உலகின் வெவ்வேறு பகுதிகளில்,வெவ்வேறு காலங்களில் மனித இனம் பரிணமித்து வளர்ந்து இருக்கிறது. அப்படிப் பரிணமிக்கும் பொழுது, ஒவ்வவொரு பகுதியிலும் ஒவ்வொரு மொழியைப் பேசினர்; ஒவ்வொரு பண்பாட்டுப் பின்னணியுடன் இருந்தனர். இவ்வாறு மொழியாலும் பண்பாட்டாலும் ஒன்று பட்டு இருப்பது தேசிய இனம் எனப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்த மட்டில் மொழி வழியான பிரிவுகளின் அடிப்படையில் மக்களின் தேவைகள் மாறுபடுவது மட்டும் அல்லாமல் வருண / சாதி அடிப்படையிலும் தேவைகள் மாறுபடுகின்றன. சொல்லப் போனால் மொழி வழிப் பிரிவினர்களிடையே உள்ள தேவைகளின் மாறுதல்களை விட வருண / சாதி வழிப் பிரிவினர்களின் தேவைகளில் மிக அதிகமான மாற்றங்கள் உள்ளன.
எடுத்துக் காட்டாக, பார்ப்பனர்களில் கல்வி அறிவு இல்லாதவர்கள் ஒருவரும் இல்லை. ஆகவே அடிப்படைக் கல்வியை அறிமுகப்படுத்தும் தேவை அவர்களிடையே எழுவது இல்லை, பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களிடையே எழுத்தறிவு பெறாதோர் ஏராளமாக இருக்கின்றனர். எழுத்தறிவு உள்ளோர் என்று வகைப் படுத்தப் பட்டவர்களிலும் கணிசமானோர் தங்கள் பெயரைச் சித்திரம் போல் வரையத் தெரிந்தவர்களே. ஆகவே இம்மக்களிடையே அடிப்படைக் கல்வியை அறிமுகப் படுத்தும் தேவை மிக அழுத்தமாக இருக்கிறது.
மேலும், இந்திய சமூக, அரசியல் சூழ்நிலைகள் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானோரும் உயர்நிலை வேலைகளை எளிதில் அடையும் படியாகவும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளும் கீழ் நிலை வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திலும் உள்ளன. குறிப்பாகத் துப்புரவத் தொழிலில் இது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. துப்புரவுத் தொழிலைச் செய்யும் சாதியினர் எவ்வளவு தான் படித்தாலும், எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும், அவர்களால் அத்தொழிலை விட்டு வெளியே வர முடியாத படியான இறுக்கமான சூழல் உள்ளது.
இந்தியவில் இப்படிப் பட்ட சூழல் உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் விதமாக, இன அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளைக் களைவதற்கான ஐக்கிய நாடுகள் அவையின் குழு (United Nations Committee for Elimination of Racial Discriminations)ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜெனிவா நகரில், உலக அளவில் இன ஒதுக்கலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்த கருத்தரங்கம் நடந்தது. இந்தியாவில் வருண / சாதி அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்படுவதைப் பற்றி இக்கருத்தரங்கில் விவாதிக்க வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட வகுப்புத் தோழர்கள் ஐக்கிய நாடுகள் அவையில் கோரிக்கை வைத்தனர். (பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் இது போல் செயல்பட வேண்டும் என்று தோன்றாமல் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தனர் / இருக்கின்றனர்.) இக்கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று இந்திய அரசு கடுமையாக எதிர்த்தது. ஆனால் கோரிக்கையில் உள்ள உண்மைத் தன்மையையும், நியாயத்தையும் கருதி ஐக்கிய நாடுகள் அவை அதை ஏற்றுக் கொண்டு விவாதித்தது. விவாதத்தின் முடிவில் 22.8.2002 அன்று தீர்மானம் எண் XXIXஇல் இந்தியவில் வருண / சாதி அடிப்படையில் மறுக்கப்படும் உரிமைகள் உலக அளவில் இன ஒதுக்கல் கொடுமைகளைப் போன்றதே என்று முடிவு செய்தது. அது மட்டும் அல்ல; இக்கொடுமைகளைக் களைய இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அத்தீர்மானம் வலியுறுத்தியது.
ஆனால் பார்ப்பன ஆதிக்க அரசான இந்திய அரசு ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தைக் கண்டு கொள்ளவே மறுத்தது; இன்றும் மறுத்துக் கொண்டே இருக்கிறது. அது மட்டும் அல்ல; இச்செய்தியை முழுமையாக இருட்டடிப்பு செய்தது. பெரிய ஊடகங்கள் (ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தும் ஊடகங்கள் உட்பட) அனைத்தும் பார்ப்பன ஆதிக்கப் பிடியில் இருப்பதால் இச்செய்தி வெளியில் பரவாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இப்பிரச்சினையை ஐக்கிய நாடுகள் அவைக்குக் கொண்டு சென்ற தோழர்கள் இச்செய்தியைத் தங்களால் இயன்ற மட்டும் மக்களிடைய கொண்டு சென்றனர். அவர்களுடைய முயற்சியினால் சமூக நீதி ஆர்வலர்களிடம் இச்செய்தி சென்றடைந்தது.
சரி! இந்திய அரசு பார்ப்பன ஆதிக்க அரசு. ஆகவே அது பார்பபன ஆதிக்கத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகள் அவையின் இத்தீர்மானத்தைக் கண்டு கொள்ளாதது மட்டும் அல்லாமல், செய்தியையே இருட்டடிப்பு செய்தது. ஆனால் எல்லா விதமான சுரண்டல்களையும் முற்ற முழுக்க எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் பொதுவுடைமைக் கட்சிகள் என்ன செய்தன / செய்கின்றன?
லெனினுடைய காலத்தில் “தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை சோஷலிச சமூகத்திற்குப் பொருந்தாது. ஏனெனில் தேசிய இன ஒடுக்குமுறைக்குக் காரணமாக இருக்கும் வர்க்க நலன்களையே சோஷலிசம் ஒழித்து விடுவதால் எல்லா விதமான தேசிய ஒடுக்கு முறைகளையும் அது ஒழித்து விடுகிறது” என்று சிலர் கூறிக் கொண்டு இருந்தார்கள்.
இதைப் போலவே இந்தியாவில் உள்ள பொதுவுடைமைக் கட்சிக்காரர்களும் சோஷலிச சமூகத்தில் சாதி அடிப்படையில் உரிமைகள் மறுப்பு இருக்க முடியாது என்று வாதாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
“ஒரு சோஷலிச சமூகத்தில் தேசிய இனமானது பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் ஒரு அங்கமாக நிலைத்து நிற்கும் என்று நம்புவதற்கு ஆதாரம் ஒன்றும் இல்லை. கலாச்சார ரீதிான, மொழி ரீதியான ஒரு அங்கமாக மட்டுமே அது இருக்கும் என்பது சாத்தியம். ஏனென்றால் ஒரு சோஷலிசக் கலாச்சாரப் பிராந்தியத்தை நாம் பிரிக்கிறோம் என்று வைத்துக் கொண்டால் உற்பத்தித் தேவைகளுக்கு உகந்ததாக மட்டுமே பிரிக்க முடியும்; மேலும் இத்தகைய பிரிவு பற்றிய பிரச்சினையானது, ஒவ்வொன்றும் முழு அரசுரிமை படைத்த தேசிய இனங்களால் தனித்தனியாகத் தீர்க்கப்படாது. அதில் அக்கறை உள்ள குடிமக்கள் எல்லோராலும் கூட்டாக நிர்ணயிக்கப்படும்,” என்று விளக்கும் லெனின் ஒரு தேசிய இனம் தன் அரசியலைத் தானே நிர்ணயம் செய்து கொள்ளும் சுய நிர்ணய உரிமை அல்லாமல் கூட்டு நிர்ணயம் என்பது அதை அடிமைத் தளையில் நிலைநிறுத்தும் உத்தியே என்று கூறுகிறார்.
இந்தியச் சூழலில் சோஷலிச சமுதாயம் அமைந்தால் அனைவருக்கும் கல்வியும், வேலை வாய்ப்பும் உறுதி ஆகி விடுவதாலும், தனி உடைமை ஒழிக்கப்பட்டு விடும் என்பதாலும், அனைத்து வகுப்பினருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைக்கும் என்றும், வருண / சாதி வேற்றுமை மறைந்து விடும் என்றும் கூறுகிறார்கள். ஆகவே இப்பொழுது நடைமுறையில் உள்ள மொழிவாரி மாநிலங்கள் அமைந்ததே போதும் என்ற மன நிறைவுடன் இருக்கிறார்கள்.
ஆனால் தேசிய இனப் பிரச்சினையில் வர்க்க நலன்களைப் பார்த்தால் போதும் என்று வாதாடிய எதிரிகளுக்கு லெனின் அளித்த விளக்கம் வருண / சாதிப் பிரச்சினைகளைக் கவனிக்க மறுப்பவர்களுக்கும் பொருந்தும். சோஷலிச அரசு அமைந்து அனைத்து முதலாளித்துவச் சொத்துடைமைகளும் பறிமுதல் செய்யப் படுவதாலேயே அனைத்து சாதியினரும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சம வாய்ப்பு பெறுவார்கள் என்று நம்புவதற்கு ஆதாரம் ஒன்றும் இல்லை. பார்ப்பனர்களில் உள்ள மிகக் குறைவான திறமை உடையவர்களும் தங்கள் பின் புலம் காரணமாக உயர் வாய்ப்புகளை அடைய முடியும். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளும் தங்கள் பின் புலம் காரணமாக உயர்நிலைகளுக்குச் செல்ல முடியாமல் சறுக்க நேரிடும். இது பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளில் நிலைத்து நிற்பதற்கும், மற்றவர்கள் அடுத்த நிலை வேலைகளிலேயே அழுந்திக் கிடப்பதற்குமான நிலையை மாற்றாமல் நிரந்தரமாக்கவே வழி வகுக்கும். தனிச் சொத்துடைமை ஒழிந்த நிலையில் இவ் அமைப்பு வர்ணாசிரம அதர்ம அமைப்பையே ஒக்கும்.
(இதைத் தான் “சாதியைச் சந்திக்காமல் புரட்சியைச் சந்திக்க முடியாது” என்றும் “சாதிப் பிரச்சினையைக் கணக்கில் கொள்ளாமல் புரட்சியைத் திணித்தால் அது அக்கணமே வீழ்ந்து விடும்” என்றும் மாமேதை அம்பேத்கர் கூறினார்)
ஆகவே வர்க்கப் போராட்டத்தோடு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று லெனின் கூறியது போல, இந்தியச் சூழலில் வர்க்கப் போராட்டத்தோடு அனைத்து வருணத்தினரும் / சாதியினரும் அனைத்து நிலை வேலைகளிலும் அவரவர் மக்கள் தொகையின் விகிதத்தில் இருப்பதற்கான விகிதாச்சாரப் பங்கீடுப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும்.
இராமியா
இக்கட்டுரை சிந்தனைாயாளன் 2018ஆம் ஆண்டு பொங்கல் மலரில் வெளி வந்து உள்ளது.