Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாணம் அழிகிறது

jaffnatree1முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மிகப்பெரும் அழிவு என்ன என்ற கேள்வி ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல. இதுவரை நேரடியாக நிகழ்த்தப்பட்ட அழிவுகள் இப்போது வெளித்தெரியாமல் நீண்டகால நோக்கில் நடைபெறுகின்றன. பௌத்த மத ஆக்கிரமிப்பு, பாராளுமன்ற ஒற்றையாட்சி அரசியல் திணிப்பு, நில ஆக்கிரமிப்பு என்று எல்லாமே முன்னைய ஒடுக்குமுறையின் ஒரு வகையான தொடர்ச்சியாகக் கருதப்படலாம். ஆனால் வெளிப்படையாகத் தெரியும் அழிப்பு ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் மூன்றில் ஒரு பகுதியைக் குட்டிச்சுவராக்கியுள்ளது.

இதுவரை நடைபெற்றிராத வடிவில் இது நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை மனிதர்கள் வாழமுடியாத பிரதேசமாக்கும் இப் பேரழிவு எதிர்கொள்ள முடியாத பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த அழிவுகள் இன்னும் பல வருடங்கள் தொடரும் ஆபத்தான சூழல் காணப்படுகின்றது,

இன்னும் சில வருடங்களில் யாழ்ப்பாணத்தின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வாழமுடியாத நீர்வளமற்ற வரண்ட பூமியாகிவிடும் நிலை காணப்படுகிறது. இதன் பின்னணியில் இலங்கை அரசு மட்டுமன்றி, தேசியம் பேசும் பல்வேறு அரசியல் முகவர்களும் செயற்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல்கள் கூட வெளிப்படையானவையே.

சுன்னாகத்தில் ஆரம்பித்து நடத்தப்பட்ட இந்த அழிவு சிறிது சிறிதாக யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளையும் அழித்துக்கொண்டிருக்கிறது.

சுன்னாகத்தில் தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட அழிவின் பின்னணியில் பல்வேறு உள்ளார்ந்த நோக்கங்கள் காணப்படுகின்றன என்ற சந்தேகங்கள் எழுகின்றன. காவிரி நீர்ப் பிரச்சனையால் தமிழகம் பாதிக்கப்படுகிறது என நீலிக் கண்ணீர் வடிக்கும் தமிழ்த் தேசிய வாதிகள் தமது முற்றத்திலேயே நடைபெற்ற இந்த அழிவு குறித்து மூச்சுக்கூட விடவில்லை. தம்மைத் தமிழ்த் தேசியவாதிகள் என்றும், தேசிய செயற்பாட்டாளர்கள் என்றும் அழைத்துக்கொள்ளும் அப்பட்டமான வியாபாரிகள் இந்த அழிவின் இலாப நட்டங்களைக் கணக்குப் போட்டால் அவர்களுக்கு கிடைக்கும் வருவாயின் தொகை அதிகமாக இல்லை என்பதைப் புரிந்துகொண்டு மக்களையும் மண்ணையும் நட்டாற்றில் விட்டுவிட்டார்கள்.

நடந்தது என்ன?

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலப்பகுதியில் 2006 ஆம் ஆண்டின் இறுதியில் நோதேர்ண் பவர் என்ற நிறுவனம் ஜெகான் பிரசன்ன அமரதுங்க என்பவரால் ஆரம்பிக்கப்படுகின்றது. அக்காலப் பகுதியில் மகிந்த ராஜபக்ஷவுடன் தனக்கிருந்த நெருக்கமான உறவைப் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க அமரதுங்கவின் நிறுவனத்திற்கு சுன்னாகம் அனல் மின் நிலையத்தினை நடத்துவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொடுக்கிறார். ஒப்பந்தம் எழுதப்பட்டதும், மின் நிலையத்தை நடத்துவதற்கான குறைந்தபட்சக் கட்டமைப்புகள் கூட அமரதுங்கவிடம் இருந்ததில்லை.

ஆனால் அதே காலப்பகுதியில் மலேசிய நிறுவனமான எம்.ரி.டி கப்பிடல் என்ற நிறுவனம் தனது துணை நிறுவனத்தை இலங்கையில் ஆரம்பித்து அதற்கு எம்.ரி.டி வோக்கஸ் என்ற பெயரை வைத்துக்கொள்கிறது. பின்னதாக நோதேர்ன் பவர் நிறுவனத்தின் 80 வீதமான பங்குகளை எம்.ரி.டி வோக்கஸ் வாங்கிக் கொள்கிறது. இதனால் யாழ்ப்பாணத்தில் மின் நிலையத்தை நடத்துவதற்கன உரிமை எம்.ரி.டி வோக்கசிற்குக் கிடைக்கிறது. கழிவு அகற்றுதல் தொடர்பான தொழிலை மேற்கொண்டிருந்த எம்.ரி.டி நிறுவனம் முதல் தடவையாக சுன்னாகம் அனல் மின்நிலையத்தை நடத்துவதற்கன உரித்தைப் பெற்றுக்கொள்கிறது.

எம்.ரி.டி வோக்கஸ் இன் தாய் நிறுவனம் மலேசியாவில் கழிவு அகற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளது போன்றே, கப்பல்களிலிருந்து கடலில் வெளியேற்றத் தடை செய்யப்பட்டுள்ள கிறீஸ் அதிபார டீசலைப் பாதுகாப்பாக வெளியேற்றி மனிதர்கள் வாழாத இடங்களில் பாதுகாப்பாக எரிக்கும் தொழிலையும் செய்து வந்தது.

இலங்கையிலிருந்த ஊழல் அரசின் துணையுடன் கிறீஸ் அதிபார டீசலை சுன்னாகம் அனல் மின் நிலையத்தின் ஊடாக மக்கள் குடியிருப்புக்களை நோக்கி வெளியேற்றுவதன் ஊடாக அந்த நிறுவனம் இரட்டிப்பு இலாபத்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தீர்மானித்ததன் விளைவே இன்று யாழ்ப்பாணம் நாசப்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதன் மற்றொரு  பின்னணி.

எம்.ரி.டி வோக்கஸ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதும் அதன் பங்குதரர்களில் ஒருவராகவும், இயக்குனர்களில் ஒருவராகவும் பிரித்தானிய அரசியல் வாதியான இலங்கைச் சிங்களவர் ஒருவர் (நிர்ஜ் தேவா) நியமிக்கப்படுகிறார். முதலீடுகள் இல்லாமல் பங்குகளைப் பெற்றுக்கொள்வது நிர்ஜ் தேவாவின் வழமை. ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் பிரித்தானிய கொன்சர்வெட்டிவ் கட்சியின் உறுப்பினராகவிருக்கும் நிர்ஜ் தேவா, எம்.ரி.டி வோக்கஸ் இலிருந்து தனக்கு வருமானம் கிடைப்பதாக தனது வருமான வரிக் கணக்குகளில் கூறியதற்கான ஆதாரங்களை இனியொரு முன்னதாக வெளியிட்டிருந்தது.

ரணில் விக்ரமசிங்கவும் சுன்னாகம் அழிவில் அவரின் பங்கும்

நிர்ஜ் தேவா பல்வேறு அரசியல் மாற்றங்களின் பின்னணியிலும் அழிவுகளின் பின்னணியிலும் செயற்பட்டுள்ளார். இரப்பர் கழிவுகளை வெளியேற்றி பிரித்தானியாவைச் சுத்தப்படுத்தும் திட்டம் ஒன்றினது இணை இயக்குனர்களில் இவர் ஒருவர். இந்தியாவில் உதவி என்ற பெயரில் அப்பாவிகளுக்கு போலியோ தடுப்பூசி ஏற்றுவதாக அவர்கள் மீது பரிசோதனை நட்த்தியதில் சிலர் மரணித்த சம்பவம் ஊடகங்கள் சில குறிப்பிட்டிருந்தன, அதற்கான ஒழுங்குகளை இந்தியாவில் ஏற்பாடு செய்தவரும் இவரே.

பிரித்தனியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்கிய காரணத்தால் நீதிமன்றத்தால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். ரணில் மைத்திரி ஆட்சி அமைவதன் பின்னணியில் பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இடைத்தரகராகச் செயற்பட்ட இவர் ரணில் விக்ரம சிங்கவின் நெருங்கிய நண்பர்.

ரணில் ஆட்சிக்கு வந்ததும் சிறீலங்கன் எயார் லைன்சின் இணை இயக்குனரக நியமிக்கப்பட்டார்.

இன்றும் இலங்கை அரசின் ஆலோசகர்களில் ஒருவராகச் செயற்படும் நிர்ஜ் தேவா எம்.ரி.டி வோக்கஸ் இன் இயக்குனராகவும் தொடர்கிறார்.

எம்.ரி.டி வோக்கஸ் இன் அழிவுகளைத் தொடர்வதற்கு இலங்கை அரசிற்கான இடைத் தரகராக இவர் செயற்பட்டார் என்பதற்கு இவை போதுமான ஆதாரங்கள்.

மின்னுற்பத்தியின் ஆரம்பம்..

2007 ஆம் ஆண்டிலேயே மின் உற்பத்தியை ஆரம்பித்துவிட்ட நிறுவனம் அங்கு வெளியேற்றப்படும் நச்சுக் கழிவு எண்ணையை வெளியேற்றுவதற்கான எந்தத் திட்டத்தையும் கொண்டிருக்காமல் சட்ட விரோதமாகச் செயற்பட்டது. இவ்வாறான சட்டவிரோத செயற்பாட்டிற்கு இலங்கை அரசு பச்சைக்கொடி காட்டியிருந்தது.

ஆக, கழிவுகளை நிலத்தின் அடியில் சுன்னாகம் அனல் மின்னிலையத்தின் உள்ளேயே வெளியேற்ற ஆரம்பித்தது. யாழ்ப்பாணத்தில் உலகின் அரிய நீர் கிடைக்கிறது, தெளிவான சுண்ணாம்புப் பாறைகளின் ஊடாக பாய்ந்தோடும் நிலக் கீழ் நீர் யாழ்ப்பாணம் முழுவதையும் வளமான பூமியாக்கியிருந்தது,

வெறும் இலாப நோக்கத்தை மட்டுமே நிறுவனம் கொண்டிருக்க, இலங்கைப் பேரினவாத அரசு அந்த நிறுவனத்திற்கு அப்பிரதேசத்தை நாசப்படுத்தும் பணியை வழங்கியிருந்தது எனலாம்.

ஆக, ஏழு வருடங்களாக நடத்தப்பட்ட இந்த அழிவின் ஊடாக, சுண்ணம்புப் பாறைகளின் மேல் நச்சுப் படிந்தது மட்டுமன்றி, சரிவான பகுதிகளை நோக்கி இக் கழிவு பரவ ஆரம்பித்தது.

நீரும் நிலமும் நாசப்படுத்தப்பட்டது, அது இன்னும் நிறுத்தப்படவில்லை. கொக்குவில், திரு நெல்வேலி வரைக்கும் இதுவரை இந்த நச்சுக் கழிவுகளின் தாக்கத்தைக் காணமுடிகிறது.

ரவூப் ஹக்கீம் உண்மையைக் கூறியதன் பின்னணியில் பேரம்பேசும் தந்திரம்?

பல தனி நபர்களும், இலங்கை நீர்பாசனத் திணைக்களமும் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அப்பகுதி நீரில் நச்சு எண்ணை காணப்படுவதை உறுதிப்படுத்திற்று.

இந்த நிலையில், கடந்த வருடம் ஏப்பிரல் மாதமளவில்  நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன நீர் வளங்கல் அமைச்சர்  ரவூப் ஹக்கீம் சுன்னாகத்திலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவான பகுதிகளில் கிறீசும் எண்ணையும் கலந்திருப்பதால் அப்பகுதிகளின் மக்கள் அந்த நீரை அருந்தக்கூடாது என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம் ,சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் படிந்துள்ளது என்பதை ஆராய்வதற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நிபுணர்கள் குழுவொன்று நியமித்தார்.

150 கிணறுகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், அவற்றில் 109 கிணறுகளில் (73 வீதம்), நியம அளவுக்கு அதிகமான எண்ணெயும், கிறீசும் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

7 கிணறுகளில் (4 வீதம்) எண்ணெய் கலப்பு தரநியமங்களுக்கு குறைவாக உள்ளது. 34 கிணறுகளில்(23 வீதம்) எந்தக் கலப்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்த எண்ணெய்ப் படிம மாசு ஏனைய கிணறுகளுக்கும் பரவி வருகின்றன.

மேற்படி சுன்னாகம் பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிறுவனத்தை சுற்றியுள்ள 2.5 கிலோ மீற்றர் பிரதேசங்களில் இந்த பாதிப்பு உள்ளது.

இதனால், நாம் அப்பிரதேச மக்களுக்கு தினமும் ஆறு நீர்த்தாங்கிகளின் மூலம், குடும்பமொன்றுக்கு 250 லீற்றர் நீரை வழங்கி வருகின்றோம்.

இதற்கான செலவை நாம் அந்த மின்சார நிறுவனத்திடமே பெற வேண்டியுள்ளது. அவர்களால் தான் இந்த பிரச்சினை உருவானது.

இந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் நீர் விநியோகத் திட்டத்தில் சுன்னாகம் பகுதியை உள்ளடக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்ற கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஹக்கீம் இன் வாக்குறுதி காற்றில் பறக்க குறித்த நிறுவனத்திற்கு எதிராக யாரும் வழக்குத் தொடரவில்லை. ஹக்கீம் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்துடன் அதிகமாகப் பேரம் பேசுவதற்கான ஆயுதமாக இக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கவே அதிக வாய்ப்புக்கள் உள்ளன. அனைத்தும் கிடப்பில் போடப்பட்டது. ஹக்கீமின் வாக்குறுதியை முன்வைத்து சுன்னாகத்தை மையமாகக்கொண்டு நடைபெற்ற பேரழிவிற்கு எதிராக மக்கள் போராட முற்பட்டால் என்ன நடக்கும்?

தமிழ் மண்ணை நிரந்தரமாக அழிப்பதற்கான விக்கி – ஐங்கரநேசன் கூட்டு!

இந்த சூழலில் தான் வட மாகாண சபையின் விக்னேஸ்வரனும் ஐங்கரனேசனும் இணைந்து நிறுவனத்தைக் காப்பாற்ற தம்மைத் தயார்படுத்திக்கொள்கின்றனர். மூன்று தலைமுறைக்கும் மேலாக கொழும்பு சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளின் அரவணைப்பில் வாழ்ந்து ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிய நீதிபதி விக்னேஸ்வரனுக்கு மண்பற்று இருந்திருக்க எந்த வாய்ப்பும் இல்லை என்பது வெளிப்படை. அதே போன்று ஐங்கரநேசன் என்ற கடைந்தெடுத்த வியாபாரியின் நிலையும் மாறுபட்டதல்லை. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இந்த நிறுவனம் பொருத்தமானவர்களையே நாடியிருந்தது.

இதுவரை மனிதப்படுகொலைகளைச் சந்தித்த யாழ்ப்பாணம் இப்போது இயற்கைப் படுகொலையை இலாப வெறிக்கும் தேசிய இன வெறிக்கும் தீனியாகக் கொடுத்த போது அதனைக் காப்பாற்றுவதற்கு முன்வந்தவர் முன்னை நாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன். மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குப் பொறுக்கும் அரசியலை சிறிது சிறிதாக அறிந்துகொள்ள ஆரம்பித்திருந்த விக்னேஸ்வரன் பெப்ரவரி மாதமே தேசிய நீர் வடிகாலமைப்புச் சபையின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் நிபுணர் குழுவை அமைத்திருந்தார்.

நிபுணர் குழுவை அமைப்பதற்குச் சற்று முன்னதாக இனப்படுகொலைத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி பலரது கவனத்தையும் இலகுவாகத் திசைதிருப்பிய அறிக்கைப் புயல் சாமியார் விக்னேஸ்வரன், யாருடைய எதிர்ர்பும் இன்றி மக்களைக் காட்டிக்கொடுக்கும் திட்டத்தை மிகவும் தந்திரமாகச் செய்து முடித்தார்.

விக்னேஸ்வரன் இதுவரைக்கும் செய்துகாட்டிய சாதனைகளைப் பட்டியலிடக் கேட்டால், சில தீர்மானங்களையும் உணர்ச்சிப் பேச்சுக்களையும் தவிர வேறு எதையும் குறிப்பிட்டுக் கூறமுடியாது, அதே வேளை அவர் நடத்திய அழிவுகளைப் பட்டியலிட்டால், இலங்கை அரசு ஒதுக்கீடு செய்த நிதியைத் திருப்பியனுப்புவது போன்ற சில செயற்பாடுகளையும் மீறி சுன்னாகத்தில் நடத்திய அழிவே முன்னிலை வகிக்கிறது.

ஒரு தனிமனிதனைத் துரோகி எனக் குறிப்பிட்டு அவனது இருப்பை இல்லாமல் ஆக்கிவிடுவது கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத கோழைகளின் வாதம். ஆனல் விக்னேஸ்வரன் ஒரு அழிவை மூடி மறைத்து அந்த மக்களை நடுத்தெருவில் அனாதைகளைகளாக வீசியெறிந்த துரோகத்தை மன்னிக்க முடியாது, உலகின் சுத்தமான நன்னீர் பகுதிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் யாழ்ப்பாண நீரை மாசுபடுத்திய நிறுவனத்தைக் காப்பாற்றியது மட்டுமன்றி அந்த நீரில் கிறீஸ் எண்ணை இல்லை என நிறுவி, நீரைச் சுத்திகரிக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்குக் கூட ஆப்புவைத்த விக்னேஸ்வரன் இன்று புலம் பெயர் புலிகளின் மறுக்கமுடியாத தேசியவாதியான துரோகம் எமது சமுதாயத்தின் சாபக்கேடு.

எதிர்பார்த்தது போலவே வட மாகாண சபையின் நிபுணர் குழுவின் ஆய்வு அறிக்கை கடந்த வருட இறுதியில் வெளியானது.

நீர் வள ஆய்வுகளுடன் எந்தவகையிலும் தொடர்பற்ற நபர்களைக் கொண்ட குழு ஒன்றினை அமைத்துவிட்டு அதனை நிபுணர் குழு எனப் பெயரிட்ட குழு 6ம் திகதி டிசம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டு தனது அறிக்கையை யாழ்.நூலகக் கேட்போர் கூடத்தில் விக்னேஸ்வரனிடமும் ஐங்கரனேசனிடமும் ஒப்படைத்தது.அங்குதான் பல நீண்ட ஆண்டுகளுக்கு வரண்ட பூமியைத் தோற்றுவிக்கும் துரோகத்தைச் செய்து முடித்தார்கள். இதனை மூடிமறைப்பதற்கு அவ்வப்போது உணர்ச்சி பொங்கப் பேசிவிட்டு வார இறுதியைத் தனது சிங்களப் பேரினவாத உறவினர்களோரும் நண்பர்களுடனும் உல்லாசமாகக் கழிக்கச் சென்றுவிடுவார் விக்னேஸ்வரன். வன்னிப் படுகொலைகள் வரை தமிழ் பேசும் மக்களை அழைத்துவந்த அதே பிரகிருதிகள் இன்று தமிழர்களின் தலைமை என்று தம்மைக் கூறிக்கொள்வதன் மறுபக்கமே யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் அழிப்பு.

இவற்றையெல்லாம் கண்ணுக்கு முன்னால் பார்த்துக்கொண்டிருந்த முன்னை நாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் விக்னேஸ்வரனுடன் இணைந்து செயற்படப்போவதாகக் கூறியதற்கான காரணம் அவர் ஒருவரே இன்று தமிழ் மக்களுக்காகச் செயற்படுகிறார் என்பதே. வெற்று உணர்ச்சிப் பேச்சுகளால் கவரப்படுகின்ற அப்பாவிகள் விக்னேஸ்வரனையும் ஐங்கரனேசனையும் ஏன் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் கூட தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் அவல நிலை சாதரணமான ஆபத்தல்ல. பல மனித உயிர்களின் பிரச்சனை.

மொத்த சமூகமும் சந்தர்ப்பவாதிகளின் கைகளில்

முழு தமிழ்ச் சமூகமும் சந்தர்ப்பவாதிகளின் கரங்களில் திட்டமிட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை. சுன்னாகத்திலிருந்து நடத்தப்பட்ட பேரழிவு அடிப்படையில் இன்று தேசியவாதத்திற்கான அளவுகோலாகக் கருதப்படலாம். இங்கு வாக்குப் பொறுக்கிக் கட்சிகளுக்கு அப்பால் மக்கள் மீது பற்றுக்கொண்ட விரவிட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே சுன்னாகம் அழிவில் தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல் நேர்மையாகக் குரல்கொடுத்துள்ளார்கள். வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் உட்பட சில இளைஞர்களின் பங்கு இங்கு மறுக்கமுடியாதது. உண்மையில் இவர்கள் தான் இன்றைய காலத்தின் தேசியவாதிகள்.

விக்னேஸ்வரனுக்கும் அவரது பக்கவாத்தியங்களுக்கும் இவையெல்லாம் தெரியாதவை அல்ல. தெரிந்துகொண்டே அழிப்பதற்குத் துணைபோகும் பிழைப்புவாதிகள் இவர்கள்.

ஏனைய பாராளுமன்ற அரசியல்வாதிகள்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்குக் கோரி பிரச்சாரம் மேற்கொண்ட போது புலம்பெயர் நாடுகளுக்குப் பயணம் செய்திருந்தார். அவ்வேளையில் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்திற்கு எதிராகச் செயற்படுவது சாத்தியமற்றது என்றும் அந்த நிறுவனம் சக்தி வாய்ந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். இலங்கைப் பேரினவாத அரசிற்கு எதிராகப் ‘பாராளுமன்றம் சென்று’ மலையைக் கிளப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இலாபவெறிகொண்ட ஒரு நிறுவனத்திற்கு எதிராகக் குரல்கொடுக்கவும், அவர் வாக்குப் பொறுக்கும் மண் நாசப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராடவும் முடியாமல் இப்படி ஒரு பதிலைக் கூற முடிகிறது என்றால் இவர்களிடமிருந்து எதனை எதிர்பார்க்க முடியும்?

இன்டர் போல் நிறுவனம் இதுவரை 16 பேரை சுற்றாடலை தெரிந்துகொண்டே மாசுபடுத்தியதற்காக சரவதேச கிரிமினல்கள் வரிசையில் தேடிவருகிறது. இலங்கையில் ஒரு பெரும் பிரதேசத்தையே அழித்து துவம்சம் செய்த நிறுவனம் இன்று இலங்கையின் பங்கு சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் இயக்குனர்களில் ஒருவரான நிர்ஜ் தேவா இலங்கை அரசின் ஆலோசகர்களில் ஒருவர். சிறீலங்கன் ஏயர் லைன்சின் இயக்குனர். எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்திற்கு கொழும்புத் துறைமுகத்தின் முகாமைத்துவப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று சுன்னாகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். கடந்த 9 வருடங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நிறுவனத்திடம் இலங்கை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசிற்கு எதிரான மக்களின் தொடர்ச்சியான போராட்டம் ஒன்று நடத்தப்பட வேண்டும். வாக்குப் பொறுக்கிகளை நம்பியிராமல் மக்கள் அணிகள் உருவாக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட வேண்டும். நிலக்கீழ் நீரைச் சுத்திகரிக்க உலகம் முழுவதும் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. அந்த நீரைச் சுத்திகரிப்பதற்கும் அது மேலதிகமாகப் பரவாமல் தடுப்பதற்கும் உரிய செல்வை நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். ஆக இலங்கை அரசிற்கும் நிறுவனத்திற்கும் எதிரான போராட்டங்கள் மீள உருவாகவேண்டும்.

Exit mobile version