Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குழந்தையின் புத்திக்கூர்மைக்குத் தாயின் மரபணுவே ( X chromosome) காரணம்:வி.இ.குகநாதன்

Mother’s genes determine child’s intelligence

பொதுவாக ஒருவர் படிப்பிலோ அல்லது விளையாட்டுத்துறையிலோ ஒரு சாதனை செய்யும்போது இவர் இன்னாருடைய பிள்ளை தெரியுமா? என்று தந்தைக்கே அந்தப்பெருமை யினை அளிக்கிறோம். ஒரு பிள்ளை பெறும் வெற்றிக்கு தந்தையினைக் காரணமாக்கும் நமது சமூகம் , மறுபுறத்தில் பிள்ளையின் தோல்விக்கு அல்லது ஒழுங்கீன நடவடடிக்கைக்கு மட்டுமே தாயின் வளரப்பினைக் காரணம் கூறுகிறது. அண்மையில் வெளிவந்த “குற்றம்23” என்ற திரைப்படத்தில்கூட பிறக்கப்போகும் ஒரு குழந்தையின் திறனிற்குத் தந்தையின் விந்தணுக்களே காரணம் என்பதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு எல்லாம் காரணம் அறிவுத்திறன் தந்தையிடமிருந்தே குழந்தைக்கு கடத்தப்படுகிறது என்ற தவறான கருத்தேயாகும். இந்தக் கருத்தினை உடைக்கும் வகையில் அண்மையில் வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் (University of Washington) ஆய்வுமுடிவானது அமைந்துள்ளது.

இந்த ஆய்வு வெளிப்படுத்தும் முடிவு யாதெனில் தாயிடமிருந்து கடத்தப்படும் X-குரோமோசோம்களே குழந்தைகளின் அறிவுத்திறனுக்குக் காரணமாகவிருக்கிறது என்பதாகும். ஒரு குழந்தைக்கு தாயிடமிருந்து இரு X குரோமோசோம்களும், தந்தையிடமிருந்து ஒரு Xகுரோமோசோமும் ஒரு Y குரோமோசோமும் கடத்தப்படுகிறது. இதில் தாயிடமிருந்து கடத்தப்படும் Xகுரோசம்களே குழந்தையின் புத்திக்கூர்மைக்குக் காரணமாக அமைய, மறுபுறத்தில் தந்தையிடமிருந்து வரும் ஒருX குரோசம் எதுவித தாக்கத்தினையும் ஏற்படுத்துவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுகூட மட்டத்தில் எலிகளை வைத்து முதலில் மேற்கொள்ளப்பட்டுவந்த இந்த ஆய்வு கிளாஸ்கோ (Glasgow ) வில் 12686 பேரினை சோதனைக்கு உட்படுத்தி முடிவுக்கு வந்துள்ளது. ஆய்வின்படி குழந்தையின் அறிவுத்திறனானது 40-60 வீதம்வரை தாயிடமிருந்து கடத்தப்பட மிகுதி குழந்தை வளருகின்ற சூழ்நிலையிலேயே தங்கியுள்ளது என முடிவாகியுள்ளது. எனவே குழந்தையின் அறிவுத்திறனிற்குத் தாயே காரணம் என்ற அறிவியற்கண்டுபிடிப்பனது காலகாலமாக எம்மிடையே இருந்துவந்த ஒரு ஆணாதிக்க சிந்தனையினை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

இந்த அறிவியற்சிந்தனைகள் இல்லாதபோதும் நமது தமிழர்கள் ஆதிகாலத்தில் தாய்வழிச் சமூகமாகவே இருந்திருக்கிறார்கள். தமிழர்களிற்கு மதம் பிடிப்பதற்கு முன் அன்னை வழிபாடாக கொற்றவை வழிபாட்டுமுறையே இயற்கையுடன் இணைந்ததாக இருந்திருக்கிறது. இப் பேரன்னை வழிபாட்டின் தலையாய மாந்திரீகர்களாக பெண்களே இருந்திருக்கிறார்கள், பின்பு ஆணாதிக்கமானது மதத்தின் துணையுடன் பெண்களை கருவறைக்குத் தீண்டத்தகாதவராக்கியது வரலாறு. பெண்களின் கருவளத்தினை அடிப்படையாகக்கொண்டு அக்காலத்தில் பெண்களே சக்திவாய்ந்தவர்களாக உலகெங்கும் மதிக்கப்பட்டார்கள். காலப்போக்கில் ஆணாதிக்கமானது இந்த நிலமையினை தலைகீழாக மாற்றியது. இத்தகைய பின்புலத்திலேயே இந்த “அறிவிற்கு ஆண்” என்ற தவறான கருத்துருவாக்கம் உருப்பெற்றது.

மேற்கூறிய ஆணாதிக்கசச்சிந்தனையினையே இந்த அறிவியற்கண்டுபிடிப்பு முறியடித்துள்ளது. என்றாலும் என்ன? இனிவருங்காலத்தில் குழந்தையின் வெற்றிகளின்போது மௌனமாகவிருந்துவிட்டு, தோல்விகளின்போது இந்த ஆய்வினையே ஆதாரமாகக்கொண்டு பழியினை தாய்மீது போட்டுவிடமாட்டமா என்ன?

Exit mobile version