வங்கத்து பார்ப்பனரான பிரணாப் முகர்ஜி, மராட்டிய பேஷ்வா பார்ப்பனர்களின் கோரிக்கையை ஏற்று ஏழைகளின் உணவான மாட்டுக்கறியை தடை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்.
மராட்டியத்தில் பசுக்களை கொல்வதற்கு தடை விதிக்கும் சட்டம் 1976-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதில் எருதுகள் மற்றும் காளைகள் மட்டும் இறைச்சிக்கென்று சான்றிதழ் தரப்பட்டு அனுமதிக்கப்பட்டது. கருப்பு நிறத்திலான எருமை மாடுகள் அதில் எருதோ பசுவோ இச்சட்டத்தில் வராது. அவாளின் புனிதம் என்பது வெள்ளைநிற பசுவுக்கு மட்டும்தான்.
1995-ம் ஆண்டில் பா.ஜ.க-சிவசேனை ஆட்சியின் போது வெள்ளை நிற காளை, எருதுகளையும் தடை செய்யுமாறு மசோதா நிறைவேற்றினார்கள். அப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்ட மசோதாவுக்கு இப்போதுதான் பிரணாப் முகர்ஜி அனுமதி அளித்து மக்கள் வயிற்றில் மண்ணள்ளி போட்டிருக்கிறார்.
இனி மராட்டியத்தில் எருமை இறைச்சி மட்டும்தான் கிடைக்கும். மற்ற மாட்டிறைச்சி கிடைக்காது. “இப்புதிய சட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழைப்பார்கள், பிற இறைச்சி விலைகள் உயரும்” என்று மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவின் வணிக தலைநகரமென்று அழைக்கப்படும் மும்பையை தூக்கி நிறுத்தும் கடுமுழைப்பாளிகளுக்கு இனி மாட்டுக்கறி கிடையாது.
பொதுவில் இந்தியாவில் எருமை இறைச்சி அதிகமாக உண்ணப்படுவதில்லை. நாட்டின் ஒட்டு மொத்த மாட்டிறைச்சியில் உள்நாட்டு நுகர்வில் 25 சதவீதம்தான் எருமை இறைச்சி. ஏற்றுமதியில் எருமை இறைச்சிதான் முதலிடம். உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்த பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் இந்தியாதான். இத்தகைய சூழலில் மாட்டிறைச்சி தடை சட்டம் ஏற்படுத்தும் பொருளாதார விளைவுகளைக் கூட பா.ஜ.க.விற்கு முதுகு சொறியும் அறிவாளிகள் பேசமாட்டார்கள்.
ஆர்.எஸ்.எஸ் எனும் நச்சும்பாம்பை அளித்த நாக்பூர் நகரம்தான் தற்போதைய மராட்டிய பா.ஜ.க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸையும் அளித்திருக்கிறது. ஷாகா சென்று பேஷ்வா பெருமையை கற்றுக் கொண்டவர் பின்னர் ஏ.பி.வி.பி, பா.ஜ.க என பரிணாம வளர்ச்சியில் முதல்வராகியிருக்கிறார். பசுக்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற கனவு நிதர்சனமாயிருப்பதாக டிவிட்டரில் பூரித்திருக்கிறார்.
“1996-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதா குறித்து பிறகு வந்த எந்த அரசாங்கங்களும் கவலைப்படவில்லை. நாங்கள்தான் தேர்தல் வாக்குறுதியில் சொன்னவாறு இதைச் சட்டமாக்கியிருக்கிறோம்” என்கிறார் பா.ஜ.க.வின் மும்பை பாராளுமன்ற உறுப்பினர் கீர்த்தி சோமையா. மாட்டுக்கறி தடையில் ஆரம்பித்து இனி கோமியத்தை தேசிய டானிக்காக மாற்றுவதைக் கூட இந்த சோமையாக்கள் செய்யலாம்.
இனி தடையை மீறி மாட்டுக்கறி விற்றால் ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இந்த குற்றத்திற்கு பிணை வழங்கக் கூடாது என்றும் சட்டத்தை திருத்தியிருக்கிறார்கள். 1976 சட்டத்தில் சிறை ஆறு மாதங்களாகவும், அபராதம் ரூ 1000 ஆகவும் இருந்தது. இரண்டும் தற்போது பத்து மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.
பார்ப்பனியத்தின் இந்த பசு புனிதம் என்பது ஏதோ உயிர் குறித்த கருணை அல்ல. மாட்டுக்கறியை அதிகம் உண்ணும் தாழ்த்தப்பட்ட மக்களையும், மாட்டுக்கறி வர்த்தகத்தில் அதிகம் இருக்கும் முசுலீம் மக்களையும் குறிவைத்து தாக்குவதற்கே இந்த சட்டத்தினை கையிலெடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் மனிதர்கள் மீதான கொலைவெறியே பசுப்புனித போர்வையில் வருகிறது.
பல மாநிலங்களில் மாட்டுக்கறி தடைச் சட்டமிருந்தாலும், விவசாயத்திற்கு பயன்படாத மாடுகளை வெட்டலாம் என்று அனுமதி அளித்து வருகிறார்கள். தற்போது அதையும் ஒழித்திருப்பதால் மராட்டியத்தில் தொடங்கியிருக்கும் பார்ப்பனிய வைரஸ் நாடு முழுவதும் பரவ வாய்ப்பிருக்கிறது.
பெரும்பான்மை மக்களின் மலிவான மாட்டிறைச்சியை தடை செய்வதால் ஆடு, கோழி, போன்ற மற்ற இறைச்சிகளின் விலை உயரும். இதனால் ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கமும் கூட கணிசமாக பாதிக்கப்படுவார்கள். மாட்டிறைச்சி மூலம் மலிவாக கிடைக்கும் புரதச் சத்து இன்றி நமது குழந்தைகள் வாடிப்போவார்கள். ஆட்டிறைச்சி விலையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் மாட்டிறைச்சி இனி இல்லை என்றால் அதன் விளைவுகள் எண்ணிப்பார்க்க முடியாதது.
இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக மாட்டிறைச்சி வணிகர் சங்கத்தை சேர்ந்த ஆரிஃப் சவுத்திரி தெரிவித்திருக்கிறார். ஆனால் மோடி அரசின் உத்தரவுகளை தீர்ப்புகளாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைப்பது அரிது.
மாட்டிறைச்சி தடையால் விற்பவர்கள், உண்பவர்களுக்கு மட்டுமில்லை விவசாயிகளுக்கும் பேரிடி காத்திருக்கிறது என்கிறார் ஆரிஃப் சவுத்திரி. இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் மராட்டிய மாநிலத்தில்தான் இருக்கிறார்கள். மடிவற்றிய, வயதான, உழைக்க பயன்படாத மாடுகளை இந்தியா முழுவதும் அனைத்து விவசாயிகளும் விற்று வருகிறார்கள். இனி இந்த மாடுகளை விற்கக் கூடாது என்றால் ஏழை விவசாயி என்ன செய்வார்?
மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுகிறது என்ற காரணத்தால்தான் விவசாயிகள் மாட்டிறைச்சி உண்பதில்லை. அதே போன்று விவசாயத்திற்கு பயன்படாது போகும் மாடுகளை வைத்து பராமரிப்பதும் அவர்களால் சாத்தியமில்லை. இனி மராட்டிய மாநிலத்தில், மும்பை அல்லது பூனா, நாக்பூர் நகரங்களில் கைவிடப்பட்ட மாடுகள் இலட்சக்கணக்கில் சுற்றுவது உறுதி. ஜீவ காருண்யம் பேசும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் வேண்டுமானால் இம்மாடுகளை வீட்டில் வைத்து பராமரிக்க தயாரா?
அப்படி பராமரிக்க வேண்டும் என்று சட்டமாக்கினால் இந்தியாவில் அதிகம் மாடுகளை கொல்வது ஆர்.எஸ்.எஸ் கூட்டமாகத்தான் இருக்கும். “அரசு அறிக்கை ஒன்றின்படி மராட்டிய மாநிலத்திற்கு தேவைப்படும் கால்நடை தீவனத்தில் 61 சதவீதம் பற்றாக்குறை இருக்கும் போது இந்த சட்டம் வருகிறது. இதனால் வயதான மாடுகள் கொல்லப்படுவது தடுக்கப்படும் போது ஆரோக்கியமாக இருக்கும் மாடுகளுக்கு கிடைக்கும் தீவனம் குறையும், மாடுகளோடு விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்” என சாங்லியில் மாட்டிறைச்சி கடை வைத்திருக்கும் ராஜேந்திர தாண்டே கூறுகிறார். “இல்லை, இனி ஒரு மாட்டை பராமரிக்க மாதத்திற்கு ரூ 5,000 அளிக்கப்படும்” என்று மோடி கூறத் தயாரா? அப்படி அறிவித்தால் இந்தியா ஒரே நாளில் திவாலாகிவிடும்.
“முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் கருணையே இல்லாமல் மாடுகள் கொல்லப்பட்டு அதுதான் பிங்க் புரட்சியாக கொண்டு வரப்பட்டது” என்று தேர்தலின் போது மோடி சாடினார். ஆனால் இந்த கேடி ஆட்சியில்தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி முன்னைவிட அதிகமாகியிருக்கிறது. மாட்டுக்கறி என்றால் முசுலீம்கள் கொல்வார்கள், அவர்களே உண்பார்கள் போன்ற தவறான பொதுப்புத்திக்கு மாறாக இந்துக்கள்தான் அதிகம் உண்பது கண்கூடு. ஆனால் பஞ்சம சூத்திரர்களை இவர்கள் இந்துக்களாக ஏற்பதில்லை என்றால், சிறுபான்மையான பார்ப்பன ‘மேல்சாதி’ இந்தக்களுக்காக என்ன எழவுக்கு மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும்?
நாய்களுக்காக கண்ணீர் விடும் மேனகா காந்தி போன்ற ராயல் சீமாட்டிகள், “மாட்டிறைச்சி விற்பனையால் வரும் பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுகிறது” என்று அறிக்கையே விடுகிறார்கள். முந்தைய நாளில் மணக்க மணக்க கறி சாப்பிட்டு விட்டு அடுத்த நாள் காலையில் போகும் மலத்தைத் தாண்டி என்னய்யா இதில் பயங்கரவாதம் இருக்கிறது?
“மும்பையில் இருக்கும் மல்டி கசின் உணவங்களில் இனி மாட்டிறைச்சி இல்லை என்றால் மேற்குலக வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார் ஓட்ட சங்க தலைவர். ஒரு வேளை இந்த மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும் விலக்கு கொடுப்பார்களோ என்னமோ?
காங்கிரசுக் கட்சி இந்த சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருக்கிறது. என்ன இருந்தாலும் இவர்கள்தானே இந்துமதவெறியர்களின் மூதாதையர்களை உற்பத்தி செய்தவர்கள். இந்தச் சட்டம் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தாமல் வெளிப்படையாக அமல்படுத்த வேண்டும் என்கிறது கதர் வேட்டி கும்பல்.
முசுலீம்களை தனிமைப்படுத்தி ஒடுக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் அயோக்கியத்தனத்தினை அம்பலப்படுத்துகிறது பண்டைய இந்திய வரலாறு. இந்திய விவசாயிகளின் மாடுகள் மீதான உறவை கணக்கில் கொண்டே இங்கே பாபர், ஹுமாயூன், அக்பர் போன்ற முகலாய மன்னர்கள் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கின்றனர். கடைசியாக மைசூரின் ஹைதர் அலி, 1857 முதல் இந்திய சுதந்திரப் போருக்கு தலைமை தாங்கிய முகலாய மன்னர் பகதூர் ஷா காலம் வரை இந்த நல்லிணக்கம் சாதாரணமாகவே நிலவியிருக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஆர்ய சமாஜத்தினை நிறுவிய தயானந்த சரஸ்வதி இதை இந்துத்துவ அரசியலாக்கினார். ‘பசுவதை என்பது இந்துத்துவத்தின் மீதான தாக்குதல்’ என்று அப்போதுதான் திசை திருப்பினார்கள். அதே இந்துத்துவம் தான் அக்காலத்தில் பஞ்சம சூத்திர மற்றும் பெண்கள் மீது சொல்லொணாத் துயங்களை நிகழ்த்தியிருக்கிறது. ‘முசுலீம்கள் மாட்டின் தலையை வெட்டி கோவிலின் முன் போட்டார்கள்’ என்று கடந்த நூற்றாண்டில் எண்ணிறந்த கலவரங்களை இந்துமதவெறியர்கள் நடத்தியிருக்கிறார்கள். இப்படித்தான் இங்கே சட்டப்படியே பசுவதை தடையை புனிதமாக்கினார்கள். குஜராத்தில் மாடுவெட்டினால் ஏழு ஆண்டு சிறை தண்டனை. பொது இடங்களில் இறைச்சி விற்பனை கிடையாது.
எனினும் மோடி எனும் கேடியின் இந்துத்துவ பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு இது ஒன்றும் குஜராத் அல்ல. நாடெங்கும் மாட்டுக்கறி தடையை எதிர்த்து கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமூக வலைத்தளமான டிவிட்டரில் மாட்டுக்கறி தடையை எதிர்க்கும் ஹேஷ் டேக் முன்னிலையில் இருக்கிறது.
“மாட்டுக்கறி உண்பவர்களின் உரிமைக்காக தான் ஐந்து வருடம் சிறை செல்லத் தயார்” என்கிறார் எழுத்தாளர் ஷோபா டே. பாலிவுட் நட்சத்திரங்களான ஃபர்ஹான் அக்தர், அயுஷுமான் குரானா, ரிச்சா சாதா, வீர் தாஸ், ரன்வீர் ஷோரி முதலியோர் இச்சட்டத்தை மனித உரிமைகள் மீதான மீறல் என்று கண்டித்திருக்கின்றனர்.
மும்பை வாழ் தமிழ் மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். கோயம்பேடு கருவாடு விற்பனை தொடர்பாக “தி இந்து” எடுத்த அடக்குமுறைக்கு எதிராக வினவு எடுத்த ஆவணப்படத்தில் இது குறித்த விரிவான பார்வை இடம் பெற்றிருக்கிறது.
பார்ப்பனியத்தின் உணவுத் தீண்டாமையை அகற்றுவோம். பா.ஜ.கவின் பல்லைப் பிடுங்குவோம்!
பார்ப்பனியத்தின் உணவுத் தீண்டாமையை அகற்றுவோம். பா.ஜ.கவின் பல்லைப் பிடுங்குவோம்!
தொடர்புடைய செய்திகள்:
- Maharashtra bans beef, 5 years jail, Rs 10,000 fine for possession or sale
- Maharashtra’s beef ban shows how politicians manipulate Hindu sentiments around cow slaughter
- Bollywood criticises ban on beef in Maharashtra
நன்றி : வினவு