Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கமலஹாசனின் அரசியல் ஊழல் (பாகம்1) : சபா நாவலன்

2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. வங்கிகள் சரிந்து விழ ஆரம்பித்தன. பங்கு சந்தையில் அதிர்வுகள் ஏற்பட்டன. உலகின் முக்கிய ஆட்சித் தலைவர்கள் கார்ல் மார்க்ஸ் சொன்னது தான் சரி என்றார்கள். உலகின் எட்டு பணக்கார நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரஞ்சு ஜனாதிபதியாகவிருந்த நிக்கொலா சார்கோசி அதனை வெளிப்படையாகவே கூறினார். அவர்களுக்கும் அவர்களின் ஆலோசகர்களுக்கும் அது முன்னமே தெரிந்திருந்தது என்பது தான் உண்மை. ஒவ்வொரு தடவையும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் போதும் அரச திறைசேரியின் சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தி பொது நிர்மாணப் பணிகளை முடுக்கிவிடுவார்கள்; அரச பணியாளர்களின் தொகையை அதிகப்படுத்துவார்கள்; கல்வித்துறையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்து வேலையை உருவாக்குவார்கள். இவற்றின் ஊடாக வேலையற்றவர்களின் தொகையைக் குறைத்து வேலைகளின் அளவை அதிகரிப்பார்கள். இதன் ஊடாக அரச புதிய பணப்புழக்கத்தையும் மூலதனத்தின் இயக்கத்தையும் உருவாக்கிக்கொள்வார்கள். இதனைத் தான் கீனேசியன் கோட்பாடு என்றும் அழைப்பார்கள்

மூலதனத்தின் சுழற்சி மீண்டும் தோன்ற ஆரம்பிக்கும். இவ்வாறான ஒரு திட்டத்தை செயற்படுத்த “இடதுசாரி” என்று அழைக்கப்படும் கட்சிகள் தயார் நிலையில் வைக்கப்படும். உதாரணமாக பிரான்சில் சோசலிசக் கட்சி(PS), பிரித்தானியாவில் தொழிற்கட்சி(Labour Party) ஆகியன இவ்வாறான சூழலிலெயே ஆட்சி அமைப்பைப் பாதுகாப்பதற்காக தெரிவு செய்யப்படும். இதற்காகவே ஊடகங்கள் அனைத்தும் தமது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்திவிடும். பொருளாதாரம் ஏற்ற நிலைக்கு வர ஆரம்பிக்க வலது சாரி என்று அழைக்கப்படும் கட்சிகள் ஆட்சியைக் கையகப்படுத்தி பெரு முதலாளிகளின் நிர்வாகிகள் போன்றே செயற்பட ஆரம்பித்துவிடுவார்கள்.

இடதுசாரிக் கட்சிகளில் சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர்களும் வலது சாரிக் கட்சிகளின் பாசிச ஒடுக்குமுறை மீது வெறுப்புக்கொண்டவர்களும் இணைந்து கொள்வார்கள். பல சந்தர்பங்களில் இவ்வாறான புரட்சிகர நோக்கம் கொண்டவர்களின் ஆளுமை இடதுசாரிக் கட்சிகளில் அதிகரிக்கும் போது அதனை அதிகாரவர்க்கம் எதிர்கொள்ள முடியாமல் திணற ஆரம்பிக்கும். அவ்வாறான ஒரு சூழலை எதிர்கொள்ளவே அதிகாரவர்க்கம் “மைய அரசியல்” (Centrism) என்ற ஆபத்தான கருத்தை முன்வைத்து புதிய அரசியலைக் கட்டவிழ்த்துவிட்டது.

1970 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானியாவின் பிரதான கட்சிகளில் ஒன்றான தொழிற்கட்சி, புரட்சிகரக் கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தது. பெரு முதலாளிகளுக்கு எதிரான போராட்டங்களையும் ஊதிய உயர்வுக்கான போராட்டங்களையும் தலைமை தாங்கி நடத்த ஆரம்பித்தது. 70 களின் இறுதிவரை இவ்வாறான போக்கு தொடரந்தது. அக்காலப் பகுதியில் தொழிற்கட்சியின் முக்கிய தலைவர்களான ரோய் ஜென்கின்ஸ், டேவிட் ஓவென், ஷெர்லி வில்லியம்ஸ் பில் ரோஜெஸ் போன்றவர்கள் மைய அரசியல் என்ற கருத்தை முன்வைத்து தொழிற்கட்சிக்கு வெளியேயும் உள்ளேயும் பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். சில மாதங்களுக்கு உள்ளாகவே அவர்கள் கட்சியிலிருந்து பிரிந்து சமூக ஜனநாயகக் கட்சி என்ற மைய அரசியலுக்கான கட்சியை உருவாக்கிக்கொண்டனர்.

தொழிற்கட்சி புரட்சியைத் தூண்டுவதாகவும், கடுமையான இடது சாரித்தனம் கொண்டதாகவும் பிரச்சாரம் மேற்கொண்டு தொழிற்கட்சியிலிருந்த ரொனி பென் போன்றவர்களை வெளியிலிருந்தே ஓரம்கட்ட ஆரம்பித்தனர். தொழிற்கட்சியின் மக்கள் சார்ந்த கருத்துக்களைத் துடைத்தெடுக்க அதிகாரவர்க்கத்துடன் இணைந்து பணியாற்றினர்; 1988 ஆம் ஆண்டு தொழிற்கட்சி அவர்கள் வழிக்கு வந்துவிட அதனோடு தம்மை மீண்டும் இணைத்துக்கொண்டனர். இதே போன்று தான் மைய அரசியல் பிரான்சிலும் ஆஸ்திரியாவிலும், ஜேர்மனியிலும் தோற்றம்பெற்றது.
மைய அரசியலை முன்வைத்து முதலில் ஆட்சிக்கு வந்தவர் பிரித்தானியாவில் பெரும்பாலனவர்களால் இன்று வெறுக்கப்படும் ரோனி பிளேர். ஈராக் மீது படையெடுத்து ஆயிரக்கணக்கான மக்களின் கொலைகளுக்கு காரணமானவர் என்பது மட்டுமன்றி பிரித்தானியாவில் பல்வேறு சமூக நல திட்டங்களை அழித்தவர் என்பதே இவர் மீதான வெறுப்பிற்குப் பிரதான காரணம்.

ரொனி பிளேரின் மைய அரசியல் ஏற்படுத்திய அழிவின் தொடர்ச்சி இன்று வரைக்கும் சமூகத்தைத் தின்றுகொண்டிருக்கிறது.

பிரான்சில் லிபரல் ஜனநாயகக் கட்சியால் 80 களில் தொடங்கிவைக்கப்பட்ட மைய அரசியல் என்ற அழிவுக் கருத்தின் தொடர்ச்சியே இன்று மக்ரோன் என்ற நபரை ஆட்சியில் அமர்த்தியது. இன்று பிரான்சில் வரலாறு காணாத போராட்டங்களைச் சந்திக்கிறது. சிறிதளவு காணப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைகளைகளும், ஜனநாயக இடைவெளியும் மக்ரோன் ஆட்சியில் சட்டங்கள் ஊடாக அழிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான விசக் கருத்துக்களை முன்னெப்போதும் இல்லாதவாறு அரசு இயந்திரமே பரப்பிவருகிறது. போலிசிற்கு அதீத அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மொத்த சமூகத்தையின் கருவறுக்கும் ஊழல் பிரான்சில் தலைவிரித்தாடுகிறது.
பிரான்சில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் மக்களின் கோபத்தைத் தற்காலிகமாகத் தணிக்கவும், ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்கவும், புதிய ஏகபோக சந்தையை நிலை நாட்டவும் மைய அரசியல் தன்னார்வ நிறுவனங்களின் உதவியுடன் கூட நடை முறைப்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் முதலாவது மைய அரசியல் முகவர் அரவிந் கெஜ்ரவால் என்ற டெல்லி முதல்வர். முழுச் சமூகத்தையுமே அழிக்கும் ஊழலை நோக்கமாகக் கொண்ட இவர்கள் அனைவரும், எமக்கு அரசியல் தேவையில்லை ஊழலுக்கு எதிரான நிர்வாகமே தேவை என்பார்கள். இதனூடாக அவர்கள் சார்ந்த அதிராகவர்க்கத்தின் தூணாகச் செயற்படுவார்கள்.

டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுகட்ட பி.ஜே.பி இன் துணையோடு தன்னார்வ நிறுவனங்களின் செலவில் ஆட்சியைப் பிடித்தவர் அரவிந் கெஜ்ரவால்.
இந்த மைய அரசியலின் தமிழ் நாட்டு அரசியல் ஊழலின் முதல் முகவர் தான் கமலஹாசன் ஐயங்கார்.

கமலஹாசன் கடைந்தெடுத்த கோமாளி போலப் பேசினாலும் அவரின் அரசியல் பின்னால் செயற்படும் தன்னர்வ நிறுவனங்கள், இந்திய இந்துத்துவ அதிகார வர்க்கத்தின் பின்புலம் என்பவற்றை புரிந்துகொள்வதன் ஊடாகவே இவரின் அரசியலின் எதிர்கால ஆபத்தை வெளிக்கொண்டுவர இயலும்.

(இன்னும் வரும்…)

மேலதிக வாசிப்பிற்கு:

ஊழலை நிறுவனமயப்படுத்தும் ஆம் ஆத்மி தன்னார்வ நிறுவனத்தின் புதிய பரபரப்பு

 

https://www.rollingstone.com/music/music-news/marx-was-right-five-surprising-ways-karl-marx-predicted-2014-237285/

ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம் : சபா நாவலன்

Exit mobile version