வன்னியில் இவ்வாறு புலிகளை அழிப்பதற்குத் துணைசென்ற அதே தலைமைகள் இன்றும் ஐ.நா உடன் பேசிக்கொண்டிருப்பதாகப் படம் காட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு மத்தியில் தனி மனிதர்களாகச் சிலர் உண்மையை உரகக்கக் கூறினார்கள். இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் அமெரிக்காவிற்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கும் தொடர்பிருப்பதை ஆபத்தான சூழல் நிலைகளைக் கடந்து மக்களுக்கு உண்மையைக் கூறினார்கள்.
இந்த உலகத்தைக் குத்தகைகு எடுத்துக்கொண்ட மொத்த வியாபாரிகளின் சில்லரைகளாகச் செயற்பட்ட தமிழ்த் தலைமைகளுக்கும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் மத்தியில் நேர்மையாக உண்மையைக் கூறியவர்களுள் மத்தியூ ரசல்ல்ஸ் லீ -Matthew Russell Lee- என்பவர் பிரதானமானவர்.
Matthew Russell Lee ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பன்கீ மூனின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயற்பட்ட விஜை நம்பியார் நடத்திய சரணடைவு நாடகத்தை உலகத்திற்கு வெளிப்படுத்தினார். ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடத்திய போர்க்குற்ற விசாரணை என்ற ஏமாற்று வித்தையை உலகத்தின் பார்வைக்குக் கொண்டுவந்தார். அதற்காக பல ஆபத்துக்களைச் சந்தித்தார். சனல் 4 ஊடகம் வெளிப்படுத்திய தகவல்களிலும் அதிகமாக ஊடகங்களுக்கு வழங்கினார். ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளேயே அவர் கேள்விகளால் வேள்வி செய்தார். பன்கீ மூன் உட்பட அனைவரும் மத்தியூ லீ ஐக் கண்டு அஞ்சினர்.
இன்னசிற்றி பிரஸ் என்ற இணைய ஊடகத்தை நடத்திவந்த மத்தியூ லீ, ஐ.நா இன் உள்ளே அநீதிகளுக்கு எதிராக நெருப்பாக எரிந்தவர். இன்றைக்கு வன்னிப் படுகொலைகள் போர்க்குற்றம் என்றும் இனப்படுகொலை என்றும் ஆதாரபூர்வமாகப் பேச முடியுமானால் அதற்கு முக்கிய பங்காற்றியவர்களில் மத்தியூ லீ உம் ஒருவர்.
புலம்பெயர் அமைப்புக்கள் சில கூறுவதைப் போன்றுசனல் 4 இன் காணொளி ஐ.நா இன் உள்ளே உத்தியோகபூர்வமாகக் காண்பிக்கப்படவில்லை. ஆனால் இலங்கை அரசு அதற்கு எதிராக வெளியிட்ட காணொளி நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா வளாகத்தின் உள்ளே உத்தியோக பூர்வமாகக் காண்பிக்கப்பட்டது. போர்க்குற்றவாளியும் இனப்படுகொலையை இராணுவரீதியாகத் தலைமை தாங்கி படுகொலைகளை நேரடியாக நடத்தியவர்களில் ஒருவருமான சவேந்திர சில்வாவிற்கு இலங்கையின் உதவி வதிவிடப் பிரதிநிதிப் பதவியை ஐநா அனுமதித்துக் கௌரவித்த போது ஐ,நாவின் இதயத்தில் மிதித்துக் கேள்விகேட்டவர் மத்தியூ லீ.
சவேந்திர சில்வாவும், இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான பாலித கோகொணவும் ஐ.நாவின் முக்கிய ஊடக அதிகாரியான ஜியம்போலோ பியோலி என்பவருடன் இணைந்தே இலங்கை அரசின் போலிக் காணொளியை ஐ.நா முழுவதும் பரவவிட்டனர். பியோலி ஐக்கிய நாடுகள் தொடர்ப்புக் குழுவின் தலைவராகப் பதவி வகிக்கிறார்.
வெள்ளைக் கொடியுடன் சரண்டையவந்த புலிகள் இயக்கத்தின் தலைமை உறுப்பினர்களைக் கொலைசெய்வதற்குப் பிரதான காரணமானவர்களில் பாலித கோகண்ண என்ற பாதகனும் ஒருவர் என்பது ஆதரபூர்வமாக நிறுவப்பட்டது.
பாலித கோகண்ணவிற்கும் பியோலிக்கும் இடையேயான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை மத்தியூ லீ வெளிக்கொண்டுவந்தார். ஐ.நா வின் தலைமை வரைக்கும் சென்று கேள்வியெழுப்பினார்.
ஐ.நாவின் உயர்மட்ட அனுமதியுடன் நடைபெற்ற இவ்வாறான பல ஊழல்களை மத்தியூ லீ ஆவணப்படுத்தினார்.
பத்து வருடங்களுக்கு மேலாக ஐ.நா வில் மத்தியூ லீ இற்கு அலுவலகம் வழங்கப்பட்டிருந்தது. உள்ளகத் தகவல்களைச் சேகரிப்பதற்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருந்தது.
மத்தியூவின் உண்மைகளுக்கு அஞ்சிய பியோலி அவரை சித்த சுவாதீனமுற்றவர் என வெளிப்படையாகக் கூறிவந்தார்.
இன்னசிட்டி பிரசின் செய்திகளைக் பிரதி செய்து தமது வியாபார நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் முதுகெலும்பற்ற தமிழ் ஊடங்கள் மத்தியூ லீ இற்கு ஐ.நா தனது வளாகத்திற்கு உள்ளேயே நடத்திய மனித உரிமை மீறலை செய்தியாகக் கூட வெளியிடவில்லை.
மத்தியூ லீ போன்று எமக்காகக் குரல்கொடுக்கும் நேர்மையான மனிதர்கள் தமிழ் ஊடகங்களின் இந்த அவமானகரமான செயலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மத்தியூவை மீண்டும் ஐ.நாவினுள் அனுமதிக்கக் கோரி எந்தப் போராட்டமும் நடைபெறாது என்பது மட்டும் நிச்சயம்.
https://www.change.org/p/unsg-ban-ki-moon-dsg-jan-eliasson-cdc-edmond-mulet-and-usg-dpi-gallach-we-demand-inner-city-press-be-restored-to-access-to-the-un-as-a-resident-correspondent
http://www.innercitypress.com/unsri1lanka031809.html