தமிழக மாணவர்களின் கழுத்தை நெரிக்கும் நீட் தேர்வு எனும் கயிறு: வி.இ.குகநாதன்
இனியொரு...
இலங்கையில் ஒரு அனிதா (அனிதா ஜகதீஸ்வரன்-மகாஜனாக்கல்லூரி) கோலுன்றிப் பாய்தலில் மற்றொரு தேசிய சாதனையினைப் படைத்த அதே காலப்பகுதியில் தமிழ் நாட்டில் மற்றொரு அனிதா (அனிதா சண்முகம்-அரியலூர்)தனது மருத்துவராகும் கனவு நனவாகாமையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் பன்னிரண்டாவது தேர்தலில் 1176 மதிப்பெண்கள்(1200 இற்கு) பெற்று மாநிலத்திலேயே முன்னனி வகித்தவர்தான், ஆயினும் இவரது மருத்துவராகும் கனவிற்கு குறுக்கே வந்தது நீட் (NEET-National Eligibility and Entrance Test) எனும் தேர்வு . இந்த நீட் என்பது மாணவர்களின் திறமையினை சோதிக்கும் தேர்வு எனக் கூறப்பட்டாலும் அது CBSE எனும் பாடத்திட்டத்தினை (மாநில அரசுக்கல்வித் திட்டத்திற்கு புறம்பானது) அடிப்படையாகக்கொண்டது. மேலும் தனியார் கல்லூரிகளில் இலட்சக்கணக்கில் செலவு செய்து பிரத்தியேக பயிற்சி வகுப்புக்களிற்கு செல்பவர்களாலேயே இதில் தேர்வடைய முடியும். இந்த நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறவில்லை எனக்கூறியே அனிதா போன்ற பல ஏழை எளிய மாணவர்களிற்கு மருத்துவக்கல்விக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடே இன்று போர்க்களமாக் காணப்படுகிறது.
இந்த நீட் தேர்வினால் அடித்தட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதாலேயே தமிழ்நாடு சட்டசபையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு ஒரு தீர்மானம் இயற்றி குடியரசுத் தலைவரிற்கு அனுப்பியிருந்தன. என்றாலும் இப்போது மத்தியிலிருக்கும் இந்துத்துவ அடிப்படைவாதக் கட்சியான பாரதீய சனதாக் கட்சி வழமை போல இவ் விடயத்திலும் தமிழகத்திற்குத் துரோகம் இழைத்து அத் தீர்மான நகலையே காணவில்லை என நாடகமாடியது. இந்தியாவினைப் பொறுத்தவரையில் எப்போதும் அதிகாரத்திலிருக்கும் பார்ப்பனர்களால் கல்வியுரிமையானது காலங்காலமாக ஏதாவதொரு வடிவில் சூத்திரர்களிற்கு மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் கல்வியாகக் கருதப்பட்ட வேதங்களினை சூத்திரர் கேட்டால், அவர்களின் காதில் காய்ச்சிய ஈயத்தினை ஊற்றவேண்டும் என மனுநீதி இயற்றி வைத்திருந்தார்கள். இராமயணக் கதையிலோ சூத்திரனாகவிருந்து தவம் செய்ததற்காக சம்பூகனின் தலையினை இராமபிரான் வெட்டியதாக கதையமைத்திருந்தனர். சமசுகிரதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்கலாம் எனச் சட்டமியற்றினர். ஆங்கிலேய ஆட்சியின் பின்னர் கூட ராஜாஜி ஆட்சியில் குலக்கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டிருந்தது. இவ்வாறான கொடுமைகள் தமிழ்நாட்டில் பெரியார்,அயோத்திதாச பண்டிதர் போன்றோரின் போராட்டங்களால் அகன்றன. பின்பு திராவிடக் கட்சிகள் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டு முறையினால் கல்வி,தொழில் வாய்ப்புக்கள் எல்லோரிற்கும் ஒரளவிற்கு கிடைத்துவந்தன. இந்தப் பின்புலத்திலேயே நிலமையினை பழைய நிலைக்கு மீண்டும் கொண்டு செல்வதற்கான ஒரு தந்திரோபயமாகவே நீட் தேர்வு அமைந்துள்ளது.
இந்த நீட் தேர்விற்கு பின்னே தனியாகப் பார்ப்பனிய ஆதிக்கமட்டுமல்லாது உலகமயமாக்கலும் ஒழிந்துள்ளது. அண்மையில் மோடி தலமையிலான இந்திய அரசு உலக வர்த்தக அமைப்புடன் (WTO) செய்துள்ள ஒப்பந்தப்படி கல்வி, சுகாதாரம் என்பன விரைவில் தனியார் மயப்படுத்தப்பட்டு உலக மூலதனச் சந்தைக்கு திறந்துவிடப்படவேண்டும். இதற்கும் நீட் தேர்வானது ஒரு கருவியாகப் பயன்படும். இதை சுருக்கமாகப் பார்த்தால் இப்போதுள்ள மாநில அரச கல்வி முறை மூலம் மருத்துவர்கள் சில காலமாவது பின்தங்கிய கிராமங்கள், பழக்குடியினரின் பகுதிகள் போன்றனவற்றில் பணியாற்றவேண்டியிருப்பதால், அப் பகுதியிலுள்ள அரச பொது மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் இயங்கக்கூடியதாகவுள்ளன. நீட் தேர்வு முறை மூலம் இந்த கட்டாய கிராமப்புற சேவை ஒழுங்குமுறை முடிவிற்கு கொண்டுவரப்படும். இதன்பின்பு அரச பொது சுகாதாரசேவை கிராமங்களில் தானாக முடிவிற்கு வர அந்த இடைவெளியினை தனியார்துறை நிரப்பிக்கொள்ளும். இந்தப் பின்புலத்திலேயை இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள மலபே (Malabe) தனியார் மருத்துவக்கல்லூரியினையும் நாம் பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள நீட் தேர்விற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு அதிகம் ஏன்? எனஇங்கு ஒரு கேள்வி எழலாம். இந்தியாவில் பலவிடயங்களில் தமிழகமே முன்னோடி. தேவதாசி ஒழிப்பு முறை, இட ஒதுக்கீடு, மொழியுரிமைப் போராட்டம், பெண்களின் முன்னேற்றம், பகுத்தறிவு எனப் பல விடயங்களில் தமிழகம்தான் இந்தியாவிற்கே முன்னோடி. இன்னொரு முக்கிய விடயம் தமிழ்நாட்டில்தான் மிக அதிகமான அரச மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவின் வளர்ச்சி மாநிலமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரப்படுத்தப்பட்ட மோடியின் குசராத் மாநிலத்தில் ஒரு அரச மருத்துவக்கல்லூரி கூட இல்லை, மறுபுறத்தில் தமிழகத்தில் 28 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும்தான் அதிகமாக 69 வீத இட ஒதுக்கீடும் நடைமுறையிலுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலேயே அடித்தட்டு மக்களிற்கும் மருத்துவக்கல்வி இதுவரைக் கிடைக்கக்கூடியதாகவிருந்தது. இப்போது இந்த வாய்ப்புகளிற்கு எதிராகவே நீட் தேர்வு வந்துசேர்ந்துள்ளது. இதனால்தான் தமிழ்நாடு இந்தத் தேர்வினை எதிர்ப்பதில் முன்னனி வகிக்கின்றது. மத்திய அரசு முன்வைக்கும் தரம் என்ற வாதம் இங்கு எடுபடாது, ஏனெனில் சென்னைதான் இந்தியாவின் மருத்துவத் தலைநகர் என்று சொல்லுமளவிற்கு ஏற்கனவே தரமாகவேயுள்ளது. இங்கு தமிழக மாணவர்களின் ஒரு தொகுதி இடங்கள் பறிக்கப்பட்டு அதனை பணவசதி படைத்த வெளி மாநிலத்தவர்களிற்கும், வெளிநாட்டினரிற்கும் வழங்கும் ஒரு உத்தியாகவே மோடி அரசு நீட் தேர்வினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறத்திற்கு புறம்பான செயலினை எதிர்த்தே தமிழகம் போராடிவருகின்றது.
மீண்டும் அனிதாவின் விடயத்திற்கு வருவோமாயின், அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் குடிசை வீட்டில் பிறந்து இள வயதிலேயே தாயினைப் பறிகொடுத்தவர். இவரது தந்தை மூட்டை தூக்கியே தனது மகளினைப் படிக்கவைத்திருந்தார். அனிதா ஏற்கனவே கிராமத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் தனது தாயினைப் பறிகொடுத்திருந்தார். இதனால் தான் மருத்துவராகி அக் கிராமத்திலேயே ஏழை மக்களிற்குச் சேவை செய்ய வேண்டும் எனக் கனவு கொண்டிருந்தார். அதற்கேற்ப படித்து மாநிலத்திலேயே முதன்மையாகச் சித்தியுமடைந்திருந்தார்.வாய்ப்பு மறுக்கப்பட்டபோது சில சமூக ஆர்வலகர்களின் உதவியுடன் உயர்நீதிமன்றம்வரைச் சென்று போராடியுமிருந்தார். பார்ப்பனியமும், உலகமுதலாளித்துவமும் சேர்ந்து அனிதாவிற்கான எல்லா வழிகளையும் பல சிக்கலான கயிறுகளைக் கொண்டு அடைத்தபோது, அவர் தனது வாழ்க்கையினை முடிப்பதற்கு சுருக்குக்கயிற்றினைத் தெரிவுசெய்து கொண்டார். சுருக்கின் அனிதா போன்ற பல எளிய தமிழ் மாணவர்களின் கனவு நீற் (NEET) தேர்வு மூலம் நீற்றாக (neat) முடித்துவைக்கப்பட்டுள்ளது.
இன்று மருத்துவப் படிப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நீட் போன்ற தேர்வுகள் ஏனைய துறைகளிற்கும் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ளது. இதனை உணர்ந்தே தமிழகம் இன்று போர்க்களமாகியுள்ளது. இலங்கையில் ஏற்கனவே தரப்படுத்தல்முறையினை இனத்துவேச நோக்குடன் கொண்டுவந்து தமிழ் மாணவர்களின் கல்வியுரிமையினைப் பறித்தபின்பு என்ன நடைபெற்றது என்பது வரலாறு. வரலாற்றிலிருந்து பாடங்களைப் படித்துக்கொள்ளாத சமுதாயங்கள் என்றுமே முன்னேறியதாக வரலாறில்லை.