இந்நிலையில் 12.9.2015 அன்று ஜெரெமி கார்பின் என்பவர் தொழிலாளர் கட்சித் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் கார்ல் மார்க்சிடம் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி வருபவர் என்பதால் அவருடைய இந்த வெற்றி உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் உள்ள முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று கூறிக் கொள்பவர்களில் பலரும் இதை ஒரு நம்பிக்கை ஒளியாகப் பார்க்கின்றனர்.
அப்படி அவர் தொழிலாளர் கட்சித் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட மறுநாளே (13.9.2015), அந்நாட்டின் பிரதம மந்திரி டேவிட் கேமரன் (David Cameron) இது நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் என்று கூறி உள்ளார். ஜெரெமி கார்பின், தொழிலாளர் கட்சியின் 59.5% உறுப்பினர்களின் ஆதரவு பெற்றுத் தேர்ந்து எடுக்கப்பட்ட போதிலும், அக்கட்சியின் உயர் பதவிகளில் உள்ள சிலர் அதை விரும்பாமல் தங்கள் பதவிகளைத் துறந்து உள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தப்படும் அளவிற்கும், கட்சியில் உயர் பதவிகளில் உள்ள சிலருக்குப் பிடிக்காத அளவிற்கும் அவர் என்ன செய்து விடப் போகிறார்? சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்கள் நலத் திட்டங்களை வெட்டிக் குறைப்பதை எதிர்க்கிறார். சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்துக் கொண்டு இருக்கிறார் என்று பொய் சொல்லி 2003ஆம் ஆண்டில் ஈராக் மீது போர் தொடுத்தது தவறு என்று கூறுகிறார். அமெரிக்கா முதலிய பெருமுதலாளித்துவ நாடுகளின் கூட்டமைப்பான வட அட்லாண்டிக் ஒப்பந்தக் கூட்டமைப்பில் (NATO) இருந்து பிரிட்டன் விலகிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
இவை எல்லாம் வர்க்க அரசியலில் எந்த விதமான அடிப்படை மாற்றத்தையும் கொண்டு வரும் திட்டங்கள் அல்ல. சுரண்டப்படும் கொடுமைகளுக்கு எதிராக மக்கள் கொதித்து எழா வண்ணம் அமைதிப்படுத்தும் முயற்சிகளே. இருந்தாலும் இதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், அவர் இது வரையிலும் கட்சியில் எந்த விதமான முக்கியத்துவமும் பெறாத வகையில் வைக்கப்பட்டு இருந்தார். ஆனால் மக்களின் ஆதரவு பெருவாரியாக இருந்ததால் / இருப்பதால் தொடர்ந்து எட்டு முறை நாடாளு மன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். அவர் கட்சித் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட பின் 16.9.2015 அன்று நாடாளு மன்றத்தில் பேசும் போது நாட்டில் வீட்டு வசதிப் பற்றாக்குறை இருப்பதையும், மனநல மருத்துவத்தைப் பற்றி அரசு அக்கறை கொள்ளாது இருப்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.
ஆட்சியில் அமர்ந்து உள்ள பழைமைவாதக் கட்சியினருக்கும், ஜெரெமி கார்பின் சார்ந்துள்ள தொழிலாளர் கட்சியில் உள்ள சிலருக்கும் அவருடைய போக்கு பிடிக்காவிட்டாலும் மக்களிடையே அவருடைய செல்வாக்கு கூடிக் கொண்டே போகிறது என்பது 30.9.2015 அன்று இலண்டனில் அவர் பேசிய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பில் இருந்து தெரிவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மக்களிடையே இவ்வளவு வரவேற்பையும், முதலாளித்துவ அரசியல்வாதிகளிடையே ஒரு அச்சத்தையும், முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டவர்கள் என்று கூறிக் கொள்பவர்களிடையே ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ள ஜெரெமி கார்பினால், இன்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமா என்பது ஐயமாகவே இருக்கிறது.
கிரேக்க நாட்டில் சில மாதங்களுக்கு முன் மிகப் பெருவாரியான மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட சிப்ராஸ் (Tsipras) பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் நெருக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பிரதம மந்திரி பதவியில் இருந்து விலக நேரிட்டது. மக்கள் மீண்டும் அவரையே பிரதமராகத் தேர்ந்து எடுத்தனர். இந்நிலையில் 21.9.2015 அன்று அவர் நாட்டின் பொருளாதாரப் பயணம் தொடர, வரிகளை உயர்த்த வேண்டி உள்ளது என்றும், செலவினங்களை வெகுவாகக் குறைக்க வேண்டி உள்ளது என்றும் கூறி உள்ளார். அதாவது விலைவாசி உயர்வு மற்றும் சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளை ஒரு சேர எடுக்க வேண்டி உள்ளது என்று மறைமுகமாகக் கூறி உள்ளார். இது ஜெரெமி கார்பினின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதற்கான ஒத்திகையோ?
ஆனால் சிப்ராஸ் வாக்குறுதி கொடுத்த அளவிற்கு எல்லாம் ஜெரெமி கார்பின் வாக்குறுதி அளிக்கவில்லை. அவர் 30.9.2015 அன்று மக்களிடையே பேசுகையில் சிறிய நடுத்தர அளவிலான தொழில்களுக்கு வங்கிக் கடன் உதவி அளித்து வளர்க்கப் போவதாகக் கூறி உள்ளார். சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்குவது போல, சிறிய நடுத்தர முதலாளிகளை விழுங்கித் தான் பெருமுதலாளிகள் உருவாகி உள்ளனர். இதை மாற்றி மீண்டும் சிறிய நடுத்தர முதலாளிகளுக்கு முதன்மை கொடுக்க முயல்வது வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளும் முயற்சியாகும். இத்திசையில் சென்றால், கிரேக்க நாட்டில் நடந்து உள்ளது போல், தான் கூறியதற்கு எதிரான நடவடிக்கைகளையே எடுக்க நேரிடும்.
இது போன்ற யோசனைகளைப் புருதோன் (Prudhone) முன் வைத்த போது, கார்ல் மார்க்ஸ் அதைக் கடுமையாக விமர்சித்தார்.
இன்று முதலாளித்துவ அமைப்பினால் அவதியுறும் உலக மக்கள் அனைவரும் தங்கள் பிரச்சினைகளில் இருந்து மீள வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கான தீர்வு முதலாளித்துவத்தின் முழு அழிவிலும், சோஷலிச சமுதாயத்தின் உதயத்திலும் தான் இருக்கிறது. முதலாளித்துவ அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு, சில சீர்திருத்தங்கள் மூலம் தீர்வு காண முயல்வது, நாம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும்.
பிரச்சினைகளில் இருந்து மீள வேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் மக்களிடம் மார்க்சின், லெனினின் தத்துவங்களைக் கொண்டு சென்று, அவர்களைப் புரட்சிக்கு ஆயத்தப் படுத்துவது தான் சரியான வழி. பெருமுதலாளிகளுக்கு எதிராகக் குட்டி முதலாளிகளை நிறுத்துவது ஒரு தற்காலிகத் தீர்வாகக் கூட இருக்க முடியாது.
ஜெரெமி கார்பினின் அணுகுமுறை புருதோனின் அணுகுமுறையைப் போன்று உள்ளதே ஒழிய, கார்ல் மார்க்சின், லெனினின் அணுகுமுறை போல் இல்லை. பெரும்பான்மையான மக்கள் அவரால் இன்றைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதால், அவர் முதலாளித்துவ அமைப்புக்கு உள்ளேயே தீர்வைத் தேடாமல், முதலாளித்துவத்தை முழுமையாகக் காவு கொடுக்கவும், சோஷலிச சமூகத்தை அமைக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.10.2015 இதழில் வெளி வந்துள்ளது)