Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேரிடர் நிவாரணம் : தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு!

சமீபத்தில் தமிழகத்தில் வீசிய  பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தாத போதும்  விவசாய உற்பத்தி விளை நிலங்களில் மழை வெள்ளம் கடும் சேதங்களை உருவாக்கியுள்ளது.

18 மாவட்டங்களில் வயல் நிலங்கள், மா, பலா, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாலைகள், கட்டங்கள் சேதம் அடைந்துள்ளன. சென்னை பெரிய அளவு சேதம் எதனையும் சந்திக்காத நிலையில் பெருமளவு வட மாட்டங்கள் சேதத்திற்குள்ளாகி இருக்கிறது.

இந்த சேத விபரங்களை தமிழக அரசு இன்னும் கணக்கெடுக்காத நிலையில் இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இந்நிலையில் மத்தியக் குழு தமிழகம் மற்றும் புதுச் சேரி வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்ய இருக்கிறது.

தமிழகத்தில் 2004 சுனாமிக்குப் பின்னர்தான் பேரிடர் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் உருவானது. ஆனால், தமிழக அமைச்சரவையில் பேரிடரைக் கையாள வென்று முழுமையான கட்டமைப்பைக் கொண்ட தனி அமைச்சகம் எதுவும் இல்லை. ஏன் மத்திய அரசிடம் கூட இல்லை. போலீஸ், தீயணைப்பு வீரர்கள், பல நேரங்களில் ராணுவத்தினரை வைத்தே பேரிடர் சூழலை கையாள்கிறார்கள்.

பெரும்பாலும் பேரிடர் மீட்பு என்பதே வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்பது என்பதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால், இதில் உள்ளூர் மீனவர்கள்தான் மக்களை மீட்க பயன்படுத்தப்படுகிறார்கள்.

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் தமிழகம் சந்தித்த எந்த பேரிடர் சேதங்களின் போதும் மாநில அரசு கோரும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை. ஆனால், சேத விபரங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு வந்து சேதத்தை மதிப்பீடு செய்து அறிக்கையாகக் கொடுப்பதோடு ஒரு சடங்காக இந்த நிகழ்வு முடிந்து விடுகிறது.

ஆனால், நிதி கிடைப்பதில்லை.

தமிழகம் கடந்த பத்து ஆண்டுகளில் சந்தித்த பேரிடர்கள் அதற்கு மாநில அரசு கேட்ட  தொகையையும் மத்திய அரசு கொடுத்த தொகையையும் பார்ப்போம்.

2010 –ம் ஆண்டு தமிழகத்தில் 13 நாள் தொடர்ந்து மழை பெய்தது. அதில் 200 பேர் மழை வெள்ளச் சேதத்திற்கு பலியானார்கள். சுனாமிக்குப் பின்னர் தமிழகம் சந்தித்த இரண்டாவது  மழை பேரிடர் இதுதான். அப்போதைய திமுக அரசு  வெள்ள சேத நிவாரணமாக இரண்டாயிரம் கோடி கேட்டது. அப்போதைய மன்மோகன் சிங் அரசு கொடுத்ததோ வெறும் 317 கோடி.

#

2011-ம் ஆண்டு தானே புயல் வட மாவட்டங்களில் பெரும் சேதங்களை உருவாக்கியது. இப்புயல் பாதிப்பில் 48 பேர் உயிரிழந்திருந்தாலும். முன்னெச்சரிக்கை காரணமாக பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஆனால், முந்திரி விவசாயத்தை அது வேரோடு சாந்த்து விட்டது. அப்போதைய ஜெயலலிதா அரசு  நிவாரணத் தொகையாக மத்திய அரசிடம் 52 ஆயிரத்து இரு நூற்றி நாற்பத்தியெட்டு கோடி ரூபாய் கேட்டது அப்போதைய மத்திய அரசு கொடுத்ததோ வெறும் 638 கோடிதான்.

#

2013 தமிழகத்தில் கடும் வறட்சி ஆங்காங்கே கஞ்சித் தொட்டி திறந்து மக்களுக்கு உணவு வழங்க வேண்டிய நிலையை வறட்சி உருவாக்க மாநில அரசு நிவாரணமாக 19,665 கோடி கேட்டது மத்திய அரசோ 524 கோடியைக் கொடுத்தது.

#

2015 சென்னை வெள்ள சேதத்தின் போது 2500 கோடி ரூபாய் மாநில அரசு கேட்க மத்திய அரசோ 1365 கோடி கொடுத்தது.

#

2017 ஓக்கி புயலில் 250 கடலோடிகள் கடலுக்குள் இறந்து போய் பெரும் சேதங்கள் தென் தமிழகத்தில் உருவானது. அதில் பத்தாயிரம் கோடி தமிழக அரசு கேட்க மத்திய அரசு கொடுத்ததோ 133 கோடி.

#

2018-ல் கஜா புயல் காவிரி டெல்டா மண்டலத்தை சீரழித்தது தென்னை விவசாயத்தை வேரோடு சாய்த்தது. மாநில அரசு 15,000 கோடி நட்ட ஈடு கேட்க மத்திய அரசோ 1146 கோடியை மட்டுமே கொடுத்தது.

#

இப்போது நிவர் புயல் சேதங்களை மதிப்பிட மத்தியக் குழு திங்கள் கிழமை தமிழகம் வருகிறது. இந்த புயல் சேதத்திலாவது மாநில அரசு கேட்கும் நிதியில் பாதியையாவது மத்திய அரசு கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான். ஜி.எஸ்.டி உட்பட இந்திய அரசுக்கு அதிக  வரிவருவாயை ஈட்டிக் கொடுக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருந்தபோதும் தமிழகத்தை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

Exit mobile version