Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேரினவாதக் கட்சிகளின் பிடிகளுக்குள் நகர்த்திச் செல்லப்படும் வட மாகாணம்: எஸ்.என் கோகிலவாணி

kokilavanyபிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் பிடியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்து வந்த காலத்தில் இருந்து இன்றுவரை மாறி மாறி ஆட்சி பீடத்தில் இருந்து வருபவை பேரினவாதக் கட்சிகளான சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியுமே. இவ்விரு கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் தான் சொந்த தேசத்தில் தமிழ் பேசும் மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டு வேரறுக்கப்பட்டனர். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வரை சென்றதற்குக் மூலகாரணம் இவ்விரு கட்சிகளுமே என்றால் அது மிகையாகாது.

சிங்களப் பேரினவாத அழிவு சக்திகளிடமிருந்து தமிழ் பேசும் மக்களைத் தற்காத்துக் கொள்வதற்காக மூன்று தசாப்தங்களிற்கு மேலாக முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டமும் அது சார்ந்த சக்திகளும் 2009 நடுப்பகுதியில் முள்ளி வாய்க்காலில் வைத்து ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடனும் அனுசரணையுடனும் சுவடுகள் ஏதுமின்றி அழிக்கப்பட்டன. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீண்டிருந்த இப் போராட்டம் வீழ்ச்சியடைய வேண்டியதன் அத்தியாவசியம் என்பது பல உள்ளக மற்றும் வெளியகப் புலங்களுக்கு வேண்டியிருந்தது என்பது ஒரு வெளிப்படை உண்மை. அந்த சக்திகளின் அபிலாஷைகள் `மனிதாபிமானத்திற்கான போர்` என்ற சொற்பதத்தின் மூலம் எமது மக்களின் உயிர்களைக் காவு கொண்டு இலகுவாக நிறைவேற்றப்பட்டன.

2009களில் இந்தப் போராட்டத்தை அழித்ததுடன் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ் பேசும் மக்களுக்காக இருந்த போராட்டத் தலைமையும் அழிக்கப்பட்டு விட்டது. இதன் பின்னரான சூழல் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு ஒரு ஆபத்தான காலகட்டமாக தோற்றம் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாக சிந்திக்கத் தெரிந்த அனைவராலும் உணரப்பட்ட ஒரு விடயமாகும்.

முள்ளிவாய்க்காலின் முடிவுடன் வெற்றிடமாக்கப்பட்ட தமிழர் அரசியல் தலைமை நீண்ட ஏழு வருடங்களின் பின்னரும் இன்னும் நிரப்பப்படவில்லை. மிக நீண்டகாலத்தின் முன்னரே மக்களால் நிராகரிக்கப்பட்ட, பாராளுமன்றக் கதிரைகளை நிரப்பிக்கொள்வதற்காக மட்டும் தமக்கிடையே இணைப்பேற்படுத்திக்கொண்ட சில தனி நபர்களின் கூட்டே இன்று அரசியல் தலைமை என்ற வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருக்கின்றது.

இன்றைய அரசியல் தலைமைக்கான வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ள பல்வேறு அரசியல் மற்றும் வர்க்க சார்பு சக்திகள் முனைகின்றன. இந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் பேரினவாதக் கட்சிகள் வெற்றி பெற்று வருகின்றன என்பது ஒரு ஆபத்தான மற்றும் கசப்பான விடயமாகும். இலங்கையின் கறைபடிந்த தேசிய இன ஒடுக்குமுறை வரலாற்றில் பல்வேறு இனப்படுகொலைகளோடு நேரடித் தொடர்புடைய இரண்டு பிரதான கட்சிகளும் அவற்றின் துணைக் கட்சிகளும் வெற்றிடத்தை நிரப்புவதில் வெற்றிகொள்ள ஆரம்பித்துள்ளன என்பது நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான அரசியல் போக்கல்ல.

சுதந்திரத்திற்குப் பின்னைய இலங்கை அரசியலின் பிரதான முரண்பாடு என்பது தேசிய இன முரண்பாடே. ஒரு முனையில் பெருந்தேசிய ஒடுக்குமுறை அரசும் மறு முனையில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களும் இந்த முரண்பாட்டின் இரண்டு பிரதான எல்லைகள். இந்த முரண்பாட்டின் அதிகாரத்திலுள்ள பெருந்தேசிய ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான எதிர்ப்பரசியல் என்பதே இன்றைய காலத்திற்கான அடிப்படைத் தேவையும் எதிர்காலத்திற்கான மக்களின் பாதுகாப்புமாகும்.

பௌத்த சிங்கள பெருந்தேசிய ஒடுக்குமுறை தனது கோட்பாட்டு அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிலையில் இலங்கை என்பது தேசிய இன முரண்பாடுகளற்ற ஒரு நாடாக வெளிப்படுகிறது என ஆளும் வர்க்கம் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளது

2009 நடுப்பகுதி வரை இலங்கையில் இடம்பெற்றிருந்த முரண்பாடு ஒரு தேசிய இன முரண்பாடு என உலகெங்கும் அறியப்பட்டிருந்த வேளையில் முள்ளி வாய்க்கால் இன அழிப்பின் பின்னர், அந்த முரண்பாட்டிற்கு வேறு வேறு சொல்வடிவங்கள் அர்த்தங்கள் சொல்வடிவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. தமிழர் உரிமைப் போராட்டத்தின் நியாயத் தன்மை குறித்த கருத்தியல்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுவருகின்றது. இரு இனங்களுக்கிடையிலான தேசிய முரண்பாடென்பது வெறுமனே மதங்கள் சார்ந்த முரண்பாடாகவும், பொருளாதார அபிவிருத்தி சார்ந்த முரண்பாடுகளாகவும் சித்தரிக்கப்படுகின்றன. திட்டமிட்ட வகையில் மக்கள் மத்தியில் உள்ள நாளாந்தச் சவால்கள் பிரதானப்பபடுத்தப்பட்டு தேசியப் பிரச்சனை மறக்கடிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையின் எல்லைக்குள் நிலவும் முரண்பாடு வெறுமனே மதங்களுக்கு இடையிலான முரண்பாடு என்று 2014 ஆம் ஆண்டின் அமெரிக்கத் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் ஆரம்பித்தைத் தொடர்ந்து தேசிய இன முரண்பாட்டை நிராகரிக்கும் போக்கு கோட்பாட்டுரீதியாக நடைமுறைக்கு வர ஆரம்பித்தது எனலாம். இலங்கையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா நிதி உதவி வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் மத நல்லிணக்கத்திற்கு முக்கிய பங்கு வழங்கப்படும் என அரச தரப்பு அறிவித்துள்ளது. இங்கு தேசிய இன முரண்பாடு திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்பதும் அதன் பின்புலத்தில் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் செயற்படுகின்றன என்பதும் நீண்ட காலப் போராட்ட அரசியலில் இருந்தவர்களுக்குப் புரியாத விடயமல்ல.
.
தேசம், தேசியம், தன்னாட்சி போன்ற அரசியல் சொல்லாடல்களே தீண்டப்படாதவையாகக் கருதப்பட்டு அவைபற்றிப் பேசுவதையே இலங்கை அரசும் அதனை இயக்கும் ஏகாதிபத்திய நாடுகளும் திட்டமிட்டுத் தவிர்த்து வருகின்றன. இக் கோட்பாட்டு அரசியலின் நடைமுறை வடிவமாக இவற்றை பேசுவதையே நிராகரிக்கும் பேரினவாதக் கட்சிகள் தமது ஆதிக்கத்தையும் கருத்தியலையும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் செலுத்த ஆரம்பித்துள்ளன. வெற்றிடமான அரசியல் தலைமையை நிரப்பிக்கொள்ள திட்டமிட்டுச் செயற்படுகின்றன.

இதற்கான நுழைவாசலாக, மக்கள் மத்தியிலுள்ள வர்க்கம் சார்ந்த அடிப்படை முரண்பாட்டைக் கையாள ஆரம்பித்துள்ள, இலங்கையின் பிரதான முரண்பாட்டை நிராகரித்து அடிப்படை முரண்பாட்டைப் பிரதானப்படுத்தும் பேரினவாதக் கட்சிகள் தமது புதிய தந்திரோபாயத்தில் வெற்றியும் கண்டுள்ளன என்பது தான் இங்குள்ள அபாயம்.
மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது அன்றாடப் பிரச்சனைகள் பேசப்படுவதனூடாகவும் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதனூடாகவும் பாரிய சவாலான விடயங்களைச் சாதிப்பதற்காக அணிதிரட்டிக் கொள்ள முடியும் என்பது உண்மை. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் அதனைச் சாதிப்பதற்கான அரசியல் தலைமை இங்கு இருக்கிறதா என்றால் இல்லை என்பது உண்மையாகும்.
.
அடிப்படை முரண்பாடுகளாகக் கருதப்படும் பொருளாதாரம், உழைப்பு, தொழில் சார்ந்த அன்றாடப் பிரச்சனைகளில் தமது முழுக்கவனத்தையும் செலுத்துவதான தோற்றப்பாட்டை வழங்கும் பேரினவாதக் கட்சிகள் மக்கள் மத்தியில் ஒரு வகையான மயக்கமான சூழலை ஏற்படுத்துகின்றன. மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கான தற்காலிக சலுகைகளையும் வாய்ப்புக்களையும் அறிவிக்கும் இக்கட்சிகள் ஒருவகையில் மக்களை விலைக்கு வாங்கிக் கொள்கின்றன.

இத்தகைய விடயங்கள், தேசியம் சுய நிர்ணய உரிமை போன்ற அரசியல் கோட்பாடுகளுக்கு எதிரான பேரினவாதக் கோட்பாட்டை முன்னிறுத்தும் திட்டமிட்ட செயற்பாடாகவே கருதப்பட வேண்டும். பேரினவாதம் என்ற ஒடுக்குமுறைக் கருத்தியல் அழிக்கப்படாதவரை சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற அச்சம் சூழந்த சூழலில் பேரினவாதிகளது திட்டமிட்ட இச் செயற்பாடுகள் எதிர்காலத்தில் ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும்..

பேரினவாதக் கட்சிகளின் நேரடி முகவர்களாகச் செயற்படும் தமிழ் அரசியல் வாதிகளின் உடனடி நோக்கம் பாராளுமன்ற ஆசனங்கள் என்றாலும் அதன் மறுபக்கம் அரசியலில் சுய நிர்ணைய உரிமைக் கோட்பாட்டை அடியோடு துடைத்தெறியும் முயற்சியே என்பதுதான் வெளிப்படை.
இப் பேரினவாதக் கட்சிகளும் அதன் முகவர்களும் முன்வைக்கும் அரசியலுக்கு எதிரான உறுதியான அரசியல் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் கட்சிகளிடம் இல்லை என்பதே இங்கு துயர் மிகுந்த புறச் சூழலாகும்.
.
பேரினவாதக் கட்சிகள் மக்களின் அடிப்படை முரண்பாடான அன்றாடப் பிரச்சனைகளைப் பிரதானப் படுத்தி பிரதான முரண்பாடான தேசிய இனப் பிரச்சனையை மூடி மறைத்து சுய நிர்ணைய உரிமைக் கோட்பாட்டை அழிக்க முற்படுவது போலவே தமிழ் அரசியல் கட்சிகள் பிரதான முரண்பாட்டை மட்டுமே பிரதானப் படுத்தி அடிப்படை முரண்பாடுகளைத் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. மக்களின் அன்றாட வாழ் நிலை சார்ந்த பிரச்சனைகளோடு தொடர்புகளற்ற தமிழ்க் கட்சிகள் அவற்றைப் பேரினவாதக் கட்சிகளிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டன. இந்த நிலையில் மக்கள் தமிழ் அரசியல் கட்சிகளிடமிருந்து அந்நியப்படுத்தப்படுவதென்பது திட்டமிட்ட செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் பாராளுமன்றம் செல்வதையே தமது அரசியல் வழிமுறையாக வரித்துக்கொண்டுள்ள தமிழ்க் கட்சிகள் மக்களை அவர்களது அன்றாடப் பிரச்சனைகள் ஊடாக அணி திரட்டுவதையும் அவர்களைப் போராடப் பயிற்றுவிப்பதையும் முழுமையாகக் கைவிட்டுள்ள்ன. இவ்வாறான ஒரு சூழல் பேரினவாதத்தின் தமிழ் முகவர்களுக்கு போதுமான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளன.
இன்று வரைக்கும் வட மாகாணத்தின் எரியும் பிரச்சனைகளான மக்களின் தொழில் சார்ந்த பிரச்சனைகள், அந்நிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு, சுன்னாகம் அனல் மின் நிலையத்தின் கழிவு எண்ணையால் ஏற்பட்ட அழிவு, சம்பூர் அனல் மின்னிலையம் தொடர்பான பிரச்சனை, நீர், போதை மற்றும் கலாச்சாரம் சார்ந்த பிரச்சனைகள் போன்ற எதையும் கையாளத் தகுதியற்ற நிலையிலுள்ள தமிழ்க் கட்சிகள் தேர்தலுக்கான திகதியை மட்டும் குறித்துவைத்துவிட்டு ஏனைய அனைத்தையும் பேரினவாதிகளிடம் வழங்கியுள்ளன. இந்த நிலையில் இப் பேரினவாதக் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களிற்கு வலுச் சேர்ப்பதற்காக விஜயகலா மகேஸ்வரன் அங்கையன் போன்ற பாரளுமன்ற உறுப்பினர்களும் சுவாமிநாதன் போன்ற அமைச்சர்களும் வீதிக்கு இறங்கியுள்ளனர். எந்த அரசாங்கங்களால் தமிழ் பேசும் மக்கள் வாழ்வியல் நிர்மூலமாக்கப்பட்டதோ அந்த அரசாங்கங்களின் பிரதிநிதிகளாக அழிக்கப்பட்ட அந்த மக்களிடமே இவர்கள் இன்று செல்வதென்பது அம்மக்களிற்கும் அழிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கும் இழைக்கும் துரோகமாகும்.

ஆகவே இத்தகையவர்களாலும் இவர்கள் சார்ந்தோராலும்முன்னெடுக்கப்படும் பேரினவாத அரசியலை எதிர்கொள்ளவும், மக்களின் அன்றாடப் பிரச்ச்னைகள் ஊடாக தேசிய ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடவும் மாற்று அரசியல் முன்வைக்கப்பட வேண்டிய அவசரத் தேவை எம் முன் எழுந்துள்ளது,

இம் மாற்று அரசியலானது சுய நிர்ணைய உரிமைக்கான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைக்கும் அதே வேளை வர்க்கம் சார்ந்த அடிப்படை முரண்பாட்டைக் கையாளும் அரசியல் அடிப்படையை முன்வைக்க வேண்டிய தேவையைக் கொண்டுள்ளது.

பாராளுமன்ற அரசியல் வழிமுறை என்ற தோற்றுப்போன அரசியலை தவிர்த்து புதிய ஜனநாயகப் போராட்ட வழிமுறைகளை முன்வைக்க வேண்டிய அவசியத்தை இன்றைய அரசியல் சூழ்நிலை வலியுறுத்துகிறது. அடக்குமுறைகள் எம்மை நோக்கி வரும்வரை வாழாவிருப்பதற்கு பதிலாக எதிர்காலம் தொடர்பான இன்றைய அணிதிரட்டலுக்கான அரசியலை நோக்கி மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும். மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேசியம் என்பதை இனவாதமாக மாற்றும் அரசியலை நிராகரிக்கப்பட வேண்டும்.
இந்த மாற்று அரசியலானது தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் சமரச அரசியலுக்கு முற்று முழுதான மாற்றாக முன்வைக்கப்படவேண்டும்.

எம் மக்கள் கொடுத்த அளப்பரும் விலையென்பது வெறுமனே சலுகைகளுக்காகவும் அபிவிருத்திகளுக்காகவும் அல்ல உரிமைகளுக்காகவே என்ற விடயம் பேரினவாதிகளுக்கும் அவர்களைச் சார்ந்திருப்போருக்கும் ஆணித்தரமாகச் சொல்லப்படவேண்டும். இதன் மூலம் சந்தர்ப்ப வாத மற்றும் சமரச அரசியல் தளங்கள் பிரதியீடு செய்யப்படல் வேண்டும்.

அவ்வாறான அரசியல் முன்வைக்கப்படாத சூழலில் பேரினவாதம் எமது முற்றத்திலேயே செழித்து வளர ஆரம்பிக்கும். பின்னர் படிப்படையாக அப்பேரினவாதமானது தேவைக்கேற்ற வகைகளில் உருமாற்றப்பட்டு தேசிய சிறுபான்மை இனங்கள் மீது ஆட்சி அதிகாரங்களில் உள்ள சக்திகளால் காலத்திற்குக் காலம் கட்டவிழ்த்து விடப்படும் என்பது வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கும் பாடமாகும்.

Exit mobile version