80 களின் ஆரம்பகாலத்தில் தான் ஈழப் போராட்டம் வீங்கி வளர ஆரம்பித்திருந்தது. இந்திய அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் தோன்றியிருந்த விடுதலை இயங்கள் நான்கை தேர்ந்தெடுத்து இராணுவப் பயிற்சி வழங்க ஆரம்பித்திருந்தது. மறைந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் புதல்வர் சந்திரகாசனை அணுகிய இந்திய உளவுத்துறை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியிலிருந்து இராணுவப் பயிற்சிக்கு ஆள்திரட்டித் தருமாறு கோரியிருந்தது. தமிழ்த் தேசிய இராணுவம் என்ற அமைப்பை 1982 ஆம் ஆண்டு உருவாக்கிக்கொண்ட தமிழரசுக் கட்சி, இலங்கையில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுத் தோல்வியைச் சந்தித்தது. ஒரு சில இளைஞர்களைத் தவிர எவரையும் வழங்க முடியாத நிலையிலிருந்த தமிழரசுக் கட்சியின் இயலாமையால், சந்திரகாசன் ஊடக ஏனைய இயக்கங்களை அணுக ஆரம்பித்தது இந்திய உளவுத்துறை .
இளைஞர்களை அணியணியாகச் சேர்த்துக்கொள்வதற்கான புறச் சூழலை ஏற்படுத்த விரும்பிய இந்திய அரசு, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தியது. தமிழ் நாட்டிலிருந்து இந்திய உளவு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் புலிகளால் திடீர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. 13 இராணுவத்தினர் இந்தத் தாக்குதலில் கொலை செய்யப்பட, இலங்கை முழுவதும் 1983 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடைபெற்றது. தமிழர்கள் சூறையாடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதன் பலனாக உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் சாரிசாரியாக விடுதலை இயக்கங்களில் இணைய ஆரம்பித்திருந்தனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ்,தமிழீழ விடுதலைப் புலிகள், டெலொ போன்ற அமைப்புக்களுக்கு இந்திய இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது.
அப்போதிருத்த ஜே.ஆர்.ஜெயவர்தன அரசு அமெரிக்க சார்பு நிலையைக் கொண்டிருந்தத அதே வேளை இந்திய அரசு சோவியத் ஒன்றிய சார்பு நிலையக் கொண்டிருந்தது. எது எவ்வாறாயினும் 1990 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி ஏற்படும் வரை இந்தியாவும் அமெரிக்க அணியும் அண்டை நாடுகளில் நேரடியாக மோதிக்கொள்வதற்குப் பதிலாக இடைக் குழுக்களையே பயன்படுத்தின. ஜெயவர்த்தன அரசை மிரட்டுவதற்காக விடுதலை இயக்கங்களை இந்தியா பயன்படுத்திக்கொண்டது. இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சி வழங்கிற்று.
இலங்கைப் பேரினவாத அரசு சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான இராணுவப் படுகொலைகளை வெளிப்படையாக ஆரம்பித்திருந்த காலமது. அந்த வேளையில் இலங்கை அரசிற்கு ஆதரவாக பிரித்தானிய அரசு வெளிப்படையாகச் செயற்படத் தயங்கியது. அதற்கு அடிப்படையான காரணம் இந்திய அரசை நேரடியாக பகைத்துக்கொள்ள விரும்பாதமையே.
இந்த நிலையில் 1975 ஆம் ஆண்டு ஆர்ஜன்டீனாவிலுள்ள பிரித்தானிய உயர் அதிகாரிகளைப் பாதுகாக்கும் அமைப்பாக உருவாக்கப்பட்ட Keenie Meenie Services (KMS Ltd) என்ற பாதுகாப்புச் சேவை நிறுவனம், இலங்கையில் விசேட அதிரடிப்படை (STF) என்ற போலிஸ் இராணுவ துணைப் படையை தோற்றுவித்துப் பயிற்றுவிக்க இலங்கை சென்றது. பிரித்தானிய அரசு நேரடியாகத் தலையிட விரும்பாத நிலையில் இந்த்க் குறித்த நிறுவனத்தை இலங்கைக்கு அனுப்பி ஜே.ஆர்.ஜெயவர்த்ன அரசுடன் இணைந்து எஸ்.ரி.எப் ஐப் பயிற்றுவிக்கிறது.
Keenie Meenie: The British Mercenaries Who Got Away with War Crimes என்ற ஆவண நூலில் கே.எம்.எஸ் அமைப்புத் தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் நூலின் ஆசிரியர் பில் மில்லர் வெளியிட்ட தகவல்கள் பல அரசியல் அதிர்வலைகளை பிரித்தானியா முழுவதும் ஏற்படுத்திற்று. அதனைத் தொடர்ந்து இந்த நிறுவனம் இலங்கையில் நிகழ்த்திய போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை மெற்றோபொலிதேன் – Metropolitan Police- போலிஸ் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
பிரித்தானிய கொலைகாரக் கும்பல்களே 1980 களின் இறுத்யில் வடக்குக் கிழக்கில் அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்த ஹெலிகொப்டர்களின் ஓட்டுனர்களாகவும் செயற்பட்டனர்.
தனிமனிதப் படுகொலைகள், சாரிசாரியாக அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்தமை மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தில் சிங்கள ஆக்கிரமிப்புக் குடியேற்றங்களை நிகழ்த்தவும் எஸ்.ரி.எப் பயன்படுத்தப்பட்டது.
தவிர, 1990 களில் உடுகம்பொல என்ற எஸ்.எரி.எப் அதிகாரி நுற்றுக்கணக்கான ஜே.வி.பி இளைஞர்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திப் படுகொலை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.