Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோசூலில் முருகன் : எழிலன் தமிழ்

மோசூல் வட ஈராக்கிலுள்ள அழகிய நகரம். ஒன்றரை மில்லியன் மக்கள் அமைதியாக வாழ்ந்த அந்த நகரத்தின் ஆட்சி அதிகாரத்தை இஸ்லாமிய அரசு (IS or ISIS) என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு கையகப்படுத்தி இரண்டரை வருடங்கள் கடந்துவிட்டன. ஸ்னோடென் உட்பட பலர் மக்கள் மத்தியில் முன்வைத்த அமெரிக்காவின் பயங்கரவாதம் தொடர்பான ஆவணங்களில் IS அமைப்பை அமெரிக்காவே தோற்றுவித்து வழி நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகின. மத்திய கிழக்கிலும் அதனைச் சூழ உள்ள நாடுகளிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்தும் இராணுவ தர்ப்பாரில் சாட்சியின்றிக் கொல்லப்பட்டவர்கள் பல ஆயிரங்கள்.

மூல வளங்கள் மட்டுமின்றி, பல்வேறு பலன்களை போரின் விளைவாக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் உள்வாங்கிக்கொண்டன. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் பல்தேசிய நிறுவனங்களின் ஆயுத விற்பனை உச்சத்தை அடைந்தது. தவிர, மத்திய கிழக்கிலுள்ள செல்வந்தர்களை அகதிகள் என்ற பெயரில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் உள்வாங்கிக்கொண்டன. சிரியா, ஈராக் உட்பட்ட நாடுகளின் முதலீடுகள் மேற்கை நோக்கி இடம்பெயர்ந்தமையால் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கொள்ளையில் குவிக்கப்பட்ட மூலதனமே பிரித்தானியாவில் முதன் முதலாக முதலாளித்துவம் தோன்ற மூலதனமாக அமைந்தது. இன்றும் அப்பாவிகளின் அவலக் குரல்களே முதலாளித்துவம் தற்காலிகமாகத் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள பயன்படுகிறது.

மத்திய கிழக்கின் அழிவிற்கு அமெரிக்காவின் தலையீடும் ஆக்கிரமிப்புமே காரணம் என்று அப்பகுதி மகக்கள் நம்புவதாக 2008 ஆம் ஆண்டில் பதியப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று கூறியது. அந்தப் பிரதேசத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் ஒன்று தோன்றுவதற்கான அறிகுறிகளை அது கட்டியம் கூறிற்று. அதனை உணர்ந்துகொண்ட ஏகாதிபத்திய நாடுகள் அந்தப் போரைத் தனது அடியாள் அமைப்பின் ஊடாகவே நடத்தி அழித்துவிட எண்ணியதும் ஐ.எஸ் இருப்பிற்கு மற்றொரு காரணம்.

ஐ.எஸ் அமைப்பைத் தோற்றுவித்து அதனூடாக தனக்கும் எதிரான போரைத் தோற்றுவித்து அப்பாவிகளை நரபலியெடுத்துக்கொண்டிருக்கும் ஏகபோக நாடுகளே வன்னி இனப்படுகொலையையும் திட்டமிட்டு நடத்தின. இதையெல்லாம் இராசதந்திரம் என்று எளிதில் கடந்து சென்றுவிடுகிறது ஒரு கூட்டம்.

இவர்களின் மத்தியில் இறுதி யுத்தம் வரைக்கும் தன்னைப் போராளியாக அர்ப்பணித்த எழிலன் மோசூல் தொடர்பான தனது பார்வையை முன்வைக்கிறார். சரி, தவறு என்ற நியாய விசாரணைக்கு அப்பால் விவாத நோக்கில் அவரது கட்டுரையை இங்கு பதிகிறோம்

-இனியொரு.

மோசூலில் முருகன்

மோசூல்

மோசூல்

மோசூல் ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரம். கடந்த இரண்டு வருடங்களாக உலகத்தின் அதிகாரங்கள் அத்தனையையும் தனித்து எதிர்த்து நின்றது.

இஸ்லாமிய தேச போராளிகளிடமிருந்து அந்த நகரை மீட்பதற்கான இறுதி நடவடிக்கை நேற்று தொடங்கபட்டு விட்டது. அமெரிக்க தரை மற்றும் விமானப்படையின் உதவியுடன் ஈராக்கிய இராணுவம் முன்னேறி வருகிறது.
மக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறும் பீரங்கி மற்றும் விமான குண்டு சத்தங்களை இடி மின்னல் சத்தம் என கூறி குழந்தைகளில் பயத்தை விரட்டுமாறும் இராணுவ தளபதி கூறியுள்ளார்.

இதே வேளை பயங்கரவாதிகள் மக்களை பணயக்கைதியாக மாற்றி சண்டை செய்வதாகவும் பயங்கரவாதிகளின் தலைவர் அபூபக்கர் பத்தாத்தி உலகில் இனி ஒழிந்திருக்க இடமில்லாததால் மோசூலில் சண்டை பிடித்து சாக உத்தேசித்துள்ளதாகவும் மேற்குலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இன்றைய உலகின் தொழில் நுட்ப வசதியால் பயங்கரவாதிகள் தரப்பு செய்திகளும் சமூகவலைத்தளங்களில் வருகின்றன. மோசூல் வீதிகளில் பயங்கரவாதிகள் அமெரிக்காவை அடித்து விரட்டப்போவதாக சபதம் செய்யும் காட்சிகளும்; பத்து வயது நிரம்பிய சிறுவர்கள் முழு ஆயுததாரிகளாக வீதிகளை காவல் செய்யும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

பிரம்படி

சரியாக 30 வருடங்களுக்கு முன்னர் எனக்கு ஜந்து வயது. இலங்கை தீவில் யாழ்ப்பாண நகர். அதை அண்டிய கொக்குவில் என்ற ஒரு ஊர். சரியாக இதே ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி. தொழில்நுட்பம் வளரவில்லை. சிலவீடுகளிலேயே தொலைக்காட்சி வானொலி இருந்தது.

கொக்குவிலில் ஒருசிறிய வீதி யாழ்ப்பாணத்தில் சிறிய வீதிகளை ஒழுங்கை என கூறுவார்கள். அதன் பெயர் பிரம்படி. அதற்கு ஏன் பிடிம்படி என்று பெயர் வந்தது என்று தெரியாது. ஆனால் அந்த ஒழுங்கையில் ஒருவீட்டில் எனக்கு ஒவ்வொரு நாளும் பிடிம்படி விழுந்திருக்கிறது.

அதற்கு அடுத்த ஒழுங்கையில் தான் எனது வீடு. இரண்டு ஒழுங்கைக்கும் இடையில் 200 மீற்றர்தான் இருக்கும். பிரம்படியில் ஒரு ஆரம்ப கல்விகூடம் அதை நாம் நேசரி என்று கூறுவோம். எனக்கு ஐந்து வயது இருக்கும் ஒரு விஜயதசமியில் எனது பெற்றோர் என்னை அங்கு கூட்டி சென்றனர். ஒரு சிடுமூச்சி ஆசிரியை அரிசி நிறைந்த பாத்திரத்தில் எனது விரலை பலவந்தமாக பிடித்து அ என்று எழுதினார்.

எனது பெற்றோருக்கு ஒரே பூரிப்பு ஆனால் எனக்கு திண்டாட்டம்;. நான் படிப்பில் சரியான மட்டம். ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து அழுது கொண்டு கிளம்புவேன். அம்மாவும் இன்று மட்டுந்தான் படிப்பிப்பார்கள்; என சமாதானப்படுத்தி அனுப்புவாள்;. ஏறத்தாள ஒரு ஆண்டுகளாக என்னால் என்ற ஒரு தமிழ் எழுத்தை மட்டுமே எழுதவும் வாசிக்கவும் புரிந்து கொண்டேன் என்பதை அடுத்த பந்தியின் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

முருகன்

29 வருடங்களுக்கு முன்னர். சரியாக இதே ஒக்;டோபர் மாதத்தின் நடுப்பகுதி. அன்று காலை பாடசாலை போன நினைவு இல்லை. மாலை அளவில் கடுமையான குண்டு சத்தங்கள் தூரத்தே கேட்டன.

யாழ்ப்பாணத்தில் நிறைய படித்த மனிதர்கள் உள்ளதாக கூறுவார்கள்;. அப்படி எங்கள் ஒழுங்கையிலும் நான்கு படித்த மனிதர்கள் நெருங்கி வந்து கொண்டிருந்த குண்டு சத்தங்களை பற்றி விவாதித்து கொண்டிருந்தார்கள்.

‘இந்தியா ஒருநாளும் தமிழர் மீது குண்டு போடாது.’ ‘அது இரப்பர் குண்டுகளையே ஏவுகிறது.’ ‘புலியை பயமுறுத்த அது சத்தவெடி போடுகிறது.’ இப்படி பல அரிய தகவல்களை அவர்கள் வழங்கியதால் அடுத்த ஒழுங்கையில் நடைபெற்று வரும் சண்டையில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டபோது கூட நாம் அன்றிரவு அமைதியாக உறங்கினோம்.

காலை நான் கண்விழித்த போது யுத்தம் அடுத்த ஒழங்கையில் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிக்க இந்திய இராணுவம் முயன்று கொண்டிருப்பதாக அயலவர் பேசிக்கொண்டனர். அப்போதுதான் எங்கள் வீட்டின் படலையை திறந்து கொண்டு சில புலிகள் நுழைந்தார்கள்

என்னைவிட மூன்று நான்கு வயது மட்டுமே அதிகமான ஒரு சிறுவன் கெந்திக் கெந்தி நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் காலில் ஏற்பட்டிருந்த காயத்துக்கு கட்டுப்போடப்பட்டிருந்தது. ஒரு வளர்ந்த போராளி அவனை எங்கள் வீட்டின் விறாந்தையில் இருத்;திவிட்டு தங்களுக்கு மதியம் ஒரு ஜந்து பாசல் உணவு வேண்டும் எனவும் தாம் இந்த ஒழுங்கையில் உள்ள வீடுகளில் தலா ஜந்து பாசல் உணவு கேட்டுள்ளதாகவும் எங்கள் வீட்டு பெரியவர்களிடம் கூறினார். உணவை பெற்றுக் கொள்ளும்போது இந்த சிறுவனை மீள அழைத்துக் கொள்வதாக மேலும் தெரிவித்துவிட்டு சென்றனர்.

சிறுவன் கையில் ஒரு சிறிய கறுத்த அழகான இயந்திர துப்பாக்கி இருந்தது. நான் நல்லூர் திருவிழாவில் அடம்பிடித்து அழுது வாங்கிய துப்பாக்கியைவிட (மொம்மை துப்பாக்கி) அது அழகாக இருந்தது. நானும் எங்கள் அயல் சிறுவர்களும் தூரத்தே நின்று அவனையும் துப்பாக்கியையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவனுடன் பெரியவர்கள் பலதை கதைக்க முயன்றனர். அவன் எதற்குமே பதில் சொன்னதாக நினைவில்லை. அந்த சிறுவன் என்னைவிட நிறமாகவும் கட்டுறுதியான உடல் அமைப்பையும் கொண்டிருந்தான். அவனை முருகன் மாதிரி இருக்கிறான் என எனது ஆச்சி பலரிடம் கூறிக்கொண்டிருந்தாள். முருகன் என்பது கடவுள் என்று எனக்கு அன்றே தெரிந்தமையும், அனைவரும் அவனை மரியாதையுடன் நடத்தியமையும் என்னை அவன்மீது பொறாமை கொள்ள வைத்தது.

சண்டைபோடும் பெடியளுக்கு பலமான சாப்பாடு போடவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த ஆச்சி அதற்கு முதல் நாள்தான் அடை காக்க வைத்திருந்த கோழியை எழுப்பிக்கலைத்துவிட்டு முட்டைகளை அவித்துக் கொண்டிருந்தது.

ஈழப்போரில் ஆச்சிகளை பற்றி கட்டாயம் சொல்ல வேண்டி உள்ளது. நடுத்தர வயதிரைவிட அறுபதை கடந்த அப்பு ஆச்சிகள் போராளிகள் மீது கடுமையான பாசமும் நம்பிக்கையும் கொண்டிருந்தனர். கடுமையான முற்றுகைக்குள்ளேயும் போராளிகளை காத்தல் ஆயுதங்களை மறைத்தல்; இன்னும் பலவற்றில் இந்த ஆச்சிகளின் பங்குகள் விபரிக்கபட முடியாதவை.
யாருடமும் பேசாத அந்த சிறுவனுக்கு பொழுது போகவில்லை போலும். வேலியிலிருந்து கம்பி ஒன்றை உருவி எடுத்து அவனது துப்பாக்கி பிடியின் கீழே எதையோ ஆழமாக எழுதிக்கொண்டிருந்தான். நான் அதை உற்று நோக்கினேன். அவன் அதில் எழுதிய முதல் எழுத்து அ அடுத்த எழுத்துகளை என்னால் படிக்க முடியவில்லை. ஏன் என்பதை நான் முதல் பந்தியில் தெரிவித்திருந்தேன்;. அதாவது எனக்கு என்ற தமிழின் முதல் எழுத்தை மட்டுமே வாசிக்கும் அறிவு இருந்தது.

மதியமளவில் சிலபோராளிகள் எங்கள் வீட்டுக்கு வந்து உணவு பாசலையும் அவனையும் கொண்டு சென்று விட்டார்கள். அதன்பிறகு முருகன் என்ன ஆனான் என்று எங்கள் எவருக்கும் தெரியாது. சில ஆண்டுகள் அவன் முகம் எனக்கு நினைவில் இருந்தது பின்னர் அதுவும் மறைந்து போனது.

வன்னி

ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இது 2003 ஒரு சுட்டெரிக்கும் மதியபொழுது. அது ஒரு சமாதான காலம். புலிகள் சண்iடையை நிறுத்திவிட்டு கொடி, குடை, ஆலவட்டம் என்பவற்றில் கூடிய கவனம் செலுத்திக்கொண்டிருந்த நேரம். நான் புலிகளின் சாள்ஸ் அன்னரி படையணியின் தளபதி கோபித் என்பவடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் எளிமையானவர். எனினும் புலிகளின் அனைத்து பிரிவுகளை போலவே அவரும் சாள்ஸ் அன்னரி படைப்பிரிவுக்கு ஒரு படைய சின்னத்தை உருவாக்கும் எண்ணத்திலிருந்தார். அதை கணணியில் வடிவமைத்து தருமாறு என்னிடம் கேட்டார்.

நானும் அதில் ஒரு சிரமமும் இல்லை. எனக்கு ஒரு SMG தாருங்கள் அதை எனது ஒளிப்படக்கருவியால் ஒரு படம் எடுத்து அதை கணணிக்கு மாற்றி படைய சின்னத்தை அழகாக முடித்து தருவதாக கூறினேன். இதில் மேலதிகமாக ஒன்றை கூற வேண்டியுள்ளது. இந்த படைப்பிரிவின் பெயரை தாங்கிய மாவீரன் சாள்ஸ் அன்ரனிக்கும் SMG என்ற துப்பாக்கிக்குமான பந்தம் விபரிக்க முடியாத தனி அத்தியாயம்.

கோபித் சிறிது நேரம் சிந்தித்தார். இணையத்தில் இருந்து ஒரு SMG துப்பாக்கி படத்தை எடுத்து அதை செய்ய முடியாதா? என கேட்டார். ஏனெனில்; 1990 முற்பகுதிலேயே அந்த துப்பாக்கி வளக்கொழிந்து விட்டது. புலிகள் இன்று நவீன ஆயுதங்களுடன் இருந்தார்கள்.

13 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இணையத்தை பாவித்தவர்களுக்கு தெரியும் அதன் சிரமம். இன்று போல அதிக செறிவுடனான படங்களை எழுக்க முடியாது. எனவே நான் கண்டிப்பாக அந்த துப்பாக்கிதான் வேண்டும் என்று கூறிவிட்டேன்.

கோபித்தும் விடுவதாக இல்லை. பல சிரமங்களுக்கு பின்னர் புலிகள் தலைமை செயலகத்தினரிடமிருந்து சில வரைபடங்களை வாங்கி வந்தார். வரைபடத்தின் படி நானும் கோபித்தும் சில பேராளிகளுமாக முதல் இரு குழிகளை தோண்டினோம். பாவிக்க முடியாமல் போயிருப்பினும் புலிகள் ஆயுதங்களை எப்போதும் தூக்கி வீசி விடுவதில்லை. களிம்பு தடவி பொலித்தீன் பைகளில் இட்டு பூமிக்கு அடியில் புதைத்திருந்தனர். அந்த குழியில் நாங்கள் தேடிய துவக்கு இல்லை.

மூன்றாவது குழியை தோண்டி ஆயுதங்களை வெளியே எழுத்தபோது ஒரு துருப்பிடித்த SMG கிடைத்தது. அதை சுத்தம் செய்து வர்ணம்பூசி படம் எடுத்துவிடும் முழுவேலையும் என்னிடமே விழுந்திருந்தது.

அடுத்த நாள் நான் அந்த துப்பாக்கியை எடுத்து துருவை போக்க தொடங்கினேன். சட்டென்று ஒரு ஞாபகம் வந்தது. கைபிடிக்கு அருகில் கூர்ந்து நோக்கினேன். அதே என்ற எழுத்து. அவசர அவசரமாக ஏனைய எழுத்துக்களின் மேலிருந்த துருவை தட்டிவிட்டு வாசிக்க முயன்றேன். அ என்ற எழுத்தைவிட அடுத்த எழுத்துக்கள் படிக்க முடியாத வகையில் துருப்பிடித்து சேதமாகியிருந்தன.
இந்த சம்பவம் எனக்கு பேரச்;சரியத்தை உண்டாக்கியிருந்தது. அன்று முருகன் கையிலிருந்த அதே துப்பாக்கி அதே எழுத்து. வை தொடர்ந்து அடுத்து என்ன எழுதியிருப்பான்? அம்மா? அண்ணா? அல்லது அவனது பெயர்?

புலிகளின் பழைய பதிவுகளை அடுத்த சிலநாட்கள் ஆராய்தேன். அதில் எங்கும் அன்றைய பிரம்படி மோதலில் என தொடங்கும் பெயரில் பதின்ம வயது சிறுவன் இறந்த தடம் இல்லை. அன்றைய மோதலில் பங்குபற்றிய புலிகளில் பலர் இன்று இல்லை. இருந்த ஒரு சிலராலும் அவனை நினைவு படுத்த முடியவில்லை. சில இரவுகள் முருகன் எழுதிய மீதி சொற்கள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒருவேளை எனது அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சங்கேத சொற்களாக இருக்குமோ என்றுகூட தோன்றியது.

அடுத்த சில ஆண்டுகளில் புலிகளுக்கும் அரசுக்கும் சண்டைதொடங்கி புலிகள் அழிந்து போயினர். சரணடைந்த மூத்த போராளிகளும் காணமல் போகடிக்கபட்டார்கள். இவர்களுடன் முருகனும் காணாமல் போய்விட்டான் என்று நினைத்து அவனை முழுமையாக மறந்து விட்டிருந்தேன்.

மோசூல்

மோசூலில் பாழடைந்த வீடொன்றில் முற்றத்தில் அந்த முருகனை இன்று நான் கண்டேன். அதே பத்து வயது தோற்றத்துடன் நேற்று நடந்த சண்டையில் காலில் ஏற்பட்ட காயத்துக்கு கட்டுப்போட்டபடி… ஏதோ ஒரு ஆச்சி கொடுத்த ரொட்டியை தின்றுவிட்டு தனது கையிலிருந்த துப்பாக்கியில் கூரிய ஆணியால் வக்கு அடுத்ததாக வரும் சொற்களை எனக்கு புரியாத அரபியில் எழுதிக் கொண்டிருந்தான்.

Exit mobile version