Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நானும் கண்ணுக்கு புலப்படாத கையும் : மு. பொ.

இது தான் மரணமா?

மு.பொ

நான் எனது ஸ்தூல உடலைவிட்டு வெளியே வந்து சூக்கும உடலில் நின்று கொண்டிருக்கிறேன். முன்னர் நான் – அதாவது உயிருடன் இருந்த போது – இந்த ஸ்தூல – சூக்கும உடல் என்ற பிரிவுகளையும் மறுபிறப்பு கடவுள் என்பவற்றைப் பற்றியும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஆழமான சமயப் பற்றுடைய இந்து குடும்பத்தில் பிறந்திருந்ததால் எனது பெற்றார் சமயம் பற்றிச் சொன்ன இவ்வாறான தகவல்களை எனது நினைவின் மூலைகளில் ஒதுக்கி வைத்திருந்தேனே ஒழிய உண்மையெனப் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.

ஆனால் இப்போ?

எனது ஸ்தூல உடல் படுக்கையில் பிரேதமாகக் கிடக்க, அதைச் சுற்றி என் குடும்பத்தவர் தேம்பி அழுது கொண்டிருக்க, அதைப் பார்த்து சிரிக்க வேண்டும் போலிருக்கிறது எனக்கு. நோயின் உக்கிர தாக்குதலுக்குள்ளாகி, பெரும் அவஸ்தைப்பட்டு மரணத்துக்குள் விழுந்தபோது இவ்வளவு சுகமான மாற்றம் ஏற்படும் என்று எனக்குத் தெரியாது. ஸ்தூல உடல் சுமந்திருந்த நோயின் சுமையையும் அவஸ்தையையும் விட்டு சூக்கும உடலுக்கு நான் மாற்றப்பட்ட போது ஏற்பட்ட சுகமானது எத்தகைய ரசனைக்குரியது!

இது தான் மரணமா?

இப்படித்தான் இருக்குமெனத் தெரிந்திருந்தால் நான் எப்பவோ உயிரை விட்டிருப்பேன்!

சிவநாயகம்

எனது உடல் துப்புரவாக்கப்பட்டு கல்கிஸ்சை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது, உற்றார் உறவினர் நண்பர்களின் பார்வைக்காக. எனது மரணச் சடங்கிற்கு பலர் வந்தனர். ஆயினும் ஒப்பீட்டளவில் குறைவான தொகையினர் என்றே சொல்ல வேண்டும்.

எவ்வாறாயினும் நான் ஆங்கிலத்தில் எழுதியதால் என்னை தமிழ் எழுத்தாளர் பலர் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்ல சுப்பிரமணியம் சிவநாயகம் ஆகிய என்னை, முன்னர் சுதந்திரனில் ஆசிரியராக இருந்தவரும் அதன் பின் எம்.டி.குணசேனாவின் நிறுவனத்திலிருந்து வெளியான தமிழ் பத்திரிகைகளுக்கு ஆசிரியராய் இருந்தவரும் எஸ்.டி.எஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்பட்டவருமான சிவநாயகத்தோடு மாறாட்டம் செய்தனர் என்பது கவலைக்குரிய விடயந்தான்.

இந்நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் என்போர் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே வந்தனர். பெண்கள் கல்வி ஆய்வு மன்றத்தின் பொறுப்பாளர் செல்வி திருசந்திரன் வந்திருந்தார். இவர் எங்கள் குடும்பத்தோடு தொடர்புடையவர். அடுத்து என்னோடு இறுதிக்காலத்தில் நெருங்கிப் பழக்கிய மு.பொ.என அழைக்கப்பட்ட பொன்னம்பலம் வந்திருந்தார் மற்றும் எனது நண்பர்களான சிங்கள புத்திஜீவிகளும் எழுத்தாளர்களும் வந்து போயினர். இவர்களில் சிலரைக் கண்டபோது எனக்குள் இன்கிளர்வின் கிளுகிளுப்பு.

எனது இறுதி யாத்திரைக்கான ஆயத்தங்கள் தொடங்கப்பட்டு விட்டன. இன்னும் சிறிது நேரத்தில் மலர்ச்சாலையிலிருந்து மாயானத்துக்கு எனது உடல் எடுத்துச் செல்லப்படப் போகிறது. அதற்குள் எனது கடந்த கால வாழ்க்கையின் மீள் கண்ணோட்டம் தானாகவே ஓடத் தொடங்கியது.

2.

1956 ஜூன் 5ம் திகதி கொக்குவிலிலிருந்து கொழும்புக்கு இரவு மெயில் எடுத்தேன். என்மனம் ஏனோ கனத்துக் கொண்டிருந்தது. அன்று தான் நாடாளுமன்றத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தைப் பண்டாரநாயக்கா நடைமுறைப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தினார். தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வநாயகம் தலைமையில், ஜி.ஜி. பொன்னம்பலம் உட்பட இதை எதிர்த்துக் காலிமுகத்திடலில் சத்தியாகிரகம் செய்தனர்.

சும்மா சத்தியாக்கிரகம் செய்தனர் என்று சொன்னதோடு இது முடிந்துபோன விஷயம் அல்ல. குண்டர்களால் ஏவப்பட்ட சத்தியாக்கிரகிகள் கல் எறிக்குள்ளாகின்றனர். அவர்கள் மண்டைகள் உடைந்து இரத்தம் வழிகிறது. சிலர் குண்டர்களின் நேரடித் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாகக் கொண்டு செல்வதே பெரும்பாடாகிப் போய்விட்டது.

நான் பண்டாரநாயக்காவை நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.

1929ல் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைவிட்டு இலங்கை வந்த பண்டாரநாயக்கா, இலங்கைக்கு சமஷ்டி அரசே சிறந்தது என்று அடித்துக் கூறினார்! அவரா இப்போ இனவாதியாக மாறினார்? என்னால் நம்ப முடியவில்லை.
ரயில் யாழ்ப்பாணத்தை விட்டு ஓடிக்கொண்டிருந்தது.

‘கரிக்கோச்சி’ என்று ஏளனமாகப் அன்று பேசப்பட்ட இந்த ரயில் வண்டியே அன்று கொழும்பில் தொழில்பார்த்த யாழ்ப்பாணத்தவர் அனைவருக்கும் உயிரூட்டியாக ஓடிக்கொண்டிருந்தது.

நான் வேலை பார்த்த டெய்லி நியூஸ் பத்திரிகையைப் பற்றி மறந்து போனேன். அதைவிட்டு விலக வேண்டும் என்று வேறு காரணங்களுக்காக எப்பவோ தீர்மானித்திருந்தேன். ஆனால் இப்போ அதில் எழுத வேண்டிய எவை பற்றியும் என் மனதில் ஓடவில்லை. முழுமனதும் நாட்டின் அரசியலிலேயே மூழ்கியிருந்தது.
ரயில் வண்டி காலை கொழும்பை அடைந்தபோது கொழும்பின் நிலவரம் தலைகீழாக மாறியிருந்தது. ஓர் சிறிய இனக்கலவரமே நடந்து கொண்டிருந்தது போல் தெரிந்தது. ரயிலை விட்டு இறங்கிய மக்கள் தமக்கு என்ன நேருமோ என்று தெரியாது அஞ்சினர். நான் அங்கு என்னைப் போல் நின்ற சிலரோடு சேர்ந்து சென்று பொலிஸ் ஸ்ரேஷனில் தஞ்சம் அடைந்தேன். நான் இதுகாலவரை தமிழர் சார்பான அரசியலில் பெரிதாக அக்கறை கொண்டிருந்தவன அவ்ல. ஆனால் பொலிஸ் ஸ்ரேஷனுக்குப் போனபோது யாரோ என்தோளில் கைபோட்டுக் கொண்டு வருவது போலிருந்தது.

யார் அது?

எவரும் இல்லை. திடீரென எங்கிருந்தோ ஒரு குரல் எனக்குள் வந்து இறங்குவது போலிருந்து. “பார்த்தாயா, நீங்கள் உங்கள் உரிமைகள் எதையும் கேட்கக்கூடாது.

கேட்டால் அடியும் உதையுந்தான் கிடைக்கும்”

அதன் பிறகு எனக்குள் ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது.

நான் முதலில் 1953 ல் இருந்து 55வரை தான் டெய்லி நியூஸ் பத்திரிகையில் வேலை செய்தேன். ஆனால் இந்த ஏரிக்கரைப் பத்திரிகைகள் அரசின் ஊதுகுழலாய் மாறிய பின் அங்கு வேலை செய்வதில் அர்த்தம் இல்லாதிருந்தது. பின்னர் 1961ல் இருந்து 69 வரை டெய்லி மிரரின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தேன்.

ஆயினும் தமிழர், அதாவது தமிழ்பேசும் மக்களின் நிலை மிக மோசமாகவே மாறிக் கொண்டு வந்தது. இதை மாற்றுவதற்கு என்னாலான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எனக்குள் ஓர் உத்வேகம் எழுந்தது. இந்த உத்வேகத்துக்கு தூபம் போடுவேது போலவே லண்டனில் இருந்து, தமிழர் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக நிதிகள் சேகரிப்பதில் ஈடுபட்டிருந்த என் ஆத்மார்த நண்பன் கந்தசாமியின் செயற்பாடும் அமைந்தது.

அவரின் தூண்டுதலே சற்றடே றிவியூ வெளிவருவதற்குக் காரணம் ஆயிற்று. அதில் வெளிவந்த என் எழுத்துக்கள் சிங்கள நண்பர்களிடமிருந்து எனக்கு பாராட்டுதலையும் தந்த அதேவேளை சிங்கள அரசியல்வாதிகள் ஒத்தோடிகள் ஆகியோர் மத்தியில் அசௌகரியத்தையும் ஏற்படுத்திற்று.

அன்று ஒருநாள் ஒருசிங்கள நண்பர் என்னைச் சந்தித்தது பற்றி புதுமையாக பின்வருமாறு எழுதியிருந்தார்:

“நான் 1982 இல் சிவநாயகத்தை ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த வித்தியாசமான பத்திரிகையான சற்றடே றிவீயூவை வாசித்த போது அவரைச் “சந்தித்தேன்”. ஆங்கிலத்தில் வெளிவந்த இந்தப் பத்திரிகை ஒன்றால் மட்டுமே தமிழர் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் சிங்கள மக்களுக்கும் வெளியுலகுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.” இவ்வாறு எழுதிய பிறயன் செனவிரத்தின என்ற சிங்கள நண்பரே, பின்னர் எனது THE PEN AND THE GUN என்ற நூலுக்கும் முன்னுரை வழங்கினார்.

3

சற்றடே றிவியு மூலம் வெளிப்படுத்தப்பட்ட எனது எழுத்துக்கள் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று. இக்காலத்தில் தான் ஜே ஆரின் ஆட்சி கோலோச்சிக் கொண்டிருந்தது.

இந்தப் போக்கை ஜே.ஆர் மேலும் நீடிக்க விரும்பவில்லை.

1983 ஜுலையில் சற்றடே றிவியூவைத் தடை செய்யவும் அதற்குப் பொறுப்பாய் இருந்த என்னை கைது செய்யவும் உத்தரவு பிறந்தது. இக்காலத்தில்தான் இரண்டு கண்களும் இரண்டு கரங்களுமாய் இருந்த எனக்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கண்களும் கரங்களும் வந்து முளைத்துக் கொண்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

நான் கடல்மார்க்கமாக, இரவோடு இரவாகத் தப்பிச் செல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை எனது நண்பர்களும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் மேற்கொள்கின்றனர்.

இரவு நேரம்,

கடலைக் கிழித்துக் கொண்டு படகு வேகமாகச் செல்கிறது.

பொங்கி வரும் அலைகளின் மேலால்; பாய்வதும் வீழ்வதுமாய் படகு செல்கிறது. அது எனக்கு என் வாழ்க்கையையே படம் பிடித்துக் காட்டுவது போல் இருக்கிறது. எனது வாழ்க்கை ஒரு போதும் சீராகவும் நேராகவும் சென்றதில்லை. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்த நான், பட்டப்படிப்பிற்கான வாய்ப்புக்களைத் தவறவிட்டு இப்படி பத்திரிகைத் துறைக்கு இழுத்துவிடப்படுவேன் என்று யார் கண்டார்! பத்திரிகைத் துறையில் இடைக்கிடை நல்ல நண்பர்களைக் கண்டுகொண்ட போதும் இவர்களால் உண்மையான பத்திரிகா தர்மம் உருவாக்கப்படாது விடுபட்டுப்போன வெற்று வெளியில் குந்தியிருந்து அழுதிருக்கிறேன்!

படகு தமிழ் நாட்டுக் கரையை அடைந்தது.

முன்னர் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைவந்து களவாக வாழும் தமிழ் மக்களை “கள்ளத்தோணி” என்று நம்மவர்கள் அழைத்ததும் அவர்களுக்கு எதிராக இயங்கியதும் என் நினைவில் ஓடிற்று. இப்போ கள்ளத் தோணியில் நாம் தமிழ் நாட்டுக்கு ஓடுகிறோம்! என்னவோ நம்ம யாழ்ப்பாணத்தான் செய்ததெல்லாம் என்தலைமேல் கவிவது போல் எனக்குள்

அப்பாடா! தமிழ்நாடு எனக்குச் சுதந்திர பூமியாகத் தெரிந்தது. ஆனால் அது எவ்வளவு காலம் நீடித்தது.

நான் தமிழ்நாடு சென்றேனோ இல்லையோ, எனக்காகவே காத்திருந்ததுபோல், அங்கு இயங்கிய Tamil Information Centre ன் சென்னைக்கிளை, எனக்கு தலைமைப் பதவியைத் தந்தது. அதனால் வெளியிடப்பட்ட Tamil Nation, Tamil voice International ஆகியவற்றில் எழுதும் வாய்ப்பையும் பெற்றேன். சற்றடே றிவீயூவில் எவ்வளவு உற்சாகத்தோடு எழுதினேனோ அதே உற்சாகமும் ஆற்றலும் இங்கும் கரை புரண்டது.

அது ரஜீவ் காந்தி கொல்லப்பட்ட காலம்!

எனது கருத்துக்கள் ஜே.ஆரைத் அச்சுறுத்தியதை நாம் விளங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்திய அரசும் அதே அச்சத்தால் தொடை நடுங்கியது ஏன்? எங்கும் அரசு என்பது உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதமாகப் பார்க்கும் ஒன்றா?.

நான் எழுதிய கருத்துக்களால் அச்சங் கொண்ட இந்திய அரசு என்னைக் கைது செய்து ஒருவருடம் சிறையில் தள்ளியது. நான் நீரிழிவு நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டதால், நான் இருந்த சிறைச்சாலைக்கு அருகில் இருந்த சென்னை பெரியாஸ்பத்திரியில் சிகிச்சைக்காக விடப்பட்ட போது எனது கையில் விலங்கும் படுக்கையோடு இணைத்த சங்கிலியும் போட்டுப் பூட்டியிருந்தனர். மலசலம் கழிக்கும் போதும் உணவருந்தும் போதும் மட்டும் அவை கழற்றப்பட்டன. இதே கோலத்தில் இங்கு ஆறுமாதங்களைக் கழித்தேன். எனக்கு காவலாய் நின்ற பொலிஸ்காரனைப் பார்த்து, “ஏன் என்னைச் சங்கிலியால் பூட்டி வைத்திருக்கிறாய்?” என்று கேட்க, “எல்லா இலங்கை புலிகளையும் சங்கிலியால் பூட்ட வேண்டும் என்பதே கட்டளை” என்று பதில் வருகிறது.

“நான் அப்படியா தெரிகிறேன்? நான் அப்படி தம்பி ஓடிவிடுவேன் என்று நினைக்கிறாயா?” என்ற என் கேள்விகளுக்கெல்லாம் அவன் பதில் அளிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மாபெரும் அரச யந்திரத்தில் அற்ப பல்லாக அசையும் அவனிடத்தில் எமது ஆத்திரத்தைக் கொட்டுவதில் ஆகப் போவது என்ன?
எது எவ்வாறாய் இருந்தால் என்ன, எமது போராட்டம் பற்றி நேர்மையான உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும் என்பது என்மனதில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.

உலக வரலாற்று நூல்கள் என்மனதில் ஓடிற்று. ஒஸ்வாஸ்ட் ஸ்பெங்லரின் ‘மேற்கின்சரிவைப் படித்தால் அது கவிதையாக வழிவதைக் காணலாம். ஆர்னல்ட் ரொயின்பீயின் வரலாற்றுச் சித்தரிப்புகள் தத்துவ விசாரமாக மாறுவதைக் காணலாம். கிபனின் ரோமப் பேரரசின் வரலாறு ஐரோப்பிய தொன்மையின் இருளுக்குள் எம்மை இட்டுச் செல்லும். எச்.ஜி.வெல்சின் உலகவரலாறு, வேகம் மிகுந்த விவரணப் பாய்ச்சலோடு முழு உலக வரலாற்றையும் எம் உள்ளங்கைக்குள் பொத்தி வைக்கும். இத்தகைய விவரணைச் செழிப்போடு எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுத வேண்டும் என்பதே எனது பேரவா.

அப்போதெல்லாம் என் நினைவில் ஓடி வருவது, 1956 ஜுலை 5இல்; கொக்குவிலிருந்து கொழும்பு இரவு மெயில் எடுத்து வந்த பிரயாணந்தான். அந்தப் பிரயாணந்தான் எனக்கும் பேரினவாதத்துக்கும் உள்ள தொடர்பை என்தோள்மேல் கைபோட்டு விசாரணையைத் தூண்டிவிடுகிறது.

எப்படி அந்த தொடர்பை நான் விளக்குவேன்?

ONE DOES NOT KNOW HOW TO EXPLAIN IT, WHY THE EVENTS IN THE COUNTRY IMPINGE ON MY LIFE – A MERE SPECTATOR AS I WAS – IN SOME WAY OR ANOTHER.

இந்தப் பயணந்தான் எல்லாவற்றினதும் ஆரம்பம்.

இத்தகைய கண்ணுக்குப் புலப்படாத ஒன்றின் (unseen hand) இயக்கமே, என் வாழ்க்கை முழுவதும் ஈழத் தமிழ்பேசும் இனத்தின் உரிமைக்காக என்மேல் தொழிற்படுவதைக் காணலாம். அதனால்தான் நான் எழுதப் போகும் வரலாற்றின் இறுதி அத்தியாயத்தின் தலைப்பாக “THAT UNSEEN HAND THAT DICTATES ONE’S LIFE” என்று போட வேண்டுமென்று அப்போதே நினைத்துக் கொண்டேன்.

நான் நோயோடு விலங்காலும் சங்கிலியாலும் பிணைக்கப்பட்டு சென்னை வைத்தியசாலையில் கிடந்து உழல்வது பற்றிய செய்தி பத்திரிகைகளில் வந்திருக்க வேண்டும். இதைக் கேள்விப்பட்ட என் சிங்கள நண்பர்கள் – கவனிக்க வேண்டும், நம் தமிழ் வாசகர்கள் – எடுத்த முயற்சியால் நான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டேன்.

4

எனக்கு இனவாதம் பிடிக்காது

என்னோடு பழகிய சிங்கள நண்பர்களுக்கு அது நன்றாகத் தெரியும். இனவாதம் பிடிக்காது என்பதற்காக இன்னொரு இனம் அது பேரினமாக இருந்தாலும் சரி சிற்றினமாக இருந்தாலும் சரி நம் உரிமைகளைப் பறித்து எம்மை ஒதுக்குவதை பார்த்துக் கொண்டிருப்பது கோழைத்தனம் என்பதில் தெளிவாக இருந்தேன்.

இதனால் நான் என் சிங்கள நண்பர்களோடு எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் பழகினேன். அவர்களும் வேண்டுமென்றே என்னை உள்ளன்போடு சீண்டிவிட்டுப் பெரிதாகச் சிரிப்பார்கள்.

இப்போ நாம் எதிர்த்துப் போராடும் இதே சிங்கள இனத்தைச் சேர்ந்த நண்பர்களாலேயே எனக்கு இந்திய அரசு போட்ட கொடூர விலங்கு உடைகிறது. விடுதலை கிடைக்கிறது. இது ஒரு முரண் நகை என்று சொல்லலாமா? இல்லை. அப்படிச் சொல்வதை விட இந்த உலகத்தில் வாழும் கோடனுகோடி மக்களில் எமக்குத் தெரியாத எண்ணிறந்த மக்கள், இனம் மொழி மதம் கோட்பாடுகள் என்பவற்றை யெல்லாம் மறந்து தம் இதயங்களை அன்பு பெருக்கெடுத்து ஓடிவரக் காத்திருக்கும் படுகையாக வைத்திருக்கிறார்களே என்பதை நினைத்த போது என்கண்கள் கசிந்தன.

அந்தப் படுகையில் தான் காந்தி குந்திக் கொண்டிருக்கிறாரா?

இவைபற்றிச் சிந்திக்க எனக்கு நேரமில்லை

இந்தியாவில் அலைந்து திரிவது ஆபத்தாகவே எனக்குப்பட்டது. அதனால் அங்கிருந்து கிளம்புகிறேன். முதலில் சிங்கப்பூர், பின்னர் ஹொங்கொங், அங்கிருந்து ஆபிரிக்க நாடுகள் என்று நாடோடியாய் அலைகிறேன். கையில் காசில்லை, சாப்பாட்டிற்கு கஷ்டம். ஆனாலும் அங்கும் நான் குறிப்பிட்ட கண்ணுக்குப் புலப்படாத கை, ஆயிரம் கண்களோடும் கரங்களோடும் என்முன் எழுந்து விளையாடுகிறது. சிங்கப்பூரில் எனக்குத் தெரிந்த பல முகங்கள் இளந்தென்றலாய் மிதந்து வந்து கொண்டிருந்தன. அவர்களின் ஆதரவு என்னை உற்சாகப்படுத்திற்று.

ஆனால் நான் அங்கே தங்குவதாய் இல்லை.

எனது நோக்கம், எங்காவது ஐரோப்பிய நாட்டிற்குப் போய், அங்கிருந்து லண்டனுக்கு போவதையே விரும்பியது. அதுவே என் லட்சியத்துக்கு துணை புரிவதாய் இருக்கும் என்பதில் தெளிவாய் இருந்தேன்.

ஹொங்கொங்கில் நிலைமை மோசமாக இருந்தது. ஆங்கிலம் தெரிந்த பிரமுகர்கள் நான் ஒரு JOURNALIST எனத் தெரிந்ததும் என்னால் ஈர்க்கப்பட்டனர். அவர்கள் எனக்கு உதவி புரிந்தனர். நான் அங்கிருந்து ஆபிரிக்க நாட்டுக்குச் செல்வதற்கு அவர்கள் பலவகையில் உதவினர்.

நான் ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் காலடி வைத்த போதுதான் கஷ்டம் என்றால் என்னவென்று தெரியவந்தது. கல்வியறிவு இல்லாத இடங்களில் சிக்குண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கிடந்த போதும் கூட அந்தக் கண்ணுக்குப் புலப்படாத கை என்னை நோக்கி நீண்டு கொண்டுதான் இருந்தது. எனது ஆற்றாமையும் துன்பமும் உச்சத்தை எட்டிய போதெல்லாம் மண்டேலாவும் காந்தியுமே அதன் எல்லைகளாக என் கண்முன்னே நின்றனர். அவர்கள் பட்ட துன்பத்தையும், செய்த தியாகத்தையும் விடவா நாங்கள் செய்துவிட்டோம்?

இவ்வாறு அனாதரவாய் அலைந்து கொண்டு திரிந்த நான் 1994ல் பிரான்சில் தஞ்சம் அடைந்தேன். அங்கு அகதியாய் இருந்த நான் 1995ல் எனது பிறந்த நாட்டைத் தவிர ஏனைய எல்லா நாடுகளுக்கும் செல்லக் கூடிய உரிமையை – எனக்கு மிகவும் தேவையாய் இருந்த உரிமையை பெறுகிறேன்.

இதன்பிறகு நான் அடிக்கடி லண்டன் போய் வரத் தொடங்குகிறேன்.

இதற்கு முக்கிய காரணம், நான் எழுதி முடிக்கத் திட்டம் போட்டிருந்த SRI LANKA: WITNESS TO HISTORY என்ற எனது இரண்டாவது நூலை எழுதத் தொடங்குகிறேன். அத்தோடு ஏககாலத்தில் HOT SPRING என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் வெளியிடத் தொடங்குகிறேன். ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையை வெளியுலகுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் SATURDAY REVIEW க்குப் பின்னர் இதை லண்டனில் ஆரம்பித்தேன்.

இப்பத்திரிகைக்கு நல்ல வரவேற்பிருந்தது. “கொதிநீர் ஊற்று” என்ற இப்பத்திரிகையின் தலைப்பு, திருகோணமலையில் உள்ள வெந்நீர் ஊற்றை நினைவுப்படுத்துவதாகவும் அங்குள்ள இனங்களுக்கிடையேயான கொதிநிலையையும் பொதுவாக தமிழ்பேசும் ஈழத்தமிழரின் கொதிநிலையையும் உருவகப்படுத்தி அது வெளிவந்தது. சற்றடே றிவியூவுக்கு அடுத்து மற்றொரு சாதனையாக நின்றது. இப்பத்திரிகைக்குப் பின்னால் ஈழம் நிறுவனம் நின்று தனது ஆதரவை வழங்கியது. இப்பத்திரிகையின் விநியோகச் சுழற்சி, பத்திரிகையை பலபேரைச் சென்றடைய வைத்தது.

இக்காலத்தில் நான் மிக உற்சாகத்தோடும் சந்தோசமாகவும் இயங்கினேன். ஆனால் இத்தகைய எனது உற்சாகத்தில் திடீரென மண் அள்ளிப் போடுவது போல் 2003 இல் பிரிட்டிஷ் அரசாங்கமும் ஃபிரெஞ் அரசாங்கமும் விசா வழங்குவதில் தமக்குள் பரஸ்பரம் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்கள் எனக்கு வழமைபோல் லண்டன் செல்வதில் தடை போட்டது. இது என்னை நட்டாற்றில் கைவிட்டது போலாயிற்று.

முடிக்கப்படாமல் கிடக்கும் எனது நூல், அதற்கான உசாத்துணை நூல்கள் என்று எல்லாமே லண்டனில் இருக்க அங்கு போக முடியாமல் பரிஸில் விடப்பட்ட நான் மீளவும் லண்டன் செல்வதற்காக நடத்திய போராட்டம் ஓர் அதிசயமான நிகழ்வால் – INVISIBLE HAND – கை கூடியது தனியான கதை.

அப்பாடா! லண்டன் வந்துவிட்டேன்! என்று மகிழ்ச்சி கொள்கிறேன்.

ஆனால் அது கொஞ்சநேரந்தான்.

அடிக்கடி எனது உடலில் ஏற்பட்ட சோர்வின் காரணத்தை அறிய நான் எடுத்த இரத்தப் பரிசோதனை முடிவு எனது மகிழ்ச்சி அனைத்தையும் அள்ளிக் கொண்டு போயிற்று.

எனக்கு இரத்தப் புற்றுநோய் என்பதே அந்த பரிசோதனையின் முடிவு!

ஆயினும் இயங்குதல் நொய்தலான நிலையில், எழுத்தாக்க ஆர்வம் வற்றிப் போக, “நூலின் இறுதி அத்தியாயத்தை முடித்துவிட்டேன். நூலின் அறிமுக உரையும் பொருளடக்க அட்டவணையும் பிரசுரகர்த்தாவைத் தேடுதலுந்தான் பாக்கி” என்று நானே எனக்குள் கூறிக் கொண்டபோது, எனக்குள் ஒரு பெருமையே ஏற்பட்டது.

“எது ஆகுமோ அதுவே ஆகும்” என்ற வரிகள் என் நினைவில் ஓடிவர, நான் பேனையை மேசையில் வைத்த போது இறுதிவரை போராடும் ஒரு போராளியின் ஓர்மமும் தந்திணிப்பற்ற விடுபட்ட நிலையும் எனக்குள் ஓர் படிமமாய் எழுதுவது போல் தெரிந்தது.

இப்போது நான் மீண்டும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.

எனது நூலை பிரசுரிப்பதற்கான ஒழுங்குகள் முடிந்துவிட்டதால், அவதிபடும் நிலையிலிருந்து விடுபடுகிறேன். பரிஸில் ஆறுதலாக இருக்கிறேன். இக்காலத்தில் தான் நான் ஒரு நாள் லாசாப்பலுக்கு அருகாமையில் போய் கொண்டிருந்தபோது, என் இளம் நண்பரோடு வந்த ஒருவரை எதிர்கொள்கிறேன். அவரை என் நண்பர் அறிமுகப்படுத்தினார்.

“இவர் தான் மு.பொன்னம்பலம். இவர் ஒரு எழுத்தாளர் லண்டனுக்கு வந்தவர். பரிசுக்கும் வந்திருக்கிறார், தனது நூல்வெளியீட்டுக்காக”

எனக்கு அசௌகரியமாக இருக்கிறது. எனக்கு தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அதிகம் தெரியாது. அதனால் எனது அறியாமையை என் முன்னால் நின்ற அவரிடமே சொல்லிவிடுகிறேன்.

உடனே அவர், “நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எனக்கு உங்களை நன்றாகத் தெரியும். உங்களில் மரியாதையும் உண்டு” என்று அவர் கூறி முடிப்பதற்கும், “ஐயா இவர் தான் உங்கள் சற்றடே றிவியூவின் சகோதர பத்திரிகையான திசை யின் ஆசிரியராக இருந்தவர்” என்றான் அவரை அறிமுகப்படுத்திய நண்பன்.

“ஓ அப்படியா!” என்று முகம்மலரக கேட்டுக் கொண்டே மு.பொ.வோடு கைகுலுக்கிய நான் “என்ன நூல் வெளியிட வந்திருக்கிறீர்கள்?” என்றும் கேட்டேன்.

ஒரு கவிதை நூல், “சூத்திரர் வருகை” என்ற தலைப்பில் என்று கூறிய அவர், 150 பவுண்டசை நீட்டி “இதை உங்கள் நண்பர் நேமிநாதன் உங்களிடம் கொடுக்கும்படி தந்தார்” என்றார்.
நன்றி கூறி அதை வாங்கிக் கொண்ட போது, “நூல்

வெளியீட்டுக்கு நீங்களும் வந்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்றார் அவர்.

“நிச்சயமாக” என்றேன் நான்.

நூல் வெளியீட்டுக்குப் பின்னர் அவர் லண்டன் சென்று, அங்கிருந்து கொழும்பு சென்றுவிட்டார்.

நானும் இலங்கைக்குப் போய், கொழும்பில் எனது குடும்பத்தோடு அமைதியாக வாழவே விரும்பினேன். எனது நோயும் அதற்கு முக்கிய காரணமாய் இருந்தது. அதற்கேற்றால் போல் நான் இலட்சிய பூர்வமாக வரைந்திருந்த SRI LANKA : WITNESS TO HISTORY (வரலாற்றுக்குச் சான்று பகரும் இலங்கை) என்ற எனது நூலும் வெளிக்கொணரப்பட்டுவிட்டது. அதன் பிரதிகளில் குறிப்பிட்ட தொகை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஒழுங்குகளும் முடிந்துவிட்டன.

அப்பாடா! நான் நிம்மதியாக மூச்சுவிட்டேன்.

இனி நான் கொழும்புக்கு பிரயாணமாவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன.

நான் இலங்கை வருவதாகக் கேள்விப்பட்டதும், என்னை கிளிநொச்சிக்கு வருமாறு பெரிய இடத்தில் இருந்து அழைப்பு வந்தது.

ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

அந்த மறுப்பில் ஓர் ஆத்திரம் இருந்தது.
என்ன ஆத்திரம்?

அது பற்றிப் பிறகு சொல்லலாம் என அடக்கிக் கொண்டேன்.

ஒரு நாள் நேராகவே கொழும்பு வந்து, எனது குடும்பத்தோடு இணைந்து கொண்டேன். ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தேன். நான் கொழும்புக்கு வந்தது தொடர்பாக எந்தப் பத்திரிகைக்கும் தெரியப்படாது இருக்கப் பார்த்துக் கொண்டேன். கணனியையும் எனது எழுத்து வேலை தொடர்பாக பாவித்ததில்லை. வெளியுலகத் தொடர்பை அடியோடு கத்தரித்துவிட்டே இருந்தேன்.

ஆயினும் பரிஸில் தனது கவிதை நூலை வெளியிட வந்த எழுத்தாளர் எவ்வாறோ எனது வருகையை அறிந்து – ஒருவேளை லண்டனில் உள்ள எனது நண்பன் மூலம் அறிந்து – என்னிடம் வந்தார். அடிக்கடி வந்தார். அவர் என்னோடு பலவிஷயங்கள் பற்றிக் கதைப்பார். ஆனால் எனது இருப்பை அவரும் எவருக்கும் பறைசாற்றவில்லை. ஆயினும அவரது இளம் நண்பர் துவாரகனும் அடிக்கடிவந்து எனக்கு உதவினர்.

சிவநாயகம்

இவ்வாறு நான் அமைதியாக இருந்தபோது ஒருநாள் என்னிடம் பொலிஸ் உயர் அதிகாரிகள் வந்தனர். என்னிடம் பல தேவையற்ற கேள்விகள் கேட்டனர். எனது புத்தகங்கள் பற்றி விசாரித்தனர். எனக்கு இருந்த சிங்கள நண்பர்களின் தொடர்புகளையும் அறிந்தனர். இறுதியில், “நீங்கள் இப்படி நோயுற்று இருக்கும் நேரத்தில் உங்களை சிரமப்படுத்துவதற்கு மன்னிக்கவும்” என்றனர்.

“இல்லை, இது உங்களின் கடமை. நான் விளங்கிக் கொள்கிறேன்”. நான் பதில் கூறினேன்.

“அரசாங்கம் கடுமையாக இருக்கிறது. அது எங்களைப் போல் உங்களை விளங்கிக் கொள்ளாது. தேவையற்ற புத்தகங்கள் பத்திரிகைகளை உங்களோடு வைத்திருக்காது பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு அவர்கள் புறப்பட்டனர்.

அவர்கள் வந்து போன சில மாதங்களுக்குள் எனக்குள் இருந்த நோய் விஸ்ரூபமெடுத்தது. எவ்வாறு அரசாங்கம் தமிழ்பேசும் மக்களின் உயிர் நிலைகளை நெரித்துக் கொண்டு வந்ததோ அவ்வாறே எனது நோயும் என் உயிரோட்டத்தை நெரித்து திக்குமுக்காட வைத்தது. “என்ன நீ தயாரா?” என்பது போல் அதன் பார்வை இருந்தது. இவ்வாறு நோயோடு மல்லுக் கட்டுவதை விட போய்விடுவது எவ்வளவோ நல்லதாகப்பட்டது.

“நான் தயார்” என்பது போல் அதைப் பார்த்தேன். அடுத்த கணம் நான் எனது ஸ்தூல உடலை விட்டு வெளியே நின்றேன். இது தான் மரணமா?

5

தகனத்துக்காக கல்கிசை எனது உடல் கல்கிஸ்சை மலர்ச்சாலையிலிருந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்திற்குள் எனது ஸ்தூல உடல் இப்பூமியில் மண்ணோடு மண்ணாகப் போய்விடும். அதனால் என்ன?

நான் இன்னும் இருக்கிறேன்.

எனது சூக்கும உடலில் அங்கு நடைபெறுவதை எவ்வளவு தெளிவாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன்.

அப்போது நான் இதுவரை நினைவு மீட்டாது விட்டுப் போன மிக முக்கியமான ஒன்று நினைவுக்கு வந்தது.

நான் வெளிநாட்டிலிருந்து வரும்போது, கொழும்பில் தங்காது கிளிநொச்சிக்கு வருமாறு அழைக்கப்பட்டேன். ஆனால் நான் அதற்கிசையாது கொழும்பிலேயே தங்கிவிட்டேன்….?

இதை நினைத்தபோது நான் லண்டனில் HOT SPRING பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்த காலம் நினைவுக்கு வந்தது. HOT SPRING கிற்கான வரவேற்பும் மரியாதையும் உச்ச நிலையில் இருந்த போதுதான் லண்டனுக்கு அன்ரன் பாலாவும் அவரது மனைவியும் வந்தனர். வந்தவர்கள்  HOT SPRING ஐ வெளியிட்ட என்னையும் வந்து சந்திக்கின்றனர். தலைமையின் கட்டாயத்தின் பேரில்தான் அவர்கள் வந்திருக்க வேண்டும். அவர்கள் முகத்தில் இறுக்கந்தான் இருந்தது. பாராட்டவோ முகமலர்ச்சியோ இல்லை. ஒப்புக்கு வந்தவர்கள் போல் தெரிந்தது. இத்தகைய மனத்தடைகளின்றி அவர்கள் என்னைச் சந்தித்தது இடம் பெற்றிருந்தால், தமிழரின் உரிமைப் போராட்டமானது, வெளிநாடுகளில் அதன் உச்ச கவனிப்பையும் ஆதரவையும் பெற்றிருக்கும்.

ஆனால் என்னே துர்ப்பாக்கியம்!

நடந்ததோ HOT SPRING ன் வருகையும் எனது பெயரும் பாலாவின் IMAGE ப் பாதிப்பதாகவே அவர்கள் பார்த்தனர் போலும்!

அதனால் HOT SPRING இற்கு ஈழம் நிறுவனம் வழங்கிய உதவி உடன் நிறுத்தப்பட்டது.

அதனால் HOT SPRING நின்று போனது!

இது சம்பந்தமாக நான் பாலாவுடன் கதைத்தும் மாற்றம் எதுவும் இடம் பெறவில்லை.

இப்போதுதான் பாலாவின் சுயரூபம் எனக்கு முகத்தில் அறைந்தாற்போல் தெரியவந்தது.

பாலாவின் சுயரூபம் மட்டுமல்ல, நமது விடுதலைப் போராட்டத்தின் தலைமையின் கீழ் இயங்கிய அத்தனை உபதலைமைகளும் தத்தம் IMAGE களை பேணவும், உயர்த்தவும் தமக்குள்ளே அடிபட்டன, கொலை செய்தன, காட்டிக் கொடுத்தன, ஈற்றில் மக்களையே காவு கொடுத்து விடுதலையையே காற்றில் பறக்கவிட்டன.

இதோ, எனது ஸ்தூல உடல் தகனத்துக்கு தயாராகிறது.
ஆனால் சூக்கும உடலில் நிற்கும் எம்போன்றோரின் எண்ணங்கள் அழிவதில்லை. காற்றில் மிதந்து கொண்டிருக்கும். இவை தக்க ஆக்க இலக்கியகாரனுக்குள் புகுந்து பற்பல வடிவங்களில் வெளிவரும். புதுவகை எழுச்சிக்கு வழிவகுக்கும்.

ஞானம் மார்ச் 2015

S. Sivanayagam
Subramaniam Sivanayagam was a Sri Lankan journalist, author and editor of the Saturday Review, Tamil Nation and Hot Spring.
Born: September 7, 1930, Kokkuvil
Died: November 29, 2010, Colombo

Exit mobile version