Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்களின் `தீப நாள்`/` தீப வரிசை` எல்லாம் கார்த்திகை விளக்கீடு எனும் மதசார்பற்ற விழாவே!: : வி.இ.குகநாதன்.

இன்று எல்லாம் `தீப நாள்`/` ஒளி நாள்`/` தீபங்களின் வரிசை ` என்றவுடனேயே `தீபாவளி` என்ற ஆரியப் பண்டிகையினையே தமிழர்களும் நினைக்கின்றார்கள். உண்மையில் நாயக்கர் காலத்துக்குப் (16ம் நூற்றாண்டு) பின்னரே தமிழ் நாட்டில் தீபாவளி திணிக்கப்படுகின்றது. ஈழத்திலோ 1940 களில் கூடத் `தீபாவளி` பரவலடைந்திருக்கவில்லை. அவ்வாறாயின் தமிழர்களின் ஒளி நாள் எது எனக் கேள்வி எழலாம். அது கார்த்திகை விளக்கீடே. இன்று போல அன்று அது ஒரு மதம் சார்ந்த விழா அன்று; மாறாக இயற்கை, பண்பாடு சார்ந்த ஒரு வாழ்வியல் விழாவாகும். இந்த விழாவினை விளங்கிக் கொள்வதற்கு, முதலில் இன்றுள்ள புராணக்கதையினை கட்டுடைத்துப் பார்க்க வேண்டும்.

புராணப் புளுகு:-

விட்டுணுவும் பிரம்மாவும் சிவனின் அடி-முடி தேடி, முடியாமல் அவருக்குக் கீழ்ப் பணிய, சிவன் பெருஞ் சோதியாகக் காட்சி கொடுத்த புராணக்கதையே விளக்கீட்டுக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது. இக் கதையினையே பெரிய புராணம் பின்வருமாறு பாடும்.

“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணாய
நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்
நாணாது மேடிய மால் நான்முகனும் காண நடுச்சேணாலும்தழல் பிழம்பாய் தோன்றியது தெளிந்தார்”.

இதன் கருப்பொருள் யாதெனில் சிவனின் அடி முடியினை யாராலும் காணமுடியாது என்பதாகும். சிவனின் முடியில்தான் மதி (சந்திரன்)இருக்கிறது என்பதனை, “பித்தாப் பிறை சூடி” எனும் இன்னொரு பாடலில் அறியலாம். இப்போது சிவனின் முடியிலிருக்கும் மதிக்கு நீல்ஆம்சுரோங் உட்பட சிலர் சென்றுவந்துள்ளனர். உங்களிடம் கூடப் பெருமளவு பணமிருந்து, விரும்பினால் அங்கு சென்று வரக் கூடிய நிலை விரைவில் ஏற்படலாம். இங்கு எழும் கேள்வி யாதெனில் பிரம்மா-விட்டுணு போன்ற கடவுள்களாலேயே முடியாத செயலினை , மனிதர்கள் எவ்வாறு செய்தார்கள்? இந்தக் கேள்வி மட்டுமே குறித்த புராணக் கதையினைப் பொய்யாக்கி விடும்.

இன்னொரு முதன்மையான கேள்வி அவ்வாறு இந்துமதப் பண்டிகையாயின் சிவனை வணங்கும் தமிழ்நாடு தவிர்ந்த இந்தியாவின் பிற பகுதிகளிலுள்ள இந்துக்கள் ஏன் இந்த விழாவினைக் கொண்டாடுவதில்லை? விட்டுணுவினைப் பெருங் கடவுளாகக் கருதும் தமிழ்நாட்டு வைணவர்கள் எவ்வாறு தமது கடவுளான விட்டுணுவினைச் சிவனுக்குத் தாழ்ந்தவராக ஏற்றுக் கொண்டாடுகிறார்கள்? அடுத்ததாக அவ்வாறு வைதீகப் பண்டிகையாயின் தீர்த்தங்கரர்களின் அறிவினை மட்டும் வணங்கும் சமணர்கள் எவ்வாறு இதே கார்த்திகை விழாவினை (திருவண்ணாமலையிலுள்ள சமணக்கோயிலிலும் கொண்டாடப்படும் சமணக் கார்த்திகை) கொண்டாடுகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடை யாதெனில், விளக்கீடு என்பது பழந் தமிழர்களின் ஒரு மத சார்பற்ற விழாவாகும்; பின்னர் இதனைச் சமய விழாவாகக் களவாடி, அதற்காகப் புனையப்பட்ட புராணக்கதையே – இந்த `அடி முடி தேடிய கதை` {இதில் சைவ-வைணவச் சண்டையும் ஒழிந்துள்ளது}.

பழந் தமிழர் வாழ்வியலில் விளக்கீடு :-

கார்த்திகை என்பதே `கார்` திகைதலினைக் குறிப்பதாகும். கார் காலமான மழைக்காலம் முடிவுறும் ( திகைதல்=முடிவுறுதல்) காலமாகும்.
https://agarathi.com/word/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
இவ்வாறு மழைக் காலம் முடிந்து பனிக்காலம் தொடங்குகின்ற ஒரு காலப் பகுதியே `கார்த்திகை` ஆகும். இருட்டுக் காலம் தொடங்குவதாலேயே விளக்குகள் ஏற்றப்படுகின்றன. பழங் காலத்தில் விளக்கீடு என்பது ஒரு நாள் விழா அல்ல; மாறாக கார்த்திகைத் திங்கள் (மாதம் ) முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். வட இந்தியாவில் கார் கால மாற்றமானது முந்தியே இடம் பெற்று விடுவதால், அவர்கள் இரு கிழமைகள் முன்னராகவே `தீப வரிசை` யினைக் கொண்டாடுவார்கள்; எமக்கோ, கார் காலம் பிந்தியே தொடங்குகின்றது. டெல்லியில் மழை பெய்வதற்காகச் சென்னையிலும் மட்டக்களப்பிலும் குடை பிடித்த மாதிரி நாமும் அவர்களது தீபாவளியினை இன்று கொண்டாடுகின்றோம். உண்மையில் நாம் விளக்குகள் ஏற்ற வேண்டியது விளக்கீடு அன்றேயாகும்.

சங்க இலக்கியங்களில் விளக்கீடு:-

விளக்கீடானது போர் வீரத்துடன் பெருமளவுக்குத் தொடர்புபடுவதனைச் சங்கப் பாடல்களைப் பார்ப்பதனூடாக அறிந்து கொள்ளலாம். முதலாவதாக நற்றிணைப் பாடல் ஒன்றினைப் பார்ப்போம்.
“வீரை வேண்மான் வெளியன் தித்தன் 5
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து,..”
{நற்றிணை – 58: 5-8}

[முழுப் பாடலின் பொருள்= வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன். அவன் மகன் தித்தன். அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.]

வீரை என்னும் ஊரையாண்ட வேளிர் குழாத்தவனான (குலத்தவனாவானான ) வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்பவன் மாலையில் முரசில் விளக்கேற்றி வைத்ததை, முதுகூத்தனார் என்னும் புலவர் மேலுள்ளவாறு பாடுகின்றார். இந்த நிகழ்வினையே சமயச் சடங்காக்கி, `திருவண்ணாமலைத் தீபம்` ஆகக் கொண்டாடப்படுவதாக ஒரு கருத்துமுள்ளது. அங்குள்ள சமணக் கோயிலிலும் விளக்கேற்றப்படுவதானது, எமது கருத்தினை மேலும் வலுப்படுத்தும்.

இன்னமும் சில பாடல்களில் போருடன் தொடர்புடையதாக் கார்த்திகைத் திங்களும், விளக்கேற்றலும் காணப்படுவதனைக் காணலாம். இந்த வகையிலேயே; கார்த்திகை மாதத்தில் இன்றும் ஈழத்தில் வீரர்களை நினைத்து விளக்குகள் ஏற்றப்படும் மாவீரர் நாள் நிகழ்த்தப்படுவது அமைந்திருப்பதும், கார்திகை மாதத்தில் முளைவிடும் காந்தள் பூவானது அந்த நிகழ்வினை அழகு செய்வதும் தற்செயலாகப் பொருந்திப் போகின்றன.

போருக்குப் போன தலைவனுக்காக மட்டுமல்ல, பொருள் தேடிப் போன தலைவனின் வருகைக்காகவும் விளக்குகள் ஏற்றப்பட்டதனைப் பின்வரும் சங்கப் பாடல் காட்டும். கரிகாலன் ஆட்சியில் வேங்கட மலைக் காட்டினைத் தாண்டி, பொருள் தேடிச் சென்ற தலைவனை எண்ணி, ` கார்த்திகை விளக்கீடு கொண்டாட வர வேண்டும்` எனத் தலைவி பாடுவதாக அமைந்த பாடலான அகநூனூற்றுப் பாடல் (141) ஒன்றினைப் பார்ப்போம்.
“மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய 10
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!”
{அகநானூறு 141 (9-11)}
[விளக்கம்: தெருவெங்கிலும் விளக்கு வைக்கின்றனர். மாலை, தோரணம் கட்டுகின்றனர். பழமை மேம்பாடு கொண்ட நம் ஊரில் எல்லாரும் கார்த்திகை விழாக் கொண்டாடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நாமும் விழாக் கொண்டாட அவர் வரவேண்டும்.]

மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம் என்பதனைப் பின்வரும் பரிபாடலானது காட்டுகின்றது.
“விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர”
: பரிபாடல் 11

சங்க காலத்துக்குப் பின்னர் கூட, விளக்கீடானது கொண்டாடப்பட்டதனை `கார் நாற்பது` என்ற நூல் காட்டும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ` கார் நாற்பது ` என்பது இயற்கை சார்ந்த விழாவாகவும், பண்பாடு சார்ந்த நிகழ்வாகவும் `விளக்கீடு` எவ்வாறு கொண்டாடப்பட்டது எனக் காட்டும்.
“நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை”
[மக்கள் வரிசையாக ஏற்றி வைத்துள்ள விளக்குகள் போல மழை வந்துள்ளது எனப் பாடப்படுகின்றது.]

மேற்குறித்த சங்க இலக்கியங்களில்/ கார் நாற்பதில் குறிப்பிடப்படும் கார்த்திகைவிழாக் கொண்டாட்டங்கள் எதுவமே மத சார்பற்ற வகையில் இயற்கையோடு இணைந்த தமிழரின் வாழ்வினைக் குறிக்கிறது. இவ்வாறான விழாவினைப் பின்பு தமிழர் மத்தியில் பவுத்தம் பரவியபோது பவுத்தர்களும் கொண்டாடினர். அதற்குப் பின் சமணத் தமிழர்களும் கொண்டாடினர். இங்கு கவனிக்க வேண்டியது சமணமோ அல்லது தமிழ்ப் பவுத்தமோ புராணக்கதையினை உருவாக்கித் தமிழர் விழாவினை களவாடவில்லை. அந்த களவுக் கைங்காரியத்தை `இந்து` முகமூடியிலுள்ள பார்ப்பனியமே செய்து முடித்தது. நமது கொள்ளுப் பாட்டான்களும், கொள்ளுப்பாட்டிகளும் கொண்டாடிய மதசார்பற்ற கார்த்திகை விழாவினை நாம் மீட்டெடுக்கவேண்டும்.

“மகிழ் திகழ் கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

Exit mobile version