`தமிழ்` எனும் அடையாளத்துக்கான தேவை :-
இக் குடித்தொகை மதிப்பீட்டில் தமிழர்கள் எவ்வளவு பேர் இங்கிருக்கின்றோம் என்பதனை அதிகாரரீதியாக நிறுவும் போதே நாம் எமது மொழி வளர்ச்சிக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்குமான அரசின் வள ஒதுக்கீடுகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியும். வேறு வகையான கணக்கீடுகள் இருக்கின்றது தானே எனக் கேட்டால், அவை ஒப்பீட்டுரீதியில் நம்பகத்தன்மை குறைந்தவை என்பதுடன் அரசின் பொதுக் கொள்கையான வள ஒதுக்கீட்டுக்கு ஏற்றவையல்ல. இதனை நீங்கள் கீழுள்ள இணையத்தளத்துக்குச் சென்று சரி பார்த்துக் கொள்ள முடியும்.
https://www.ons.gov.uk/census/censustransformationprogramme/aboutthecensus
எனவே எமது மொழி-பண்பாடு சார்ந்த பெரும் செயல் திட்டங்களுக்கான வள ஒதுக்கீட்டுக்கு, தமிழர்கள் எவ்வளவு பேர் இங்கு வாழ்கின்றார்கள் என்ற தரவு குடித்தொகை மதிப்பீட்டில் இடம் பெறுவது இன்றியமையாதாகும். எடுத்துக் காட்டாக, தமிழை இங்குள்ள தேசியப் பள்ளிக்கூடங்களில் இரண்டாம் மொழியாக கற்பிக்க வைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியினை எடுத்துக்கொள்வோம். இதற்குத் தேவையான ஒரு அடிப்படைத் தரவு `தமிழர்களின் தொகை` பற்றிய அதிகார முறையிலான தரவேயாகும். அதே போன்று பண்பாட்டு வகையில் அமைந்த இன்னொரு எடுத்துக்காட்டாக, தைத் திங்களினை தமிழர் மரபு மாதமாக அரசோ/ உள்ளூராட்சி அமைப்புகளையோ ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் இத் தரவு இன்றியமையாதது. இவ்வாறு அடுக்கிக் கொண்டே செல்லலாம். அதே போன்று அரசியல்ரீதியான சில நன்மைகளுமுள்ளன, எனினும் இக் கட்டுரை இப்போது அதற்குள் போக விரும்பவில்லை.
முதலில் இஙகுள்ள சில தமிழ் ஆர்வலர்கள் `தமிழ்` என்பதனை குடித்தொகை மதிப்பீட்டுக் கேள்விக்கான பதிலாக அமையும் (படத்தில் 15 வது கேள்வி) வகையிலான ஒரு முயற்சி இங்கு மேற்கொள்ளப்பட்ட போதும், அது இரு காரணங்களால் நிறைவேறவில்லை. முதலாவது காரணமாக நேரம் பிந்தியமை அமைந்தது, அதாவது 2018 ம் ஆண்டே இதற்கான வடிவமைப்புத் தொடங்கி 2020 இல் ஏற்கனவே வடிவமைப்பானது நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டமை. இரண்டாவது காரணமாக, குடித்தொகை மதிப்பீட்டினை மேற்கொள்ளவுள்ள நிறுவனமானது (ONS , The Office for National Statistics ) அதனை முடிந்தளவுக்குச் சுருக்கமாகவும், தெளிவாகவும் வடிவமைக்க விரும்பியமை. மேற்கூறிய இரு காரணங்களால் `தமிழ்` ஒரு தெரிவாக இடம் பெறவில்லை. அடுத்த முறை 2031 இற்கான குடித்தொகை மதிப்பீட்டில் ஒரு தெரிவாக அமைக்க மீண்டும் 2026/ 2027 இல் முயற்சிக்கலாம்.
இம் முறை செய்ய வேண்டியது என்ன?
மேற்கூறிய வகையில் நாம் எல்லோரும் இணைந்து `தமிழ்` எனும் அடையாளத்தினை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கொண்டு வருவதன் மூலம் எமது மொழி-பண்பாடு சார்ந்த வள ஒதுக்கீடுகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள், விழிப்புணர்வுப் பரப்புரைகள் என்பன இடம் பெற வேண்டும். இம் முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது பெருமளவுக்கு இணையத்தினைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்படவுள்ளது {தேவையானோருக்கு பழைய காகித எழுத்து வடிவிலான முறை பின்பற்றப்படும்}. எனவே இருக்கின்ற ஒரு மாதத்தில் சரியான முறையில் இச் செய்தியினை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வோம்.
குறிப்பு – படத்திலுள்ளவை 2011 கணக்கெடுப்பு படிவங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. 2021 இல் குறித்த இரு கேள்விகளுக்குமான வடிவம் மாறாத போதும் பக்க எண் மாறலாம். படிவத்தினை மாதிரிக்காகத் தரவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்புக்குச் செல்க.
https://census.ukdataservice.ac.uk/media/50966/2011_england_household.pdf
வேண்டுகோள் – இந்தக் குடித்தொகை மதிப்பீடானது ( Census ) அரசு தனது வளங்களைப் பல்வேறு பிரிவகளுக்கும் உரிய முறையில் ஒதுக்குவதற்கு எடுக்கும் ஒரு முயற்சி. இது தனிப்பட்வர்களோதோ அல்லது குழுக்களினதோ முயற்சி அன்று. இதில் பங்கெடுத்து, தமிழ் அடையாளத்தினை உறுதி செய்து , எமது மொழி வளர்ச்சியினைப் பேணிக் காப்பது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுக் கடமையாகும்.