மையான மக்கள் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்தனர். ஏறு தழுவல் போராட்டம் போல், இப்போராட்டம் சென்னையில் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்கள்.

ஆனால் இப்போராட்டம் தொடங்கப்படவே இல்லை. ஏறு தழுவல் போராட்டத்தில் வெளிப்பட்ட வீரம், மக்கள் எதிர்ப்பு அரசுக்கு எதிரான போராட்டத்தில் வெளிப்பட முடியாமல் போனதற்குக் காரணங்கள் யாவை?

ஏறு தழுவல் போராட்டத்தில் வெளிப்பட்ட மக்களின் ஆற்றல் மகத்தானது என்று கூறிக் கொண்டாலும், அது ஒரு சிறு பொறியே ஒழிய பெரு நெருப்பு அல்ல. ஒரு முறை ஊதினாலேயே அவிந்து விடும் அளவிற்கு வலிமைக் குறைவானது. அப்படி என்றால் உச்ச நீதிமன்றம், மத்திய அரசு போன்ற வலிமை மிக்க அரசுப் பொறியமைவுகள் எப்படிப் பணிந்தன? உண்மையில் ஏறு தழுவல் விளையாட்டு நடப்பதைப் பற்றியோ, நடக்காமல் போவதைப் பற்றியோ அரசுக்கு எந்த விதமான அக்கறையும் கிடையாது. அவர்களைப் பொறுத்த மட்டில் பார்ப்பன ஆதிக்கத்தையும், முதலாளித்துவப் பொருளாதார முறையையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் மட்டும் தான் அக்கறை. அந்த விஷயங்களைப் பற்றி விவாதம் கூட வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் மற்ற விஷயங்களில் நம்மை அழுத்துகிறார்கள்.

இவர்களுடைய அழுத்தத்தை மீறி, அனைத்து வகுப்பு மக்களிலும் அனைத்து நிலையிலும் அறிவும் திறனும் உடையவர்கள் இருப்பதால், கல்வி, வேலை வாய்ப்பு, சமூக, பொருளாதார நடவடிக்கைகளில், அனைத்து நிலைகளிலும் அனைத்து வகுப்பு மக்களும் இடம் பெறும் விதமாக, விகிதாச்சாரப் பங்கீடு முறை வேண்டும் என்று போராடிப் பாருங்கள். மேலும் சுற்றுச் சூழல் கேடும், புவி வெப்ப உயர்வும் உலகை அழிவுப் பாதையில் கொண்டு செல்வதைச் சுட்டிக் காட்டி அதைத் தடுத்து உலகை மீட்டு எடுக்க, இலாபம் வருகிறது என்பதற்காகப் புவி வெப்பத்தை உயர்த்தும் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாது என்று போராடிப் பாருங்கள்.

அப்போராட்டத்தில் அரசாங்கங்களும் சரி! நீதிமன்றங்களும் சரி! பணியாது. அரசின் ஒவ்வொரு உறுப்பும் மிகவும் கோரமாக மக்களின் மேல் தாக்குதலைத் தொடுக்கும். ஏறு தழுவல் போராட்டத்தின் இறுதியில் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஒரு சிறு பொறி மட்டுமே என்று உணரும் அளவிற்கு அடக்குமுறை மிகப் பெரும் நெருப்பாக உருவெடுக்கும்.

ஏறு தழுவல் போராட்டத்தில் வெளிப்பட்ட மாணவர்களின், இளைஞர்களின் ஆற்றல் எந்த வித்திலும் போதாது. அது ஒரு சிறு பொறி மட்டுமே. பெரு நெருப்பு என்று சொல்லும் அளவிற்கு வெளிப்பட்டால் தான் பார்ப்பன ஆதிக்க, முதலாளித்துவ அரசை எதிர்கொள்ள முடியும்.

Exit mobile version