Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அம்மாவாணை ஶ்ரீலங்கா என்ற ஒரு நாட்டுக்கு விசுவாசமாக இருப்பேன் : ஈழமாறன்

Karuna with Mahindaஆறுவருசம் ஆற அமர படுத்துக் கிடந்தவர்கள், தேர்தல் திகதி அறிவிச்ச கையோடு இரண்டு தேசம் ஒரு நாடு என்ற கொள்கை விளக்கத்துடன் களம் இறங்கியிருக்கிறார்கள். இறக்கப்பட்டவர்களில் சிலர் அறைந்து உரைக்கும் தேசியத்தின் பின், புலித் தலமையை அழிக்கப் போட்ட திட்டத்தின் பின் பலமான பங்களிப்பை வழங்கியவர்கள்.

லண்டன் கிங்ஸ்ரன் பல்கலைக் கழகத்தில் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கு முண்டு கொடுக்க லண்டன் ஒரு பேப்பர் கோபி தலமையில் நடந்த கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் மட்டும் தேர்தலில் குதிப்பதாகவும், ஏனைய பகுதிகளில் குதிச்சு தமிழர்களின பிரதிநிதித்துவத்தைக் குறைக்க தாம் காரணமாகப் போவதில்லை என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னார்கள். நீங்கள் நம்ப வேண்டுமானால் என்னால் செய்யக்கூடியது ஒன்றுதான். அம்மாவாணை அப்பிடித்தான் சொன்னாங்கள். அப்படி என்றால், ஏனைய தமிழ் மாவட்டங்களில் வேட்பு மனு தாக்கல் செய்தது ஏன்?

ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவை மீண்டும் ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்பதில் இரு அணிகள் குறியாக இருந்தன. ஒன்று மகிந்தவுடனும் அமெரிக்க உளவு நிறுவனத்துடனும் உடன்படிக்கை போட்டு புலித் தலமையை ஏமாத்தி அமெரிக்கன் கப்பல் வருது, வேறு இடத்துக்குத் தப்பி ஓடாதையுங்கோ என்று ஆசைகாட்டி பிடித்துக் கொடுத்த கனடா, லண்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் வசூலுக்கும் சொத்துக்களுக்கும் சொந்தக் கார்ர்களாய் இருந்தவர்கள். அண்ணையை நம்ப வைத்தவர்களுக்கு அம்மாவாணை என்று சொல்லி அப்பாவி மக்களை ஏமாத்திறதுக்கு விக்கிலீக்ஸ் ஆதாரம் தேவையில்லை.

இரண்டு, தளத்தில அந்தப் பணியை கன கச்சிதமாய் முடித்துக் கொடுத்துவிட்டு இரு தேசம் ஒரு நாடு என்று ஊளையிடுபவர்கள், மகிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்க முடியாது போனபின் அவர்களுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு சந்தர்ப்பம், இந்தத் தேர்தல். ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்கச் சொன்ன கட்சி இந்தத் தேர்தலில் வாக்குக் கேட்டு வாலாட்டுவதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது. கறுவாத்தோட்டத்து ஓணான் கச்சை கட்டிக்கொண்டு ஓடும்போதே உசார் ஆகியிருக்க வேணும்.

அதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பகிஸ்கரித்திருந்தால் இவர்களது மகிந்த கனவு பலித்திருக்கும். அதனாலேயே பகிஸ்கரியுங்கோ என்று மக்களை மன்றாடினார்கள். இந்தத் தேர்தலை பகிஸ்கரிக்கச் சொன்னால் அதிகப் படியான ஆசனங்களைக் கூட்டமைப்புப் பெறும். அப்படி நடந்தால் மகிந்தவுக்கு தேவையான ஆசனங்கள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் ஆட்சி அமைக்க கூட்டமைப்பு உடன்படாது. அதனாலேயே மகிந்த கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தத் தேர்தலில கூட்டமாய் குதித்தது முன்னணி. அம்மணமாய் ஓடின பெருச்சாளி வல்வெட்டித்துறையில ரெக்கோட் டான்ஸ் ஆடும்போதே உசார் ஆகியிருக்க வேண்டும்.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதில் இந்தக் கட்சிக்கு ஒரு பெரும் பாரம் பரியமே உண்டு. அண்மையில் ஐபிசி தொலைக்காட்சியில் த.ம.தே.மு க்கு முட்டுக் கொடுக்கும் புலிப்பினாமிகளில் முக்கியமானவர் ஒரு பேப்பர் கோபி. அவர் சொல்கிறார் யாழ்ப்பாணத்தில ஒன்று அல்லது இரண்டு வெல்வோம் மற்றப் படி வேறு எங்கையும் நாம் வெல்லச் சாத்தியம் இல்லை என்று. தேர்தலுக்கு முன்னரே தெரிந்த இந்த உண்மையை மக்களுக்கு மறைத்து பொய் சொல்லி இரண்டு தேசம் என்று சாயம் பூசி வல்வெட்டித்துறையில விளக்குக் கொழுத்தி, பருத்தித் துறையிலே பாடம் நடத்தியவையின் உள்நோக்கம் அறிவது ஒன்று ஐயம்பிள்ளை வீட்டு வாசலில செப்புத் தகட்டில தேசிக்காயை வெட்டித்தாட்ட சூனியம் கிடையாது. மலையாள மாந்திரிகரைக் கூட்டு வந்து கோழி வெட்டி, வெத்திலையில மைபோட்டு கண்டு பிடிக்க.

இன்று ரவி அருணாச்சலம் தனது முகநூலில் பத்மினி மடத்துக்கு சேட்டிபிக்கேற் குடுக்கிறார். அங்கை அண்ணையை உசுப்பேத்தி போரைத் தொடங்க வைச்சிட்டு, இங்கை ஓடி வந்த பத்மினி மடம் அப்சற்றாய் இருந்தவாவாம். அடிக்கடி கனிமொழியோடையும் கதைச்சவாவாம். அது மட்டுமில்லை, அவ அந்த நேரத்தில பா.உ . ஆக இருந்த காரணத்தாலை, இலண்டனில் நடந்த இரண்டு மிகப் பெரிய ஊர்வலத்தில தலை காட்டேல்லையாம். மக்கள் பிரதிநி எப்பிடி இருக்க வேணும். வ்வுனியா சந்தையில் நின்ற வான்படையினர் மீது புளட் அமைப்புத் தாக்குதல் நடத்தியதால் வ்வுனியா மாக்கெட்டை எரிக்கிறது படை. கட்டிய சாரத்தோடு சில இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு தனது இரட்டைக் குழல் துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு வந்து சந்தைக் கட்டடத்தின்மேல் ஏறி நின்று நகரைக் காப்பாத்தினார் அன்றைய பா.உ தா. சிவசிதம்பரம் .

பத்மினி அக்கா முகம் காட்ட விரும்பேல்லையாம். மக்கள் தெருவிலே இறங்கும் போது, இவர்கள் வால் பிடித்த தலைமை கப்பலைக் காணாமல் விழி பிதுங்கிக் கிடந்தபோது, தன்னைக் காப்பாத்தின மடம் இப்ப தமிழர்களுக்கு இரண்டு தேசம் எடுத்துக் குடுக்கிறதில உறுதியா நிக்ககிறா எண்டால் எப்பிடி இருக்கு கதை. கூரை ஏறி கோழிபிடிக்காதவை, வானம்ஏறி இரண்டு தேசம் பிடிப்பினமாம். அம்மாவாணை தமிழ் மக்களின் நாசாகாரக் கும்பல் பிரதிநிதிகளாக வந்தால் அணுகுண்டு அடிச்சும் இவங்களை அழிக்கேலாது.

ஆறாவது திருத்தச் சட்டம் என்ன சொல்லுது எண்டு எல்லாருக்கும் தெரியும். அந்தக் காலத்தில கூட்டணி அதை ஏற்க மறுத்து பதவி இழந்ததையும் மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்தச்சட்டம் சொல்லுது, எந்த வேட்பாளரும் மனு தாக்கல் செய்யும் போது, ஆறாவது திருத்தத்தை ஏற்றுக் கொண்டுதான் கையொப்பம் இட வேண்டும். அம்மாவாணை, அது மட்டும் இல்லை, இந்தத் தேர்தலிலை இவை வெண்டால், பா. மன்றத்துக்குள் செல்வதற்கு, ஐயா, நான் ஶ்ரீலங்கா என்ற தேசத்துக்கு விசுவாசமாய் இருப்பேன் என்றும், பிரிவினையைக் கதைக்க மாட்டேன் என்றும் வாயை மூடிக்கொண்டு வாலாட்டுவேன் என்றும் சத்தியப் பிரமாணம் செய்த பின்தான் பா.உ ராக வரமுடியும். இதெல்லாம் இப்பிடி இருக்க, ஆறாவதை நீக்க சீறிப்பாய்வம், காறித் துப்புவம் எண்டு மேடையில விளாசினா, விஞ்ஞாபனத்தில மெய்யாலுமே போட்டா மக்கள் எல்லாம் நம்பபுவார்களா? இது என்னடா எண்டா, ஆண்டவன் நேற்று அல்லைப்பிட்டியில இறங்கி பொல்லெடுத்து பொன்னம்பலத்திட்டைக் குடுத்து ஆறாவதை அடித்து நொருக்கடா என்று சொன்ன கதையா எல்லோ இருக்கு.

இடையில பிரேமானந்தா சாமியின்ர சீடன்ரை விளையாட்டு வேறை. நடுநிலையிலை நின்று அறிக்கை விடுறாராம். மகிந்த ஆட்சியில இருக்கும் போது ஐயாக்கு முள்ளிவாயக்கால் படுகொலை இன அழிப்பாத் தெரியேல்லை. சாமியைப் பிடிச்ச உடனை அறிக்கை விட்டவருக்கு 4000 பேருக்கு மேலை அடைபட்டுக் கிடக்கிறாங்களே அதுக்கொரு கடிதம் போடவேணும் எண்டு அக்கறை வரேல்லை. இப்ப மகிந்தவை திரும்பக் கொண்டுவரச்சொல்லி சம்பந்தி வாசுதேவ சொன்ன உடனை சுயநிர்ணயம் ஐயாக்கு சுடுகுதோ? அண்டைக்கு சுயநிர்ணயம் கேட்டுப் போராடிய போராளிகளை உச்ச பட்ச தண்டனை குடுத்து உள்ளை போட்ட ஐயாக்கு லண்டனில புலிப் பினாமிகள் சாப்பாடு குடுத்தபிறகுதான் ஞானம் வந்ததோ? உண்மையா இவரை எல்லாம முதலமைச்சராக்கினவங்களைச் சொல்ல வேணும். ஊருக்கை மாடு இல்லாமல் கொழும்பு மாட்டைக் கொண்டுவந்து கொம்பு சீவிவிட்டவங்களை கண்ட இடத்தில காறித் துப்பவேணும். சைற் அடிச்சீங்களா, சம்பந்தியோட சாப்பிட்டிங்களா எண்டு இல்லாம அற்விஸ் பண்ற வேலை இருக்கப் படாது. மக்களுக்கு வலிக்கும்மில்லா.

நான் என்ன சொன்னாலும், பா. மன்றத்தினூடாக தமிழர்கள் ஒரு இழவையும் பெற முடியாது என்றாலும் திங்கள் கிழமை காலமை எழும்பி காலைக் கடன் கூட முடிக்காமல் வாக்குச் சாவடிக்கு ஓடிப் போய் கண்ட கண்ட இடம் எல்லாம புள்ளடி போடத்தான் போறியள் என்று. போட்டாத் தானே அடுத்த ஐஞ்சு வருசம் நாசமாய் போனவங்களுக்கு ஓட்டுப் போட்டு என்னத்தைக் கண்டம் என்று அடுத்த வீட்டுக் காரியுடன் அளவளாவலாம். என்ன எண்டாலும் செய்து துலையுங்கோ. ஆனா ஒரு விடயத்தை கவனமாய் மனசில வைச்சுக் கொண்டு வாக்களியுங்கோ. சைக்கிள் சின்னத்துக்கு போடுற வோட்டு, கசக்கிப் பிழிந்து நாதி அற்று நிற்கும் மிச்சமாய் இருக்கும் தமிழ் மக்களின் எதிர் காலத்தை வெறும் குழி தோண்டிப் புதைக்கும் செயல் அல்ல. சவக் குழி தோண்டிப் புதைக்கும் முயற்சி என்பதை மறந்து விடாதைங்கோ.

வயல் வெளியா இருந்தா வெருளி கட்டி விரட்டலாம். புலவில இறங்கிற குரங்காய் இருந்தா பொறி வைத்து அமத்தலாம். எலித் தொல்லை எண்டா பூனையை வளக்கலாம் ஆனால் பினாமிப் புலியை வளத்தா என்ன நடக்கும் என்று முள்ளிவாய்க்கால் சொல்லிக் கொண்டே இருக்கும். ஆகவே சைக்கிள விரட்டி அடித்து சின்னாபின்னமாக்கி உங்கள் எதிர்காலத்தை நீங்கள் நிர்ணயிக்க வேண்டுமானால், புள்ளடி என்ற மிகப் பெரிய ஆயுதம் உங்கள் கையில் இருக்கு

Exit mobile version