Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருப்பின மக்களுக்கு அமெரிக்கா ஒரு காட்டுமிராண்டி நாடு : மார்ட்டின்

அக்டோபர் 13, 2014 அன்று பெர்குசனில் நடந்த கண்டன போராட்டம்
அக்டோபர் 13, 2014 அன்று பெர்குசனில் நடந்த கண்டன போராட்டம்

ந்தியாவில் ‘இப்பல்லாம் யாரு சாதி பாக்கிறார்கள்’ என்று சொல்லிக்கொள்வதன் மறுபுறம் சாதி வெறி தலைவிரித்து ஆடுவதைப் போலவே, மிக முன்னேறிய நாகரீக நாடு என்று பீற்றப்படும் அமெரிக்காவில் இனவெறி என்பது கடந்தகால அத்தியாயம் என்ற பிரமையை பெர்குசன் பகுதியில் நடந்து வரும் சம்பவங்கள் உடைத்து வருகின்றன.

சென்ற ஆகஸ்ட் 9-ம் தேதி ஞாயிறு அன்று மைக்கேல் ப்ரௌனின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வெள்ளை இனவெறியை எதிர்த்தும், தொடர்ச்சியாக நடக்கும் படுகொலைகளுக்கு நீதி வழங்க கோரியும், படுகொலை குற்றவாளிகளை விடுவிக்கும் அமெரிக்க நீதித்துறையை விமர்சித்தும் அமைதிப் போரணி நடத்தப்பட்டது.அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்திற்கு உட்பட்ட செயின்ட் லூயிஸ் பகுதியில் அமைந்துள்ள பெர்குசன் நகரத்தைச் சேர்ந்த 18 வயதே ஆன மைக்கேல் ப்ரௌன் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று தனது பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது டேரன் வில்சன் என்கிற வெள்ளையின வெறி போலீசு அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமைதிப் பேரணியில் டைரோன் ஹாரிஸ் என்ற 18 வயதே ஆன கருப்பின இளைஞர், சீருடை அணியாத போலீசாரால் சுடப்பட்டு, படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹாரிஸ் போராட்டக்காரர் இல்லையெனவும், இரு கிரிமினல் கும்பலுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், அதை கண்காணிக்ச் சென்ற சீருடை அணியாத போலீசார் மீதும், அவர்களது வாகனத்தின் மீதும் ஹாரிஸ் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால் தாங்கள் திருப்பி சுட்டதாகவும் போலீஸ் கூறியுள்ளது. இதை ஹாரிசின் தந்தை மறுத்துள்ளார். தமது மகன் மைக்கேல் ப்ரௌன் படித்த அதே பள்ளியில் படிப்பதாகவும், அவர் கிரிமினல் இல்லையெனவும் கூறியுள்ளார்.

மேலும் சில கருப்பின இளைஞர்கள் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் கருப்பின இளைஞர்களை கைது செய்துள்ளது போலீசு. ஆனால், பிரமாணம் காப்பவர்கள் அமைப்பினர் இராணுவத்தைப் போல சீருடை, தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட கனரக ஆயுதங்களை தரித்துக் கொண்டு, பேரணியுடன் வந்துள்ளனர். இவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை.

அமைதியாக நடந்து கொண்டிருந்த பேரணி இவ்வகையில் வன்முறையாக மாறியதால், பெர்குசனில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அவசரநிலை ஒடுக்குமுறைகளுக்கு பயந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டுவிடவில்லை. மறுநாள் திங்களன்றும் போராட்டங்கள் தொடர்ந்தன. போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலை எண் 70-ல் மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு பிறகு அவசரநிலை விலக்கிக் கொள்ளப்பட்டது.

“நாங்கள் கருப்பராக இருப்பதுடன், போராட ஒன்று கூடி இருப்பது – அது அமைதியான வழிமுறையாக இருந்தாலும், போலீசாருக்கு ‘அச்சத்தை’ ஏற்படுத்துகிறது; அதனாலேயே போலீசார் எங்கள் அமைதிப் போராட்டங்களைக் கூட மிருகத்தனமாக ஒடுக்குகின்றனர்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மைக்கேல் ப்ரௌன் படுகொலையை தொடர்ந்து, கருப்பின மக்கள் காலங்காலமாக அனுபவிக்கும் இனவெறி ஒடுக்குமுறைகள் அவர்களிடம் கோபத் தீயை மூட்டியுள்ளது.

மிசௌரி மாகாணம் மட்டுமின்றி அமெரிக்க நாடெங்கிலும் இனவெறிக்கு எதிராகவும், கொலைகார போலீசு அதிகாரியை தண்டிக்க கோரியும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன. முதலில் பிரச்சனையை மூடி மறைக்க முயன்ற போலீசு, போராட்டக்காரர்கள் மீது இராணுவ ரீதியான – மிருகத்தனமான ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. போராட்டக்காரர்கள் மட்டுமின்றி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதலை நடத்தியது.

இதையடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் பரவி கருப்பின மக்களுடன், வெள்ளையினத்தை சேர்ந்த ஜனநாயகவாதிகளும், நிறவெறி எதிர்ப்பாளர்களும் கைகோர்த்தனர். விவகாரம் கைமீறிப் போய் தேசிய, சர்வதேசிய அளவில் இனவெறிக்கு எதிரான போராட்டங்களும், போலீசுக்கு எதிரான விமர்சனங்களும் கிளம்பத் துவங்கிய பின், வழக்கு எஃப்.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதுடன், இனவெறி பிரச்சனை தொடர்பாக நீதித்துறை விசாரணையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் தலித்துகள், இஸ்லாமியர்கள் மீதான படுகொலைகள் நிகழும் போது, காவல்துறை முதலில் குற்றங்களை பதிவு செய்யவே மறுக்கும்; மக்கள் கிளர்ந்தெழுந்து போராடத் துவங்கிய பின்னர் வழக்குகள் பதிவு செய்யப்படும். அவ்வழக்குகளும் பின்னர் நீர்த்துப் போக வைக்கப்பட்டு இறுதியில் மாட்சிமை பொருந்திய நீதிமன்றங்களால் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவார்கள். இந்நிலைமை நம்நாட்டில் மட்டுமல்ல; உலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் புனிதப் பணியை செய்துவரும் அமெரிக்க செர்க்கத்திலும் இதே நிலைதான். தேசங்கள் மாறினாலும் ஒடுக்கப்படுபவர்களின் மீதான ஒடுக்குமுறைகள் மாறுவதில்லை.

சென்ற நவம்பர் மாதம் செயின்ட் லூயிசின் பெருநடுவர் மன்றத்தால் (Grand Jury) டேரன் வில்சன் குற்றவாளி அல்ல என்றும், தற்காப்புக்காகவே அவர் மைக்கேலை சுட்டார் என்றும் விடுவிக்கப்பட்டார். நடுவர் மன்றம் ஒருவரை குற்றவாளியென தீர்மானிக்க 12 நடுவர்களில் 9 பேர் உடன்பட வேண்டும் என்பதுடன், நடுவர் மன்றம் ஒன்பது வெள்ளை இனத்தவர்களையும், மூன்று கருப்பினத்தவர்களையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இம்முடிவு பெர்குசனில் போராட்டத் தீயை மீண்டும் பற்றவைத்தது. பெர்குசன் நகர போலீசு அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அமெரிக்க அரசமைப்பு தோல்வியடைந்துள்ளதை மீண்டுமொரு முறை நிருபிப்பதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர். இப்போராட்டங்களை போலீசும், சிறப்பு பயிற்சி பெற்ற தேசிய படையினரும் மிருகத்தனமாக நசுக்கினர்.

இப்பகுதியில் முன்னர் வெள்ளை இனவெறி பயங்கரவாதக் குழுவான கூ க்ளக்ஸ் கிளான் செல்வாக்கு மிகுந்திருந்தது. தற்போதோ பழைய கூ கிளக்ஸ் கிளான், நியோ நாஜிகள் போன்ற வெள்ளை இனவெறி பயங்கரவாதிகள் கன்சர்வேட்டிவ் சிட்டிசன் கவுன்சில், பிரமாணம் காப்பவர்கள் போன்ற கவுரவமான பெயர்களில் இயங்கி வருகிறார்கள்.

பிரமாணம் காப்பவர்கள் (Oath Keepers) என்ற பெயரில் அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலர்களாக தம்மை அறிவித்துக் கொண்டு, முற்றிலும் வெள்ளையின உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகின்றனர். தேசபக்தி முகமுடி அணிந்துள்ள இந்த வலதுசாரி நிறவெறி அமைப்பில் முன்னாள், இன்னாள் இராணுவத்தினரும், போலீசாரும் உறுப்பினர்களாக உள்ளனர். அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களில், இவ்வமைப்பு ஆயுதமேந்தி வர அனுமதிக்கப்படுகிறது. இவர்கள் அரச படைகளிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தாங்கள் அணிவகுத்து வருவதாக கூறிக்கொண்டாலும், போராடும் மக்களை அச்சுறுத்தவும், சினமூட்டி பிரச்சனையை தூண்டும் வகையிலுமே அணிவகுப்பை நடத்துகின்றனர்.

இதனிடையே மைக்கேல் ப்ரௌன் படுகொலை, இனவெறி தொடர்பாக விசாரித்த அமெரிக்க நீதித்துறை (Departmant of Justice), மிசௌரி மாகாண காவல் துறையும், நீதித்துறையும் கருப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்கு எதிராகவும், பாரபட்சமாக நடந்து கொள்வதையும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிக்கையின் கணக்கீட்டின் படி அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 716 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 184 பேர் கருப்பினத்தை சேர்ந்தவர்கள். போலீசாரால் கொல்லப்பட்ட 149 ஆயுதமற்றவர்களில் (நிராயுதபாணிகள்) 56 பேர் கருப்பினத்தை சேர்ந்தவர்கள்.

போலீசுக்கு கட்டற்ற சுதந்திரம் வழங்கி மக்கள் மீது அடக்குறையை கட்டவிழ்த்து விடும் ஜனநாயகத்தின் தேவதூதுவனாக தன்னை பறைசாற்றிக்கொள்ளும் அமெரிக்க அரசின் யோக்கியதை அம்மக்களிடமே அம்பலமாகி வருகிறது.

நன்றி : வினவு

Exit mobile version