தமிழ்த் தேசியம் என்ற வெளித்தோற்றதினுள் புதைந்து புகைந்துகொண்டிருந்த அந்த முரண்பாடுகள் சமூகத்தில் அருவருப்பான சூழலைத் தோற்றுவித்துள்ளது. துருத்திக்கொண்டு வெளித்தெரியும் சாதிய முரண்பாடுகள், ஆதிக்க சாதிகளின் அதிகார வெறி கலாசாரம் என்பவற்றின் மறுபுறத்தில் புலம்பெயர் நாடுகளின் மையம்கொண்டுள்ள பிற்போக்குத் தேசியம் பரவ விடப்படுகின்றது.
மக்களின் இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்காத வியாபார இணைய ஊடகங்கள் அவற்றோடு போட்டிபோடும் உள்ளூர் அச்சு ஊடகங்கள் என்பன தேசியம் என்ற தலையங்கத்தில் தமிழ் ஆதிக்க சாதி அதிகாரவர்க்கத்தின் பரப்புரைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
தணிந்து போயிருக்கும் தேசிய இன ஒடுக்குமுறை மீண்டும் தேவையான நேரத்தில் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் மக்களின் ஆழ்மனதில் அச்சம் தரும் வகையில் படிந்துபோயிருக்க, சமூக முரண்பாடுகளைக் கையாள்வதற்கான எந்த அரசியல் தலைமையும் அற்றுப் போன அவலமே இன்றைய வடக்குக் கிழக்கின் நிலைமை.
இனப்படுகொலைக்குப் பின்னான இன்றைய காலப்பகுதி முழுவதும் தமிழ்ப் பகுதிகளின் மட்டுமன்றி, இலங்கையின் ஏனைய பகுதிகளில் கூட ஜனநாயக முற்போக்கு சக்திகள் முழுமையாக அழிக்கப்பட்டு எதிர்ப்புக்கள் அற்ற முழுமையான பாசிச சர்வாதிகார சூழல் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட இல்லாத வெற்றுப் பாராளுமன்ற ஆட்சிமுறையே இலங்கையில் நிலவுகிறது.
இவை அனைத்தும் விரல்விட்டெண்ணக்கூடிய சமூகத்தின் பிற்போக்கான அதிகாரவர்க்கம் தமது கோரக்கரங்களை ஏனைய மக்கள் பிரிவுகள் குரல்வளை மீது இறுக்கிக்கொள்ளவும் அவர்களைப் பலவீனப்படுத்தி பின் தங்கிய சமூகம் ஒன்றை மீளமைக்கவும் துணை செல்கிறது.
பெண்ணடிமைத்தனம், வெறித்தனமான நுகர்வுக் கலாச்சாரம் போன்ற பல்வேறு புதிய பிறழ்வுகளுடன் சாதிய ஒடுக்குமுறை என்ற மனிதகுலத்தின் அவமானமும் தமிழ்ச் சமூகத்தில் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. பிறப்பின் காரணமாக மனிதர்களை வெறுக்கக் கோரி புதிய சந்ததிக்கு அவசர அவசரமாகக் கற்பிக்கப்படுகின்றது.
சாதிய ஒடுக்குமுறை என்ற சமூக அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கும் யாழ்ப்பாண சமூகம் தொடர்பான எனது நேரடி அனுபவம் வெறும் உதாரணம் மட்டுமே.
கடந்தவாரம் எனது உறவினர் ஒருவர் திருமணம் செய்துகொண்டார். யாழ்ப்பாணத்தின் மத்தியதரவர்க்கத்தைச் சார்ந்த அவர் பஞ்சமர்கள் என்று குறிப்பிடப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆண் பெண் இருவருமே துறை சார் வல்லுனர்கள்.
பலவடங்களாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட அந்த இருவரின் திருமண வைபவத்தில் பலர் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
திருமண வைபவத்தின் போதே பெண் வீட்டாரின் சாதி தொடர்பான விபரங்கள் கசிய ஆரம்பிக்க அங்கிருந்து, இந்த நூற்றாண்டின் புதிய தொழில் நுட்பம் செயற்பட ஆரம்பித்தது. தொலைபேசி அழைப்புக்கள் சாதியைப் பற்றிப் பேச ஆரம்பித்தன. வைபர், வட்சப் போன்றன விழித்துக்கொண்டன.
திருமண வைபவத்தை விட்டு வெளியேறாவிட்டால் இனிமேல் பணம் அனுப்ப மாட்டேன் என புலம்பெயர் ‘உணர்வாளர்’ ஒருவர் முழங்கிய சம்பவம் பின்னர் காற்றோடு வெளியானது.
இவை அனைத்தையும் கேள்வியுற்ற போது, கொழும்பின் கொங்கிர்ரிட் பொந்து போன்ற அடுக்கு மாடியொன்றில் குடியிருக்கும் எனது அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
திருமண செய்துகொண்ட உறவினரோடு பல வருடங்களாக எனக்குத் தொடர்பிருந்ததில்லை. எப்படியாவது அவர்களைச் சென்று பார்த்தாக வேண்டும் என்று எனது அம்மாவிற்கு உறுதியாகக் கூறினேன். திருமணம் செய்துகொண்ட எனது உறவினர் எனக்குக் அன்றைய நாளின் கதாநாயகன் போன்று எனது உணர்வுகளுக்குள் புகுந்துகொண்டார்.
அன்று மாலை எனது மற்றொரு புலம்பெயர்ந்த உறவினரிடமிருந்து அம்மாவிற்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்த போது நான் வெளியே போயிருந்தேன். மாலை மீண்டும் வீட்டிற்கு வந்த போது திருமணம் செய்துகொண்டவரையும் குறிப்பாகப் பெண்வீட்டுக்காரரையும் சென்று சந்தித்தால் தங்களோடு எல்லோருமே உறவுகளைத் துண்டித்துக்கொள்வார்கள் என்று அம்மா கண்ணீரோடு கூறினார். அதுவும் கனடாவிலிருந்து பிரித்தானியா ஈறாக யாழ்ப்பாணம் வரை எல்லோருமே உறவைத் துண்டித்துக்கொள்வார்களாம்.
இதன் பிறகு பல சம்பவங்கள் சாதிய முரண்பாட்டையும் ஆதிக்க சாதிகளின் கருத்தியலையும் சமூகத்தின் ஒவ்வோர் அங்கத்திலும் நிலை நிறுத்துவதைக் காணக்கூடியதாக இருந்தது.
80 களில் ஆரம்பித்து தற்காலிகமாக மறைக்கப்பட்டிருந்த சாதீய ஒடுக்குமுறை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. எதிர்ர்புக்களும், தலைமையுமற்ற சமூகம் மீண்டும் தன்னை மீளமைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது; அங்கு ஆதிக்க சாதிகள் தமது அதிகாரத்தை மீளமைத்துக்கொள்ள யாழ்ப்பாணம் அவமானத்தின் குறியீடாகக் காட்சிதருகின்றது.
நான்கு தசாப்த்த அழிவுகளும், தியாகங்களும் அருவருப்பான ஆதிக்கசாதிக் கருத்தியலின் கீழ் அழுக்காக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
சமூகத்தின் அடித்தளத்திலிருந்து ஆரம்பிக்கும் இவ்வாறான ஒடுக்குமுறைகளை மூடிமறைப்பதற்குத் தமிழ்த் தேசியம் பிரதான கருவியாகப் பயன்படுகிறது.
குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பிற்போக்குவாத தமிழ்த் தேசியம் சாதீய ஒடுக்குமுறையை வலுப்படுத்த உறுதுணையக அமைகின்றது. சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை தமிழினவாதமாக மாற்றியதன் மறுபக்கத்தில் சாதீய ஒடுக்குமுறை ஆழப்படுவதையும் காணலாம். இன்றைய தமிழ்ச் சமூகத்தில் எங்காவது ஒரு மூலையிலிருந்து ஜனநாயக முற்போக்கு சக்திகளின் மீள் எழுச்சி பெறாவிட்டால் எதிர்காலம் நீண்டகால இருளுக்குள் தள்ளப்படும்.