இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னான காலப்பகுதியில் இலக்கியமுயற்சிகள், புத்தக வெளியீட்டு விழாக்கள், நாடகவிழாக்கள், இசைக்கச்சேரிகள் எனப் பல முயற்சிகள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் இலங்கையிலும் நடைபெறுகின்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பலர் தமது கலை, இலக்கிய முயற்சிகளை அங்கும், இங்கும் விழாவாக் கொண்டாடுகின்றனர். விடயங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் எனும் அவர்களின் பேரவாவை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த விழாக்களுக்கு சிலர் பிரதமவிருந்தினராக, திறனாய்வாளார்களாக, அறிமுகவுரை வழங்குபவர்களாக, நூல் விமர்சகர்களாக, சிறப்பு அதிதிகளாக அழைக்கப்படுவதுண்டு. அழைப்பிதழ்களில் குறிப்பிட்ட சிலருக்கு படைப்பாளி, (படைப்புக்கள் சமூகநலம் சார்ந்தவையா ), ஆய்வாளர்( எந்த துறையில்) , திறனாய்வாளர் (எத்துறையில் கொண்டுள்ள நிபுணத்துவத்தின் அடிப்படையில் ), இலக்கியமேதை (எந்த இலக்கியத்தில் ) போன்ற அடைமொழிகள் வழங்கப்படுவதுண்டு. இந்த அடைமொழிகள் ஏன் வழங்கப்படுகின்றன? இவற்றை வழங்குவதற்கான காரணம் என்ன? வழங்கும் ஆர்வம் எங்கிருந்து வருகிறது? யாரால் யாருக்கு இவைகள் வழங்கப்படுகின்றன என்பதை சற்று நோக்கினால் இந்த அடைமொழி சூட்டலுக்குப் பின்னால் ஒருவித உள்ளக அரசியல் இருப்பதாக காணலாம்.
கவிதைத்தொகுதியொன்றை, கட்டுரைகளடங்கிய தொகுதியை தயாரித்த, எழுதிய அல்லது தொகுத்த ஒருவர் அதனை வெளியிட விரும்புகிறார், விடயம் பலரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக வெளியீட்டு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்கிறார். இந்த வெளியீட்டு நிகழ்ச்சிக்கான அழைப்பின் போது கவிஞர், இசைஅறிவாளர், ஆய்வாளர், இலக்கியஆய்வாளார் என்ற அடைமொழிகள் வழங்கப்பட்டு நபர்கள் விழாவுக்கு அழைக்கப்படுகிறார்கள். இதன் பின்பு மேடையில் பொன்னாடைகள், பொன்முடிச்சுகள், புகழாரங்கள் எல்லாம் வரிசையில் வர ஆரம்பிக்கின்றன.
எனது கட்டுரைத்தொகுதி ஒன்றை நான் மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறேன். அதற்கான வழிகளில் ஒன்றாக நான் ஒரு வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்கிறேன் இதற்கு நான் குறிப்பிட்டவர்களுக்கு சில அடைமொழிகளை வழங்கி அழைக்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என நம்மில் பலர் கேட்கலாம்.
நானும் எனது கட்டுரைத்தொகுதியும் « கரைசேர்வதற்கு « நான் அடைமொழிகளை வழங்கி அவர்களை அழைக்கிறேன், அவர்களும் நான் அழைத்துவிட்டேன் என்பதற்காக வருகை தருவார்கள், வந்தவர்கள் புத்தகத்தை வாசித்தார்களோ இல்லையோ நாலுவார்த்தை பேச வேண்டும் இல்லாவிட்டால் அது நன்றாக இருக்காது என்று தனது மனதில்படுபவற்றை அன்றைய அரங்கில் கூறிவிட்டுச் செல்வார். நூலின் உள்ளடக்கத்திற்கும் அவரது உரைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாவிட்டாலும் கூட அந்த நபர் ஆற்றிய உரையில் ஏதோ ஒரு நுனியைப் பிடித்துக் கொண்டு இன்னொரு நபர் கதையளப்பார், அரங்கம் களைகட்டும் பின்பு எல்லாம் சுபம் என முடிந்து விடும். நானும் எனது முகநூலில் எனது புத்தக வெளியீட்டை மிகவும் சிறப்பாக உரிய அம்சங்களுடன், அழைக்கப்பட்ட அனைத்து அதிதிகளும் கலந்து கொண்டு அவரவர் தமக்குரிய பாணியில் எனது புத்தகம் பற்றிய உரையை நிகழ்த்தியிருந்தார்கள் என ஒரு சில பிரபல்யங்களுடனான புகைப்படங்களைப் போட்டு முகநூலை அலங்கரிப்பேன். இதில் என்ன தவறு இருக்கிறது? நான் எனது சொந்த செலவில் புத்தகத்தை அச்சிட்டு, சொந்த செலவில் நூல் வெளியீட்டை நடத்துகிறேன், எனது சொந்த முயற்சியில் எனது கற்பனைவளத்திற்கும் எனது சிந்தனைப்போக்கிற்கும் அமைய நான் குறிப்பிட்ட நபர்களுக்கு அடைமொழியை வழங்குகிறேன். எனது இருப்பின் சுதந்திரமிது என நான் வாதிடலாம்.
ஈழப்போராட்டத்திற்கு முந்திய காலப்பகுதியில் இசை, இலக்கியம், நடனம், நாடகம், விளையாட்டு, கல்வி போன்ற ஸ்தாபனமயமாக்கபட்ட விடயங்களில் அவை சார்ந்த நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வந்தன. இந்நிறுவனங்கள் வழங்கும் பட்டங்களை விடவும் சமூகஅங்கத்தவர்கள் சிலருக்கு பிரத்தியேக அடைமொழிகளைச் சிலர் முன்மொழிவதுண்டு. இதற்கான காரணங்கள் எவை என்பதையும் இதன் பின்னணி பற்றியும் சமூகவியலாளர்கள் ஆய்வு செய்து கண்டறிவது ஈழத்து தமிழ்பேசும் சமூகத்திற்கு சிலவேளை நன்மை பயக்கலாம்.
ஈழப்போராட்டத்தை வலுக்கட்டாயமாக குத்தகை எடுத்துக் கொண்டவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில், மாமனிதர், நாட்டுப்பற்றாளர், ஆளுமை, மாஸ்டர் இன்னபிற அடைமொழிகள் இந்தக் குத்தகையாளர்களால் வழங்கப்பட்டன. இவர்தம் அபிமானிகள், விசுவாசிகள் தவிர ஈழப்போராட்டத்திற்கு தமது இன்னுயிரை ஈந்த வேறு எவருக்கும் இந்த அடைமொழிகள் வாய்க்கப் பெறவில்லை. எல்லைக் கிராமங்களில் வசித்த மக்கள், ஈழப்போராட்டம் அமைப்பு மயமாக்கப்படுவதற்கு முன்னர் பெரும்பான்மையின ஆட்சியாளர்களின் இனப்பாரபட்சக் கொள்கையினாலும், இனக்கலவரங்களின் போது கொல்லப்பட்ட எவருக்கும் எமது சமூகம் எந்த பட்டத்தையும் வழங்கவில்லை. அமைப்புகள் எதிலும் உத்தியோகபூர்வமாக இணையாவிட்டாலும் சமூகநலனில் அக்கறை கொண்டு செயற்பட்டு, இலங்கை இராணுவத்தினாலும், இலங்கையில் இயங்கிவந்த ஆயுதக்குழுக்களாலும், சமாதானம் காக்க வந்த படைகளாலும் கொல்லப்பட்ட மக்களுக்கு எந்தப் பட்டத்தையும் யாரும் வழங்கவில்லை. அந்த உயிர்களும் அவர்தம் தியாகமும் எமது கண்ணில் படுவதில்லை.
அடைமொழிகள் வழங்கலுக்கான அவசியம் ஏன் ஏற்படுகிறது? பட்டங்கள், அடைமொழி இல்லாமால் எங்களால் ஒரு மனிதரை மனிதராகப் பார்க்க முடியாதா? அடைமொழிகளை வழங்குபவர்களும் அவற்றைப் பெறுபவர்களும் சாதாரண மக்களை விட வேறுபட்டவர்களா? அப்படியாயின் இவர்கள் எந்த விதத்தில் வேறுபட்டவர்கள்? இந்த மனப்பான்மை எங்கிருந்து வருகிறது? பிரித்தானிய சுரண்டல் அதிகாரிகள் விட்டுச் சென்ற மிச்சசொச்சமா அல்லது இலங்கை சமூகஅமைப்பில் காணப்படும் அதிகாரவரம்புமுறை வழங்கும் செளகரியமா?
எமது சமூகத்தில் மருத்துவர், பொறியிலாளர் போன்ற தொழில்கள் மற்றும் கலாநிதி பட்டங்கள் தொடர்பாக ஒரு மயக்கமும் மாயையும் காணப்படுகிறது. மருத்துவக்கல்வியை பயின்று முடித்தால் அவர் ஒரு மருத்துவர். இந்த மருத்துவருக்கு எமது சமூகத்தில் ஒரு இடத்தையும், அதற்கு மேலாக சில மாயைகளையும் உருவாக்கத் தொடங்கிவிடுவார்கள். மருத்துவர் விழாக்களுக்கு, விளையாட்டுப் போட்டிகளுக்கு கெளரவிருந்தினராக அழைக்கப்படுவார், இவ்வாறான அழைப்புகள் மூலம் வழங்கப்படும் கெடுபிடி மாயைக்குள் அகப்பட்டுக்கொள்ளும் இவர் பிற்காலத்தில் பல சங்கங்கள், அமைப்புகளில் பிரத்தியேக பதவிகளை வகிக்கத் தொடங்குவார். இந்த மருத்துவருக்கு ஆதரவாக, விசுவாசமாக, இவரைக் கடவுளாக வணங்குமளவுக்கு விடயங்கள் அரங்கேறும். இவர் காலப்போக்கில் மருத்துவத்துறைக்குள் அடங்கிய ஏதாவது ஒரு விடயத்தில் விசேட கல்வியைக் கற்பார், மேற்கொண்டு கலாநிதி பட்டமொன்றைப் பெறுவார், இவரை பின்பு விழாக்களுக்கு அழைக்கும் போது இலக்கியச் செம்மலும் கலாநிதியாகிய திரு இன்னார் இந்த விழாவுக்கான சிறப்பு அதிதியாக வருகை தருவார் என அழைப்பிதழில் குறிப்பிடுவர்.
இங்கு என்ன நடக்கிறது. இவர் கலாநிதி பட்டத்தைப் பல்கலைக்கழகம் ஒன்றில் பெற்றிருக்கலாம். இலக்கியத்திற்கும் இவரது கலாநிதி பட்டத்திற்குமான தொடர்புதான் என்ன? இவர்களுக்கும் இலக்கிய முயற்சிகளுக்குமான உறவு என்ன, இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களா, அதற்கான முன்னேற்றத்தில் சமூகநலனின் அக்கறையில் இலக்கிய விமர்சனங்களை முன்வைப்பவர்களா, சமூகமாற்றத்தைக் கருத்தில் கொண்டு தனது தனிப்பட்ட கருத்துக்களில், நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த விளைபவர்களா, பின்னர் இவரைப் பற்றி இல்லாத பொல்லாத கற்பனைகள் கலந்த கட்டுக்கதைகள் அவிழ்த்து விடப்படும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் இவர் இலக்கிய ஆளுமையாகவும், விமர்சகச் செம்மலாகவும் ஆகிவிடுவார். இன்னும் பலர் இவரைத் தமது நூல் வெளியீட்டுக்கு அழைப்பார்கள்.
அடைமொழிகளை வழங்குவதன் நோக்கம் தான் என்ன? இதன் மூலம் குறிப்பிட்ட ஒருவரை சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களிடமிருந்து சற்று விலக்கி வைக்கிறோம். இதனை எதற்காக நாம் செய்கிறோம்?, இதன் மூலம் சமூகத்திற்கு கிடைக்கும் நலன்தான் என்ன?, இந்த அடைமொழிகளை வழங்குவதன் மூலம் நாம் சமூகத்திற்கும், எமது எதிர்கால சந்ததிக்கும் எவற்றைக் கூற முயல்கிறோம்? , எங்கோ ஓரிடத்தில் வழங்கப்படும் இந்த அடைமொழிகள் உலகின் பல பாகங்களுக்கும் பரவுகின்றன. காலப்போக்கில் இவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இவை நிரந்தரமாக ஒட்டிக் கொள்கின்றன.
படைப்பாளி என்பவர் யார், யாருக்கு நாம் படைப்பாளி என்ற அடைமொழியை வழங்கிறோம், சமூகநலனில் அக்கறை கொண்டு, அதன் முன்னேற்றத்தின்பால் ஆர்வம் கொண்டு அச் சமூகத்தில் நிலவுகின்ற கடைந்தெடுத்த அழுக்குகூறுகளையும் அவை தொடர்பாக சமூகத்தில் பேணப்படும் பாரபட்சங்களை நீக்குவதற்காக குரல் கொடுப்போரை நாம் படைப்பாளி எனக் குறிப்பிடுவோமாயின் இந்த அடைமொழியைப் பெற்றவர்களில் எத்தனை பேர் மேற்குறிப்பிட்ட விடயங்களில் தங்களின் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்கள்?. கவிஞர்களை, கலைஞர்களை, சமூக ஆர்வலர்களை இவர்களின் செயற்பாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லது எத்தனை நூல்களை வெளியிட்டுள்ளார் என்ற அடிப்படையில் தான் நாம் அவர்களை கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் அங்கீகரிப்போம் என்ற கருத்தைக் கொண்டவர்களையும் நாம் எம்மிடையில் காண்கிறோம். இவ்வாறான எண்ணிக்கை கருத்தின் அடிப்படையில் பார்த்தால் பல புத்தகங்களை வெளியிடும் அச்சகங்களும் வெளியீட்டாளர்களுமே இவர்களின் அங்கீகாரத்திற்குள் அடங்குவார்கள். தரம் என்பது எண்ணிக்கையில் அடிப்படையில் அமைவதல்ல சமூகநலனையும், அதன் முன்னேற்றத்தைக் கருத்தில் முதன்னிலைப்படுத்துவதுமே.
இந்த அடைமொழி வழங்கலிற்குப் பின்னால் காணப்படும், வர்க்க, பால், சாதிக்குமான தொடர்புகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அடைமொழிகளை வழங்குவதில் காணப்படும் வர்க்க, சாதி, பால் ரீதியான பண்புகளை இவ்வாறான ஒரு சிறிய குறிப்பில் ஆராய்ந்து பகுத்துக் கூறுவதற்கு போதியளவு ஆய்வும், தரவுகளும் அவசியம் என்பதால் இதனை பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம். புள்ளிவிபரமே தேவைப்படாத ஆனால் சமூக வெளியில் நாளாந்தம் பயன்படுத்தப்படும் இன்னொரு விடயமான பாலினஅசமத்துவம் பற்றி இங்கே குறிப்பிடலாம் என நினைக்கிறேன்,
அடைமொழிகளில் காணப்படும் பாலின அசமத்துவம்
மேற்குறிப்பிட்ட மருத்துவதுறையில் பெண்கள் பலர் இருந்தாலும் ஒப்பீட்டு ரீதியில் பெண்களுக்கு இலக்கியச்செம்மல்கள், திறனாய்வாளர்கள், ஆளுமைகள் போன்ற அடைமொழிகள் வழங்கப்படுவது குறைவு. பிரதம அதிதிகளாக அழைக்கப்படும் போது துணைவரின் பெயரைக் குறிப்பிட்டு இன்னாரின் பாரியார் எனக்குறிப்பிடுவதை பல சந்தர்ப்பங்களில் காணலாம். பெண்கள் பெற்றிருக்கும் கல்விசார், நாட்டிய, இசை சார்ந்த பட்டங்கள் கூட சிலவேளைகளில் திருமதிகளுக்குள் அடங்கிவிடுகின்றன, இவை எல்லா சந்தர்ப்பங்களிலும் குறிப்பிடப்படுவதில்லை.
நாம் வாழும் சமூகத்தில் மூன்று பாலினங்களைச் சேர்ந்தவர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறோம். உயிரியலின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும் இப்பாலின அடையாளங்களுக்கு சமூகம் மேலும் பல அரிதாரங்களை வழங்குகிறது. அதுவும் இவைகள் குறிப்பாக பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன. இவை பூ, பொட்டு, பட்டு, மெட்டி என அமைந்து விடுகின்றன. அடைமொழிகளாக பெண்களுக்கும் ஆண்களுக்கும் வழங்கப்படும் செல்வி, செல்வன் போன்றவை திருமணத்திற்குப் பின் பெண்ணுக்கு திருமதியாக மாறுகின்ற அதேவேளை ஆணுக்கு அது திருவாக காலம் முழுக்கவும் நீடிக்கிறது. இந்த திருமணமான பெண் விவாகரத்துப் பெறும் போது இவரது பெயருடன் அடைமொழியான செல்வி மீண்டும் வந்து ஒட்டிக் கொள்கிறது. ஆனால் விவாகரத்துப் பெற்ற, பிரிந்து வாழும், மற்றும் தபுதாரன்களுக்கும் திருவெனும் அடைமொழி இறுதி வரை நீடிக்கிறது. மனைவி இவரை விட்டுப் பிரிந்தாலோ இவர் மனைவியைப் விட்டுப் பிரிந்ததற்காகவோ இவரது அடைமொழியில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படுவதில்லை. திருமண அந்தஸ்தை மட்டுமே பிரதானமாக சுட்டி நிற்கும் திருமதி எனும் அடைமொழியைப் பயன்படுத்துபவர்கள் இது பாரபட்சமானது என்பதை சிந்திப்பதில்லையா, உங்களது பெண்பிள்ளைகளும் இவ்வாறான அசமத்துக்குள்ளாக்கப்படுவார்கள் என தந்தையர்களும் தாயார்களும் சிந்திப்பதில்லையா, சமூகத்தின் அங்கத்தவரான ஒருவர் அசமத்துவமாக நடத்தப்படுகிறார் என்பதை சுட்டிக்காட்ட அதனை அநுபவிப்பவர்கள்தான் முன்வர வேண்டும் என்பதில்லை, பாலின அசமத்துவம் பற்றி தனியே பெண்கள்தான் பேசவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவுமில்லை. இந்த அடைமொழி தொடர்பாக காணப்படும் அசமத்துவம் பற்றி அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும், சகோதரிகளைக் கொண்டவர்களுக்கும் தோன்றுவதேயில்லையா, இந்த அடைமொழிகளை பெயர்களுக்கு முன்னால் சூடிக் கொள்ளும் பெண்களும், சூட்டப்படும் போது கருத்திற்கொள்ளாமல் இருக்கும் பெண்களும் இனிமேல் உங்கள் மீது புனையப்படும் அடைமொழிகளை சற்று கண்ணெடுத்துப் பாருங்கள், இதற்கு பின்னால் காணப்படும் அரசியலை கேள்விக்குட்படுத்துங்கள். அனைத்து விதமான பாலின அசமத்துவங்களுக்கும் பெண்உரிமைக்காகப் போராடுபவர்கள் தான் கொடி தூக்க வேண்டும் என வாளாதிருப்பதும் இவ்வாறான கருத்துக்களுக்குத் துணைபோவதற்கு ஒப்பானதே.
அடைமொழிகளுக்கும் பட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்குவதை விடுத்து மனிதநேயமிக்கதும், மாற்றுக்கருத்துக்களை உள்வாங்கும் தன்மை கொண்டதும், சகிப்புத்தன்மை கொண்ட சமூக மாந்தர்களை உருவாக்க முனையும் மக்கள் இலக்கியத்தினை உருவாக்கவதில் முன்னின்று உழைப்போம். இவைகளே இப்போதுள்ள எம்முள்ள தேவையும் அவசியமும்.