Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவீரர் தினத்தில் மக்களின் எதிர்ப்புணர்வை இலங்கை அரசிற்கு ஆதரவாக மடைமாற்றும் அரசியல் அபாயம்!

சுய நிர்ணய உரிமைக்கான மக்களின் ஆயுதப் போராட்டம் இலங்கை அரச பேரினவாதத்தாலும் அதன் பின்னணியில் செயற்பட்ட ஏகாதிபத்திய அதிகாரத்தாலும், இந்திய அரசின் துணையுடன் அழிக்கப்பட்ட ஏழு ஆண்டுகளின் பின்னர் பூவையும் புலிகளின் கொடியையும் விற்பனை செய்து ‘கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட’ புலம்பெயர் மாவீரர் தினம் வெற்று ஆசனங்களுடன் முடிவடைந்திருக்கிறது. விற்பனைப் பண்டங்களின் வரவு, எந்தவொரு போராட்ட அமைப்பும் தலைவைத்துக்கூடப் படுக்க முடியாத மண்டபமான எக்ஸெல் ஹோல் இன் வாடகையைச் செலுத்துவதற்கே போதுமானதாக இல்லாத அளவிற்கு பிரித்தானியாவில் அந்த நிகழ்வு தோல்வியடைந்திருக்கிறது.

வடக்கில் மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டிருகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி ஜமீன் சிறீதரன் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தினத்திற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீதரனின் அடியாட்கள் புடை சூழ கம்பங்கள், பந்தங்கள், பதாகைகளுடன் ‘ஓகோ வென’ நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் பெரும்பாலானவர்கள் தன்னிச்சையாகவே கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வின் வெற்றியை வாக்குகளாக அறுவடை செய்வதற்கு சிறீதரன் காத்திருப்பது வியப்பிற்குரியதல்ல.

வடக்கில் நடைபெற்ற நிகழ்வில் மக்களின் பங்களிப்பு இலங்கை அரசின் பேரினவாத முகத்திரையைக் கிழித்தெறிந்திருக்கிறது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடையாளத்தின் கீழ் ஒளிந்திருக்கும் சிறீதரன் புரிந்துகொண்ருக்க நாளாகலாம். இலங்கை அரசின் மீதான வெறுப்புணர்வும், மக்கள் போராட்டத்தின் அவசியம் குறித்த உணர்வுமே மக்களை மாவீரர் மைதானத்தை நோக்கி அழைத்து வந்திருக்கிறது. மக்களின் வெறுப்புணர்வு எழுச்சியாக மாற்றமடையாமல் தனது பாதுகாப்பிலுள்ள சிறீதரனின் நோக்கியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கியும் மடை மாறுவதை இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை நிகழ்வை நடத்துவதற்கு மக்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் தெளிவுபடுத்துகிறது.

ஆக, மாவீரர் தினத்தை சிறீதரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏன் இலங்கை அரசும் கூட தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

இதன் மறுபுறத்தில் தமது ‘தேசிய’ வியாபாரத்தில் போதிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ளாத புலம்பெயர் ‘மாவீரர்’ நிறுவனங்களின் கடைக்கண் பார்வை வடக்கில் நடைபெற்ற மாவீரர் தினத்தை நோக்கித் திரும்பியுள்ளது. அந்த நிகழ்வை இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சியாகவும், பேரினவாதத்திற்கான குறியீடாகவும் மாற்றுவதற்குப் பதிலாக தமது கடந்த காலத் தவறுகளை நியாயயப்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர்.

கடந்த கால அரசியலை விமர்சனத்திற்கும் சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவது தமது தனிப்பட்ட அடையாளத்தை அழித்து தமது சொந்த பிழைப்புவாத இருப்பை அழித்துவிடும் என்று அச்சப்படும் புலம்பெயர் குழுக்கள், தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து துயர்கொள்வது கிடையாது.

நேர்மையும், அறமும் செத்துப்போன சமூகத்தை உருவாக்குவதில் பிரதான பாத்திரம் வகிக்கும் புலம்பெயர் குழுக்கள் தாம் சார்ந்த ஏகபோக நாடுகளின் அதிகாரவர்க்கங்களோடு இணைந்து இலங்கை அரசைப் பாதுகாக்க முயல்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய வாக்குக் கட்சிகளும், இலங்கைப் பேரினவாத அரசும் ஏகாதிபத்திய நாடுகளும் புலம்பெயர் குழுக்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன என்பதற்கும் நடந்துமுடிந்த மாவீரர் நிகழ்வு ஒரு குறியீடு.

Exit mobile version