Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன்

இந்துக்களைப் பொறுத்தவரையில் அங்கிங்கு எண்ணாதபடி எங்கும், எல்லாவற்றிலும், நீக்கமற நிறைந்திருக்கும் சாதியானது தமிழர்களையும் விட்டுவைக்கவில்லை. “இப்போதெல்லாம் யார்தான் சாதி பார்க்கிறார்கள்” என்று மேம்போக்காகப் பேசுபவர்களின் முகத்திலடித்தாற்போல இந்தக் கிழமை நடைபெற்ற கச்சநந்தம் சாதிய வன்முறையும் (சிவகங்கை மாவட்டம்-தமிழகம்), யாழில் வரணி அம்மன் தேரினை கனரகப் பொறி(JCB digger) மூலம் இழுத்த நிகழ்வும் காணப்படுகின்றன.

இதில் முதலாவதாக கச்சநந்தம் ஊரில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுமிருவர் தேநீர் கடையில் (தமது)காலிற்குமேல் கால் போட்டுக்கொண்டு தேநீர் குடித்தயினைக் கண்டு தமது சாதிப்பெருமை களங்கப்பட்டுவிட்டதாக வெறி கொண்ட ஆதிக்க சாதியினர் அந்த ஊரிலிருந்த பல ஒடுக்கப்பட்டவர்களைக் கொன்றும் பலரைக் காயப்படுத்தியிமிருந்தனர். இரண்டாவது நிகழ்வில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுவோர்களும் தம்முடன் சேர்ந்து தேர் இழுப்பதனை விரும்பாத ஆதிக்கசாதியினர் யே.சி.பி (JCB digger) கனரகப் பொறியினைக் கொண்டுவந்து தேரிழுத்திருந்தனர். ஏற்கனவே யாழில் இவ்வாறான ஒரு காரணத்திற்காக இராணுவத்தினரைக் கொண்டுவந்து தேரிழுத்த நிகழ்வு வேறு ஒரு கோயிலில் முன்னர் இடம்பெற்றிருந்தபோதும், அத்தகைய இராணுவத்தினரிலேயே தாழ்த்தப்பட்டோர் இருந்தால் என்ன செய்வது என நினைத்தோ என்னமோ, இம்முறை கனரகப் பொறியினைக் களமிறக்கியுள்ளனர். இவ்வாறு இன்று தமிழர்களைப் பிடித்தாட்டும் சாதியானது தமிழர்களிடம் தோன்றிய வரலாற்றினைப் பற்றிய ஒரு ஆய்வாகவே இக் கட்டுரை அமைகின்றது.

சாதியில்லாத சங்ககாலத் தமிழர்கள்:

சாதியானது தமிழர்களிடையே தொடக்கம் முதலே இருந்துவந்துள்ளதா? என்ற கேள்விக்கான பதிலினைப் பார்த்தால் , இதற்கான பதில் என்பது சாதி என்ற சொல்லிலேயே உள்ளது. அதாவது சாதி என்ற சொல்லே தமிழல்ல. அது ஜாதி என்ற வடசொல்லின் கிரந்தம் நீக்கிய வடிவமே (ஜாதகம்- சாதகம் போன்று). ஜா என்பது ஜனனம் (பிறத்தல்) என்பதுடன் தொடர்புடையது. ஜாதி/ சாதி என்ற சொல் தமிழல்ல என்பது மட்டுமல்ல, அதற்கு இணையான தமிழ்ச்சொல் வேறு எதுவும் கூட வழக்கில் இல்லை(குலம், குடி போன்ற தமிழ்ச்சொற்களின் பொருளினைப் பின்பு பார்ப்போம்). தமிழிலுள்ள சாதி என்ற மற்றொரு சொல் உயர்திணையுடன் அறவே தொடர்பில்லை (சாதிமுத்து, சாதிமல்லி போன்றன).

சொல்லின் பொருளைப் பார்த்தோம். இப்போது இலக்கியச் சான்றுகளைப் பார்ப்போம். சாதி என்பது பிறப்பினடிப்படையிலானது என முன்னரே பார்த்தோம் . இந்த நிலையில் பின்வரும் குறளினைப் பாருங்கள்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” !!

இக்குறளானது பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று.

அடுத்ததாக சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலுள்ள ஒரு பாடலைப் பாருங்கள்

“யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே”

இப்பாடலானது தமிழர்களிடையே புறமணமுறை காணப்பட்டதனை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. புறமணம் உள்ள ஒரு சமூகத்தில் சாதியமைப்பு இருப்பதற்கான சாத்தியமேயில்லை. இந்த ஒரு பாடல் மட்டுமன்றி சங்கப் பாடல்களில் பலவற்றிலும் ஒரு ஆயத்திலுள்ள தலைவியினை ஆயத்திற்கு வெளியேயிருந்து வரும் ஒரு தலைவனே விரும்புகிறான், அதனால் சங்ககாலத்திலிருந்தது புறமணமுறையே என கா.சிவத்தம்பி “சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும்” எனும் நூலில் 85-86 பக்கங்களில் நிறுவுகிறார் .

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கீழடி அகழ்வாயில் இதுவரை கண்டு எடுக்கப்பட்ட 7000 இற்கும் அதிகமான பொருட்களில் ஒன்று கூட எந்தவிதத்திலும் சாதி-மதத் தொடர்புடன் காணப்படாமை இலக்கியச் சான்றுகளை மேலும் மெய்ப்பிக்கின்றது.

தமிழர்களிடம் சங்ககாலத்தில் காணப்பட்ட குலக்குழுக்கள்(tribes ), குடிகள் என்பவற்றைச் சாதியுடன் போட்டுக்குழம்பத்தேவையில்லை ,

ஏனெனில் அவை உலகெங்கும் பழங்குடி மக்களிடையே காணப்பட்ட பிரிவுகள் போன்றனவையே. அவை பிறப்பு அடிப்படையையும் அகமணமுறையும் சாதியைப்போன்று இறுக்கமாகக் கடைப்பிடிப்பனவல்ல. (எடுத்துக்காட்டாக நக்கீரப்புலவரிற்கோ புலவர் பணி தந்தைக்கோ கணக்காயர் பணி, புலவரான சீத்தலைச் சாத்தனாரின் தந்தை கூலவாணிகம்).

பறையன் என்ற குடி கூட அக்காலத்தில் இப்போதுள்ள சாதிப் பொருளில் குறிப்பிடப்படவில்லை. அப்போது அரசனின் செய்திகளை மக்களிடம் பறைதல் (சொல்லல்), போரில் பறை ஓசை எழுப்புவது மட்டுமல்லாமல் குடி காத்த மறவர்களும் அவர்களே, அவர்களல்லாமல் வேறு சிறப்பான குடியுமில்லை, அவர்களில் நடுகல்லான வீரர்கள் தவிர வேறு கடவுளேயில்லை என்கிறது புறநானூறு 335.

துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

இறுதியாக சாதியமைப்பு பேணப்படும் இடங்களிலெல்லாம் பெண்களினுரிமையும் மறுக்கப்பட்டேவரும். ஏனெனில் பெண்களைக் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலமே காதல் போன்றவற்றைத் தவிர்த்து அகமணமுறையினைப் பேணலாம். சங்ககாலத்தில் பெண்கள் எழுத்தறிவு பெற்றிருந்ததுடன் விடுதலையுணர்வும் பெற்றிருந்ததை சங்ககாலப் புலவர்களில் குறைந்தது 36 பேராவது பெண்பாற்(வேறெந்த மொழியிலும் அக்காலத்தில் அவ்வாறில்லை) புலவர்களாகவிருப்பதும், ஔவை மன்னனுடன் சேர்ந்து கள்ளுண்டமை போன்ற நிகழ்வுகளிலும், கீழடி மட்பாண்ட எழுத்துக்களிலும் காணலாம் (மட்பாண்டங்களைப் பயன்படுத்துவோரே தமது பெயர் முதலானவற்றை அவற்றில் எழுதியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்களே என்ற அடிப்படையில் பெண்களின் கல்வியறிவினை உய்த்துணரலாம்) .

இதுகாறும் சங்ககாலத்தில் தமிழரிடையே சாதிகள் இல்லை எனப் பார்த்தோம். சாதி என்ற சொல்லே சங்கமருவிய காலத்திலேயே முதன்முதலில் சிலப்பதிகாரத்தில் வர்ணங்களை குறித்தே வருகின்றது.
“நால்வகை சாதியும், நலம்பெற நோக்கி “
(வேனில் காதை41)
அடுத்ததாக மணிமேகலையில்
“நாமம் சாதி..கிரியையின் அறிவது ஆகும்.”
(சமயக்கணக்கர் 23)
இவ்வாறு சங்கமருவிய காலத்தில் தமிழரிடம் அறிமுகமாகும் சாதியானது எங்கிருந்து வந்தது என இனிப் பார்ப்போம்.

தமிழர்களிடம் எங்கிருந்து சாதி வந்தது?

பார்ப்பனர்களின் தமிழக வருகையுடனேயை சங்கமருவிய காலத்தில் சாதி வருகின்றது. பார்ப்பனர்களிடமும் முதலில் வர்ணங்களே தோன்றுகின்றன. இதனை ரிக் வேதம் புருச சூத்திரம் மூலம் அறிந்துகொள்ளலாம். வர்ணங்கள் எவ்வாறு சாதியாக மாறுகின்றது என்பதனை அம்பேத்கார் சிறப்பாக Revolution and Counter-Revolution in Ancient India, Annihilation of Caste எனும் நூல்களில் விளக்கியிருப்பார். வர்ணங்கள் மேலும் பிரிவுகளாகப் பிளவுற்ற பின் ஜாதி என்ற சொல் முதன்முதலில் பகவத்கீதையில் (1: 42) “ உத்ஸாதயந்தே ஜாதி தர்மா சாஸ்வத” என வருகின்றது. இவ்வாறு வைதீக மதத்தினூடாகவே சாதி தமிழரிடையே புகுத்தப்பட்டது.

இப்போதெல்லாம் மதவாதிகளில் சிலர் பகவத்கீதை கூறும் வர்ணங்கள் ஜாதிகள் என்பன பிறப்பினடிப்படையிலானதல்ல அல்ல, அவை குணத்தினடிப்படையிலானவை எனப் புதிய விளக்கம் கொடுக்கிறார்கள். இதற்கு இவர்கள் காட்டும் சுலோகம் “குண-கர்ம விபாசக” (4-13) என்பதாகும். இங்குள்ள குண கர்ம என்பது சாதிக்கு விதித்த வேலையின் குணம் என்பதே. இதற்கு உரை எழுதிய ஆதிசங்கரரும் “ பிறப்பால்” என்றே எழுதியுள்ளார்.

கீதையின் 18 இயலின்44-47 வது பாடல்களில் நாலு வருணங்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அவற்றிற்கான தொழில்களும் குறிப்பிடப்படுகிறது. கீதையின்படி ஒரு வர்ணத்தை சேர்ந்த ஒருவர் வேறு ஒரு தொழினை சிறப்பாக செய்வார் எனினும் தனது குலத்தொழிலினைவிட வேறு தொழில் செய்யக்கூடாது((ஸ்ரோயான் ஸ்வ-தர்மா விகுண. பர தர்மாத் ஸ்வ-அனுஸ்திதா). மேலும் இன்னொரு சுலோகமானது( வர்ண சங்கரோ நரகாயைவ, பித்ரு லுப்த பிண்டோதம் க்ரியக) கலப்புமணம் செய்தால் பிண்டம் கூட உங்களிற்கு வந்து சேராது, நரகமே செல்வீர்கள் எனக் கூறுவது. இவற்றின் மூலம் கீதை சொல்வது பிறப்பினடிப்படையிலான, அகமணமுறையினை வலியுறுத்தும் சாதியமைப்பினையே என்பது தெளிவாகின்றது.

இவ்வாறு பார்ப்பனர்களினால் புகுத்தப்பட்ட வருணாச்சிர சாதியமைப்பினை எவ்வாறு நாம் ஒழிக்கலாம் எனப் பார்ப்போம்.

சாதி ஒழிப்பு:

சாதி ஒழிப்பின் முதற்படி தனது சொந்தச் சாதி மீதான பற்றை விட்டொழித்தலாகும். என்னதான் முற்போக்குப் பேசினாலும் பலரிற்கும் தமது சாதியினைப் பற்றி யாராவது குறைவாகக் கூறினால், உடனே சினம் வந்துவிடுகின்றது. இந்தச் சாதிப்பற்றை விட்டுவிடுவதுடன் தேவைப்படும் போதெல்லாம் தமது சாதியினை விமர்சிப்பதற்கும் தயாராகவிருப்பது சாதி ஒழிப்பின் முதற்படியாகும். சாதியின் வரலாறு, அதனூடான கொடுமைகள், அடுக்கின் மேலே பார்ப்பனியம் இருந்துகொண்டு ஏனையோரை தமக்கிடையே மோதவிடும் தந்திரம், தமிழர்களது விடுதலைக்கும் ஒற்றுமைக்கும் தடையாக சாதி செயற்படும் விதம், பெண்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைகள் என்பன பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவது இச் செய்முறையின் இரண்டாவது படிநிலையாகும்.

சாதியை வலியுறுத்தும் மத நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துவது (பார்ப்பனர்களின் கருவறைத் தீண்டாமை ஒழிப்பு உட்பட) இதன் அடுத்த படியாகும். இச் செய்முறையின் இறுதியானதும் முதன்மையானதுமாக புறமணமுறை (சாதி மறுப்புத் திருமணங்கள்) அமையும். இத்தகைய செயற்பாடுகள் மூலம் தமிழர்களின் தலையில் இடையில் சுமத்தப்பட்ட சாதிச்சுமையினை இறக்கிவைக்கலாம்.

இவ்வாறு சாதி ஒழிப்பு பற்றிய சிந்தனைகள் /உரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இதே காலப்பகுதியில், பாரிசாலன் போன்ற தமிழ்த்தேசிய சிந்தனைக் கோமாளிகள் சிலர் சாதி மூலம் “யார் யாரெல்லாம் தமிழர்கள்” எனக் கண்டுபிடிக்க முனைவதுதான் வேடிக்கை. சாதியே ஒரு வந்தேறியாகக் காணப்பட, அதனைக்கொண்டு இவர்கள் வந்தேறி மனிதர்களைக் (இவர்களுடைய மொழியில்) கண்டுபிடிக்கப்போவதாகக் கூறுவதனை என்னவென்று சொல்வது!.

Exit mobile version