பிரச்சினைகள் வெகுமக்களை ஆழமாகப் பாதிக்கும் போது, அது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு எதிரான பொதுக் கருத்தாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ள அவர்கள் மிகவும் திணறுகின்றனர்.
அறிவுசார் சொத்துரிமை / காப்புரிமை (IPR – Intellectual Property Rights) என்பது ஒரு அறிவியல் அறிஞரோ அல்லது அறிஞர் குழாமே ஒரு புதிய அறிவியல் முறையைக் கண்டு பிடித்தால், அது அவருடைய / அவர்களுடைய சொத்தாகக் கருதப்பட வேண்டும் என்பதாகும். அந்தப் புதிய முறையைப் பயன்படுத்த விரும்புவோர் அந்த அறிவியல் அறிஞருக்கு / அறிஞர்களுக்கு அவர்கள் குறிப்பிடும் பணத்தைக் கொடுத்து அந்த உரிமையைப் பெற வேண்டும்.
இது ஏதோ அறிவியல் அறிஞர்களை, அவர்களுடைய அறிவுத் திறனை மதிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடு போலத் தோன்றலாம். ஆனால் உண்மை அப்படி இல்லை. இந்த அறிவியல் அறிஞர்கள் அனைவரும் முதலாளிகளின் பிடியிலேயே உள்ளனர். அவர்களது கண்டு பிடிப்புகள் அனைத்தும் முதலாளித்துவ நிறுவனங்களின் பெயரிலேயே காப்புரிமை பெறப்படுகிறது. அக்கண்டு பிடிப்புகளைப் பயன் படுத்துவதா அல்லது கிடப்பில் போடுவதா என்பதை முதலாளித்துவ நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றனவே ஒழிய, இதில் அறிவியல் அறிஞர்களுக்கு எந்த விதமான உரிமையும் இருப்பது இல்லை.
அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் அறிவியல் அறிஞர்சளை அடிமைப் படுத்தி, முதலாளிகளின் இலாப வேட்டைக்கு மக்கள் நலனைக் காவு கொடுக்கும் முறையில் ஏனைய பிற துறைகளைப் போலவே, மருத்துவத் துறையும் சிக்கி உள்ளது. மக்களின் உயிர் காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களும், அறிவுத் திறனும், செயல் திறனும் இருந்தும் அவற்றை உற்பத்தி செய்யாமல் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கின்றன. அது மட்டும் அல்ல; அவற்றை உற்பத்தி செய்ய ஆயத்தமாக இருக்கும் சிறுமுதலாளித்துவ நிறுவனங்களை அரசதிகாரத்தைப் பயன் படுத்தித் தடுத்தும் வருகின்றன. இதற்கான அடிப்படைக் காரணம் அவர்களுக்கு இலாபம் கிடைக்கவில்லை என்பது அல்ல; “போதிய” இலாபம் கிடைப்பது இல்லை என்பது தான்.
பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் இத்தகைய அழிச்சாட்டியப் போக்கினால் ஏழை நாடுகளின் மக்கள் ஆயிரக் கணக்கில் நோய்களினால் முதிர்வுறா நிலையிலேயே மரணம் அடைகின்றனர். ஏழை நாடு மக்கள் மட்டும் அல்லாமல் பணக்கார, வல்லரசு நாட்டு மக்களும் இந்த அழிச்சாட்டியப் போக்கினால் பாதிக்கப் படுகின்றனர். ஆகவே இந்நாட்டு மக்களும் மருந்து உற்பத்தியில் அறிவுசார் சொத்துக் காப்புரிமைக்கு இடம இருக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அத்தகைய ஆர்ப்பாட்டம் ஒன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 3.9.2016 அன்று நடைபெற்றது. முதலாளிகளின் பேராசையை விட மனிதர்களின் அடிப்படைத் தேவை முதன்மையானது என்று அவர்கள் முழங்கினர். (இது மனிதர்களின் உடல் நலப் பிரச்சினையில் மட்டும் அல்ல; பண்ட உற்பத்தி அனைத்திற்கும் பொருந்தும் என்பதை உணரும் பக்குவத்தை இந்தப் பணககார நாட்டு மக்கள் இன்னும் அடையவில்லை)
முதலாளிகளின் / முதலாளித்துவ அறிஞர்களின் சிந்தனைப் போக்கிற்கு எதிராக மக்கள் திரளும் போதெல்லாம், அது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு எதிரான போராட்டமாகப் பரிணமித்து விடக் கூடாது என்று ஏதாவது நடவடிக்கைகளை எடுப்பது முதலாளிகளின் / முதலாளித்துவ அறிஞர்களின் வழக்கம். ஆனால் இந்நடவடிக்கைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக இருப்பதே இல்லை. மாறாக, மக்களின் மனதைக் குழப்பி, மக்கள் நலனுக்காக ஏதோ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற மாய உணர்வை ஏற்படுத்தி, மக்களின் போராட்ட உணர்வை முனை மழுங்கச் செய்வதாகத் தான் அவை இருக்கும்.
இப்பிரச்சினையிலும் அவர்கள் இதையே செய்து உள்ளனர். உயிர் காக்கும் மருந்துகள் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலை மாறி, நடுத்தர மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் கிடைக்குமாறு எப்படிச் செய்வது என்று ஆராய்ந்து கூறுமாறு ஐக்கிய நாடுகள் அவை ஒரு குழுவை நியமனம் செய்தது. இக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவை 14.9.2016 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் மனிதர்கள் உயிர் காக்கும் மருந்துகளை அவர்களால் முடியக் கூடிய விலையில் (Affordable price) பெறும் உரிமை, அறிவுசார் சொத்துக் காப்புரிமைச் சட்டங்களை விட முக்கியமானது என்று கூறப்பட்டு உள்ளது. இதற்காக மருந்தின் விலையை நிர்ணயிக்கும் போது, அறிவியல் ஆராய்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் செலவிடப்பட்ட பணத்தை உற்பத்திச் செலவாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் பரிந்துரை செய்துள்ளது.
ஐக்கிய நாடுகள் குழுவின் பரிந்துரைகள் உண்மையில் உயிர் காக்கும் மருந்துகளின் விலையைக் குறைக்கும் நோக்கம் கொண்டவையாகத் தோற்றம் அளிக்கத் தான் செய்கின்றன. ஆனால் இவ்வறிக்கையில் கூறப்பட்டு உள்ள பிற கூறுகள் மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள சிறுமுதலாளிகள், பன்னாட்டு மருந்து நிறுவனங்கள உற்பத்தி செய்யும் உயிர் காக்கும் மருநதுகளின் அதே பண்புகளைக் கொண்ட பிற மருந்துகளை (Generic drugs) உற்பத்தி செய்கின்றனர். இம்மருந்துகளைப் பன்னாட்டு நிறுவன மருந்துகளின் விலையில் பத்தில் ஒரு பங்கு முதல் நூறில் ஒரு பங்கு வரையில் குறைந்த விலையில் அளிக்க முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பன்னாட்டு நிறுவன மருந்துகளின் விலை மிகப் பெரும் பணக்காரர்கள் அன்றி மற்றவர்களால் எட்ட முடியாத உயரத்தில் இருப்பதைச் சில தொண்டு நிறுவனங்கள் சுட்டிக் காட்டின. அப்பொழுது “தரம் உயர்ந்த” மருந்துகள் வேண்டும் என்றால் அதற்கு உரிய அதிக விலையைக் கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்றும், “உரிய” விலையைக் கொடுக்க முடியாதவர்கள் சிறிய நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் அதே பண்புகளைக் கொண்ட குறைந்த விலையில் கிடைக்கும் “தரம் குறைந்த” மருந்துகளைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றும் முதலாளித்துவ அறிஞர்கள் விடை அளித்தனர்.
ஆனால் அதே முதலாளித்துவ அறிஞர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் (ஐக்கிய நாடுகள் அமைத்த) குழு இப்பொழுது வேறு விதமாக அறிக்கை கொடுத்து உள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள சிறுமுதலாளிகள், பன்னாட்டு நிறுனங்கள் தங்கள் காப்புரிமையில் வைத்திருக்கும் தொழில் நுட்பங்களை விலை கொடுத்து வாங்கி “உயர்” தர மருந்துகளைத் தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்று இவ்வறிக்கையில் பரிந்துரை செய்து உள்ளது. அவ்வாறு செய்ய மறுக்கும் நாடுகளின் நிறுவனங்களுக்கு மருந்து உற்பத்திக்குத் தேவைப்படும் அடிப்படை மூலப் பொருட்களும், இயந்திரங்களும் கிடைக்காதவாறு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்குச் செய்யப்படும் செலவினங்களை விலை நிர்ணயம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இப்பொழுது செய்யப்பட்டு இருக்கும் பரிந்துரையின் அடிப்படையில் “உயர்” தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தியே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவதில் தவறு இல்லை என்றும் இக்குழு கூறுகிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் குழு சமர்ப்பித்து இருக்கும் இந்த அறிக்கை மக்களின் உடல் நல உரிமையும், அரசியல், பொருளாதார வளர்ச்சியும் ஒன்றை ஒன்று ஒட்டாதபடி (incoherence) உள்ளது என்று சுவிட்சர்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் திருமதி ரூத் டிரெய்ஃபுஸ் (Ruth Dreifuss) 15.9.2016 அன்று கூறினார்.
இக்குழுவின் பரிந்துரைகளைக் கண்டிப்புடன் செயல் படுத்த வேண்டும் என்றும், அறிவுசார் சொத்துக் காப்புரிமைளை முழுமையாகத் தடை செய்ய வேண்டும என்றும் ஆக்ஸ்ஃபம் (Oxfam) என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி வின்னி பியானைமா (Winnie Byanyiama) கூறினார். (இது மனிதர்களின் உடல் நலப் பிரச்சினையில் மட்டும் அல்ல; பண்ட உற்பத்தி அனைத்திற்கும் பொருந்தும் என்பதை இவரும் புரிந்து கொள்ளவில்லை) அவ்வாறு செய்தால் உயிர் காக்கும் மருந்துகள் நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
விலை உயர்ந்த “உயர்” தரமான மருந்துகளை வாங்க முடியாதவர்கள், குறைந்த விலையில் கிடைக்கும் “குறைந்த” தரம் கொண்ட மருந்துகளைப் பயன் படுத்திக் கொள்ளட்டும் என்று முதலாளித்துவ அறிஞர்கள் சில ஆண்டுகளுக்கு முன் இறுமாப்புடன் விடை கூறினார்கள். “உயர்” தர மருந்துகளுடன் போட்டியிட்டு “குறைந்த” தர மருந்துகளால் சந்தையில் நிலைக்க முடியாது என்ற நம்பிக்கையில் அன்று அவ்வாறு கூறினார்கள் போலும். ஆனால் உண்மை நிலைமை வேறாக இருக்கவே இப்பொழுது அறிவுசார் சொத்துக் காப்புரிமைத் தொகையை விலக்கிக் கொண்டு, புதிய தொழில் நுட்பங்களைக் “குறைந்த” விலையில் தர முன் வந்து (!?) இருக்கிறார்கள். அப்படி அவர்கள் குறைந்த விலையில் தரும் புதிய தொழில் நுட்பங்களைப் பெற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்றும், அதன்படி தான் மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்கள். அப்படிச் செய்ய மறுப்பவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளார்கள்.
பெருமுதலாளிகளின் இந்த “மன மாற்றமும்” இதனால் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க வைக்கும் ஏற்பாடும் நிரந்தரமானதாக இருக்குமா? நிச்சயமாக இருக்காது. இந்த ஏற்பாடு சிறுமுதலாளிகளைப் பெருமுதலாளிகளின் பிடியில் சிக்க வைக்கத் தான் பயன்படுமே ஒழிய வேறு எந்த சாதனையையும் விளைவிக்காது. மேலும் பெருமுதலாளிகள் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளை இனிமேல் நிறுத்தி விடுவார்கள்; அல்லது பெயருக்காக ஏதோ ஒரு மூலையில் கவனிப்பார் இல்லாத வகையில் ஒப்புக்காக நடத்திக் கொண்டு இருப்பார்கள். அவர்களுடைய எண்ணம் முதலீட்டுக்கு இலாபம், அதிக இலாபம் என்ற வகையில் மட்டும் தான் இருக்குமே ஒழிய மக்களுடைய உடல் நலத்தைப் பற்றி இருக்கவே இருக்காது.
முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கொடுமைகள் அனைத்திற்கும் வேராக விளங்கும் மிகை மதிப்பை அதாவது இலாபத்தை விலக்கிக் கொள்வதன் மூலம் தான், அதாவது முதலாளித்துவப் பொருளாதார முறையைக் காவு கொடுப்பதன் மூலம் தான் அனைத்து மக்களும் உடல் நல உரிமையை அடைய முடியும். பெருமுதலாளிகளும் அவர்களின் அடிவருடிகளான முதலாளித்துவ அறிஞர்களும் இதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் உழைக்கும் மக்கள் இதைப் புரிந்து கொள்ள முடியும். (முதலாளித்தவப் பிரச்சார மாயையை மீறிப் புரிந்து கொள்ளவும் வேண்டும்.) இலாபத்திற்காகப் பொருட்களை உற்பத்தி செய்யும் முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுத்து விட்டு, மக்களின் தேவைகளைக் கணக்கிட்டு, அவற்றை உற்பத்தி செய்யும் சோஷலிச முறையைச் செயல் படுத்துவதன் மூலம் உடல் நலப் பிரச்சினைக்கு மட்டும் அல்ல, நம்மை வாட்டி வதைக்கும் அனைத்துப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்.
சிறுமுதலாளிகளைப் பொறுத்த வரையிலும், அவர்கள் பெருமுதலாளிகளுடன் போட்டியிடுவதை விட உழைக்கும் வர்க்கத்துடன் கூட்டு வைத்துக் கொண்டு, முதலாளித்துவ முறையைக் காவு கொடுக்க ஒத்துழைப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். ஏனெனில் முதாளித்துவ முறையைக் காவு கொடுத்த உடனேயே சிறுமுதலாளிகளை ஒழிப்பது நடைமுறைச் சாத்தியமாக இருக்காது. பெருமுதலாளிகளை முற்றிலுமாக ஒழித்து உழைக்கும் வர்க்கத்தினர் அதன் நிர்வாகங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளச் சில காலம் பிடிக்கும். அதுவரையில் சிறுமுதலாளிகள் தங்கள் வழியிலேயே தொழில் செய்ய அனுமதிப்பது சோஷலிசத்தில் தவிர்க்க முடியாத நிலையாக இருக்கும். அந்த இடைவெளியில் சிறுமுதலாளிகள் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப எவ்வித மனவருத்தமும் இன்றித் தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியும். அப்படிப் பட்ட மாறிய சூழ்நிலையில் அவர்களுடைய வாழ்க்கைத் தரம் இப்பொழுதைய வாழ்க்கைத் தரத்தை விட நல்லதாகவே இருக்கும்.
சிறுமுதலாளிகளே! பெருமுதலாளிகளுடன் போட்டியிட்டு உங்களால் வெல்ல முடியப் போவது இல்லை. ஆகவே வீண் முயற்சியில் ஈடுபட்டு மன அழுத்தத்தை வரவழைத்துக் கொள்வதை விட, உழைக்கும் வர்க்கத்துடன் இணைந்து சோஷலிச அரசை அமைக்க அணி திரளுங்கள். அதுவே நீங்கள் போராடிக் கொண்டு இருக்கும் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வாகும்.