Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் மாட்டிறைச்சி அரசியல் : வி.இ.குகநாதன்

modi_rssமோடி தலமையிலான சங்கபரிவாரங்களின்(RSS) பொம்மலாட்ட அரசு இரு விடயங்களில் திறம்படச் செயற்பட்டுவருகின்றது. ஒன்று இந்தியாவின் வளங்களையும், சந்தையையும் கார்பிரேட் நிறுவனங்களிற்கு விற்றல், மற்றையது நாட்டினை இந்துமயமாக்கல் என்ற பெயரில் பார்ப்பானிய ஆதிக்கத்தினை நிலை நிறுத்தல். அதன் ஒரு நோக்கமாக அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகமே மாட்டிறைச்சி அரசியல்.

முகமது அக்லாக்

இதன்படி இந்தியாவில்மாட்டிறைச்சிக்கு எதிரான போராட்டம் என இந்துவெறிக்கும்பல்களால் ஒரு வெறியாட்டமே நடைபெற்றுவருகின்றது. இதன் உச்சக்கட்டமாக உத்திரப்பிரதேச நகரிலுள்ள தாதரி நகரில் இடம்பெற்ற முகமது அக்லாக் என்பவர் கொல்லப்பட்டு, அவரது மகள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டதனை முழு ஊரே மதத்தின் மகுடியில் கட்டுண்டு வேடிக்கைபார்த்தது. பின்னர் போலிசும் குற்றவாளிகளைத் தண்டிப்பதனைவிட்டு உண்மையில் மாட்டிறைச்சிதான் இருந்ததா? என ஆய்வுசெய்வதில் காலத்தினைச் செலுத்தியது…இத்தனைக்கும் மாட்டிறைச்சி இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை..இறுதியில் அக்லாக் வீட்டிலிருந்தது ஆட்டிறைச்சயே என ஆய்வுகூட முடிவுகள் தெரிவித்தன.

இது ஒரு சிறு உதாரணமே. இதுபோன்று பல கொடுமைகள் மாட்டிறைச்சியினை முன்வைத்து குறிப்பாக முஸ்லீம் மக்கள் மீதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் இந்து வெறியர்களால் நிகழ்த்தப்பட்டன.

இத்தனைக்கும் இந்து மதம் என்றுமே மாட்டிறைச்சியினை தவிர்த்துவந்துள்ளதா? என்றால் பதில் இல்லை என்பதே. யசூர் வேதத்தில் கோசவம், வாயவீயஸ் வேதபசு, ஆதித்ய வேதபசு என பலவகையான யாகங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் குறிப்பிடுவன யாதெனில் எத்தனை பசுக்களை என்ன நோக்கத்திற்காக பலியிடுவது என்பதே. உதாரணமாக அஷ்டதச பசுவிதானம் என்பது 18 பசுக்களை கொலை செய்து நடத்தும் யாகம். இதுபற்றி சங்காரச்சாரியாரிடம் கேட்டபோது அவர் கூறுவது “அவ்வாறான யாகங்களின் பின்பு பிராமணர்கள் மாட்டிறைச்சி உண்பது உண்மைதான், ஆனால் அப் பிராமணர்கள் காரம், புளி சேர்க்காது சிறிதளவே தேச நலனிற்காக உண்கிறார்கள் “. ஆக அவரது பிரச்சனை புளி காரமும், அளவுமே தவிர பசுக்கள் கொல்லப்படுவதல்ல. அந்தணர்கள் சாப்பிட்டால் தேச நலன், அக்லாக் சாப்பிட்டார் என்று சந்தேகிக்கப்பட்டால் கொலை இதுதான் பார்ப்பனிய நீதி.

இன்று இந்தியாவில் வறிய மக்களின் உணவான மாட்டிறைச்சி அவர்களிற்கு மறுக்கப்படும் அதேவேளை இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கான டன்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாதான் முன்னனி வகிக்கின்றது. இந்த ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரம் மிகச் சிலரிடமே உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்த உயர் சாதி இந்துக்களே. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் அல் கபீர் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிட்டெட், அரேபியன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிட்டெட் என்பனவும் முக்கியமான நிறுவனங்கள். இவற்றின் பெயரினைப்பார்த்துவிட்டு இது ஏதோ இஸ்லாமியரிற்கு சொந்தமானது என நினைக்கத்தோன்றும்.

ஆனால் அவை முறையே சதீஸ், சுனில் கபூர் என்ற இந்துக்களிற்கே சொந்தமானது. அவ்வாறு பெயர் வைத்ததன் மூலம் இஸ்லாமியரே மாடுகளை கொன்று ஏற்றுமதி செய்கிறார்கள் என்ற மாயையினை இந்தியாவில் ஏற்படுத்துவதுடன் வளைகுடா நாடுகளிற்கு இலகுவாக ஏற்றுமதி செய்யலாம் என்பதேயாகும். எனவே இவ்வாறான மாட்டிறைச்சி ஏற்றுமதி பற்றி இந்துவெறியர்கள் அலட்டிக்கொள்வதில்லை, ஏனெனில் அந்த இலாபம் தனது எசமானர்களிற்கும், தரகுப்பணம் (கொமிசன்) அரசியல்வாதிகளிற்கும் செல்வதேயாகும்.

இந்தியாவின் நிலை அவ்வாறிருக்க இலங்கையிலும் மாட்டிறைச்சியினைத் தடைசெய்யவேண்டும் என்று பொதுபலசேனா போன்ற பௌத்த அடிப்படைவாதிகள் கூச்சலிடத்தொடங்கினார்கள். புத்தனின் கொள்கைகளை எல்லாம் விட்டுவிட்டு அவரது பெயரினை மட்டும் இலங்கைக்கு கொண்டுவந்து மதத்தின் பெயரில் பிழைப்பு நடாத்தும் இவர்களும் மாட்டிறைச்சிக்குத் தடைவேண்டும் என கூச்சலிட்டுவந்தனர்.மகிந்தவின் ஆட்சியின்போதே இக் கோரிக்கை பலமடைந்திருந்தாலும் மகிந்த கூட வெளிப்படையாக இதனை ஆதரித்து கூறவில்லை.

ஆனால் அண்மையில் நல்லிணக்க முககமூடியினை மெதுவாக அகற்றிவரும் மைத்திரி பொதுபலசேனாவுடான மூடிய அறைச்சந்திப்பின் பின் இலங்கையில் மாடுவெட்ட தடைவிதிக்கப்போவதாகவும், வேண்டுமானால் இலங்கைக்கு வெளியிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம் எனக்கூறியயுள்ளார். மகிந்தவே நிறைவேற்றாதனை மைத்திரி நிறைவேற்றுவதாக கூறியுள்ளதால் பௌத்த அடிப்படைவாதிகள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்பினை தமிழர்சார் நிகழ்வில் அறிவித்தமைமூலம் தமிழர்-முஸ்லீம் முரண்பாட்டினை தூண்டுவதும் இதன் பின்னாலுள்ள சூட்சுமம். இதனையறியாமலோ அல்லது அறிந்து கொண்டோ யாழிலிருந்து வரும் தமிழ் பத்திரிக்கை ஒன்றும் மாட்டிறைச்சி தடையினை வலியுறுத்தி ஆசிரியர் தலையங்கம் எழுதி சங்கு ஊதுகிறது. (சும்மா சாதரண சங்கல்ல வலம்புரி சங்கு).

இதில் வேடிக்கை இந்தியாவில் மோடியின் ஆதரவு மதஅடிப்படைவாதிகள் மாட்டினை கொன்று ஏற்றுமதி செய்யலாம், ஆனால் சாதரண வறிய மக்கள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். இலங்கையில் சிறிசேனாவோ மாட்டினை வேறு எங்காவது கொன்று பின் இறக்குமதி செய்துண்ணுங்கள் என்கிறார். இதனால் இலங்கையில் உள்ளூர் மாட்டுப்பண்ணைத்தொழில் பாதிக்கப்படுவதோடு, மாட்டிறைச்சி விலையும் அதிகரிக்கும். மறுபுறத்தில் மாட்டிறைசச்சி இறக்குமதி மூலம் பெருமுதலாளிகள் கொழுத்த இலாபடைவார்கள்.

அத்துடன் இலங்கை அரசியல்வாதிகளிற்கும் இறக்குமதி அனுமதிப்பத்திரமூலமாக தரகுப்பணம் கிடைக்கும். சாதரண மக்கள் மத முரண்பாடுகளிற்கு பலியாவார்கள். பலியாகும் அப்பாவிகளை காப்பாற்ற அவர்கள் யாருக்காக சண்டையிட்டு கொள்கிறார்களோ அந்த கடவுள்களும் வரப்போவதில்லை.

இப் பிரச்சனையினை முஸ்லீம்களும் வெறும் மதஅடிப்படையில் நோக்காது இதனால் பாதிக்கப்படும் பிறஇனத்தவர்கள் , பண்ணையாளர்கள், மானிடநேயமிக்கவர்களுடன் இணைந்து போராடவேண்டும்.

ஏனெனில் ஒடுக்குபவர்கள் என்றுமே தமது நலனில் ஒற்றுமையாகவிருக்க ஒடுக்கப்பபடுபவர்களே சாதி, மத அடிப்படையில் பிரித்துவைக்கப்பட்டடுள்ளார்கள்.
முடிவாகக்கூறின் பெரு முதலாளிகள் பொருட்கள், சேவைகளை மட்டுமல்ல கடவுளையும் கூட விற்று காசாக்க வல்லவர்கள், அரசியல்வாதிகள் அந்த கடவுள் விற்பனையிலும் தரகு பெறத்தெரிந்தவர்கள். பாமரர்கள் இது எதுவுமறியாமல் தங்களிற்குள் சண்டையிட்டு பலியாகத் தெரிந்தவர்கள். தேவை விழிப்புணர்வே.

Exit mobile version