Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தன்னார்வ நிறுவனங்களும்(NGO) சிவில் சமூகங்களும் – எரியும் உலகம்! : சபா நாவலன்

‘சோவியத்துக்கு பிந்திய உலகில் இதுகாறும் அடையாளம் மறுக்கப்பட்ட பலதரப்பினரும் தமது அடையாளத்தை உறுதி செய்யும் போக்கு இன்று வலுப்பெற்றுள்ளது.’ – அ.மார்க்ஸ்‘
‘பெரும்பான்மையான தன்னார்வ நிறுவனங்கள் அடையாள அரசியல் அடிப்படையில் இயங்குகின்றன. புதிய (பின் நவீனத்துவ) அரசியலுக்கு விலகிச் செல்வதற்கான அடிப்படையான இடம் இதுவே என வாதிடுகின்றனர்.’ – அரவிந்

 

ஆறு வருடங்களின் முன்னர் பதிவான கட்டுரை.. காலப் பொருத்தம் கருதி மீள் பதிவாகிறது…

மில்லியன் கணக்கில் பணத்தை வாரி இறைத்துக் கொண்டு தன்னார்வ உதவி நிறுவனங்கள் அல்லது அரசு சாரா அமைப்புக்கள் (NGO) மூன்றாமுலக நாடுகளில் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. வறிய நாடுகளின் வளர்ச்சியைச் சிதைத்து அந்நாடுகளைத் தமது கட்டுபாட்டுக்கு உட்படுத்தும் ஒரே நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்ட இந்த NGO என்ற கருத்தமைப்பும் அதன் செயற்பாடுகளும் மொத்த மனித குலத்தையும் பயங்கர அழிவிற்குள் இழுத்துச் செல்கின்றன. சிறிய பொருளாதார (Micro economy) உதவிகள், மனித உரிமைச் செயற்பாடுகள், ஜனநாயகம், பெண்ணியம், தலித்தியம் என்ற இன்னோரன்ன தலையங்கங்களின் கீழ் வறிய நாடுகளைத் தமது அடிமைகளாக மாற்ற விளையும் இவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் உலகின் சந்து பொந்துக்களெல்லாம் வியாபித்திருக்கின்றன.

‘அரசு சாரா’ இவ்வமைப்புக்கள் சமூக, அரசியல், விஞ்ஞான, மத மற்றும் சுற்றுச் சூழல் விவகாரங்களில் சர்வதேச சக்திகளாகச் செயற்படுகின்றன. இவ்வாறான அரசு சாரா அமைப்புக்கள் (NGO) மக்கள் அபிப்பிராயங்களையும் எண்ணங்களையும் மாற்றியமைப்பதில் மிகப்பெரும் பாத்திரத்தை வகிக்கின்றன’. (Ghils 1992 : பக்: 417-31) ( International Civil Society: INGOs in the international system ).

அதிகரிக்கும் ஆதிக்கம்:

கடந்த பத்தாண்டுகளாக புற்று நோய் போல வறிய மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட இந்த NGO களின் ஆதிக்கம் பனிப்போர் முடிவடைந்த காலகட்டத்திற்குச் சற்றுப் பின்ன்னதான பகுதியிலேயே உருவாகிவிட்டதெனலாம். ‘ NGO களின் அதிகரிப்பு பனிப்போர் முடிவடைந்த காலகட்டத்திலேயே உருவாகிவிட்டது. புதிய நிகழ்ச்சி நிரல் கொள்கை ( New Policy Agenda) என்ற திட்டத்திற்கு வறிய நாடுகளுக்கான உதவிகள் மட்டுமல்ல ( Organization for Economic Cooperation and Development) நாடுகளும் உட்படுத்தப்பட்டன. ‘ (Robinson : 1997 :பக்3) (Privatising the voluntary sector : NGO as public service contractors ). நாடுகளும் உட்படுத்தப்பட்டன. ‘ (Robinson : 1997 :பக்3) ( Privatising the voluntary sector : NGO as public service contractors).

பனிப் போர்க் காலத்திற்குப் பின்னர் நெருக்கடிக்குள்ளான உலக முதலாளித்துவத்தை மறுபடி தூக்கி நிறுத்த ‘உலக மயமாதல்’ என்ற புதிய முதலாளித்துவ மறு சீரமைப்பு தீவிரப் படுத்தப்பட்டது. இதன் பின்னர் வறிய நாட்டு மக்களையும் பொருளாதாரத்தையும் மட்டுமல்ல, அதற்கான அரசியலையும் அnமரிக்க அணியின் தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டத்தின் முக்கிய பகுதியாகவே இந்த NGOகள் செயற்படுகின்றன.

இது வரையில், மூன்றாமுலக நாடுகளின் அரச பொதுச் சேவையையும், அவற்றில் மக்களின் பங்கும் இந்நாடுகளில் ஏற்படுத்த வல்ல பொருளாதார மூலதன வளர்ச்ச்சியைக் கட்டுப்படுத்தி அழிவுக்கு உள்ளாக்குவதையே இந்த அமைப்புக்களின் பின்னணியிலுள்ள நோக்கமாக இருந்தது. உலக மயமாதலைத் தீவிரப்படுத்தி நாடுகளைச் சுரண்டும் அமைப்பு முறை உருவாக்கப்பட்ட பின்னர், இலாபமற்ற ஆனால் இலாபத்தை ஏகபோக முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் ஏற்படுத்தவல்ல புறச் சூழலை உருவாக்குவதே NGO களின் சந்தையை மையப்படுத்திய நோக்கமாகவிருந்தது.

‘புதிய நிகழ்ச்சி நிரல் கொள்கையின் (New Policy Agenda) தத்துவார்த்த அடித்தளமாக அமைந்தது நவ-தாராளவாதப் பொருளாதரக் கொள்கையும் இதாராளவாத ஜனநாயகக் கொள்கையுமே ( Moore: 1993 : 3) என்கிறார் ‘Good Governance? : Introduction’ என்ற தனது நூலில் திரு.மூர்.

NGO களைத் தவிர்த்தாலோ நிராகரித்தாலோ IMF இலிருந்து உலக வங்கியிலிருந்து, பணம் வழங்கும் செல்வந்த நாடுகலிலிருந்து யாருமே உதவி தரத்தயாராகவில்லை. உதவிகள் நிராகரிக்கப்பட்டு எகாதிபத்தியங்களால் மூன்றாமுலக நாடுகள் மிரட்டப்பட்டன. தவிரவும், ஏகாதிபத்தியங்கள் சொல்லும் அரசியல் முறை மட்டும் தான் இந்த நாடுகளில் நடைமுறைப் படுத்தப்படவும் நிர்ப்பந்திக்கப்பட்டன. ‘அவர்கள் சொல்லும் ஜனநாயகம் என்பதை ஏற்றுக் கொள்ளுமாறு மூன்றாமுலக நாடுகள் மீது நிபந்தனை விதிக்கப்பட்டது.’(Blair 1997:பக்23) ( Democratization and Civil Society: Relating theory to practice)

இன்றைய உலக மயமாதல் சூழலில் இரண்டு பிரதான காரணங்களை எதிர் கொள்ள வேண்டிய தேவை ஏகாதிபத்தியங்களுக்கு உருவாகின.
1. உலக மயமாதலின் மூலதனப் பரம்பலினூடாக உருவாகி வலுப்பெற வாய்ப்புள்ள தேசிய அரசுக்கள்.

2. வரலாற்றின் போக்கில் உருவாகவல்ல தேசியப் போராட்டங்களும் சோசலிசத்திற்கான போராட்டங்களும்.
‘புதிய நிகழ்ச்சிநிரல் கொள்கையின் (New Policy Agenda) இன் அடிப்படையிலான பொருளாதார நோக்கங்களிற்கு (Economic Goals) அடிப்படையாகக் கருதப்படும் ஜனநாயக மயப்படுத்தலும், மக்கள் சமூக (Civil Society) உருவாக்கமும் NGO களூடாக நடைமுறைப்படுத்தப்படும் புதிய திட்டங்கள் உருவாகின’. (Moore 1993).

இந்த சந்தர்ப்பத்தில் தான் குடிமைச் சமூகம் (Civil Society) என்ற கருத்தியலை ஏகதிபத்திய தத்துவவியலாளர்கள் முன்வைக்கின்றனர். இதனூடாகவே NGO களின் உருவாக்கம் நடைமுறைக்கு வருகிறது. குடிமைச் சமூகம் என்ற கருத்தாக்கமானது அமரிக்க எதிர்ப்பு – கிழக்க்கு ஐரோப்பிய நாடுகளிலிலேயே ரஷ்ய சார்பு அரசுகளை அழித்தொழிப்பதற்காக அமரிக்க சார்பு அரசுகளால் பயன்படுத்தப்பட்டது.

குடிமைச் சமூகம் (Civil Society):

குடிமைச் சமூகம் ஒன்றை உருவாக்குவதும் அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதும், நிர்வகிப்பதும் என்ற கோட்பாடானது NGO களால் 1980 இற்குப் பிற்பட்ட காலப் பகுதியிலேயே, அமரிக்காவும் அதன் உளவுப்படையான CIA உம் போலந்து ஹங்கேரி போன்ற நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த அனுபவங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. தனது நேரடியான ஆளுமைக்குள்ளும் ஆக்கிரமிபிற்குள்ளும் ஏகாதிபத்திய நாடுகள் ஏனைய நாடுகளை உட்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட இந்தக் கோட்பாடானது NGO களால் இன்று வறிய நாடுகளில் நடைமுறப்படுத்தப்படுகிறது.

ஆரம்ப கட்டத்தில் ஆபிரிக்க நாடுகளிலும், லத்தீன் அமரிக்க நாடுகளிலும், அமரிக்க அல்லது ஐரொப்பிய சார்பு சர்வாதிகாரிகளையும் ராணுவ ஆட்சியாளர்களையும் பலப்படுத்தும் நோக்கத்தில் மக்கள் சமூகக் கருத்து உபயோகப்படுத்தப்பட்டது. இதற்குச் சற்றுப் பின்னதான காலப்பகுதியில் பங்களாதேஷ் போன்ற ஆசிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டன. பல நாடுகளில் கம்யுனிசத்திற்கு எதிரான அரசுகளுக்கு ஆதரவு என்ற தலையங்கதுள் மக்கள் சமூகங்கள் ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்டன. பங்களாதேஷ், ஸாயீர், கென்யா, சிலி, எத்யொப்பியா இவ்வாறான கட்டுமானங்களூடாகச் சிதைக்கப்பட்ட நாடுகளூக்குச் சிறந்த உதாரணங்கள்.

ஒரு புறத்தில் உள்நாட்டு அல்லது தேசிய அரசுக்கள், மறுபுறத்தில் அரசின் ஆட்சிக்குட்பட்ட மக்கள். இந்த இரண்டிற்குமிடையில் கிராம சபைகள், மக்கள் சபைகள், ஆலயங்கள், திருச்சபைகள், ஜனநாயக அமைப்புக்கள் என்பன அமைந்திருந்ததன. இவைகள் அரசு-மக்கள் இணைப்பு சக்திகளாகத் திகழ்ந்தன. இந்த இடைநிலை அமைப்புக்கள் குறித்தளவு சக்தி படைத்தவையாகவும், பல சந்தர்ப்பங்களில் அரசாங்கதின் மீது ஆளுமை செலுத்த வல்லனவாகவும் அமைந்திருந்தன. இவ்வாறான அமைப்புக்களை ஏகாதிபத்திய நாடுகளாலும், பெரும் பண முதலைகளாலும் உதவி வழங்கப்படும் NGO களால் பிரதியீடு செய்வதன் ஊடாகவும், அல்லது மாற்றங்களை ஏற்படுத்துவதனூடாகவும், எகாதிபத்திய நாடுகள் தமது கட்டுப்பாட்டுள் கொண்டு வந்தன. இதனூடாக இந்த நாடுகளின் அரசையும் அரசமைப்பையும் தமது ஆதிக்கதிற்குட்படுத்தும் செயற்திட்டமே NGO களின் பிரதான பயன்பாடாக அமைந்தது. இவ்வைகையான அமைப்புக்கள் தான் குடிமைச் சமூகம் என அழைக்கப்படலாயின.

‘மனிதர்கள், அவர்களுடைய குடும்பங்கள் ஆகியவற்றிற்கும் அரசிற்குமிடையிலான இடையிலான இடைவெளியைப் பிரதியிடுவதுதான் மக்கள் சமூகத்தின் வரையறை.’ (Blair 1997 24-25).

இவ்வாறு ஏகாதிபத்தியங்கள் NGO என்ற பெயரில் மக்கள் சமூகங்கள் மக்களை அவற்றின் அடிமைகளாகப் படிப்படியாக மாற்றிச் செல்கின்றன. இறுதியில் அரசின் அதிகாரங்களை தமது கைகளுக்குப் படிப்படியாக மாற்றிக் கொள்கிறது. அரசுகளின் அனைத்து வேலைத் திட்டங்களிலும் தலையிட்டு, அவற்றை உருவாக்கிய ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிகழ்ச்சி நிரலுக்கு உகந்ததாக மாற்றிக் கொள்கிறது.

பார்தா சட்டர்ஜீயும் சார்ல்ஸ் ரெய்லரும் Model of civil society என்ற நூலில் மக்கள் சமூகத்திற்கான மூன்று நிபந்தனைகளை முன்வைக்கின்றன.
1. அரசாங்கம் சாரா கூட்டுக்களை உருவாக்கல்.

2. இவ்வகையான அரசு சாராக் கூட்டமைப்புக்களை இறுக்கமான அமைப்பாக்கல்.

3. இவ்வ்மைப்புக்களூடாக அரச கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்தல்.
(Taylor and Saterjee 1990 : 90-118) ஆக NGO களினுடாகக் கட்டமைக்கப்படும் மக்கள் சமூகத்தை அரசின் மீது செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக, அரசைத் தமக்கேற்ற வகையில் மாற்றியமைக்கும் கருவியாக, ஏன் புதிய அரசுக்களைக் கூட உருவாக்கும் ஆயுதமாகப் பலப்படுத்துவதே ஏக்கதிபத்திய அரசுகளதும், மூலதனச் சொந்தக் காரர்களதும், அதன் தத்துவார்த்த கர்த்தாக்களதும் பிரதான நோக்கமாகும்.

குடிமைச்சமூகங்களை உருவாக்கும் செயற்பாடு:

ஏற்கனவே உருவாகியிருந்த கிராம மட்ட அமைப்புக்களான சன சமூக நிலையங்கள், அவற்றின் கூட்டமைப்புக்கள், பெண்களமைப்புக்கள், திருச்சபைகள், மத அமைப்புக்கள், கோவில்கள் போன்றவற்றைப் பலப்படுத்தல் என்பதும், மறு சீரமைப்பதும், அவற்றை அமைப்பு மயப்படுத்தலும் ஒரு புறத்திலான NGO களின் வேலைத்திட்டங்களாக அமைய, மறுபுறத்தில் பல்லகலைக் கழகங்களூடாகவும், ஆய்வு அமைப்புக்களூடாகவும் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளூடாக மிக உயர் வடிவிலான மக்கள் சமூக கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வகையான ஆய்வுகளுக்கென்றே பெருந்தொகைப் பணத்தை மேற்கத்தய அரசுக்களும் உதவி நிறுவனங்களும் வாரியிறைக்கின்றன.

இலங்கையில் ICES, CPA, MARGA போன்ற ஆய்வமைப்புக்கள் மிகப் பெரியளவிலான பண உதவியைப் பெறும் அமைப்புக்களாகவும், மக்கள் சமூக உருவாக்கத்திற்கான வழிமுறைகளைக் கண்டறியும் ஆய்வு நிறுவனங்களாகவும் அமிந்திருக்கின்றன.

புதிய ஆய்வுகளூடான அமைப்புக்களாக, வேறுபட்ட சமூகப் பிரச்சனைகளைக் கையாளும் அமைப்புக்களாக மக்கள் சமூகங்கள் வளர்ந்துள்ளன. ஏற்கனவே நீண்டகாலமாக மக்கள மத்தியிலிருந்த அமைப்புக்களை உள்வாங்கியும் அழித்தும் புதிய அமைப்புக்களை உருவாக்கியும் மக்கள் சமூகங்கள் சமூகப் பிரச்சனைகளைக் கையாளும் அமைப்புக்களாக மாற்றம் பெற்றன. மனித உரிமை அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், தலித் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள், நலன்புரிச் சங்கங்கள், ஜனநாயக அமைப்புக்கள், சமாதான ஒன்றியங்கள், தகவல் மையங்கள் போன்ற பன்முகத் தன்மை கொண்ட வேறுபட்ட அமைப்புக்கள் தன்னார்வ – அரசு சாரா NGO களாக பரிணாமமடைந்ததன. மக்கள் மத்தியிலான முரண்பாடுகளை முன் வைத்து இவ்வமைப்புக்கள் NGO களாக உருவெடுத்துள்ளன.

மார்க்சியர்கள் மத்தியில் மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைக் கையாள்வது தொடர்பாக ஆழமான தெளிவான ஆய்வு அருகிப்போன துரதிருஷ்ட வசமான சூழலில், ஏகாதிபத்தியங்களின் வால்களான NGO கள் அவற்றைக் கையிலெடுத்துக் கொண்டு முழு உலகையும் சீரழித்து வருகின்றன. வறிய நாடுகள் விஞ்ஞானம் தொடர்பான முடிபுகளுக்கு வருவதற்குக் கூட இந்த NGO களின் கைதான் மேலோங்கியுள்ள நிலை காணப்படுகிறது.

‘அரசியல் சார்ந்த விஞ்ஞான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் குடிமைச் சமூகம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணங்களாக சுற்றுச் சூழல் அழிவு, உயிரியற் தொழில் நுட்பம் என்பவற்றைக் குறிக்கலாம்’ (List 1994 730-760). ( Feminist critique of science and politics and the ‘civil society’)

முரண்பாடுகளைத் தூண்டும் தன்னார்வ அமைப்புக்கள்:

சமகால சமூக விஞ்ஞானிகளான Jurgen, Habermas போன்றோர் மக்கள் சமூகக் கருத்தினூடாக எவ்வாறு அரசிற்கும் மக்கள் மீதான அதன் ஆளுமைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுத்தப்படுகிறது என்றும், மக்கள் மத்தியிலான முரண்பாடு எவ்வாறு கூர்மைப்படுத்தப்பட்டு ஏகாதிபத்தியங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் மிகத் தெளிவாகவே விபரிக்கின்றனர்.

இவ்வாறான முரண்பாடுகளைக் கண்டறிந்து பயன்படுத்தும் போக்கானது பல சந்தர்ப்பங்களில் நேர் விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்ததாகத் தென்படினும், ஏகாதிபத்தியப் பணமுதலீட்டில் உருவாகும் இந்த NGO கள் சீர்குலைவுகளை மட்டுமே ஏற்படுத்தி வருகின்றன.

உள்ளூர் சீர்திருத்தவாதிகள், பின்நவீனத்துவ வாதிகள், இடதுசாரி புத்தி ஜீவிகள் போன்ற தேசிய வளர்ச்சிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் ஆதரவு சக்திகளாக அமையக்கூடிய இவ்வாறான மக்கள் சமூகக் கருத்தமைப்பினூடாக உள்வாங்கப் படுகின்றனர். இவர்களே NGO களின் கர்த்தாக்களாக ஏகாதிபத்தியப் பணத்தால் உள்வாங்கப்படுகின்றனர்.

இலங்கையில் அறியப்பட்ட பின்நவீனத்துவ வாதியான ராதிகா குமாரசுவாமி இன்றைக்கு அன்னிய நிதியில் உருவான NGOகளின் முக்கிய புள்ளி. ஜெயதேவ உயாங்கொட, சுனிலா அபயசேகர போன்ற இடதுசாரிப் புத்தி ஜீவிகள் மேலும் குறித்துக் காட்டத்தக்கவர்கள்.

சார்ல்ஸ் ரெயிலரும் சட்டர்ஜீயும் தமது நூலில் கோடிடுவதுபோல சிவில் சமூகங்களான NGOகளின் அடிப்ப்டையான நோக்க்கங்களில் ஒன்று அரசு அதிகாரத்தை NGO ஊடாகப் பறித்தெடுத்து அதனை ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்வதாகும். ஆனால் சிவில் சமூகத்தை உருவாக்கும் நிகழ்ச்சிப் போக்கில் மூன்று பிரதான மாற்றங்களுக்கு முழுச் சமூக அமைவும் உட்படுத்தப்படுகின்றது.

1. மக்கள் மத்தியிலான பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் கூர்மைப்படுத்தி அவற்றை அமைப்பாக்கல்.
2. அரச அதிகாரத்தின் பலமின்மையாக்கல்.
3. அரச அதிகாரத்தை முற்றாக NGO கைகளிற்கு மாற்றுதல்

இந்த வகையில் அரசியலற்ற குடிமைச் சமூகங்களை உருவாக்குதலுக்கும் அல்லது ஏற்கனவே உருவான குடிமைச் சமூகங்களைப் பயன்படுத்தலுக்கும் பாரிய நிதியுதவி வழங்கப்படுகின்றது. தலித்திய அமைப்புக்கள், பெண்களமைப்புக்கள், ஜனநாயக அமைப்புக்கள், சமாதான ஒன்றியங்கள் போன்ற இன்னோரன்ன அமைப்புக்கள் இந்த வகையான செயற்பாடுகளுக்குப் பயன்பட்டுப்போகும் சில அமைப்புக்களாகும்.

‘ தமது அரசியலற்ற தன்மையின் மூலம் தன்னார்வ நிறுவனங்களின் அமைப்பும் இயல்பும் ஏழை மக்களை முடக்கி அவர்களிடமிருந்து அரசியலை அகற்றும் வேலையைச் செய்கின்றன. ஒடுக்கப்பட்டோர், அதீத வறுமை, பாலின அல்லது இனவேறுபாடு போன்ற மேலோட்டமான அறிகுறிகளையே இவர்கள் விவாதிப்பர்.’ (அரவிந் : 2002 : 317- 320) என்று ‘உலகமயமாக்கல்: அடிமைத்தளையில் இந்தியா’ தனது நூலில் குறிப்பிடுகிறார் அரவிந்.

‘ஏனெனில் ‘தமிழர்’ என்கிற விரிந்த அடையாளத்தின் கீழ் ஒற்றை அடையாளத்தைச் சூட்டிக் கொள்வதைக் காட்டிலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழர்களும் முஸ்லிம்களும் தமது தனித்துவத்தைப் பேணுவதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர். பிரதேச மற்றும் இன, மதரீதியானயான இந்த அடையாள உறுதிப்பாடு இன்று மக்கள் மத்தியிலும் ழுமையாக்கப்பட்டு விட்டது. தமிழ் பேசும் மக்களிடையே உள்ள இந்த உள் வேறுபாடுகளையும் பிரதேச, மத மற்றும் சாதிரீதியிலான நீண்ட கால அதிருப்திகளையும் கணக்கில் கொள்ளாதது, இன்றைய தேக்கத்தின் பிரதான காரணங்களில் ஒன்று’ (அ.மார்க்ஸ் : சத்தியக்கடதாசி )

அ.மார்க்ஸ் மட்டுமல்ல பல முன்னமே குறிப்பிட்டது போல பல இடதுசாரி அறிவுஜீவிகள ஏகாதிபத்தியம் உருவாக்கிக் கொடுத்த, குடிமைச் சமூகங்கக் கருத்தாடலுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கின்றனர்.

மார்க்சியம் தவிர்ந்த அனைத்துத் தத்துவங்களையும் துணைக்கிழுக்கும் இந்த முன்நாள் இடது புத்திஜீவிகள், பின் நவீனத்துவம் போன்ற திரிபுகளை முன்வைத்து குடிமைச் சமூகம் என்ற ஏகதிபத்திய கருத்தாக்கத்தை நியாயப்படுத்துகின்றனர்.
எறிகணைகள் இணையத்திற்கு அ.மார்க்ஸ் வழங்கிய செவ்வியொன்றில் தலித்தியத்திற்கு பின்நவீனத்துவத்துவத்தினூடாக மட்டுமே தத்துவார்த்த வடிவம் கொடுக்க முடிந்ததாக குறிப்பிடுகிறார்.

பின்நவீனத்துவத்தைப் பொருத்தும் ஏகாதிபதியக் கோட்பாடு:

பின் நவீனத்துவத்தின் இரு பெரும் கோட்பட்டுக் கிளைகள் மார்சியத்திற் கெதிரான குடிமைச் சமூகக் கருத்தமைவுடன் ஒருங்கி விடுகின்றன.

1. அதிகாரத்திற்கெதிரான மையமற்ற சிந்தனை முறையும் அதற்கான அமைவும்.

2. அடையாளங்களை கூர்மைப்படுத்தி முன் நிறுத்தும் போக்கு.

அரச அதிகாரத்தைச் சிதைக்கும் தன்னார்வ நிறுவனங்கள் பின் நவீனத்துவத்தின் அதிகாரம் பற்றிய சொல்லாடல் என பூக்கோவின் ஆய்வுடன் ஒருங்கு சேர்கிறது. இதனால் அரசியலற்ற தலித்திய, பெண்ணிய சீர்திருத்த அமைப்புக்கள் அரச அதிகாரத்தை சிதைக்கும் அதிகாரத்திற்கெதிரான அமைப்புக்களாக பின் நவீனத்துவ வாதிகளாலும், இதுவே அரச அதிகாரத்தை சிதைத்து NGOகளுக்கு தாரை வார்க்கும் நிகழ்ச்சி நிரலின் பகுதியாக ஏகாதிபத்தியங்களும் ஒரே புள்ளியில் சந்திதுக்கொள்ள, பின் நவீனத்துவம் எகாதிபத்தியச் சுரண்டலுக்கு தத்துவார்த்த முலாம் தருகிறது.

‘பெரும்பான்மையான தன்னார்வ நிறுவனங்கள் அடையாள அரசியல் அடிப்படையில் இயங்குகின்றன. புதிய (பின் நவீனத்துவ) அரசியலுக்கு விலகிச் செல்வதற்கான அடிப்படையான இடம் இதுவே என வாதிடுகின்றனர்.’ (அரவிந் 2002 பக்: 318) (உலகமயமாக்கல் : அடிமைத்தளையில் இந்தியா).

அரசிற்கெதிரான அழுத்தக் குழுக்களாகத் தென்படுகின்ற இந்த ஏகாதிபத்தியத்தின் வால்கள் பற்றி பீ.ஏ.காதர் பிவருமாறு விபரிக்கிறார். ‘எங்கு அரசு இல்லையோ அங்குதான் சிறந்த அரசு இருக்கின்றது என்பது தான் ஏகாதிபத்தியங்களின் சித்தாந்தம். தொழிலாளர் போராட்டங்களை நசுக்கி தமது மூலதனத்திற்கு பாதுகாப்பைத் தருவதைத் தவிர ஏனைய அனைத்துத் துறைகளையும் வளங்களையும் ஏகாதிபத்தியங்களின் கையில் ஒப்ப்படைக்க வேண்டுமென்பதே இதன் தார்ப்பரியமாகும்.’ (பீ.ஏ.காதர்:) ( சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்).

ஆழமான அரசியலற்ற, பின்னவீனத்துவத்தால் பூசி மெழுகப்படும் தன்னார்வ தலித், பெண்கள், மாணவர், ஜன நாயக அமைப்புக்கள் இவ்வரசியலைப் புரிந்து கொள்வதில்லை. பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தாம் ஏகாதிபத்தியங்களின் முகவர்களாகச் செயற்படுகிறோம் என்பது கூடப் புரிவதில்லை.

பின்னவீனத்துவம் போன்ற செத்துப் போன தத்துவங்களுடன் ஆர்ப்பட்டமின்றிக் கைகோர்த்துக் கொள்ளும் போக்கில் எகாதிபத்தியங்கள் தமது ம்ற்றுமொரு நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொள்கின்றன.

மார்க்சியத்திற்கு எதிர்:

மூலதன நெருக்கடியின் பின்னதாக மார்க்சிய அடிப்படையிலான போராடங்களையும் போராட்ட அமைப்புக்களையும் சீர்குலைத்தல் என்பதே அதுவாகும்.

1. மனிதாபிமானிகளும், ஜனநாயக வாதிகளும், புத்தி ஜீவிகளும் NGO களின் பணியாளர்களாக அதிஉயர் ஊதியத்துடன் உள்வாங்கப்படுகின்றனர். இதனூடாக, ஏகதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும், மக்கள் யுத்தங்க்ளையும் தலைமை தாங்கவல்ல அல்லது ஆதரவு சக்திகளாக உருவாகும் சாத்தியமுள்ள அறிவு ஜீவிகளும் இயங்கு சக்திகளும் NGO களால் உள்வாங்கப்படுகின்றனர்.

2. குடிமைச் சமூகக் கோட்பாட்டுடன் கருத்தொற்றுமை கொள்ளும் பின் நவீனத்துவம் போன்ற ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரான கோட்பாடுகளுடன் கைகோர்த்துக் கொள்ளும் ஏகாதிபத்தியம் மார்க்சியத்திற்கு எதிராகவும், ஒடுக்கப்படும் மக்களின் அரசியலுக்கெதிராகவும் இக்கோட்பாடுகளை முன் நிறுத்துகின்றன. NGOகள் மிகவும் தெளிவான திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே தமது வேலை முறைகளை நகர்த்திக் கொள்கின்றன.

இலங்கை தேசிய இனச் சிக்கலில் NGOகள்:

இலங்கை இனப்பிரச்சனை சிக்கல்கள் நிறைந்ததாக மாறிய காலகட்டத்தின் பின்னர், குடிமைச் சமூகத்தின் இனப்பிரச்சனையிலான பங்கு என்பது அன்னிய சக்திகளால் வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அன்னியப் பண உதவி பெறும் NGOகளும் இந்தக் கருத்தை வலியுறுத்தின.

இதில் நான்கு பிரதான வேலை திட்டங்களை பரவலாக எல்லா NGOகளின் நிகழ்ச்சித் திட்டத்திலும் காணலாம்.
1. இலங்கையை ஜனநாயகப்படுத்தல்.
2. மனித உரிமைக்குக் குரல் கொடுத்தல்.
3. பேச்சுவார்த்தையையும் யுத்த நிறுத்தத்தையும் முன்வைத்து குடிமைச் சமூகங்கள் அரசிற்கு அழுத்தம் கொடுத்தல்.
4. தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் போது அரசியலற்ற மக்கள் சமூகங்கள் தமது பங்கை அதில் வலியுறுத்தல்.

SLDF, TIC, INSHA, INSD, SAP போன்ற பல தன்னார்வ NGOகள் குடிமைச் சமூகம் என்ற ஏகாதிபத்தியக் கருத்தாடலை முன்னிறுத்திப் பல பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இவற்றிக்குச் சிறந்த உதாரணங்களாக புலம் பெயர் தன்னார்வ அமைப்புகளையே கொள்ளலாம்.

1. INSD பல சந்தர்ப்பங்க்ளில் குடிமைச் சமூகத்தை முதன்மைப்படுத்தி சந்திப்புக்களை ஒழுங் செய்துள்ளது.
2. SAP இன் இனையத் தளங்கள் முழுவதுமே குடிமக்கள் சமூகக் கருத்தமைவினது பிரச்சாரங்களைக் காணலாம். http://www.sapcanada.org/index.html
3. அந்நிய நிதியில் இயங்கும் ஆய்வமைப்பான MARGA Sri Lanka குடிமைச் சமூகம் பற்றி பல ஆய்வுகளை முன்வைக்கின்றது. http://www.margasrilanka.org/
4. SLDF அமரிக மனித உரிமை அமைப்பான Human Rights Watch உடன் மனித உரிமைப் பிரச்சாரங்களையும் மற்றும் குடிமைச்சமூகப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டிருப்பதைக் காணலாம்.
(SLDF members sought to make a contribution in solidarity with civil society efforts within Sri Lanka – Lines-magazine.

The Sri Lanka Democracy Forum (SLDF), a nongovernmental organization made up largely of Tamil diaspora, issued a statement in July calling for a “fundamental revision” of the Action Plan “given the accentuated vulnerability of the newly released, and the unrelenting brutality of LTTE recruitment.” Specifically, the SLDF called on UNICEF to exert stronger efforts to protect children from re-recruitment; to work with a wider range of actors, including grassroots community-based groups; and to work more closely with families and provide them with stronger support – Human Rights Watch)

கொழும்பில் சர்வதேசிய உதவிகள் தொடர்பாக ளுடுனுகு கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இங்கும் NGO களுக்கான சர்வதேசிய பண உதவி பற்றிப் பேசப்பட்டது. (http://www.medico-international.de/en/projects/srilanka/watch/20070725sldf3.pdf) இந்தப் பிரதான நான்கு நோக்கங்களையும் திருப்தியாக்கும் ஏனைய செயற்பாடுகளையும் விரிவாகக் காணலாம்.
-கிழக்கு முன்னணி உருவாக்கப்பட்டு அதனூடாகக் கிழக்குப் பிரிவினையும் கிழக்கு குடிமைச்சமூகமும் உருவாக ஊக்கப்படுத்தப்பட்டது.
-தலித் முன்னணி என்ற பிரான்சிலிருந்து உருவான அமைப்பு தமது மக்கள் சமூகக் கருத்தை முன்வைத்து பல சந்தர்ப்பங்களில் சிறீ லங்கா அரச தீர்வுத்திட்டத்தில் தனது பங்கை வலியுறுத்தியது.

மேலும், சேவா லங்கா, Sinhala – Tamil women’s forum, Rural development foundation, Students forum for freedom போன்ற வெளி நாட்டு உதவி பெறும் எல்லா அமைப்புக்களும் குடிமைச் சமூகத்தை முதன்மைப்படுத்தும் வேலைத்திட்ட அடிப்படையில் களமிறங்கியுள்ளன.

குடிமைச் சமூகத்தின் பங்குபற்றலின்றி 13வது திருத்தச் சட்டம் என்பதை நடைமுறை படுத்தலே தனது தீர்வு முறை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்த வேளையில் மேற்குறித்த எல்லா NGO சிவில் சமூகங்களுமே தமது எதிர்ப்பை அவரவர் வழிகளில் வெளிப்படுத்தினர்.

NGO கள் வியாபாரிகளுக்கே:

உலகின் முதலாவது பணக்காரராகப் பல ஆண்டுகள் வலம்வந்த மைக்ரோ சொகுப்ட் நிறுவனத்தின் பிரதான பங்குதாரரான பில் கேட்ஸ் ‘ஆக்கபூர்வ முதலாளித்துவம்’ (Creative Capitalism) என இந்த பணம் வழங்கலை அழைகிறார். (Time August 11).

இதே TIME சஞ்சிகையில் How to Fix Capitalism என்ற பில் கேட்ஸ் எழுதியுள்ள கட்டுரையில் NGO பணம் வழங்குவதனூடாக எவ்வாறு முதலாளித்துவத்தை வாழவைப்பது என விபரிக்கிறார்.

இவ்வாறான பெரு முதலாளிகளும், ஏகாதிபத்திய நாடுகளும் உள்ளூர் NGO ஏஜன்டுகளூடாக ஏற்படுத்தும் தமது சந்ததைக்கும் சுரண்டலுக்குமான அரசியற் சூழல் வறிய மக்களை மேலும் மேலும் வறுமையின் விழிம்பிற்குள் அழுத்திச் செல்கிறது.

மேற்கத்தைய, ஏகாதிபத்திய நாடுகளும், அவர்களுடன் இணைந்த பண முதலைகளும் வாரி இரைக்கும் பணம் மக்கள் மீது அக்கறை கொண்ட அடிப்ப்டையிலல்ல. மேலும் மேலும் அவர்களைச் சுரண்டி அடிமைகளாக்கும் நோக்குடன்மைந்ததே.

இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், கென்யா போன்ற நாடுகளின் NGOகள் 80 இலிருந்து 90 வீதமான நிதி வழங்கலுக்கு மேற்கத்தைய நாடுகளையே தங்கியுள்ளது.(IBID:7).

கிழக்கைரோப்பிய அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட குடிமைச் சமூகம், சிறந்த ஆளுனர்கள் போன்ற கருத்தாக்கங்கள், மக்களின் சிந்த்னை முறையை, கலாச்சாரத்தை, மாற்றியமைப்பதிலும் மிகப்பெரிய பங்காற்றுகிறது என்றும், இவ்வாறானவொரு நிகழ்ச்சிப் போக்கினூடாகவே போலந்து மேற்கைரோப்பிய சிந்தனை வட்டதுள் இழுத்து வரப்பட்டதென்றும் நிறுவுகின்றனர் Bernstein, Politi ஆகியோர்.(Bernstein, Politi :1996). ஏகாதிபத்தியங்களின் வால்களான இவ்வகையான சர்வதேச தன்னார்வ அமைப்புக்களுக்கெதிரான அரசியல், ததுவார்த்தப் போராட்டம் என்பது இன்றைய சூழலில் இன்றியமையாததாகும்.

Exit mobile version