இலங்கையின் இரத்தக் கறை படிந்த போர் 7 வருடங்களிற்கு முன்னதாக முடிவடைந்து விட்டாலும் கடந்த காலங்களில் இருந்து விடுபடுதல் என்பது இலகுவானதல்ல.
மே 18 எனப்படுவது இலங்கையைப் பொறுத்தவரையில் நீண்டதொரு சிவில் யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட ஏழாவது வருடத்தைக் குறிப்பதாகும். ஆனால் இலங்கைத் தீவில் இருக்கும் இரண்டு பெரிய இனக் குழுமங்கள் அந்த நாளை மிகவும் வேறுபட்ட விதத்தில் நினைவில் கொள்கின்றன.
தெற்கில் சிங்களப் பெரும்பான்மை இனத்தவர்கள் பிரிவினைவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமையினைக் கொண்டாடும் விதமாக இராணுவ அணிவகுப்புகளை பார்வையிடும் அதேவேளை வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் அரச படைகளால் கொல்லப்பட்டவர்களுக்காக, இறுதிப் போரில் பாதுகாப்பு வலயத்துள் வைத்தியசாலை வளாகத்துள் கொல்லப்பட்டவர்களுக்காக, 1980களில் இருந்து படுகொலை செய்யப்பட்டவர்களுக்காகத் துக்கம் கொண்டாடுவதற்கு ஒன்று கூடுகின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போரிட்டு இறந்த மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போன தமது அன்புக்குரியவர்கள் குறித்து நினைவு கூர்தல் என்பது இரகசியமாகவே மேற்கொள்ளப்படுகிறது. பேரழிவினை உருவாக்கிய யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களின் பின்னரும் போராடி மாண்டவர்களை நினைவு கூருதல் என்பது சட்டவிரோதமாகவே காணப்படுகிறது.
புதிய ஆட்சியும் புதிய சவால்களும்
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் படி “கல்லறைகளின் மீதான தாக்குதல்” என ஐ.நா நிபுணர் குழாமால் விபரிக்கப்பட்ட முறைகளின் மூலம் போரினை வெற்றி கொண்டமஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சிக்காலத்தில் 2015ம் ஆண்டுவரை இந்த விடுமுறையானது வெற்றி நாள் என்று அழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டமான முறையில் கொண்டாடப்பட்டு வந்தது.
தெற்கினைப் பொறுத்தவரையில் மஹிந்தவினது ஆட்சியானது ஊழலையும், சிவில் சமூக அடக்கு முறையினையும் ஆட்சி மீதான இரும்புப் பிடியினையும் குறித்து நின்றது. அதே நேரம் முரண்பாடுகளின் வலயமாக இருந்த வடக்கில் அவரது ஆட்சிக்காலமானது இராணுவ ஆக்கிரமிப்பு, கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைக் குறித்து நின்றது.
இக்கட்டுரையில் ஆராயப்பட்டவாறு 2015 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ தோற்க வேண்டுமென சிலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கையின் சிறுபான்மைத் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களது வாக்குகளினால் எதிர்பாராதபடி ஆட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளது கூட்டணி ஆட்சியினைப் பிடித்துக் கொண்டது. மிகவும் இணக்கப்பாட்டைக் கொண்ட அணுகுமுறையினை அனுசரித்துக் செல்லும் ஒரு சமிக்கையாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் புதிய அரசாங்கம் இரத்தம் தோய்ந்த யுத்த நிறைவு ஆண்டு நிகழ்வினைப் பெயர் மாற்றியது. ஆனால் இறந்தவர்களை நினைவு கூர்தல் என்பது சர்ச்சைக்குரியதாகவே காணப்படுகிறது.
கடந்த வருடம் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவதற்குத் தமிழர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆயினும் பலத்த பொலிசார் மற்றும் புலனாய்வாளர்களின் பிரசன்னமானது துக்கம் அனுஸ்டித்த பலரை அந்த நிகழ்வில் பங்களிப்பதில் இருந்து விலகியிருக்கச் செய்ததுடன் தெருவெளி ஊர்வலங்கள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கல் என்பவையும் தடை செய்யப்பட்டன. இவ்வருடம் நினைவு கூரல் நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பாளர்கள் புலனாய்வு முகவர்களால் பின் தொடரப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகவும் நிகழ்வில் பங்குகொண்டோர்கள் இராணுவ ஆளணியினரால் புகைப்படமெடுக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றன.
வன்முறைகளில் இருந்து நாடுகள் மீண்டுவருவது எவ்வாறு?
ஆழமாகப் பிளவுபட்ட சமூகங்களைக் கொண்ட சிறீலங்கா போன்ற நாடுகளில் வன்முறைகளைக் கொண்ட வரலாற்றினைக் கையாள்வது எவ்வாறு என்பதற்கு விடை காண்பது இலகுவானதொன்றல்ல. சர்வதேச சட்டங்களின் படி கொடூரங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உண்மையினை அறிவதற்கான உரிமை மற்றும் நீதியினைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை என்பன உண்டாயினும் இந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்வதென்பது இலகுவான பணியல்ல. ஏன் அவ்வாறு முடியாது என்பதற்கு சிறீலங்கா ஒரு தெளிவான உதாரணமாகும்.
கடந்த காலக் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களால் விடுக்கப்படும் கோரிக்கை மற்றும் குற்றமிழைத்தவர்கள் என்று கருதப்படுவோர் தண்டனைகளுக்கு முகம் கொடுக்கமாட்டார்கள் என்பதை மீள உறுதிப்படுத்த வேண்டிய தேவை ஆகியவற்றிற்கிடையில் ஒரு சமரசத்தினை ஏற்படுத்தும் நோக்கில் ஆணை பன்முகத் தன்மை கொண்ட சிலி, சாட், லைபீரியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் ஆட்சி மாற்றங்களின் பின்னர் உண்மைக்கான ஆணைக்குழுக்களை சேவையில் அமர்த்தின.
ஆனால் சிறீலங்காவில் குற்றமிழைத்த தரப்பே தொடர்ச்சியாக ஆட்சியில் பிரசன்னமாகியிருப்பதற்குமப்பால் இங்கு பாதிக்கப்பட்டவர்கள் பொறுப்புக்கூறல் தொடர்பில் இரண்டாவது சவாலையும் எதிர் கொள்கிறார்கள். பொறுப்புக் கூறலுக்கான முயற்சிகளை பெரும்பாலான எண்ணிக்கை வாக்காளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றார்கள்.
15 வீதத்திற்கும் குறைவான எண்ணிக்கைக் கொண்டிருக்கும் தமிழர்கள் இலங்கையில் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மையாகக் காணப்படுகிறார்கள். பெரும்பான்மை சிங்கள பௌத்த சமூகம் இங்கு நிலவிய கிளர்ச்சியினை அடக்கிய இராணுவத்தினரை வழிபடுவதுடன் பொறுப்புக் கூறலுக்கான அழைப்பினை தமது கதாநாயகர்கள் மீது நடாத்தப்படும் தாக்குதலாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர்.
இத்தகைய மக்களின் பங்களிப்பின்றி உண்மையினைக் கண்டறிதல் எனும் படிமுறைகூட ஏற்கனவே தனது பிரபல்யத்தை இழந்து கொண்டிருக்கும் சிறிசேனா அரசாங்கத்திற்கு கடினமான ஒரு விடயமாகவே அமையும். அதேவேளை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிப் பொறுப்பிற்கு மீளவும் வரவேண்டும் என விரும்பும் பல சிங்கள மக்களின் ஆதரவினைத் தக்க வைத்துள்ளார்.
இலங்கை இன்னும் கடந்தகாலத்தை எதிர்கொள்ளவேண்டிய தேவை உள்ளது
விடுதலைப் புலிகள் மீதான இறுதித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 40,000 என ஐக்கிய நாடுகள் கணக்கிட்ட போதிலும் காணாமல் போனோரின் எண்ணிக்கை 100,000 இற்கும் அதிகம் என பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பால் கூறப்படுகிறது. தெற்கிலுள்ளவர்களைப் பொறுத்தவரையில் இக்குற்றங்கள் காலாவதியாகி விட்டதுடன் மறக்கப்படக் கூடியன. காணாமற் போன தமது அன்புக்குரியவர்களது நிலை பற்றிய தகவல்களை இன்றுவரை தேடிக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பொறுத்தவரையில் இக்குற்றங்கள் அவர்களது நாளாந்த வாழ்வின் வெளிப்படையான உண்மைகள். (இடைக்காலகட்டத்திற்கான நீதி )transitional justice தொடர்பில் வேண்டுமென்றே சிறீலங்கா தாமதங்களை ஏற்படுத்துவதாவது ஆழமாகப் பிளவுபட்டுள்ள சமூகங்களிடையே பொறுப்புக் கூறலை முன்னெடுப்பதில் உள்ள சவால்களை வெளிப்படுத்திக் காட்டுவதுடன் நினைவு கூரலை ஒடுக்கும் செயன்முறையானது மிகவும் வேறுபட்ட ஏதோ ஒன்றை முன்மொழிகிறது. அதாவது, உண்மையில் இங்கே எதுவும் மாறவில்லை. இங்கே (இடைக்காலகட்டத்திற்கான நீதி) transitional justice இல்லாமற் போனதல்ல பிரச்சனை. (மாற்றம் )Transition இல்லாமற் போனதுதான் பிரச்சனை.
மொழியாக்கம் : சுகன்யா
குறிப்பு : நாட்டுக்கு வெளியில்ருந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமது சொந்தக் கற்பனையில் ஈழத்தை நோக்கி அரசியலை ஏற்றுமதி செய்வதைப் போன்றே அதிகாரவர்க்கம் சார்ந்தவர்களின் கருத்தியல் வடிவம் எப்படியிருக்கிறது என்பதன் குறியிடாக மேற்குறித்த ஆக்கத்தைக் கருதலாம் – இனியொரு…