கட்மண்டூவில் தண்ணீர் வசதிகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. உல்லாசப் பயணிகளின் சொர்க்க புரியான நேபாளத்தில் நட்சத்திர விடுதிகள் தவிர அனைத்துப் பிரதேசங்களும் இருளில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சனியன்று நடந்த பேரவலத்தின் பின்னரும் இன்று வரை ஆங்காங்கு நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் கட்மண்டூவில் மக்கள் தெருக்களில் இரவும் முழுவதும் கூடியிருப்பதாக நேபாளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்டுக்கள் மன்னராட்சியை தகர்க்கும் வரை மன்னரின் தனிப்பட்ட சொத்தாகத் திகழ்ந்த நேபாளம் என்ற நாட்டில் பெரும்பாலான கட்டடங்கள் தற்காலிகத் தங்குமிடங்கள் போன்று செங்கல் அடுக்குகளால் கட்டப்பட்டிருந்தன. நில நடுக்கத்தால் இலகுவாகத் தகர்ந்து போகும் நிலையிலேயே இக்கட்டடங்கள் காணப்பட்டதால் கட்மண்டூ, தம்பெல், பக்தாபூர் போன்ற பகுதிகள் தூசு மண்டலாமாகக் காணப்படுறது.
நேபாளத்தில் மாவோயிஸ்டுக்கள் நடத்திய ஜனநாயகப் புரட்சிக்குப் பின்னதாக மன்னரின் மாளிகை உணவு விடுதி மற்றும் பல்பொருள் அங்காடிகளாக மாற்றப்பட்டிருந்தன. நில நடுக்கத்தில் மன்னரின் மாளிகைக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்பது மன்னராட்சியின் கோரத்தை எடுத்துக்காட்டுகின்றது.
இந்திய அரசின் அடிமை நாடாக நேபாளம் இருந்துவந்தது. நேபாளம் ராமனின் மனைவி சீதைக்குச் சீதனமாகக் கொடுக்கபட்டதாக நேபாளத்தில் இதிகாசக் கதைகள் கூறுகின்றன. நேபாளப் பள்ளிகளில் இந்து மதப் பாடங்களிலும் இப்படியே கற்பிக்கப்படுகிறது. சாதிகளால் பிளவுண்டுள்ள நேபாள சமூகத்தில் சிறுபான்மைப் பிராமணர்களே ஆதிக்கத்திலுள்ளனர்.
மன்னர் மற்றும் மன்னராட்சியைச் சுற்றியிருந்த மேட்டுக்குடி நேபாளிகள் தமது அமெரிக்காவில் உயர்கல்வி கற்பவர்களாகவிருந்தனர். கட்மண்டூவைச் சுற்றியுள்ள தனியார் பள்ளிகள் மேற்கு நாடுகளின் விலையிலேயே கல்வியை விற்பனை செய்கின்றன
நேபாளப் புரட்சி நிறைவுற்றதும் அமெரிக்க ஆதரவு தன்னார்வ நிறுவனங்கள்(NGO) நேபாளத்தைச் சூழ்ந்து கொண்டன. அரச அதிகாரத்தின் ஒரு பகுதியை உதவி என்ற பெயரில் தமது கைகளில் எடுத்துக்கொண்ட தன்னார்வ நிறுவனங்கள் நேபாளத்தை மீண்டும் சிதைக்க உதவின. இன்று நேபாளத்தில் போதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாமலும், நிர்வாகக் கட்டமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமலும் தன்னார்வ நிறுவனங்கள் ஆட்சி செலுத்த ஆரம்பித்தன. அண்ணளவாக 45 ஆயிரம் தன்னார்வ நிறுவனங்களின் ஆட்சியின் கீழ் நேபாளம் இயக்கப்படுகின்றது. மாவோயிஸ்டுக்கள் நடத்திய ஜனநாயகப் புரட்சியின் பலனைத் தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக அமெரிக்கா அறுவடை செய்துகொண்டது.
இதனால் நேபாளத்தில் கிராமங்கள் வரையிலான அரச நிர்வாக அலகுகள் இல்லை. இயற்கை அழிவுகள் ஏற்படும் போது மக்களின் அவரச உதவிகளைக் கையாள்வதற்கு அரசு தகமையற்ற நிலையிலேயே உள்ளது. வெளி நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் நிவாரண உதவிகளைக் கூட மக்களிடம் எடுத்துச்செல்ல இயலாத நிலையிலேயே அரச நிர்வாகம் உள்ளது. அரசைக் கேள்வி கேட்கவோ எதிராகப் போராடவோ தன்னார்வ நிறுவனங்கள் பயிற்றுவிப்பதில்லை.
தங்கி நிற்கும் சமூகத்தையே அவை உருவாக்கின இதனால் ஊழல் மலிந்த நாடு ஒன்றையே மன்னராட்சிக்குப் பிந்திய ஆட்சி நடத்திவந்தது. புதிய மக்களின் தேவைக்கேற்ற கட்டுமானப் பணிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. மலைப்பகுதிகளைக் கொண்ட நேபாளத்தில் போதிய பாதுகாப்பின்றிக் கட்டப்பட்டிருந்த அனைத்துக் கட்டடங்களும் மண்ணோடு மண்ணாகின.
எரி பொருட்கள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதால் நில நடுக்கம் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் இந்தியாவிலிருந்து உணவு மற்றும் எரிபொருட்கள் வருவதற்குத் தாமதமாகியுள்ளது. இந்தியா எரிபொருட்களை மட்டுமல்ல, அரசியலையும் இராணுவத்தையும் கூட நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்கிறது. நேபாள இராணுவத்தை காலனியத்திற்குப் பிந்திய காலம் முழுவதும் இந்தியாவே பயிற்றுவித்தது. நேபாள இராணுவத் தளபதிகள் டெல்லியில் சொத்துக்களைக் குவித்துக்கொண்டார்கள். இந்திய அரசும் இச் சொத்துக்குவிப்பிற்கு துணை போனது.
சூறாவளி, நில நடுக்கம் போன்றவற்றால் ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா போன்ற நாடுகள் தாக்கப்படுவதுண்டு. ஆனல் அங்கெல்லாம் இவ்வளவு தொகையான பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. அதற்கான திட்டமிடலும் கட்டுமானமும் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்கும். நேபாளத்தின் நிலைமை வேறானது 1934 ஆம் ஆண்டில் நேபாளத்தில் நில அதிர்வு அழிவுகளை ஏற்படுத்தியிருந்தும் திட்டமிடப்பட்ட முறையில் நேபாளம் உருவாக்கப்படவில்லை.
நில நடுக்கம் ஆயிரக் கணக்கில் உயிர்களைப் பலி கொண்டமைக்கு நேபாளத்தைப் பலவினப்படுத்திய இந்தியாவும் அமெரிக்க ஏகாதிபதியமும் அவற்றின் கைக்கூலிகளுமே பொறுப்பானவர்கள்.