தமிழில் `கொடை மடம்` என்றொரு சொல்லணி உண்டு. கொடை என்பது எல்லோரும் அறிந்ததே {கொடுத்தல்/ ஈகை}. மடம் என்றால் `அறியாமை` என்ற ஒரு பொருளுமுண்டு.
சான்று:
https://agarathi.com/word/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
எனவே கொடை மடம் என்பது `அறிவற்ற ஈகை` எனக் கொள்ளலாம் (அதனால் பெறுபவர்களுக்கு என்ன பயன் என்ற அறிவற்ற கொடை). இன்றைய எடுத்துக்காட்டில் சொன்னால், வேறு புலத்திலிருந்து தாயகத்துக்கு ஆடைகளாக உதவி செய்யும் போது இங்குள்ள குளிர்தேயத்துக்கேயுரிய ஆடையினை(Warm winter jacket) வாங்கி அனுப்புவதனைக் கூறலாம்.
“பாரி பாரி என்று பல ஏத்தி,
ஒருவற் புகழ்வர்,
செந் நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன்,
மாரியும் உண்டு”
: புறம் 107
மேலுள்ள பாடலில், கபிலர் பாரியை இகழ்வது போலப் புகழ்கிறார். இதனையே `கொடை மடம்` எனலாம். பொது வழக்கில் தேவையற்றோருக்கான பொருத்தமற்ற கொடைச் செயலே `கொடை மடம்` எனப்படும்.
கொடை மடம் தொடர்பான சில சங்ககால நிகழ்வுகளாகப் பாடப்படுபவை.
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி>> புறம் 201.
மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகன் >>சிறுபாண 84.
காரி வரையாது வழங்கிய தேர்கள் மழைத்துளிகளிலும் பல>> சிறுபாண91.
ஆய் நீலமணியினையினையும் நாகம் கொடுத்த கலிங்கத்தினையும் ஆல அமர்ச் செல்வனுக்கு கொடுத்தமை >> சிறுபாண45.
நள்ளி பின்னர் வறுமையே வராதளவுக்கு நிறையக் கொடுப்பவர்>>சிறுபாண 103.
வல்லில் ஓரி தனது நாட்டையே இரவலர்க்குக் கொடுத்தல்>>சிறுபா 107.
பாடல்களை விரிவாகப் பார்க்க, கீழுள்ள இணைப்பில் முனைவர் காயத்திரியின் கட்டுரையினைக் காண்க.
http://www.shanlaxjournals.in/pdf/TS/V3N2/ts_v3_n2_i1_018.pdf
மேற் கூறிய பாடல்கள் சொல்பவை எல்லாம் கொடை மடமே. மயிலுக்குப் போர்வையோ, முல்லைக்குத் தேரோ அல்லது ஆல அமர் செல்வருக்கு நீல மணியோ தேவையற்றவை. இவை எல்லாம் புலவர்கள் உவமையாகவோ அல்லது உயர்வு நவிற்சி அணியாகவோ கூறியவையாகவே இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, காரி {மலையமான்} மழைத் துளிகளிலும் அதிகமான தேர்கள் வழங்கியதனைப் பார்ப்போம்; மழைத் துளிகளை எண்ண முடியுமா?, அவற்றிலும் அதிகமான தேர்கள் எங்காவது இருக்குமா?
எனவே `ஒரு முல்லைக்கொடிக்குக் கொடுத்த தேருக்கு எத்தனை மரங்கள் அழிக்கப்பட்டிருக்கும், பாரி ஒரு மடையன்` எனப் பழிக்கவும் வேண்டாம்; உண்மையிலேயே தேரினைக் கொடுத்தான் என நம்பவும் வேண்டாம். அதனை வெறும் உவமையாகவோ/ உயர்வு நவிற்சியாகவோ கொள்வோம் .
“பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,
‘கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!` “
: {புறநானூறு 200}.
முல்லைச் செடியானது தான் படரக் கொம்பில்லை
இறுதியாக வள்ளுவனின் குறள் ஒன்று இது தொடர்பாகச் சிறந்த புரிதலினைத் தரும்.
“வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து”.
: குறள் எண்:221
{ இல்லாதவருக்கு (தேவையான ) ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது}.
குறிப்பு – கொடைக்கடம் {giving charity as a duty }, படை மடம் {அறப்போர் நெறியிலிருந்து மாறுபடுகை} என்பவை வேறு.