Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காந்தீயம் டேவிட் ஐயா நிகழ்வு பற்றிய பதிவு

meet phoகாந்தீயம் டேவிட் ஐயாவின் நினைவுப் பகிர்வும் , கலந்துரையாடலும், நூல் வெளியீடும் சென்ற ஞாயிற்றுக்கிழமை (06.12.2015) பிரான்சின் தலைநகர் பாரீஸ் லாச்சப்பல் செயின்ட் புறுனோ மண்டபத்தில் இடம்பெற்றது. பல்வேறு அரசியல் நம்பிக்கை கொண்டவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், நண்பர்கள் பொது மக்கள் என மிகத் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்ச்சிக்கு காந்திய சமூக செயற்பாட்டாளர் இ. பூபாலசிங்கம் அவர்கள் தலைமை தாங்கினர். ‘இலங்கை தேசிய இனப்பிரச்சனையும் டேவிட் ஐயாவும்’ என்ற தலைப்பிலான உரையை பி.ஏ.காதர் அவர்கள் நிகழ்த்தினார்கள்.டேவிட் ஐயாவைப் பற்றி தொகுக்கப்பட்ட ‘அர்ப்பண வாழ்வில் வலிசுமந்த மனிதன்’ என்ற நூலும் வெளியிடப்பட்டது.

மிகவும் நட்புணர்வுடனும் தோழமையுடனும் நடைபெற்ற கூட்டத்தில் இறுதியில் நடைபெற்ற கலந்துரையாடலில் பார்வையாளர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய நண்பர்களின் பேச்சின் சிறுகுறிப்புக்கள் பின் இணைப்பாக இங்கு தரப்பட்டுள்ளது

இ. பூபாலசிங்கம்

இ. பூபாலசிங்கம்

டேவிட் ஐயா இராஜசுந்தரம் ஆகியோர் காந்தீய அமைப்பை உருவாக்கி பாதிக்கப்பட்ட மலையக மக்களை எமது வடகிழக்கு பிரதேசங்களில் குடியேற்றி அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை செய்து, எமது தமிழ் பிரதேசங்களை காப்பாற்றிய மனிதர்கள்.அதுபோல் வடகிழக்கு பிரதேசங்களிலுள்ள எல்லைக் கிராமங்களுக்கு அரணாக பண்ணைகள் குடியேற்றத் திட்டங்களை திட்டமிட்ட தன்னிறைவு பொருளாதாரத்துடன் சிறப்புற செய்தார்கள். சில காலப் பகுதியில் ரி.ஆர்.ஆர் ஓ மற்றும் செடெக் என்னும் ஸ்தாபனங்களையும் இணைத்துக்கொண்டு கூடுதல் உதவிகளை செய்தார்கள்.

ஜென்னி

ஜென்னி

காந்தீயம் என்பது இதன் ஸ்தாபகர்களான தலைவர் டேவிட் ஐயா செயலாளர் வைத்தியர் ராஜசுந்தரம் ஆகியோர் ஒன்றிணைந்து உருவாக்கிய அமைப்பாகும்.

இவர்களின் நோக்கம் குறிக்கோள் என்பன ,கிராமிய மட்டத்திலான ஆரம்ப பாடசாலைகளை உருவாக்குவதும் இதற்கான தொண்டர் ஆசிரியர்களாக அந்தந்த கிராம மட்டத்திலுள்ள இளம் பெண்களை தெரிவு செய்து அவர்களுக்கான விழிப்புணர்வு- ஆளுமை-கிராமியத்தின் தலைமை மற்றும் சமூக அக்கறையுடனான கல்வி முறைமைகளை பயிற்றுவித்து அந்தந்த கிராமத்தின் சமூக பிரதிநிதியாக்குவதும், அந்தக் கிராமத்தை மையப்படுத்தி கிராமிய கூட்டுத்தலைமையை உருவாக்குவதாகும்.. அடுத்ததாக கிராம மக்களிடையே தன்னிறைவு பொருளாதாரமும் மற்றும் வடகிழக்கில் குடியேற்றத்தின் மூலம் தமிழ் பேசும் மக்களின் விகிதாசார பரம்பலை அதி கரிப்பதாகும் .

இவ்வாறாக வடகிழக்கில் மொத்தமாக 500 மேற்பட்ட பாலர் பாடசாலைகளும் 12ற்கு மேற்பட்ட பெரிய பண்ணைகள் மற்றும் நியாயவிலைக்கடைகளும் 25000 ற்கு மேற்பட்ட குடும்பங்களை குடியேற்றியதுமான வேலைத்திட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தொண்டர் ஆசிரியர்களும் ஏனைய வேலைத்திட்டங்களுக்கு பல இளைஞர்களும் இணைக்கப்பட்டனர் நானும் திருமலை தொண்டராசிரியராக 1979லிருந்து 1983 வரை செயற்பட்டதால் இந்த மறைந்த டேவிட் ஐயா -டொக்டர் ராஜசுந்தரம் மற்றும் சந்ததியார் அனைவருடனும் பயணித்த காலங்களும் அவர்கள் எங்களைப் போன்றோரை உருவாக்கிய விதமும் மொத்தத்தில் ஒரு மக்கள் போராட்டத்தை மையப்படுத்தி வாழ்வியல் பணிகளை முதன்மை படுத்தி எம்மை போன்றோரையும் வழிநடத்தி தினார்கள். எம் சமூகத்தின் பால் இவர்களுக்கு இருந்த அக்கறைகளும் அர்பணிப்புக்களும் அதன் செயற்பாடுகளும் எம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு வரலாற்று பாடமே.

எம். பௌசர்

எம். பௌசர்

காந்தீயம், டேவிட் ஐயாவை வரலாற்றில் நாம் கண்டைய முற்படும்போது, டொக்டர் இராசசுந்தரம், சந்ததியார், போன்ற சமூக அரசியல் பங்களிப்பாளர்களையும், காந்தீயம் கொண்டிருந்த சமூக அரசியல் பொருளாதாரத் திட்டங்களையும், அதை தன்னலம் கருதாது பங்களித்த ஆயிரக்கணக்கான மனிதர்களையும் சந்திக்க முடியும். அத்துடன் வடக்கில் நடந்த சிங்களக் குடியேற்றம் , புளொட் அமைப்புக்கும் காந்தீயத்திற்குமான உறவு, 1983 ஜுலை இனப்படுகொலை, 53 அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலையின் பதிவுகள், காந்தீயத்தால் அமைக்கப்பட்ட பண்ணைகளில் தொண்டர்களாக பணியாற்ற வந்த கிராமப்புற இளைஞர்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு , அக்காலத்தில் இயங்கிய அமைப்புகள், மட்டக்களப்பு சிறை உடைப்பு, புளொட்டுக்குள் நடந்த உட்கட்சிப் போராட்டம், தமிழகத்தின் அகதி வாழ்வு போன்ற பல்வேறு முக்கிய வரலாற்றின் கட்டங்களை சந்திக்க முடியும்.

தமது அனுபவங்கள், பாடங்கள், பாடுகளை எழுத வரலாற்றில் சம்பந்தப்பட்ட அனைவரும் முன்வர வேண்டும். ஏனெனில் சமகாலத்தினை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, இளைய தலைமுறையினருக்கு முழு வரலாறும். ஈழப் போராட்டத்தின் தொடக்கம் பற்றிய அறிதல் கொண்டு சென்று சேர்க்கப்படவில்லை. இதற்கு சுயேற்சையான ஆய்வு நிறுவனங்களும் காய்தல் உவத்தல் அற்ற ஆய்வாளர்களும் தேவைப்படுகின்றனர். அதற்கான சிந்தனையை கிளர்த்துவதற்காகவே, காந்தீயம் , டேவிட் ஐயா பற்றிய எம்மால் வெளியிடப்பட்ட நூல் அமைகிறது

மணி நாகேஷ்

மணி நாகேஷ்

ஈழப்போராட்ட வரலாற்றில் பல அற்புதமான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம்.களத்தில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்து போராடிய போராளிகள் ஒரு புறமும் அறவழியில் கருத்தியல் ஜனநாய தளத்தில் தமது இனத்தின் வாழ்விற்காய் போராடிய மனிதர்கள் இன்னொரு புறமுமாக போராட்ட அசைவியக்கம் நகர்வதை நாம் அறிவோம் .இந்நிலையில் 1970களில் காந்தீயம் என்ற இயக்கத்தை உருவாக்கி அதன் வழி தமிழினத்தின் வாழ் வுரிமைக்காக போராடிய மகத்துவமான மனிதராக டேவிட் ஐயாவை நாம் காண்கின்றோம்.

அண்மையில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது பேரினவாதிகளின் திட்டமிட்ட குடியேற்றம் என்பது -எமது இனத்தை எவ்வாறு வேரறுத்து செல்கின்றதென்பதை, புள்ளிவிபரங்களை விரிவாக அறிக்கையிட்டிருந்தார். பேரினவாதிகளின் இனஅழிப்பின் இன்னொரு வடிவமே திட்டமிட்ட குடியேற்றம் என்பதனை முன்னுணர்ந்து 70களிலேயே தமிழர் குடியேற்றங்களை நிறுவி ஏராளமான மலையகத் தமிழரின் வாழ்வாதாரத்திற்கு வழியமைத்ததுடன் சிங்கள பேரினவாதிகளுக்கும் சவாலாக அமைந்தார். 1983 ஜீலை இனக்கலவரத்தின் பின் தமிழகத்தில் புலம்பெயர்ந்த போதே டேவிட் ஐயாவை 1987ல் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அவர் வசித்த அண்ணாநகர் வீட்டிற்கு அடிக்கடி சென்று உரையாடிய பொழுதுகள் என்றும் மறக்க முடியாதவை.

கிருபன்

கிருபன்

டேவிட் ஐயா உருவாக்கிய காந்தீயத்தை முன்மாதிரியாக கொண்ட பண்ணைகளின் உருவாக்கம் மக்களின் சமகால வாழ்வாதார நெருக்கடிகளுக்கான மாற்றீடாகவும் தொலை நோக்காக- சமூக முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டங்களை கொண்டதாகவும் இருந்ததை நாம் அறியக்கூடியதாக உள்ளது.பண்ணை அமைப்பில் காணப்படும் கூட்டு உழைப்பு முறை வாழ்க்கையும் உயிரியல் சுழற்சி முறையிலான உற்பத்தியும் தரமான உற்பத்திகளின் மக்களிற்கான நுகர்வுக்கப்பால் மாதிரி பண்ணைகளை உருவாக்கத்தினூடாக சமூக சுற்றுச் சூழலையும் பாதுகாத்து அடிப்படை சமூக மாற்றத்தையும் கட்டியெழுப்ப முடியும் என நிருபித்துள்ளார்.

இந்த பண்ணை உழைப்பு உற்பத்திகளையும் தாண்டி கல்வி -சுகாதாரம்- விளையாட்டு- கலை என அனைத்து சமூக காரணிகளிலும் காந்தீயம் கவனம் செலுத்தி செயற்பட்டிருக்கின்றதென்பதை பல தரவுகள் நிறுபித்துள்ளன.

எனவே இவற்றை படிப்பினையாக கொண்டு நாமும் எமது நாட்டில் வாழ்வாதார பணிகளை செய்ய முயற்சிக்க வேண்டும்

பாலகிருஸ்ணன்

பாலகிருஸ்ணன்

நான் அறிந்தளவில் டேவிட் ஐயாவின் மூலம் உருவாக்கப்பட்ட காந்தீயம் என்னும் பரந்து பட்ட சமூக அமைப்பானது முழுமையாக தனது பணிகளை செய்ய முடியாது போனமையே எமது தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என்பதை உணர முடிகின்றதுடேவிட் ஐயா தனது அர்ப்பண வாழ்வில் நன்கு திட்டமிடப்பட்ட பொருளாதார கட்டுமாணங்களை நிறுவுவதற்கான அடிப்படை வேலைத்திட்டங்களை படிப்படியாக முன்னெடுத்துள்ளார்
அதன் வரைபாக பாலர் பாடசாலைகள்- அதன் தொண்டர் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாந்தரங்கள் மற்றும் கூட்டுப்பண்ணை முறைமைகள் என கிராம நிர்மாணப் பணிகளை சிறப்புற மேற்கொண்டார் இதனால் அனைத்து கிராமங்களிலும் உழைப்பாளி மக்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள்- சமூக விழிப்புணர்வு -இளைஞர்களின் தலைமைத்துவம் என ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப அயராது செயற்பட்டார்

ரஞ்சித்

ரஞ்சித்

டேவிட் ஜயாவின் நிகழ்வு பற்றிய சுவரொட்டியை லாச்சப்பல் கடைத்தெருவில் ஒட்டச்சென்ற போது பலர் கேட்டார்கள் யார் இந்த ஐயா என்று இது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. யார் இந்த டேவிட் ஐயா தமிழ்மக்களுக்கான சுதந்திர வாழ்வுக்காக தனது பதவி, பட்டம், சுகபோக வாழ்வைத்துறந்து மேற்கு நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர். இவரை மட்டுமல்ல இதே கொள்கையுடன் தமது வீடுகளை விட்டு புறப்பட்டு உயிருடன் திரும்பி வராத அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த ஐம்பதினாயிரம் உடன்பிறப்புக்களையும் நாம் மறக்கக்கூடாது. டேவிட் ஐயாவின் கனவான காந்தீய கிராமங்களின் இன்றைய நிலை என்ன? பல அழிக்கப்பட்டு விட்டன. பல அரைவாசிக்கும் குறைவான மக்களுடன் இருக்கின்றன. தாயகம் செல்லத் தடையற்றவர்கள் அங்கு சென்று இக்காந்தீய கிராமங்களை மீளமைப்பதே டேவிட்ஐயாவிற்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.

கிரிஸ்டி

கிரிஸ்டி

நான் மாணவர் அமைப்பிலிருந்து பின் புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரன் கொள்கையால் கவரப்பட்டு புளொட்டில் இணைந்தேன்.எமது செயலதிபர் மூலம் டேவிட்ஐயாவிற்கு அறிமுகமானேன்.இந்நிலையில் வவுனியாவின் எல்லை பறிபோகும் நிலைவந்த போது டேவிட் ஐயா டொக்டர் இராஜசுந்தரம் ஆகியோர் போராடி நின்றது. காரணம் இவர்கள் எமது மக்களை மூன்றுமுறிப்பு தச்சன் குளம் போன்ற பதகுதிகளில்குடியேற்றி இடைநிறுத்தம் செய்தனர்.இதற்கு முன் வவுனியா எம்பி அடங்காத்தமிழன் திரு சுந்தரலிங்கம் தனது காணிகளை கொடுத்து உதவி செய்தனர் இதற்கு காரணம்ஆனையிறவுக்கு அப்பால்(வெளியே)வராமல் உள்ளே இருந்தபடி பிரதேசவாதத்தை பேசி நாம் நம்மண்ணை இழந்ததுதான்
இதன் பின் காந்தீயத்தின் செயற்பாடு தடைப்பட சர்வோதயத்தில் இணைந்து எமது செயற்பாட்டைத் தொடர்ந்தோம்.இந்நிலையில் டொலர் பாம், கென் பாம் பறிபோன நிலையில் கொக்குளாயும் அதன் தொடர்ந்த பிரதேசங்களும் பறிபோகமுல்லைத்தீவு நோக்கி வந்த மக்களை பராமகரிக்கவேண்டியேற்பட்டது.இது தான் எமது கடந்த கால வரலாறு.இது இங்கு அமர்ந்திருக்கும் தலைவர் புபாலசிங்கம் அவர்கட்கும் தெரியும்.

பி.ஏ.காதர்

பி.ஏ.காதர்

டேவிட் ஐயாவை நினைவு கூர்வது எதற்காக?அவர் தனது சமூகத்தை நேசித்த ஒரு நேர்மையான எளிமையான உண்மையான மனிதர் என்பதனால் எமது நன்றிக் கடனை செலுத்துவதற்காகவா?விடுதலைப் போராட்டத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு மேற்கத்தைய நாடுகளில் அடைக்கலம் கோரி சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு பொழுது போக்காக அரசியல் பேசும் நபர்களைப் போலல்லாது தனக்கு முன்னால் இருந்த சுகவாழ்வை தூக்கியெறிந்து விட்டு ஒரு வேலைத்திட்டத்துடன் நாடு திரும்பி அதற்காக வாழ எத்தனித்து அப்பயணம் தடைப்பட்டு போன பின்னரும் அதற்கான தருணத்தை எதிர்பார்த்தபடி எஞ்சிய காலத்தை கழித்த அவரது அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்துவதற்கு மாத்திரம் தானா? நல்லதொரு வெகுஜன அமைப்பை கட்டியெழுப்பி அதனை புளொட் அமைப்பிற்கு தாரைவார்த்து கொடுத்து அதனால் காந்தீய அமைப்பே அழிவதற்கு காரணமாயமைந்தவர் என குற்றஞ்சாட்டுவதன் மூலம் தம்மை தத்துவார்த்த மேதைகளாக காட்டிக் கொள்ள முயல்கின்ற சிலரது வக்கிரத்தை ஓதுக்கி விட்டு நோக்கினால் அவரை நினைவு கூறுவதென்பது நாம் பார்க்கத் தவறிய அல்ல புரிந்து கொள்ளத் தவறிய அவரது பார்வையை அதன் இலட்சியத்தின் தாற்பரியத்தை அல்லது இலட்சிய நோக்கை சமூக விஞ்ஞான வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்து கொண்டு அவர் தொடக்கி வைத்த பயணத்தை தொடர வேண்டிய வரலாற்று கடமையை நினைவுட்டிக் கொள்வதற்காகத்தான்.

அசோக்

அசோக்

தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காககவும் தன் வாழ்வை அர்பணித்த டேவிட் ஐயா நம்மைப்போல் சுயநலமிக்க வாழ்வொன்றை தேர்வு செய்திருந்தால் அவர் கோடீஸ்வரராக மாறியிருப்பார்.ஆனால் அவர் எமது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்காக மேன்மைக்காக தனது பதவியையும் பட்டத்தையும் துறந்து தனது சொந்த உழைப்பை தியாகம் செய்தார்.இதற்காக அவர் காந்தியத்தை தேர்வு செய்தார்.

காந்திய கோட்பாடுகளில் காணப்பட்ட எளிமை சிக்கனம் கிராமிய சுயபொருளாதார திட்டம் உள்ளுர் வளங்களை பயன்படுத்தல் சுயஅபிவிருத்தி தன்னிறைவு என்பன போன்ற நடைமுறை சார்ந்த திட்டங்களை சுவீகரித்து அவற்றை செயல்வடிவத்தில் நடைமுறைப்படுத்தினார்.டேவிட் ஐயா தொலை நோக்கு சிந்தனை கொண்டவராக செயல்படுத்திய அரசியல் சமூக பொருளாதார கல்வி மேம்பாட்டு திட்டங்களை நாம் தொடர்ச்சியாக செயல்படுத்தி இருப்போமானால் தமிழ் பிரதேசங்களில் பல்வேறு மாற்றங்களை நாம் உருவாக்கியிருக்க முடியும்.

Exit mobile version