Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தின் பின்புலம் என்ன? – மறைக்கப்படும் உண்மைகள் : கோசலன்

tamil-genocide-sri-lankaகாலனியத்திற்கு பிந்தைய இலங்கையின் வரலாறு முழுவதும் தேசிய இன ஒடுக்குமுறையினதும், ஆயுதப் போராட்டங்களதும், இனப்படுகொலையினதும் வரலாறே. இந்த வரலாற்றின் இரத்தம் படிந்த காலப்பகுதிகள் மீட்சி பெற மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் இலங்கை அரசு வழங்கத் தயாரில்லை. வன்னியில் சாரிசாரியாக மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர், மக்கள் சுந்த்திரமாக வாழ்வதாக இலங்கை அரசு கூறிக்கொள்கிறது. இராணுவம் வெளியே வருவதில்லை; சிவில் நிர்வாகம் இராணுவத் தலையீடின்றி நடைபெறுகிறது; புலனாய்வுத்துறையின் கெடுபிடிகள் முன்னைப்போல் இல்லை. அறுபது வருடகால நீண்ட ஒடுக்குமுறைக்கு முகம்கொடுத்துவரும் மக்களுக்கு இவையெல்லாம் இலங்கை அரசு போடும் பிச்சைகளே.

இலங்கை அரசு தனது ஒற்றையாட்சி அமைப்பை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை. பேரினவாதிகள் சுதந்திரமாக உலாவருகிறார்கள். போர்க்குற்றவாளிகளும் இனப்படுகொலையாளிகளும் பாதுகாக்கப்படுகின்றனர். பேரினவாதம் இழையோடும் அரசியல் மட்டுமே ஆட்சியத் தக்கவைத்துக்கொள்ள இலகுவான வழி என்பதை இலங்கை அதிகாரவர்க்கம் தெரிந்துவைத்துள்ளது.

இலங்கை அரசு சிறுபான்மைத் தேசிய இனங்கள் பௌத்த சிங்கள பேரினவாத்திற்குச் சேவை செய்யும் உப கூறுகளாக மட்டுமே வாழலாம் என்பதை மக்களுக்குக் கூறிவருகிறது.

பேரினவாத ஒடுக்குமுறை இராணுவ ஒடூக்குமுறையாக மீண்டும் அழிவுகளை ஏற்படுத்தலாம் என்பதற்குரிய அத்தனை சாத்தியங்களும் காணப்படுவதாகவே மக்கள் உணர்கின்றனர்.

அறுபது வருடகால தேசிய இன ஒடுக்குமுறையின் சமூக நினைவுத்திறன்(Social Memory) மக்கள் மத்தியில் உள்ளார்ந்த அச்ச உணர்வைத் தேக்கிவைத்திருக்கிறது. சமூகத்தின் ஆழ் மனத்தில் தேங்கியுள்ள அந்த அச்சம் பெரு நெருப்பை உருவாக்கும் தீப்பொறி போல எப்போதும் கிளர்ந்தெழும் அத்தனை சாத்தியங்களும் தென்படுகின்றன.

இவ்வாறான மக்களின் அச்ச உணர்வை புதிய மாற்று அரசியலுக்கான நம்பிகையாக மாற்றி மக்களை அணிதிரட்டும் அரசியல் ஒன்று மட்டுமே வடக்கு கிழக்கிலும் இலங்கையிலும் காணக்கிடைப்பதில்லை. அவ்வாறான அரசியல் தற்செலாகக் கூடத் தோன்றிவிடக் கூடாது என்பதற்காக இலங்கை அரசும் ஏகாதிபத்தியங்களும் திட்டமிட்டுச் செயற்படுகின்றன. மாற்று அரசியலுக்கான இடைவெளியைக் கையகப்படுத்தி அழித்துவிடுவதற்காக தமது அடியாட்களை ஏகாதிபத்தியங்களும் இலங்கைப் பேரினவாத அரசும் ஒவ்வொரு முனையிலும் நிறுத்தியுள்ளன.

இவை அனைத்தினதும் மறுபக்கத்தில் போருக்குப் பின்னான சமூகத்தில் வர்க்க முரண்பாடு ஆழமடைய ஆரம்பித்துள்ளது. புதிய சிறுபான்மை உள்ளூர் வர்த்தக சமூகம், பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு என்பன அதிகரிக்க அதனைச் சுற்றி உயர்குடிச் சமூகம் ஒன்று தோன்றியுள்ளது.

பல்தேசிய வர்த்தகத்தைச் சார்ந்து தோன்றியுள்ள உயர் குடிச் சமூகத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி குடிகொண்டுள்ள உயர் குடி நிர்வாக அலகுகளின் சில பகுதிகள் புலம்பெயர் நாடுகளின் ஏகாதிபத்திய அடியாட்கள் ஊடாகச் செயற்பட ஆரம்பித்துள்ளன.

நிலம், நீர் போன்ற மூல வளங்களின் சுரண்டலும், மூலதனச் சுரண்டலாலும் பாதிக்கப்படும் பெரும்பான்மை வறிய மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் வெற்றிடமாகவே கிடக்கின்றது. பாராளுமன்ற வாக்குப் பலத்தில் தங்கியிருக்கும் அரசியல் பிழைப்புவாதிகள், மக்களின் வாழ்வு சார்ந்த சிக்கல்களைக் கண்டுகொள்வதில்லை. தமது வாக்குப் பொறுக்கும் அரசியலுக்கு அவற்றைச் சில வேளைகளில் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலையும், வர்க்க ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பொதுவான மக்கள் குழுக்களையும் இணைத்து பொதுவான ஐக்கிய முன்னணி ஒன்றைத் தோற்றுவிப்பதே தமிழ்ப் பேசும் மக்களைப் பலப்படுத்தும். இன்று பல மடைந்துள்ளது உயர்குடி மக்கள் விரோத அரசியலே.

ஏகாதிபத்திய மற்றும் இலங்கை அரச சார்பு அரசியல் மாற்று என்ற பெயரில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி முன்வைக்கப்படுவதே இன்றை மிகப்பெரும் ஆபத்தாக முளைத்துள்ளது. தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியல் இடைவெளிய நிரப்ப முயலும் ஏகாதிபத்திய சார்பு தலைமைகள் அரசியல் நீக்கம் செய்யப்படுதலும் புதிய மாற்று அரசியல் முன்வைக்கப்படுவதும் இன்று அவசியமானது.

அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் தமிழர்களை அழிப்பதற்கும் இலங்கையைச் சூறையாடுவதற்கும் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் பிழைப்புவாதிகளை முகவர்களாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. தமிழ்ப் பேசும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு குறைந்தபட்சத் தொடர்புகள் கூட அற்றுப்போன இப் பிழைப்புவாதிகளில் பெரும்பாலனவர்கள் ஈழப் போராட்டத்தைப் பயன்படுத்தி தம்மை வளப்படுத்திக்கொண்டவர்கள்.

ஏகாதிபத்திய நலன்களுடன் நேரடித் தொடர்புடைய இலங்கை மற்றும் புலம்பெயர் மாபியக் குழுக்களுடன் அப்பாவிகளான தனி நபர்களின் இணைவாகவே புலம்பெயர் நாடுகளில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

பல்தேசிய வியாபார நிறுவனங்களின் முகவர்களாகத் தம்மை வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட அரசியல் வாதிகள், மத அடிப்படைவாதிகள், கோரமான கொலைகாரர்கள், போராட்டத்தை அழித்தவர்கள், மக்களின் பணத்தைச் சுருட்டிக்கொண்டவர்கள் கூட்டிணைந்து மாற்று அரசியல் தளத்தை அழிப்பதற்காகவே தமிழ் மக்கள் பேரவை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எம்.ரி.டி வோக்கஸ் என்ற பல் தேசிய வர்த்தக நிறுவனம் சுன்னாகத்தில் நடத்திய பேரழிவை மூடி மறைத்து தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை வெளிப்படுத்திக்கொண்ட திடீர் தேசியவாதி விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் மற்றொடு முக்கிய புள்ளியான சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் நேரடிக் கொலைகளில் ஈடுபட்ட தனி நபர். புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று சந்தேகிப்பவர்களை ரில்லர் -driller- கருவியால் தலையில் துளைத்துக் கொலை செய்த காரணத்தால் அவர் சார்ந்த குழுவிற்கு மண்டையன் குழு எனப் பெயரிடப்பட்டது.

சுரேஸ் பிரேமச்சந்திரன் நேரடியாகவே இக்கொலைகளில் ஈடுபட்டமைக்கான நேரடிச் சாட்சிகள் பல இன்றும் உயிர்வாழ்கிறார்கள். பின்னர் மகிந்த ராஜபக்ச மீன்பிடித் துறை அமைச்சராகவிருந்த காலத்தில் அந்த அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட சுரேஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராகினார். இப்போது புலம்பெயர் உற்பத்தியான தமிழ் மக்கள் பேரவையின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர்.

தவிர, குமார் பொன்னம்பலத்தின் மறைவிற்குப் பின்னர் அரசியலுக்கு இழுத்துவரப்பட்ட அப்பாவி இளைஞரான கஜேந்திரகுமார் மற்றும் இவர்களின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளதே தமிழ் மக்கள் பேரவை.

புலம்பெயர் நாடுகளில் புலிகளை அழிப்பதற்குத் துணைசென்ற பிழைப்புவாதிகள், புலிகளின் பணத்தைக் சூறையாடியவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என்ற மக்களால் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு புதிய ஆதரவுத் தளபும் ஒன்று தேவைப்பட்டது. தமது தேசிய வியாபாரத்தைத் தொடர்வதற்கு அவர்களைப் பொறுத்தவரை இலங்கையில் ஒரு முகவர் குழுவை உருவாகிக்க் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்காகத் தெரிவு செய்யப்பட்ட இரண்டு கச்சிதமான முகவர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும்.

தமது அரசியல் வாழ்வு முழுவதும் தேசியவாத அரசியலுக்கு அடிப்படையில் எதிரிகளாகச் செயற்பட்ட இந்த இரண்டு நபர்களும் இவர்களுடன் இணைந்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் புலம்பெயர் நாடுகளில் நிலைகொண்டுள்ள தமது ஏவலாளிகளைத் திருப்திப்படுத்தவே அரசியல் நடத்திவந்தனர்.

தமிழ் மக்கள் பேரவையின் திட்டங்கள் என்று கூறப்படும் ஒவ்வொரு திட்டங்களுமே அமெரிக்கத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது கண்காணிப்பது என்று ஆரம்பிக்கிறது. இதன் ஆபத்த்தான கூறுகள் விரிவாக ஆராயப்பட வேண்டும்.

இக் குழுவில் பிரதான பாத்திரம் வகிக்கும் நபர்களில் ஒருவராவது தமிழ்ப் பேசும் மக்களின் தேசியப் பிரச்சனையில் ஆக்கபூர்வமான செயல்முறைப் பங்களிப்பை வகித்திருக்கிறார்களா என்ற கேள்விகு விடை கண்டால் இக் குழுவின் நோக்கங்கள் தெளிவாகும்.

இக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னர், இவர்கள் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான தேசிய இன ஒடுக்குமுறைக்கும், அதன் பின் புலத்தில் செயற்படும் ஏகாதிபத்திய மற்றும் பல் தேசிய நிறுவனங்களுக்கும் ஆதரவாளர்களாகவே செயற்பட்டுள்ளனர் என்பதற்கான அனைத்து வெளிப்படையான ஆதாரங்களும் உண்டு.

வன்னிப் படுகொலைகளின் பின்னர் நடைபெற்ற சுன்னாகம் அழிப்பில் பல் தேசிய நிறுவனத்தைக் காப்பாற்றியவர் விக்னேஸ்வரன். ரிலர் கொலைப் புகழ் சுரேஸ் பிரேமச்சந்திரனைப் பற்றிக் கூறத் தேவையில்ல்லை. கஜேந்திரகுமாரின் வெற்று அறிக்கைகள் மக்களை அன்னியப்படுத்துவதற்கு மட்டுமே பயன்பட்டிருக்கின்றன. தமிழ் மக்கள் பேரவையை உருவாக்குவதற்காக ஜேர்மனியிலும், அமெரிக்காவிலும் நடத்தப்பட்ட ஒன்றுகூடல்களில் முடிவுகளை முன்வைத்த புலம்பெயர் பிழைப்புவாதிகள் தேசியத்தின் பெயரால் மக்களைச் சூறையாடியே வாழப் பழக்கப்பட்டவர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை அரசின் இணக்கப்பாட்டுடனான அரசியல் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்திவரும் நிலையில் புதிய மக்கள் சார்ந்த அரசியல் தோன்றும் வாய்ப்புகள் காணப்பட்டன. அதனை அழித்து அந்த வெற்றிடத்தைப் பிரதியிட்டு, அதனை மக்கள் விரோத அரசியலாக மாற்றுவதே தமிழ் மக்கள் பேரவையின் பின்புலத்தில் செயற்படும் தீய சக்திகளின் ஒரே நோக்கம் என்பதில் எந்தச் சந்தேகமும் எழ முடியாது!

அரசியல் நீக்கத்தின் அரசியல் ( The politics of depoliticization )

புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் (பாகம் 2)

Exit mobile version